Palayamkottai Gopalankovil

பாளையங்கோட்டை அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவில்

பாளையங்கோட்டை நகரின் மத்தியப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்தோடு கம்பீரமாக அமையப்பெற்றுள்ளது அழகியமன்னார் ஸ்ரீ இராஜகோபாலசுவாமி திருக்கோவில். இக்கோவிலை இப்பகுதி மக்கள் “கோபாலங்கோவில்” என்றே அழைக்கின்றனர்.

மூலவர் பெயர் (கீழ்தளத்தில்): வேதவல்லி, குமுதவல்லி உடனுறை வேதநாராயணர்.
மூலவர் பெயர் (மேல்தளத்தில்): ஸ்ரீ தேவி, பூ தேவி உடனுறை அழகியமன்னார்.
உற்சவர் பெயர்: இராஜகோபாலர்.
திருக்கோவில் விருட்சம்: செண்பக மரம்.
விமானம்: அஷ்டாங்க விமானம்.
தீர்த்தம்: வேத தீர்த்தக்கிணறு, தாமிரபரணி.

திருக்கோவில் வரலாறு:


முற்காலத்தில் சமுத்திரத்துக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். அதன்பொருட்டு தேவேந்திரனிடம் அனுமதி வேண்டினான். அதற்கு இந்திரன், அர்ஜுனா நீ தாராளமாக இந்திரலோகத்துக்கு வரலாம். அதற்கு முன்பு நீ செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. கடலுக்கு நடுவில் உள்ள தோயமாபுரத்தில் வாழும் அரக்கர் கூட்டத்தை நீ அழித்து, தர்மத்தை நிலைநாட்டிட வேண்டும் என்று கூறினார்.

அர்ஜுனனும் இந்திரன் கூறியபடியே தோயமாபுரத்துக்குச் சென்று அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டான். ஆனால் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. அரக்கர்களை அழித்தாலும், அவர்கள் மீண்டும் எழுந்து வந்து போரிட்டனர். அர்ஜுனன் செய்வது அறியாமல் திகைத்து நின்றான். அப்போது வானில் இருந்து, அர்ஜுனா, அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே அவர்களை நீ வெல்ல முடியும். இதுதான் அவர்கள் பெற்றிருக்கும் வரம்’ என்று ஓர் அசரீரி ஒலித்தது.

உடனே அர்ஜுனனின் மனதில் சட்டென்று ஒரு திட்டம் உதித்தது. போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடுவதுபோல அர்ஜீனன் ஓடினான். அதைக் கண்ட அசுரர்கள் அர்ஜீனனை பார்த்து கேலிசெய்து கைதட்டிச் சிரித்தார்கள். அர்ஜுனனும் இதைத்தானே எதிர்பார்த்தான். உடனடியாக, தன்னிடமிருந்த பாசுபத அஸ்திரத்தை ஏவி ஒட்டுமொத்தமாக அரக்கர் கூட்டத்தை கொன்று குவித்தான்.

அர்ஜுனனின் இந்த வீரதீரச் செயலை மனதாரப் பாராட்டியதோடு, அதுவரை தான் வணங்கி வழிபட்டு வந்த ராஜகோபாலர் விக்கிரகத்தையும் அவனுக்கு பரிசாக கொடுத்து சிறப்பித்தான் தேவர்களின் தலைவன் இந்திரன். அந்த ராஜகோபாலரை அனுதினமும் பயபக்தியோடு வணங்கி வழிபட்டு வந்தான் இந்திரன். பிற்காலத்தில் அந்த விக்ரகம் இந்திரனால் பெருமாள் திருவுளப்படி கங்கையில் சேர்பிக்கப்பட்டது.

பின் ஒரு நாள் தென்னகத்திலிருந்து புனித நீராட வந்த பல்கி என்னும் பாண்டிய மன்னனன் கங்கையில் நீராடிய பொழுது இவ்விக்ரகம் அவரது கைகளில் கிடைக்கப்பெறுகிறது.

அந்த விக்ரகத்தின் எழிற்கோலத்தைக் கண்டு பேரானந்தம் அடைந்தான் அப்பாண்டிய மன்னன். அதனை தன் ஆட்சிக்குட்பட்ட தென்தமிழகத்துக்குக் கொண்டு வந்து, தாமிரபரணிக் கரையில் எழுந்தருளச் செய்தான். சுவாமிக்கு கருவறையுடன் கூடிய அழகிய திருக்கோவிலை நிர்மாணித்து, ராஜகோபாலர் என்ற திருப்பெயர் சூட்டி வழிபட்டு வந்தான். அதுவே, தற்போதைய திருக்கோயில்.

ஆக இந்திரலோகத்து கோபாலனே இங்கு எழுந்தருளி நமக்கு காட்சியளித்துக்கொண்டிருக்கிறார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் இங்குள்ள ராஜகோபாலர் திருமேனி மிகவும் பழமை வாய்ந்ததாக காட்சியளிக்கிறது. முகத்தில் திருநாமம் சாத்தப்பட்ட வடுவே பெரிதாக தெரியும். இருந்தும் இவர் இடைநெளித்து நிற்கும் கோலத்தை காண கண்கள் கோடி வேண்டும்.

பெண் குழந்தையை ஆண் குழந்தையாக மாற்றிய திருவிளையாடல்:
முற்காலத்தில் இக்கோயிலில் விஷ்ணுப்ரியன் என்னும் அர்ச்சகர், பெருமாளுக்கு தினமும் பூஜை செய்யும் கைங்கரியத்தை செய்து வந்தார். திருமணமாகிவிட்ட விஷ்ணுப்ரியனுக்கு தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகளாகபவே பிறந்தன. இதனால் தனக்குப் பின்னர் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய ஓர் ஆண் குழந்தை இல்லையே என விஷ்ணுப்ரியன் வருத்தப்பட்டு கொண்டே இருந்தார். தனக்கு எப்படியாவது ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என கோபாலசுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார் அவ்வர்ச்சகர். இந்நிலையில் அவரது மனைவி கலாவதி மீண்டும் கர்ப்பம்தரித்தாள். இந்தமுறை எப்படியும் பெருமாள் அருளால் நிச்சயம் தனக்கு ஓர் ஆண் குழந்தை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் விஷ்ணுப்பிரியன். இறுதியாக இம்முறையும் கலாவதி பெண் குழந்தையே பெற்றெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட விஷ்ணுப்ரியன், பெருமாள் மீது கையிலிருந்த ஆரத்தித் தட்டை வீசியெறிந்தார். அத்தட்டு பெருமாளின் மூக்கின் மீது பட்டதால் பெரிய தழும்பு ஏற்பட்டது. அதே கோபத்துடன் விஷ்ணுப்ரியன் வீட்டுக்கு சென்றுவிட, அங்கோ பிறந்த பெண் குழந்தை, ஆண் குழந்தையாக மாறியிருந்தது. அதைப் பார்த்து பதறிப்போன விஷ்ணுப்ரியன், கோயிலுக்கு சென்று, தனது செயலை எண்ணி வருந்தி பெருமாளின் கால்களில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்டார் . இதன் காரணமாகத்தான் இந்த சுவாமிக்கு “பெண்ணை ஆணாக்கிய இராஜகோபாலன்” என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள். இன்றும் ராஜகோபாலர் திருமேனியில் மூக்கில் காயம்பட்ட பெரிய தழும்பை நாம் காணலாம். எனவே இங்கு புத்திரபாக்கியம் வேண்டி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது.

மூலவர் வேதநாராயணர் மற்றும் அழகியமன்னார்:
அஷ்டாங்க விமானத்தில் உள்ள இரண்டு தளங்களில், கீழ் தளத்தில் மூலவராக வேதநாராயணர் அமர்ந்த கோலத்தில் பெருந்திருமேனியராக வேதவல்லி, குமுதவல்லி தேவியர்களுடன் காட்சித்தருகிறார். நான்கு வேதங்களைக் காத்து மகரிஷிகளுக்கு அருளிய பகவான், என்பதால் இவருக்கு “வேதநாராயணர்” எனப்பெயர். கருவறையில் பெருமாள் மற்றும் தாயார்களோடு சாமரம் வீசும் இரண்டு கன்னியர் மற்றும் இரண்டு ரிஷிகளும் உள்ளனர்.

அஷ்டாங்க விமானத்தில் உள்ள மேல் தளத்தில் அழகியமன்னார் நின்றகோலத்தில், ஸ்ரீ தேவி, பூ தேவி தேவியர்கள் மற்றும் இரண்டு ரிஷிகளுடன் வர்ணகலாபத்திருமேனியராக (சுதை வடிவம்) காட்சித்தருகிறார்.

ராஜகோபாலர்:


இக்கோவிலில் உற்சவர் ராஜகோபாலர் தன் இரு தேவியர்களோடு அழகாக காட்சித்தருகிறார். இவருடைய திருமுகத்தை நாம் உற்று நோக்கும் போது இவரின் பழமையையும் பெருமையையும் நாம் உணரலாம்.

திருக்கோவில் அமைப்பு:
பாளையங்கோட்டை மாநகரின் மத்தியில் ஐந்து நிலைகள் கொண்ட அழகிய ராஜகோபுரத்தோடு கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது இத்திருக்கோவில்.

ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம் மற்றும் கருடாழ்வார் சன்னதி கருவறைக்கு எதிராக அமையப்பெற்றுள்ளது.

கருடாழ்வார் சன்னதி வலப்புறம் தெற்கு நோக்கி ஆஞ்சநேயர் சன்னதி இருக்கிறது. உள்ளே படியேறிச்சென்றால் உற்சவர் மண்டபத்தில் சத்யபாமா, ருக்மணி சமேதராக இந்திரலோகத்து ராஜகோபாலன் அழகு தரிசனம் காட்டுகிறார். அவரைத்தாண்டி உள்ளே சென்றால் கருவறையில் வேதவல்லி, குமுதவல்லி சமேத வேதநாராயணர் அருள்பாலிக்கிறார்.

இது தவிர கோவில் பிரகாரத்தில் செண்பக விநாயகர், ஸ்ரீ தேவி, பரமபதநாதர், தசாவதார மூர்த்திகள், பூ தேவி, பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோர் தனிச்சன்னதிகளில் காட்சிதருகிறார்கள்.

கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள படிகள் வழியே மேலை ஏறிச்சென்றால் திருக்கோவில் மேல்பகுதியில் கருவறை விமானத்திற்குள் அமையப்பெற்றுள்ள அழகிய சன்னதியில் அழகியமன்னார் காட்சித்தருகிறார்.

திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் நந்தவனம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பிரகாரத்தின் வடக்கு பகுதியில் பரமபத வாசலும், அதற்கு வெளியே தனி மண்டபமும் அமையப்பெற்றுள்ளது. முன்புறம் தெற்கு நோக்கிய அழகிய திருவிழா மண்டபமும், அதற்குள் பெருமாளுக்குரிய வாகனங்களும் காட்சித்தருகின்றன.

திருக்கோவில் சிறப்புக்கள்:
முற்காலத்தில் பாளையக்காரர்கள் தாங்கள் தங்குவதற்கு உரிய இடமாக இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்ததால், பாளையங்கோட்டை என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். அதற்கேற்ப கோட்டை கொத்தளங்கள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றைக்கும் இந்தப் பகுதியில் காணமுடிகிறது.

ஒரு காலத்தில் இங்கே செண்பக மரங்கள் அதிகம் சூழ்ந்திருந்த காரணத்தினால் இத்தலத்துக்கு ‘செண்பகாரண்ய க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு. அதேபோல், இங்கே அமைந்திருக்கும் திருக்கோயிலுக்கு ‘வல்லப விண்ணகர்’ என்று திருப்பெயர். கி.பி.11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலுக்கு முதலாம் ராஜராஜன் பல திருப்பணிகளைச் செய்துள்ளார்.

இத்திருக்கோவிலின் விமானம் அஷ்டாங்க விமானம் என்று சிறப்பிக்கப்படுகிறது. ஒரே கோவிலுக்குள் இரண்டு அடுக்குகளில் பெருமாள் காட்சியளிப்பதும் சிறப்பம்சம் ஆகும்.

வேதங்களை காத்து ரிஷிகளுக்கு ஞானத்தை அருளிய பெருமாள் என்பதால் இவர் அருளும், இவ்வூரிலும் கற்றறிந்த சான்றோர் பலர் நிறைந்து கல்வித்துறையில் சிறப்புப்பெற்று வருகிறது. (பாளையங்கோட்டைக்கு தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற சிறப்பு அந்தஸ்து உள்ளது குறிப்பிடத்தக்கது)

முக்கிய திருவிழாக்கள்:
இங்கு பங்குனி மாதத்தில் பதினோறு நாட்கள் பிரம்மோற்சவமும், பங்குனி உத்திரம் அன்று தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும். இந்த உற்சவத்தின் பத்தாம் நாள் தேரோட்டம் முடிந்து அன்று இரவு பெருமாள் தவழும் கண்ணனாக பல்லக்கில் எழுந்தருளுவார். பதினொராம் திருநாளன்று தாமிரபரணியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

ஆவணி மாதத்தில் வரும் கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை மற்றும் விஜயதசமி பரிவேட்டை, கார்த்திகை தீபம், மார்கழி திருப்பாவை வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, தை மாத ரதசப்தமி ஆகியவையும் சிறப்பான விழாக்களாக நடைபெறும்.

இத்தனை சிறப்புகள் கொண்ட ராஜகோபாலரை தரிசித்து வாழ்வில் வளங்கள் அனைத்தும் பெறுவோமாக…!!

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகர்., பாளையங்கோட்டை மத்தியப்பகுதி. இத்திருக்கோவிலுக்கு செல்ல திருநெல்வேலி சந்திப்பிலிருந்து நகரப்பேருந்துகள் அதிகளவில் உள்ளன.

-திருநெல்வேலிக்காரன்.

About

Avatar

Check Also

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா “திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி” என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.