Palayamkottai Sivan Kovil

திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டை நகரின் மத்திய பகுதியில் அமையப் பெற்றுள்ளது., பாளையங்கோட்டை கோமதி அம்பாள் உடனுறை திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவில்.

புராண காலத்தில் செண்பகாரண்யம் என்று வழங்கப்பெற்ற இக்கோவில் பாளையங்கோட்டை சிவன் கோவில் என்றே தற்போது பிரபலமாக அழைக்கப்படுகிறது.

சுவாமி பெயர்: திரிபுராந்தீஸ்வரர்.
அம்மை பெயர்: கோமதி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம்.
தீர்த்தம்: தாமிரபரணி.
சிறப்பு சன்னதிகள்:சண்முகர் சன்னதி, ஒளவையார் சன்னதி, ஆயிரத்தம்மன் சன்னதி, சாஸ்தா சன்னதி.

திருக்கோவில் வரலாறு:


முற்காலத்தில் பாண்டிய நாட்டின் எல்லைக்கு உட்பட்ட இந்த பகுதியை உத்தாலன் என்னும் மன்னன் மிக சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவன் ஒருநாள் உப்பரிகையில் தனது மனைவியோடு உலா சென்றான். அப்படி செல்லும் வழியில் தவத்தில் ஈடுபட்டு இருந்த முனிவர் ஒருவரை தனது அகந்தை மிகுதியால் மதிக்காமல் ஏளனம் செய்தான். இதனால் வெகுண்ட அந்த முனிவர் மன்னுக்கு சாபமளிக்கிறார். அந்த சாபத்தின் பலனாக மன்னனின் உடல் தோற்றம் உருக்குலைந்து அகோர தோற்றமளிக்க, கண்களின் பார்வையும் பறி போய் விடுகிறது.

இதனால் மனம் வருந்திய மன்னன், தனது தவறை உணர்ந்து முனிவரின் திருவடிகளை பற்றி பலவாறு விமோசனம் கேட்டு மன்றாடினான். அவன் மீது மனமிறங்கிய முனிவர் அவனை தாமிரபரணி நதிக்கரையில் உள்ள செண்பக வனத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து முறைப்படி வழிபட்டு வர அவனது சாபம் விலகி பழைய உருவையும், கண் பார்வையையும் பெறலாம் என கூறி விமோசனம் அருளுகிறார்.

அதன்படி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள செண்பக வனத்திற்கு வர, அங்கு கெளதம முனிவர் என்பவர் தவமியற்றி கொண்டிருந்தார். அவரிடம் சென்று வணங்கி நின்ற மன்னனின் நிலைமையை தன் ஞான திருஷ்டி மூலம் அறிந்து கொள்கிறார் கெளதம முனிவர். அப்போது வானில் வடதிசை நோக்கி வாயு குமாரனான அனுமன் காற்றில் மிதந்தபடி பயணித்து கொண்டு இருக்க, அவரை அழைத்த முனிவர், தான் பூஜிக்க ஓர் சிவலிங்கம் வேண்டும் எனவும் அதனால் காசிக்கு சென்று ஓர் சிவலிங்கம் கொண்டு வரும்படியும் கூறுகிறார். அதன்படி வாயு மைந்தனும் கண் இமைக்கும் நேரத்தில் வான் வழியே சஞ்சரித்து காசிக்கு சென்று ஓர் சிவலிங்கத்தை எடுத்து கொண்டு வந்து கெளதம முனிவரிடம் வழங்கினார். அந்த சிவலிங்கத்தை பெற்ற கெளதம முனிவர் அதனை செண்பக வனம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து மன்னனை அமர்த்தி முறைப்படி பூஜைகள் செய்ய வைத்து தவமிருக்கச் செய்ததின் பலனாக, சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி மன்னனின் சாபத்தை நீக்கி அவனுக்கு தோற்றப் பொலிவையும், இழந்த கண் பார்வையையும் திருப்பி அருளுகிறார். அது சமயம் கெளதம முனிவர் இங்கு இப்போது காட்சியளித்த தாங்கள் எப்போதும் இங்கு எழுந்தருளி தங்களை வழிபடும் பக்தர்களின் துயர் தீர்க்க வேண்டும் என வேண்ட, சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி வரம் அருளியதாக இக் கோவில் வரலாறு தெரிவிக்கிறது.

சுவாமி திரிபுராந்தீஸ்வரர்:


கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் லிங்கத் திருமேனியராய் காட்சியளிக்கிறார் திரிபுராந்தீசுவரர். இவருக்கு விசேஷ காலத்தில் நாகாபரணம் சாத்தியும், திருக்கண்கள் சாத்தியும், கவசம் சாத்தியும் அலங்காரம் செய்விக்க படுகிறது.

