Logo of Tirunelveli Today
English

Tiruchendur Subramaniya Swamy Thirukovil (Paguthi - 1)

The side entrance to the Thiruchendur Subramanya Swamy temple with the main gopuram in the background.

ஆறு படை வீடுகளுள் இரண்டாம் படை வீடு என்று சிறப்பிக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

மூலவர் பெயர்: சுப்பிரமணிய சுவாமி.

உற்சவர்கள் பெயர்:

  1. வள்ளி, தெய்வானை உடனுறை சண்முகர்.
  2. வள்ளி, தெய்வானை உடனுறை குமரவிடங்கர்.
  3. வள்ளி, தெய்வானை உடனுறை ஜெயந்திநாதர்.
  4. அலைவாயு கந்தப் பெருமான்.

திருக்கோவில் விருட்சம்: பன்னீர் மரம்.

தீர்த்தங்கள்:

  1. வதனாறம்ப தீர்த்தம் ( கடல் ).
  2. நாழிக் கிணறு.
  3. சரவணப் பொய்கை.

இவை தவிர முற்காலத்தில் இங்கு 24 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவைகள்.,

  1. வதனாரம்ப தீர்த்தம்.
  2. சர்வ தீர்த்தம்.
  3. தேவசேனா தீர்த்தம்.
  4. லெட்சுமி தீர்த்தம்.
  5. சித்தி தீர்த்தம்.
  6. அட்ட திக்கு பாலகர் தீர்த்தம்.
  7. காயத்திரி தீர்த்தம்.
  8. சாவித்திரி தீர்த்தம்.
  9. சரஸ்வதி தீர்த்தம்.
  10. ஐராவத தீர்த்தம்.
  11. பைரவ தீர்த்தம்.
  12. வள்ளி தீர்த்தம்.
  13. துர்கா தீர்த்தம்.
  14. ஞான தீர்த்தம்.
  15. சத்ய தீர்த்தம்.
  16. தர்ம தீர்த்தம்.
  17. ரிஷி தீர்த்தம்.
  18. தேவ தீர்த்தம்.
  19. பாபநாச தீர்த்தம்.
  20. கந்த புஷ்கரணி தீர்த்தம்.
  21. கங்கா தீர்த்தம்.
  22. கந்த மாதன தீர்த்தம்.
  23. மாதுரு தீர்த்தம்.
  24. பிதுர் தீர்த்தம். ஆகியவைகள் ஆகும்.

சிறப்பு சன்னதிகள்:

  1. பஞ்ச லிங்கங்கள்.
  2. 108 மகாதேவர்.
  3. சூரசம்கார மூர்த்தி.
  4. வல்லப கணபதி.
  5. வெங்கடாசலபதி.
  6. மேதா தட்சிணாமூர்த்தி.
  7. வள்ளி குகை.

புராண பெயர்கள்:

திருச் செந்தில் நகர், வீரபாகு பட்டணம், ஜெயந்தி புரம், திருச்சீரலைவாய், கந்தமாதன பர்வதம், திரிபுவன மாதேவி ஆகிய பெயர்களும் விளங்குகிறது.

Sculptures on the gopuram depicting the celestial marriage between Lord Murugan and Deivanai.

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் வீர மகேந்திரபுரி நகரை சூரபத்மன் என்னும் அரக்கன் ஆட்சி செய்து வந்தான். அவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். தவம் என்றால் சாதாரண தவம் இல்லை உணவு, உறக்கம், தண்ணீர் எதுவுமின்றி மிக நீண்ட காலம் மனமொன்றி தவம் புரிந்தான். அவனுடைய கடுமையான தவத்தின் பயனாக சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து, வேண்டும் வரம் யாதென கேட்க, சூரபத்மனோ உங்கள் அம்சமாக தோன்றும் குழந்தையன்றி வேறு ஒருவராலும் எனக்கு அழிவு ஏற்படக் கூடாது என வேண்டுகிறான். சிவபெருமான் அவனது வேண்டுதலை ஏற்று அவ்வாறே வரம் அளித்தார் சிவபெருமான். இந்த வரத்தை பெற்ற சூரபத்மன் மிகுந்த ஆணவம் தலைக்கு ஏறிட மூன்று உலகங்களையும் போரிட்டு வென்று தன் வசப்படுத்தி ஆண்டதோடு மட்டும் அல்லாமல் தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவனுடைய கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானை பணிந்து முறையிட, தேவர்களை காக்கும் பொருட்டு சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கி, சரவணப் பொய்கையில் சேர்க்கிறார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறிட அவற்றை கார்த்திகை பெண்களாகிய அறுவர்கள் போற்றி பாதுகாக்கிறார்கள். அந்த ஆறு குழந்தைகளையும், உமையம்மை ஆகிய பார்வதி தேவி ஒன்றாக வாரி அணைத்திட, அந்த குழந்தைகள் ஒன்றாக இனணய ஆறுமுகங்கள் மற்றும், பன்னிரு கரங்களோடு ஆறுமுகப் பெருமானாக தோன்றினார். அந்த குழந்தையின் அழகை பார்த்து அதற்கு முருகன் என்ற பெயரும் வழங்கப் பெறுகிறது. இவ்வாறாக தோன்றிய முருகப் பெருமான் உரிய பருவத்தை அடைந்ததும், அவர் அவதார நோக்கத்தை அறிந்து கொண்டு, தன் தந்தையாகிய சிவபெருமானை வணங்கி, தனது தாயாகிய உமையம்மையிடம் சக்தி வேல் பெற்றுக் கொண்டு, வீரபாகு தலைமையில் இலட்சத்தொன்பது படை வீரர்களை திரட்டிக் கொண்டு தென் திசை நோக்கி வந்து செந்தூர் கடற்கரையில் முகாமிடுகிறார்.

அப்போது தேவர்களின் குருவாகிய வியாழ பகவான் முருகப் பெருமானை பூஜித்து, தன் தேவர்கள் குலம் காக்கும் படி வேண்டுகிறார். அப்போது சிவபெருமான், மேதா தட்சிணாமூர்த்தி வடிவில் முருகப் பெருமானின் குருவாக தோன்றி உபதேசம் அளித்து, அரக்கர்களை வென்று வரும் படி அருளுகிறார்.

தன்னை பூஜித்த வியாழ பகவானிடம் அசுரர்களின் வரலாற்றைக் கேட்டறிந்த முருகப் பெருமான், தனது படைத் தளபதி வீரபாகுவை, வீர மகேந்திரபுரிக்கு தூது அனுப்புகிறார், ஆனால் அகங்காரம் கொண்ட சூரபத்மனோ அதனை உதாசினப்படுத்தி, முருகப் பெருமானை போருக்கு வரச் சொல் என கூறி வீரபாகுவிடம் ஏளனாய் சிரித்து நிற்க, வீரபாகுவோ உனது அழிவு எங்கள் முருகப் பெருமானால் ஆரம்பம் என்று எச்சரித்து அங்கிருந்து திரும்பி வர., முருகப் பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே கடும் போர் நடக்கிறது. முருகப் பெருமான் திருச்செந்தூரில் இருந்தபடியே கிரவுஞ்ச மலையை தகர்த்து, வீர மகேந்திர புரி பட்டணத்திற்குள் புகுந்து சூர பத்மனின் சகோதரர்களான கஜ முகா சூரன், சிங்க முகா சூரன் மற்றும் ஏனைய அரக்கர்களை வதம் செய்து சூர பத்மனை நெருங்கிட, சூர பத்மனோ முருகப் பெருமானின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், மாயத் தோற்றம் கொண்டு மா மரமாக மாறி நிற்கின்றான். அதனை அறிந்த முருகப் பெருமான் தனது சக்தி வேலால் அந்த மா மரத்தை இரண்டு கூறாக பிளந்திட, சூரனின் உடல் இரண்டு கூறுகளாக ஆக, சூரபத்மன் முருகப் பெருமானிடம் இறுதியில் சரணாகதி அடைகின்றான்.

