குற்றாலம்:
"தென்னகத்தின் ஸ்பா" என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலியில் இருந்து மேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது. இங்குள்ள பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, செண்பகாதேவி அருவி ஆகியவற்றில் குளிப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கும். ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் சீசன் காலத்தில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது உற்சாகமான அனுபவத்தை தரும்.
மாவட்ட அறிவியல் மையம்:
குழந்தைகள் மிகவும் விரும்பும் இடமாக விளங்கும் மாவட்ட அறிவியல் மையம் திருநெல்வேலி மாநகரின் மையப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது. இங்கு அமையப்பெற்றுள்ள 'ஃபன் சயின்ஸ்', 'பாப்புலர் சயின்ஸ்', 'எலெக்ட்ரானிக்ஸ்' , 'நியூ விங் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ்' ஆகிய நான்கு சிறப்பு பகுதிகள், கோளரங்கம், அறிவியல் பூங்கா, வான் கண்காணிப்பு மையம் ஆகியவை கல்வி சுற்றுலா வரும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
அரியகுளம் பறவைகள் சரணாலயம்:
பறவை ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் அரியகுளம். இங்கு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பலவகையான வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக கூட்டமாக வருகின்றன. அவற்றுள் ஸ்பாட் டவ், க்ரீன் சாண்ட்பைப்பர், பிளாக் விங்கிடு ஸ்டில்ட் மற்றும் காமன் கூட் ஆகிய பறவைகள் காண்பதற்கு அரிதானவை. இந்த சரணாலயம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் அமையப்பெற்றுள்ளது.
மாஞ்சோலை:
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதியில் உள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமையப்பெற்றுள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலம் தான் மாஞ்சோலை. இங்கு கண்ணை கவரும் பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் எஸ்டேட்டுகள் அமையப்பெற்றுள்ளன. மாஞ்சோலையில் விளையும் தேயிலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவுக்கு மிகவும் பிரபலமானது. மாஞ்சோலையில் உள்ள குதிரைவெட்டி, காக்காச்சி, ஊத்து, கோதையாறு ஆகிய இடங்கள் சுற்றுலா செல்வோரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.
கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம்:
தென்னிந்தியாவில் நீர்ப்பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கான சிறந்த இடமாக திகழ்கிறது கூந்தங்குளம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தாலுகாவில் உள்ள இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு விதவிதமான உள்நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகள் மற்றும் காண்பதற்கு அரிதான பலவகை பறவைகள் சீசன் காலத்தில் அணிவகுத்து வரும்.
அகத்தியர் அருவி:
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வற்றாது வளம் கொழிக்கும் தாமிரபரணி ஆறு பாயும் வழித்தடத்தில் அமையப்பெற்றுள்ளது அகத்தியர் அருவி. இங்கு வருடத்தின் அனைத்து நாட்களிலும் வற்றாமல் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும். இந்த அருவிக்கு அருகில் தான் பாபநாசம் சிவன் கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது.