திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவுகளில் உள்ள பொதிகை மலையின் உச்சியில் இருந்து கொட்டுகின்ற அருவியாக திகழ்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 1725 மீட்டர் உயரத்தில் தாமிரபரணி நதி அமைந்திருக்கிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் தாமிரபரணி நதி இருக்கிறது. இந்த நதியானது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக பாய்வதால் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நீர்வளம் மிக்க ஒரு இடமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றாகவும் புகழ் பெற்று விளங்குகிறது. மேலும் தமிழ் மக்களின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் பாரம்பரியங்களில் ஒரு அங்கமாகவும் தெய்வீக வரலாற்று காவியங்களில் பதிப்பாகவும் அமைந்திருப்பது தாமிரபரணி நதிக்கரையில் ஒரு தனி சிறப்பாகும்.
தாமிரபரணி ஆறு சுமார் 128 கிலோமீட்டர் அதாவது 80 மைல் நீளம் கொண்டதாகும். மேலும் தமிழ்நாட்டின் ஒரே வற்றாத நதியாகவும் விளங்குகிறது. இந்த நதியானது முதலில் வடக்கு நோக்கி பாய்ந்து பின்னர் கிழக்கு திசையில் மாறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தின் வீரகேரளம்புத்து, சங்கரன்கோவில், செங்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, ஆலங்குளம், நாங்குநேரி, பாளையங்கோட்டை போன்ற இடங்களின் நிர்வாக எல்லைக்கு உட்பட்டதாகும். இந்த ஆற்றுப் படுகையானது தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டு, ஓட்டப்பிடாரம்,ஸ்ரீவைகுண்டம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
பொதிகை என்னும் அகத்திய மலையில் உருண்டோடி வரும் தாமிரபரணி ஆறானது சுமார் 75 மைல் தொலைவு வரை பயணத்தை தொடர்கிறது. இதனால் சுமார் 1750 சதுர மைல் பகுதிகள் செழிப்பு மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. . மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஓடிவரும் தாமிரபரணி நதியானது அடுத்தடுத்து பல குன்றுகளை கடந்துவருகிறது. அந்த இயற்கையான சூழல் மிகுந்த நீர்வீழ்ச்சியாக கொட்டும் அழகை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் கரையாற்றை சந்திக்கும் இடத்தில் உல்லார், பேயார், பாம்பார் ஆகிய துணைநதிகளும் இணைகிறது. காரையார் அணை நீர்த்தேக்கத்தில் பாய்வதற்கு முன்பாக 40 மீட்டர் அதாவது 130 அடி உயரத்தில் பாணதீர்த்தம் நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது என்பது இந்த தாமிரபரணி ஆற்றின் தனிச்சிறப்பாகும்.
தாமிரபரணி ஆற்றோடு சேர்வலாறு சேர்ந்த பிறகும் முண்டன்துறை அடைகின்றது. அதன் பிறகு தாமிரபரணி இரண்டு பிரிவாக பிரிகிறது . அதில் ஒரு பகுதி 300 அடி நீர்வீழ்ச்சியாக பாபநாசம் மலை குன்றுகளை கடந்து, கல்யாணதீர்த்தம் என்ற பெயருடன் 300 அடி நீர்வீழ்ச்சியாக பாய்கிறது.மற்றொரு நீர்வீழ்ச்சி லோயர்கேம்ப் அருகே வந்து மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. அதன்பிறகு அகத்தியர் அருவிக்கு பின்னால் மீண்டும் தாமிரபரணியில் சேருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தாமிரபரணி, தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் வழியாக செல்கிறது. இந்த ஆறானது புன்னக்காயல் என்னும் இடத்தில் மன்னார் வளைகுடாவில் இந்து மகா சமுத்திரத்தில் கலக்கிறது.
சிவனுக்கும் பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடக்கின்றது. திருமண வைபவத்தை காண்பதற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் கைலாயத்திற்கு வருகை புரிகின்றனர். அதிகமானோர் கைலாயத்தில் குவிந்ததால் உலகின் வடதிசை பகுதி தாழ்ந்து தென்திசை பகுதி உயர்கின்றது. உலகத்தை சமநிலையில் கொண்டு வருவதற்காக சிவபெருமான் அகஸ்தியரை தெற்கு திசை நோக்கி அனுப்புகிறார். அகஸ்தியரும் சிவபெருமான் கூறியதை ஏற்று தெற்கு திசை நோக்கி புறப்படுகிறார். புறப்படும் வேளையில் பார்வதிதேவி தம்முடைய முத்து ஆரத்தை அகத்தியரிடம் அளிக்க, அதனை கமண்டலத்தில் ஏந்தியவாறு தெற்கு திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
ஈஸ்வரர் இருக்கும் கைலாய மலையில் விட்டு அகத்தியர் இறங்கியதும் முத்துமாலை ஒரு பெண்ணாக உருமாறி அகத்தியரை பார்த்து வணங்கி நின்றது அந்த நேரம் அனைத்து தேவர்களும் மலர் மாரி பொழிந்து தம்முடைய மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர். தாமிர வர்ணம் கொண்டு அந்த மலர்கள் திகழ்ந்ததால் தாமிரபரணி என்று பெயர் பெற்றது. சிவபெருமான் அந்தப் பெண்ணை நதியாக மாற்றி ‘உரிய நேரம் வந்ததும் உலகத்திற்கு வந்து மேன்மையை தருவாள்’ என்று கூற .. அகத்தியரும் அந்த நீரை கமண்டலத்தில் எடுத்துக்கொண்டு தென்திசைக்கு புறப்படுகின்றார்.
தென்திசையில் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே சிவபெருமானின் கல்யாண கோலத்தை தரிசிக்க பெரும் பாக்கியத்தையும் பெறுகிறார். அந்த மகிழ்ச்சியோடு குப்தசிருங்கம் எனும் பெயர் பெற்ற கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் தம்முடைய கமண்டலத்தில் இருக்கும் தாமிரபரணி நீரினை ஓட விடுகிறார். இவ்வாறு தாமிரபரணி நதியானது உருவாகி பல இடங்களில் தவழ்ந்து பல கிளைகளாக பிரிந்து மீண்டும் சங்கமிக்கும் மிக அழகிய நதியாக புகழ் பெற்று விளங்குகிறது என்கிறது வரலாறு.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய ஸ்தலங்கள்
தமிழகத்தின் நவ கைலாயங்களில் தாமிரபரணி நதிக்கரையில் ஒன்பது புகழ்பெற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளன.
அகத்திய முனிவரின் சீடர்களில் மிகவும் முக்கியமானவரான என்றுமுக்திபெறுவதற்கு விரும்பி அவருடைய குருவான அகஸ்தியரை வேண்டுகின்றார். தாமிரபரணி நதிக்கரையில் ஒன்பது மலர்களை மிதக்க விடுமாறும் அந்த ஒவ்வொரு மலர்களும் கரையை அடையும் இடத்தில் சிவன் கோவில் கட்டினால் முக்தி பெறலாம் என்று அகஸ்திய முனிவர் உறவு முனிவரிடம் கூற உரோமச மகரிஷி அதன்படி மலர்களை மிதக்க விடுகிறார் அவைகள் கரையில் சேரும் இடங்களில் சிவபெருமான் கோவில் கட்டுகிறார் அவையே நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது.