அம்மை கோமதி:
கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவாரபாலகிகள் காவல்புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்க விட்டபடியும், சற்றே இடைநெளித்து, புன்முறுவல் பூத்த திருமுகத்தவளாய், நின்ற கோலத்தில் ஆனந்த காட்சியளிக்கிறாள் அம்மை கோமதி.

திருக்கோவில் சண்முகர் சன்னதி சிறப்பு:
முற்காலத்தில் திருச்செந்தூரில் உள்ள ஆறுமுகப்பெருமான் (சண்முகர்) உற்சவர் திருமேனியை தங்கம் என்று எண்ணி வியாபாரம் செய்ய வந்த டச்சுக்காரர்கள் கடத்தி எடுத்துக்கொண்டு கடல் வழியே கப்பலில் சென்றனர். அப்படி அவர்கள் சென்ற போது நடுக்கடலில், முருகனின் சீற்றத்தால் பயங்கர சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் பெய்தது.

அதைப் பார்த்து கப்பலில் இருந்தவர்கள், இந்த சூறாவளி காற்று மற்றும் மழைக்கு கப்பலில் உள்ள முருகன் சிலை தான் காரணம் என்று கூறினர். உடனே பயந்துபோன டச்சுக்காரர்கள், கப்பலில் இருந்த முருகன் சிலையை கடலுக்குள் தூக்கி போட்டு விட்டனர். அந்த காலத்தில் இந்த பகுதியில் பல திருக்கோவில்கள் கட்டப்படுவதற்கு காரணமாக இருந்த வடமலையப்ப பிள்ளை இந்த செய்தியை அறிந்து திருச்செந்தூரில் மீண்டும் முருகன் சிலைகளை வைப்பதற்காக கருவேலன்குளம் சிற்பிகளை கொண்டு புதிய சண்முகர் திருமேனி செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.

அப்படி திருமேனியை சிற்பிகள் செய்து முடித்தது தர, அதனை மேள, தாளத்துடன் சுமந்து கொண்டு திருச்செந்தூருக்கு புறப்பட்டனர். அப்படி அவர்கள் பாளையங்கோட்டை பகுதியில் சிலைகளோடு நுழைந்த அதே நேரத்தில் டச்சுக்காரர்கள் கடலில் போடப்பட்ட சண்முகர் திருமேனி, முருகன் அருளாலும், வடமலைப்பிள்ளை முயற்சியாலும் கிடைத்து விட்டது என்ற செய்தி கிடைத்தது. இதனால் புதிதாக செய்த சிலைகளை என்ன செய்வது என்பதற்கு விடை தெரியாமல் சில நாட்கள் அந்த சிலைகளை அங்கேயே வைத்திருந்தனர். அந்த பகுதியே பிற்காலத்தில் ‘முருகன் குறிச்சி’ என்று அழைக்கப்பட்டது. இன்றும் முருகன்குறிச்சி ஆகவே விளங்குகிறது.

பின்னர் இந்த புதிதாக செய்யப்பட்ட ஆறுமுக நயினார் திருமேனி பாளையங்கோட்டையில் உள்ள இந்த திருக்கோவிலிலில் தனி சன்னதி அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த வரலாற்றை விளக்கும் கல் வெட்டும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்தம்மன் சன்னதி:


இத் திருக்கோவிலின் வட கிழக்கு மூலையில் வடக்கு திசை நோக்கி அமையப் பெற்றுள்ள தனி சன்னதியில் காட்சி தருகிறாள் துர்க்கா பரமேஸ்வரியான ஆயிரத்தம்பாள். இந்த அம்மன் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பிண்ணனி வரலாறும் சுவையானதே. இத் திருக்கோவில் மேல தேர் வீதியில் ஆயிரத்தம்மனுக்கு கொடி மரத்துடன் கூடிய தனி கோவில் உள்ளது. முன்னர் அந்த கோவிலின் மூலவர் அம்மன் திருமேனி சிறிது பின்னம் ஏற்பட்ட காரணத்தால் ஊர் மக்கள், சிற்பியை கொண்டு அந்த அம்மனின் புதிய திருமேனி ஒன்றை உருவாக்க, ஆயிரத்தம்மையோ பக்தர்கள் ஒருவரின் கனவில் தோன்றி உங்கள் பெற்ற தாய்க்கு ஊனம் ஏற்பட்டால் அவளை மாற்ற முடியுமா? அது போல தான் இந்த பழைய திரு மேனியும், இதில் தான் என்னுடைய சாந்நித்யம் உள்ளது என கூறியருளுகிறார். எனவே அம்மை உத்தரவுப்படி பழைய திருமேனியே மூலிகை கலவை பூசி சரி செய்யப்பட்டு இன்றவும் காட்சி அளிக்க, புதிதாக செய்யப்பட்ட திருமேனியை இந்த திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்துவிட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றை விளக்கும் கல்வெட்டும் இச் சன்னதியில் பொறிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் அமைப்பு:


கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கும் இக்கோவில் நுழைவாயிலில் சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதி ஆகியவற்றில் தனித்தனியாக இரண்டு சிறிய ராஜகோபுரங்கள் அமையப்பெற்றுள்ளது.

சுவாமி சன்னதி ராஜ கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் முன் மண்டபத்தில் வாயிலின் தென்புறம் விநாயகரும், வடபுறம் சுப்பிரமணியரும் காட்சியளிக்கின்றனர். இதனை தாண்டி அதிகார நந்தியை வணங்கி அதிகாரம் பெற்று உள்ளே நுழைந்தால் சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவைகள் அமையப்பெற்றுள்ளன. கருவறை முன் மண்டபத்தில் சுவாமிக்கு வலப்புறம் ஸ்தல விநாயகர் காட்சிதருகிறார். அடுத்து கருவறையில் இருபுறமும் துவாரபாலகர்கள் காவல்புரிய, உள்ளே திரிபுராந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியராய் திருக்கோலம் காட்டியருளுகிறார். அவருக்கு எதிரே சிறிய நந்தி, முன் மண்டபத்தில் உள்ளது. சுவாமி சன்னதிக்கு இடப்புறம் தெற்கு நோக்கி சிவகாமி அம்மையுடன் நடராச பெருமான் எழுந்தருளி திருநடனக் காட்சி காட்டியருளுகிறார். அடுத்து நால்வர் சன்னதி அமையப்பெற்றுள்ளது. அடுத்து முதலாம் திருச்சுற்றில் பரிவார மூர்த்திகளாக முறையே சூர்ய பகவான், சூரதேவர், அடியார் அறுமுத்து மூவர்கள் (மூலவர்கள்-உற்சவர்கள்) சப்தகன்னியர்கள், லிங்கமூர்த்திகள், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், உற்சவ சோமாஸ்கந்தர் – அம்மை சன்னதிகள், கங்காளநாதர், லிங்கோத்பவர், சுப்பிரமணியர், சரஸ்வதி, மகாலெட்சுமி, துர்க்கை, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், சந்திரபகவான் ஆகியோர்கள் காட்சித் தருகிறார்கள்.

சுவாமி சன்னதி முதலாம் திருச்சுற்று பிரகாரத்தில் 63-நாயன்மார்களின் வரலாற்று ஓவியங்கள் தனித்தனியாக தீட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்து சுவாமி சன்னதி திருச்சுற்றின் தெற்கு திசையின் வாயில் வழியே நுழைந்து அம்மை சன்னதி செல்லும் வழிக்கு இடையில் சுப்பிரமணியர் சன்னதி அமையப் பெற்றுள்ளது. சுப்பிரமணியர் சன்னதி திருச்சுற்றில் வள்ளி, தெய்வானை சன்னதிகளோடு மகாதேவர் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. சுப்பிரமணியர் சன்னதி முன் மண்டபத்தில் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி வள்ளி, தெய்வானை சமேதராய் கம்பீரக் கோலத்தில் காட்சியளிக்கிறார் இத்தல சண்முகப் பெருமான்.

சண்முகருக்கு எதிர்வாயில் வழியே உள்ளே நுழைந்தால் அம்மன் சன்னதி. முன் மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகிய சன்னதிகள் அமையப் பெற்றுள்ளது. அதனை வணங்கி உள்ளே சென்றால் கருவறைக்கு வலப்புறம் விநாயகர் சன்னதி உள்ளது. துவாரபாலகிகள் இருபுறமும் காவல்காக்கும் கருவறைக்குள் அம்மை கோமதி காட்சியளிக்கிறாள். வெளியே கருவறைக்கு இடப்புறம் தெற்கு நோக்கி பள்ளியறை அமையப் பெற்றுள்ளது. அம்மன் சன்னதி திருச்சுற்றில் பரிவார மூர்த்திகளாக முறையே கன்னி மூலையில் விநாயகர், வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரி ஆகியோர் காட்சித்திருகிறார்கள்.

சுவாமி சன்னதி முதலாம் திருச்சுற்றுடன் வடபுறமும், அம்மை சன்னதி முதலாம் திருச்சுற்றுடன் தென்புறமும், இடையில் சுப்புரமணியர் சன்னதி முதலாம் திருச்சுற்றுடனும் இணைந்திருக்க, இம்மூன்று சன்னதியையும் சுற்றி வெளித்திருச்சுற்று பிரகாரம் அமையப்பெற்றுள்ளது.

வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் வடக்கு வாசல் கொண்ட அம்மையாக கம்பீர தோற்றத்தில் காட்சியளிக்கிறாள் துர்க்கா பரமேஸ்வரி என்று சிறப்பிக்கப்படும் ஸ்ரீ ஆயிரத்தம்மன். இவள் தான் இந்த ஊரின் பிரதான அம்மையாக திகழும் ஆயிரத்தம்மைக்கு மாற்றாக செய்யப்பட்ட திருமேனி ஆகும்.

வெளித்திருச்சுற்றில் வடக்கு, மேற்கு, தெற்கு பிரகாரங்கள் நந்தவனமாக அமையப்பெற்றுள்ளது. அதில் வில்வம், வன்னி, கொன்றை, மா, அரளி, தங்கரளி ஆகிய தெய்வீக விருட்சங்கள் காட்சியளிக்கிறது. இதில் வன்னிமரத்தடியில் மட்டும் விநாயகருடன் கூடிய லிங்கம், நாகர் சன்னதி உண்டு.

வடக்கு பிரகாரத்தில் நடுவே பூர்ண, புஷ்கலாவுடன் கூடிய தர்மசாஸ்தா சன்னதி அமையப் பெற்றுள்ளது. இதுதவிர முன்மண்டபத்தோடு இணைந்த கிழக்கு திருச்சுற்று பகுதியில் சோமவார மண்டபம், விநாயகர், சுப்பிரமணியர், உற்சவர் ஐயப்பன் சன்னதியோடு, சுப்பிரமணியர் சன்னதிக்கு நேர் எதிராக தமிழ்க்கிழவி ஒளவையாருக்கும் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.

திருக்கோவில் சிறப்புக்கள்:


தமிழ்க்கிழவி ஒளவையாருக்கு இங்கு சன்னதி அமையப்பெற்றுள்ளது. இந்த அம்மையார், சுப்பிரமணிய சுவாமியை நேரெதிராக நின்று தரிசித்த நிலையில் காட்சித்தருகிறார்.

அறுபத்து மூன்றுநாயன்மார்களின் வரலாற்று வரைபட ஓவியங்கள் இங்கு இருக்கிறது. இதனை சுவாமி திருச்சுற்றில் தரிசிக்கலாம்.

பூர்ணா, புஷ்கலா தேவியர்களுடன் இங்கு தர்ம சாஸ்தா மிகவும் சாந்நித்யமாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

முக்கிய திருவிழாக்கள் :
இங்கு சித்திரை மாதம் சுவாமி சன்னதியில் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். திருவிழாவின் ஒன்பதாம் நாள் சித்திரை தேர் ஓடும். பத்தாம் நாள் தாமிரபரணி நதிக்கரையில் தீர்த்தவாரி நடைபெறும்.

ஆடி மாதம் ஆடிப்பூரத்தன்று இத்தல கோமதி அம்மைக்கு வளைகாப்பு வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

ஐப்பசி மாதம் அம்மன் சன்னதியில் கொடியேற்றமாகி திருக்கல்யாண திருவிழா சுமார் 12-நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

ஐப்பசி மாதம் இத்தல சுப்பிரமணியருக்கும், சண்முகருக்கும் கந்த சஷ்டி திருவிழா இனிதே நடைபெறும்.

கார்த்திகை மாதம் சோமவார வழிபாடும், திருக்கார்த்திகை சொக்கப்பனை ஏற்றுதலும் சிறப்பாக நடைபெறும்.

மார்கழி மாதம் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி வழிபாடும், திருவாதிரை திருநாளை ஓட்டி திருவெம்பாவை வழிபாடும் விமரிசையாக நடைபெறும்.

இது தவிர மாசி சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை வருஷ பிறப்பு, நடராஜருக்குரிய ஆறு அபிஷேகங்கள், மாதாந்திர பிரதோஷம் ஆகியவைகளும் சிறப்பாக நடைபெறும். .

இத்தனை சிறப்புக்கள் பெற்ற திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவிலை தரிசித்து நாமும் அருள்பெறுவோமாக…!!

அமைவிடம் : திருநெல்வேலி மாநகர்., பாளையங்கோட்டை நகரின் மத்தியப்பகுதி. இங்கு செல்ல புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்தும் ஏராளமான நகரப்பேருந்துகள் உள்ளன.

-திருநெல்வேலிக்காரன்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் திருவிழாக்கால பீமன்.

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு வருடம்தோறும் நடைபெறும் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.