தன்னை சரணடைந்த சூரபத்மனை மன்னித்து அவனுடைய ஒரு பாகத்தை சேவலாகவும் , மற்றொரு பாகத்தை மயிலாகவும் மாற்றி, மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் மாற்றி தன்னிடம் சேர்த்து ஆட்கொள்கிறார் முருகப் பெருமான்.

போரில் சூரர்களை சம்காரம் செய்த முருகப் பெருமான், அந்த பாவங்கள் நீங்குவதற்காக திருச்செந்தூர் கடற்கரையில் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து, சிவபூஜையும் செய்தருளினார் என்றும் வரலாறு கூறப்படுகிறது.

நாழிக்கிணறு தீர்த்தம் சிறப்பு:

View of the Naazhi Kinaru at the Tiruchendur temple.

போர் முடிந்து திருச்செந்தூரை அடைந்த முருகப் பெருமான், அங்கு தன் படை வீரர்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு தனது வேலால் பூமியில் குத்திட, தூய நன் நீர் பெருக்கெடுத்தது. அதனை அருந்தி படை வீரர்கள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொண்டனர். இந்த தீர்த்தமே தற்போதைய நாழிக்கிணறு தீர்த்தம் ஆகும். கடற்கரைக்கு மிக அருகில் இருந்தும் இங்கு மட்டும் வற்றாமல் ஊறும் நீர் உவர்ப்பு இன்றி குடிப்பதற்கு ஏற்ற நல்ல நீராக விளங்குவது அதிசயம் ஆகும்.

பஞ்ச லிங்க சன்னதி சிறப்பு:

சூரபத்மனை சம்காரம் செய்த முருகப் பெருமான், அந்த பாவங்கள் நீங்கும் பொருட்டு ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்தார். இதுவே பஞ்ச லிங்கங்கள் ஆகும். இந்த பஞ்ச லிங்க சன்னதியானது சுப்பிரமணியரின் கருவறைக்கு பின்புறம், பாம்பறை என்று சொல்லக் கூடிய குகை போன்ற அமைப்பில் இருக்கிறது.

மூலவர் சுப்பிரமணிய சுவாமி:

இங்கு கருவறையில் சுப்பிரமணிய சுவாமி நான்கு கரங்களுள் ஜெப மாலை மற்றும் தாமரை மலர் ஏந்தி, நின்ற கோலத்தில் சிவ பூஜை செய்யும் கோலத்தில் ஏகாந்தமாக காட்சியளிக்கிறார். இவருக்கு முன்புறம் தங்க சீபலி நாதர் மற்றும் வெள்ளி சீபலி நாதர் ஆகிய இருவரும் இரண்டு பக்கங்களில் காட்சித் தருகின்றனர். இங்கு சுப்பிரமணியருக்கு பின்புறம் கருவறை சுவற்றில் சிவலிங்கமும் காட்சித் தருகிறது.

உற்சவர் சண்முகப் பெருமான்:

இங்கு தெற்கு நோக்கிய தனிக் கருவறையில் ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு நின்ற கோலத்தில் வள்ளி மற்றும் தெய்வானை அம்மை சகிதராக காட்சியளிக்கிறார் சண்முகப் பெருமான். சாதாரண நாட்களில் இவரின் இரண்டு கரங்களை மட்டுமே நாம் தரிசிக்க முடியும். மற்ற கரங்களை பட்டாடை போர்த்தி அலங்கரித்திருப்பார். கடலுக்குள் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருமேனி என்பதால் இவர் கடல் நீரால் அரிக்கப்பட்டு சொர சொரப்பாக காட்சித் தருகிறார். எனினும் இவரது அழகும், கம்பீரமும் குறையவில்லை. இவர் ஆவணி மற்றும் மாசி திருவிழா காலங்களில் உருகு சட்டை சேவையாகி, வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி, மூம் மூர்த்திகளாகிய சிவன், பிரம்மா, விஷ்ணு அம்சத்தில் காட்சித் தருவார்.

