ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் ஸ்தலம் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். கடற்கரையில் அமையப்பெற்றுள்ள இந்த கோவிலில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் கையில் தாமரை மலர் ஏந்தி சிவ பூஜை செய்யும் திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். முற்காலத்தில் இங்கு முருகப்பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு அவனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டு தேவர்களை காத்து நின்றார்.
அசுரர் படைகளை சம்ஹாரம் செய்த பாவம் நீங்க, முருகப்பெருமான் கடற்கரையில் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்தருளினார். முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய அந்த ஐந்து லிங்கங்களும் இன்றும் பஞ்சலிங்கம் என்ற பெயரில் இங்குள்ள மூலவர் கருவறைக்கு பின்னர் தனி அறையில் காட்சியளிக்கிறது. இந்த பஞ்சலிங்கங்களை நாம் தரிசித்து வணங்கினால் நம் முன்வினை பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.