பாபநாசம் (சூரிய தலம்) - முதல் மலர் அடைந்த இடம்
சேரன்மகாதேவி (திங்கள் தலம்) - 2 வது மலர் அடைந்த இடம்
கொடகநல்லூர்(செவ்வாய் தலம்) - 3 வது மலர் அடைந்த இடம்
(நடு கைலாசம் கோயில்கள் )
குன்னத்தூர் (ராகு தலம்) - 4 வது மலர் அடைந்த இடம்
முறப்பநாடு (குரு தலம்) - 5 வது மலர் அடைந்த இடம் -
ஸ்ரீ வைகுண்டம் (சனி தலம்) - 6 வது மலர் அடைந்த இடம் -கீழ் கைலாசம் கோவில்கள்
தென்திருப்பேரை (புதன் தலம்) - 7 வது மலர் அடைந்த இடம்
ராஜபதி(கேது தலம்) - 8 வது மலர் அடைந்த இடம்
சேர்ந்தபூமங்கலம் (சுக்கிரன் தலம்) - 9 வது மலர் அடைந்த இடம்
காளிதாசனின் ரகுவம்சம் , வியாசர் பாரதம், வால்மீகி ராமாயணம் இவைகளில் தாமிரபரணி என்னும் வார்த்தை தாம்பிரபரணி என்று சொல்லப்பட்டிருக்கிறது. தாமிரம்+பரணி அதாவது தாமிரம் என்றால் செம்பு தாமிரம் கலந்த பரணி நதி என்ற பெயரும் பெற்ற நதியாக விளங்குகிறது. அந்தப் பெயர்தான் நாளடைவில் மருவி தாமிரபரணி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது
தாமிரபரணி ஆற்றின் கரையில் தாமிர சத்து நிறைந்து இருக்கின்றது. அந்த சக்தியானது நோய் தீர்க்கும் அரிய மருந்தாகவும் விளங்குகிறது. ஆதலால் நோய்கள் அனைத்தும் விலகி ஆரோக்கியமான வாழ்வு பெறுவதற்கு தாமிரபரணி ஆற்றில் நீராடுவது சிறந்ததாகும்.
தாம்பபன்னி, தாப்ரபன்னெ என்ற பெயர்களால் இலங்கைத் தீவு அழைக்கப்பட்டு வந்ததாகவும் மலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அங்கே குடியேறிய மக்கள் நாளடைவில் தாம்பபன்னி என்று அழைத்ததாகவும் அதனால் தாமிரபரணி என்று அந்த ஆறு அழைக்கப் படுவதாக கலைக்களஞ்சியம் என்கின்ற நூலில் ஐந்தாவது பகுதியில் நூலின் ஆசிரியர் தாமிரபரணி பெயர் வந்த கதையை பற்றி குறிப்பிடுகின்றார்.
தாமிரபரணி நதிக்கு பொருநை நதி என்ற மற்றொரு சிறப்பு பெயரும் இருக்கிறது. முற்காலத்தில் தமிழ் நூல்களில் தாமிரபரணி ஆற்றை பொருநை என்று அழைத்து வந்தனர்.சிலப்பதிகாரத்திலும் பொருநை நதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நம்மாழ்வார் அவருடைய பாடலில் தாமிரபரணி நதியை பொருநல் நதி என்று பாடி இருக்கிறார். . இயற்கை சிறப்பு மிக்க பொதிகை மலையிலிருந்து தாமிரபரணி நீர்வீழ்ச்சியாக விழும் பொழுது பாணதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
தாமிரபரணியில் பல துணை நதிகள் உள்ளன, அவை அதன் போக்கின் போது வெவ்வேறு புள்ளிகளில் இணைகின்றன. பாபநாசம் நீர்த்தேக்கத்தின் அருகே கலக்கும் பேராறு, உள்ளாறு, கரையாறு, பம்பா ஆகிய ஆறுகள் துணை நதிகளாகும். தாமிரபரணியின் முக்கிய துணை நதியானது சேர்வலர் ஆறு, அதன் தோற்றத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இணைகிறது. மணிமுத்தாறு அகத்திமலை மலைத்தொடரில் உற்பத்தியாகி அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணியில் கலக்கிறது. கடனா நதி அதன் பிறப்பிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் இணைகிறது. பச்சையாறு ஆறு கோபாலசமுத்திரம் அருகே இணைகிறது. தாமிரபரணியில் சேரும் முன் சித்தார் ஆறு 73 கிலோமீட்டர்கள் ஓடுகிறது.
கல்லிடைகுறிச்சிக்கு 2 மைல் மேற்கே கன்னடியன் அணைக்கு உள்ளே மணிமுத்தாறு நதி வந்து கலக்கிறது. ராம நதியும், கடனா நதியுடன் சேர்ந்து அது கடனா நதியாக திருப்புடைமருதுhரில் இடப்பக்கம் கலக்கிறது. எதிரே ஒரு காலத்தில் வராக நதி வந்து சேர்ந்தது. தற்போது அந்த நதி கன்னடியன் கால்வாயில் கலக்கிறது. முற்காலத்தில் இந்த இரு நதிகளும் தாமிரபரணியில் சேர்ந்த காரணத்தால் இவ்விடம் முக்கூடல் எனப்படுகிறது.
3 ஆறுகள் கலக்கும் மற்றொரு முக்கூடல் சீவலப்பேரியாகும். குற்றால மலையில் தோன்றி வருவது சித்ரா நதி என்னும் சிற்றாறும், கயத்தாறு என்னும் உப்போலோடை என்று அழைக்கப்படும் ஆறும் சேரும் இடமே சீவலப்பேரியாகும். கழுகுமலையில் உற்பத்தியாகும் கயத்தாறு நதி பராக்கிரம பாண்டி என்னும் குளத்தில் சேருகிறது. அந்த குளம் நிரம்பியவுடன் அது நேராக சீவலப்பேரியில் 3 நதிகளுல் ஒன்றாக வந்து சேருகிறது. திருவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து இரண்டரை மைல் அடுத்து ஆத்துhரில் தாமிரபரணி வந்து சேரும் போது, ஆத்தூரில் இருந்து கரை நீண்ட தொலையில் தொடர்ந்துள்ளது. இந்த நதி கடலோடு கலக்கும் இடம் தான் சங்கு முகம் என்னும் வடிநில பகுதி.
தாமிரபரணியில் 8 குறு அணைக்கட்டுகள் உள்ளது. இவை அனைத்தும் நமது நாட்டை ஆண்ட குறுநில மன்னர்களால் கட்டப்பட்டது. அவை கோடை மேலழகியான் அணைக்கட்டு, நதியுண்ணி அணைக்கட்டு, கன்னடியன் அணைக்கட்டு, பழவு+ர் அணைக்கட்டு, அரியநாயகிபுரம் அணைக்கட்டு, மருதுhர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு ஆகியவை ஆகும.
இந்த அணைகள் பண்டைய மற்றும் இடைக்கால மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. பின்னர் 1869 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கடைசி அணை கட்டப்பட்டது. இந்த ஆற்றின் பழைய பெயர் தமிழில் பொருநை.
இந்த அணைக்கட்டுகளில் 11 கால்வாய்கள் உள்ளது. அவை கோடைமேலழகியான் அணைக்கட்டு என்னும் தலையணையில் இருந்து பிரிகின்ற வடக்கு மற்றும் தெற்கு என்னும் இரு கால்வாய்கள். நதியுண்ணி அணைக்கட்டு கட்டில் இருந்து பிரிகின்ற நதியுண்ணி கால்வாய்.
கன்னடியன் கால்வாயில் இருந்து பிரிகின்ற கன்னடியன் கால்வாய். அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து பிரிகின்ற கோடகன் கால்வாய். பழவூர் அணைக்கடடில் இருந்து பிரிகின்ற பாளையங்கால்வாய். சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து பிரிகின்ற திருநெல்வேலி கால்வாய் ஆகியவை நெல்லை மாவட்டத்தில் உள்ளது.
தாமிரபரணிநதியின் சிறப்பானது உலகமெங்கும் பரவி இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த இடம் தேடி விரும்பி வந்து ஆற்றின் நதியின் அழகையும், இயற்கை சூழலையும் ரசிக்கின்றனர். தாமிரபரணி நதியானது திருநெல்வேலி மாவட்டத்திற்கு புகழ் சேர்க்கக்கூடிய புண்ணியம் பெற்று நதியாக விளங்குவது திருநெல்வேலி மாவட்டத்திற்கு உரிய சிறப்பாகும்