திருச்செந்தூர் சண்முகர் உருகுசட்ட சேவை சிறப்பு:

திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களில் ஏழாம் திருநாள் அன்று சண்முகர் சன்னதி விட்டு வெளியே எழுந்தருள்வார். இங்கு சண்முகப் பெருமான் பஞ்சலோக திருமேனியாயினும், சிதம்பரம் நடராஜரை போல மூலவர் அந்தஸ்து பெற்றவர். எனவே இங்கு சண்முகப் பெருமான் எழுந்தருள்வது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆக மற்ற மூர்த்தங்களை எடுத்து வாகனங்களில் வைப்பது போல , இந்த சண்முகப் பெருமானை மூலஸ்தானத்தில் இருந்து எடுத்து வைப்பதில்லை.

மாறாக உருகு பலகை என்ற ஒரு பெரிய பலகையை சண்முகர் எழுந்தருளி உள்ள பீடத்திலிருந்து சன்னதி வாயில் வரை போட்டு, சண்முகப் பெருமானை பலகை மீது இருத்தி சிறிது சிறிதாக ஆட்டி, ஆட்டி, அசைத்து பீடத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருள செய்வார்கள். இதனை காண கண்கள் கோடி வேண்டும். இதுவே உருகு சட்ட சேவை என்று சிறப்பிக்கப்படுகிறது.

மேலும் சண்முகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா சென்று மீண்டும் சன்னதி திரும்பும் வரை உருகு பலகை யானது சன்னதியிலிருந்து வாயில் வரை நீட்டி போடப்பட்ட நிலையிலேயே இருக்கும். இதுவே உருகு சட்ட சேவை என்று சிறப்பித்து கூறப்படுகிறது.

திருச்செந்தூர் சண்முகர் வியர்வை சிந்திய திருவிளையாடல்:

முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலியில் ஆங்கிலேய அதிகாரயாக இருந்தவர், ஒருமுறை திருச்செந்தூர் கோவிலுக்கு வருகிறார். அது சமயம் சண்முகப் பெருமானுக்கு கோடைக் கால உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சமயம் 16 வகை உபச்சாரங்களுள் ஒன்றான வெண் சாமரத்தால் விசிறிடும் உபசாரத்தை சண்முகப் பெருமானுக்கு சிவாச்சாரியார் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரி என்ன உங்கள் சுவாமிக்கு வியர்க்கவா போகிறது, சாமரம் கொண்டு வீசுகிறீர்கள் என கூறி ஏளனம் செய்கிறார். அதற்கு சிவாச்சாரியாரோ ஆம் உண்மை தான், எங்கள் பெருமானின் திருமேனியில் வியர்வை வெளிப்படுகிறது அதனால் தான் சாமரத்தால் வீசுகிறோம் என்று கூறுகிறார். அதனைக் கேட்டு சிரித்த ஆங்கிலேயர், அப்படியானால் வியர்ப்பதை தனக்கு காட்ட வேண்டும், இல்லையென்றால் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை செய்கிறார்.

View of the gopuram and the temple complex with hundreds of devotees thronging the open area outside the temple.

உடனே ஆங்கிலேய அதிகாரி முன்னிலையில் சண்முகப் பெருமானுக்கு அணிவிக்கப் பட்டிருந்த விலை மதிப்பு மிக்க ஆபரணங்கள் அனைத்தையும் களைந்திட்ட சிவாச்சாரியார், பெருமானின் வெற்று உடம்பு மேல் நன்கு உலர்ந்த வெள்ளை பருத்தி துணியை போர்த்தி விடுகிறார். அந்த வெள்ளை பருத்தி துணியானது சிறிது நேரத்தில் பெருமான் திருமேனியில் இருந்து வெளி வந்த வியர்வையால் நனைந்து விட, அந்த துணியை எடுத்து ஆங்கிலேயர் முன்பாக பிழிய அதிலிருந்து வியர்வைகள் சிந்துகிறது. இதனைக் கண்ட ஆங்கிலேயர் சண்முகரின் அபூர்வ சக்தியை உணர்ந்து, பெருமானை பணிந்து வணங்கி, தான் ஏளனம் செய்ததற்கு மன்னிப்பும் கோருகிறார். தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக சண்முகப் பெருமானுக்கு வெள்ளி, தங்க பாத்திரங்களை காணிக்கையாக செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சண்முகப் பெருமான் கடலில் இருந்து மீண்டு வந்த வரலாறு:

முற்காலத்தில் டச்சுக்காரர்கள் கடல் வழியாக திருச்செந்தூருக்கு வந்து பாசறை அமைத்து தங்குகின்றனர். அப்படி தங்கியிருந்த காலத்தில் திருச்செந்தூர் கோவிலுக்குள் இருந்த சண்முகர் மற்றும் நடராஜர் விக்ரகங்களை தங்கம் என நினைத்து கப்பலில் ஏற்றி தங்கள் நாட்டுக்கு கடத்திச் செல்ல முயற்சிக்கின்றனர். கப்பலில் ஏற்றி பயணம் மேற்கொண்ட சிறிது நேரத்தில் கடலில் கடும் சூறாவளி ஏற்பட்டு பயங்கர காற்றும், பேய் மழையும் கொட்டுகிறது. இதனால் கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் நிலை குலைந்து தடுமாறியது. அப்போது தாங்கள் கடத்தி வந்த விக்ரகங்கள் தெய்வ சக்தி மிகுந்தவை என்பதனை உணர்ந்த அந்த டச்சுக்காரர்கள், உடனே அந்த சண்முகர் சிலையையும், நடராஜர் சிலையையும், கடலில் போட்டு விட்டு மன்னிப்பு கோரினார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் விக்ரகங்களை கடலில் போட்ட மறுநிமிடம் சூறாவளியும், மழையும் நின்று கடல் அமைதி ஆனது. தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கூறி டச்சுக்காரர்களும் தங்கள் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்கள்.

இப்படி கடலுக்குள் போடப்பட்ட சண்முகர் மற்றும் நடராஜர் விக்ரகங்கள் பல வருடங்களுக்குப் பின்னர் ஒருநாள் வெளியே வரும் நேரம் நெருங்கிட, ஒருநாள் இரவு அப்போது இப் பகுதியை ஆண்ட திருமலை நாயக்கரின் பிரதிநிதியும், சிறந்த முருக பக்தருமான வடமலையப்ப பிள்ளை அவர்களின் கனவில் முருகப் பெருமான் தோன்றி, தான் தன் தந்தையுடன் கடலில் மூழ்கி இருப்பதாகவும் தான் இருக்கும் அந்த இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் என்றும், அதற்கு மேலே வானில் கருடப் பறவை வட்டமிடும் என்று அடையாளம் கூறி, தங்களை மீட்டு திருக்கோவிலில் சேர்க்கும் படியும் கூறி அருளுகிறார்.

காலையில் விழித்து எழுந்த வடமலையப்ப பிள்ளை, தான் கனவில் கண்டதை நாயக்க மன்னரிடம் கூறி, காவலாளிகளை திரட்டிக் கொண்டு படகில் சென்று முருகப் பெருமான் கூறிய இடத்தினை தேடிட, அங்கு கடலில் ஒரு எலுமிச்சம் பழம் மிதப்பதையும், அதற்கு மேலே வானில் கருடன் வட்டமிடுவதையும் கண்டு அந்த இடத்தின் கீழே குதித்து தேடிட, சண்முகர் மற்றும் நடராஜர் விக்ரகங்கள் கிடைக்கப் பெறுகின்றன. மீட்கப்பட்ட விக்ரகங்களை வடமலையப்ப பிள்ளை மீண்டும் படகில் ஏற்றி திருச்செந்தூர் கோவிலில் சேர்த்து மறு பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இதனை உணர்த்தும் விதமாக இன்றும் இங்குள்ள சண்முகர் மற்றும் நடராஜர் விக்ரகங்கள் கடல் நீரால் அரிக்கப்பட்ட தடயங்களோடு காட்சித் தருகிறது.

இந்த வரலாற்றை விளக்கும் ஓவியப் படங்கள் திருக்கோவில் பிரகாரத்தில் காட்சியளிக்கின்றன.

(தொடர்ச்சி பகுதி-2ல் காண்க)

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram