Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா

Idols of nellaiappar god and his wife decorated with flowers and fancy clothing.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா

"திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி" என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவிலில் அனைத்து மாதங்களும் திருவிழாக்கள் தான். தற்போது திருநெல்வேலி சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் பங்குனி மாதம் 5 (18/03/2021) ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சிவாலயம் என்று போற்றப்படும் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் சுவாமி பல்வேறு திருவிளையாடல்களை முற்காலத்தில் நிகழ்த்தி உள்ளார். அவற்றுள் வேணுவனத்தில் சுவாமி வெட்டுப்பட்ட திருவிளையாடல், வேண்ட வளர்ந்த திருவிளையாடல், சுவேத கேது மஹாராஜாவுக்காகக் காலனை உதைத்த திருவிளையாடல், நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல், மானூரில் கருவூர் சித்தருக்குக் காட்சியளித்த திருவிளையாடல், பாண்டிய மன்னனுக்கு செங்கோல் வழங்கிய திருவிளையாடல் போன்றவை குறிப்பிடத்தக்கது ஆகும்.

முற்காலத்தில் தென் பாண்டி நாட்டின் பெரும் தலை நகரமாக விளங்கிய நெல்லை பகுதியைப் பாண்டிய மன்னர் அரசாட்சி செய்து வந்தார். அவற்றுள் நின்ற சீர் நெடுமாறன் எனப்படும் முழுதும் கண்ட ராம பாண்டியன் இந்தக் கோவில் வரலாற்றோடு மிகவும் தொடர்புடையவராக இருக்கிறார். அந்தப் பாண்டிய மன்னனுக்கு சுவாமி நெல்லையப்பர் செங்கோல் வழங்கிச் சிறப்பித்த திருவிளையாடலைச் சிகர நிகழ்ச்சியாகக் கொண்டு இந்தப் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவின் நான்காம் நாள் வேணுவன லிங்கோற்பத்தி திருவிளையாடல் விழாவும், பத்தாம் நாள் பங்குனி உத்திரம் அன்று பாண்டிய மகாராஜாவுக்கு செங்கோல் வழங்கிய திருவிளையாடல் விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழா நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களை இங்கு நாம் காணலாம்.

பங்குனி உத்திர திருநாள் கொடியேற்றம்:

காலை:பங்குனி மாதம் 5 (18/03/2021) ஆம் தேதி, வியாழக்கிழமை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் சன்னதி உள்பிரகார கொடிமரத்தில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெறும்.

உடையவர் லிங்க தரிசனம்:

திருநெல்வேலி சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில் கருவறைக்குள் ரகசிய சிறு மூர்த்தமாக இருக்கும் உடையவர் லிங்கத்துக்கு இந்தப் பங்குனி உத்திர திருவிழா நாட்களில் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள், அனைவரத தான நாத மண்டபத்தில் வைத்துச் சாயரட்சை காலத்தில் நடைபெறும். இந்த உடையவர் லிங்கத்தை வருடத்தில் ஒரு முறை இந்தப் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் முதல் ஒன்பது நாட்களுக்கு மட்டுமே சாயரட்சை காலத்தில் பக்தர்கள் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இந்த உடையவர் லிங்கம் கருவறைக்குள் ரகசிய மூர்த்தமாகவே இருக்கும்.

இந்த வருடம் பங்குனி உத்திர திருவிழாவுக்குக் கொடியேற்றம் நடைபெறும் நாளான பங்குனி 5 (18/03/2021) ஆம் தேதி முதல், ஒன்பதாம் திருநாளான பங்குனி 13 (26/03/2021) ஆம் தேதிவரை

  • சாயரட்சை காலத்தில் இந்த உடையவர் லிங்கத்தை பக்தர்கள் தரிசிக்கலாம்.
  • உடையவர் லிங்கம் பூஜை நேரம் மாலை: 5.30 முதல் 6.15 வரை (தோராயமாக).
  • ஸ்ரீ சந்திரசேகரர் - ஸ்ரீ பவானி அம்மை புறப்பாடு:

பங்குனி உத்திர திருவிழா தொடங்கிய நாள் முதல் ஒன்பதாம் திருநாள் வரை இந்தத் திருக்கோவிலின் சிறிய நாயகரான ஸ்ரீ சந்திரசேகரர் - ஸ்ரீ பவானி அம்மை தினமும் சப்பரத்தில் எழுந்தருளிப் பெரிய பிரகாரங்களில் உலா வருவார்கள்.

நான்காம் திருநாள், வேணுவனலிங்கோற்பத்தி திருவிளையாடல்:

முற்காலத்தில் வேணு எனப்படும் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்த இந்தத் திருநெல்வேலி பகுதியை ராமபாண்டியன் என்னும் மன்னன் அரசாட்சி செய்து வந்தான். அந்த மன்னனுக்கு இந்த மூங்கில் மரங்கள் அடர்ந்த வனத்தின் வழியாக ராமக் கோன் என்னும் ஆயன் ஒருவன் தினமும் தனது வீட்டில் வளர்க்கும் பசுக்களிலிருந்து பாலை கறந்து கொண்டு சென்று அரண்மனையில் வழங்கி வந்தான். ஒருநாள் வழக்கம்போல் பாலை கறந்து மண்குடத்தில் நிரப்பித் தனது தலைமீது சும்மாடு கட்டி சுமந்து சென்று கொண்டிருக்கையில், ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அங்கிருந்த மூங்கில் முலை தடுக்கி பால் குடம் கவிழ்ந்து விடுகிறது. இதனால் மன்னனுக்கு குறைந்த அளவு பாலை மட்டுமே அன்று கொடுத்துவிட்டு ராமக்கோன் திரும்பி வந்துவிடுகிறான். பின்னர் அடுத்து வந்த ஐந்தாறு நாட்களிலும் இதே சம்பவம் வாடிக்கையாக நடைபெற்றதால் அரண்மனைக்கு ஒழுங்காகப் பால் கொண்டு செல்ல முடியவில்லை. அரண்மனையிலோ இனி ஒழுங்காகப் பால் கொண்டு வரவில்லை என்றால் தகுந்த தண்டனை கிடைக்கும் என எச்சரித்து அனுப்பிட, வருத்தத்தில், கோபத்திலும் இருந்த ராம்கோன் ஒரு கோடரியை எடுத்துச் சென்று தினமும் தனது காலை இடறிவிடும் அந்த மூங்கில் மூலையை வெட்ட முயற்சிக்க, அங்கிருந்து ரத்தம் பீறிட்டு வருகிறது.

இதனைக் கண்டு பயந்த ராமக்கோன் அங்கிருந்து ஓடிச்சென்று அரண்மனையில் தான் கண்ட காட்சியைக் கூற, மன்னனும் தனது பரிவாரங்கள் சூழ அந்த இடத்திற்கு வந்து திகைத்து நிற்கிறான். தனது பரிவாரங்களைக் கொண்டு அந்த இடத்தைத் தோண்டிட அங்குத் தலை பகுதி வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் ஒன்று வெளி வருகிறது. அப்போது வானில் சுவாமி இடப வாகனத்தில் காட்சியளித்து தான் இந்த இடத்தில் எழுந்தருளியிருந்ததை வெளிகாட்டிடவே இந்தத் திருவிளையாடலைப் புரிந்ததாகக் கூறி, தனக்கு அந்த இடத்திலேயே கோவில் கட்டி வெட்டுப்பட்ட கோலத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யுமாறு கூறி அருளினார். சுவாமியின் உத்தரவை ஏற்ற மன்னன் கட்டிய திருக்கோவில் தான் இன்றைய பெரிய கோவில் ஆகும். இந்த வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடலே வேணுவானலிங்கோற்பத்தி ஆகும். பங்குனி உத்திர திருவிழாவின் நான்காம் திருநாள் அன்று பகல் வேளையில் திருக்கோவில் ஸ்தல விருட்சமான மூங்கில் மரத்தடியில் வைத்து இந்த விழா விமரிசையாக நடைபெறும்.

நான்காம் திருநாள் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவில் அம்மையப்பர் இடப வாகன காட்சி:

பங்குனி உத்திர திருவிழாவின் நான்காம் திருநாளான பங்குனி 8 (21/03/2021) ஆம் தேதி, வேணுவானலிங்கோற்பத்தி முடிந்து இரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

அப்போது ஸ்ரீ விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனத்திலும், ஸ்ரீ சுப்பிரமணியர் - மர மயில் வாகனத்திலும், சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - வெள்ளி இடப வாகனத்திலும், ஸ்ரீ காந்திமதி அம்பாள் - வெள்ளி இடப வாகனத்திலும், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - சப்பரத்திலும், பாண்டியமஹாராஜா - சப்பரத்திலும் எழுந்தருளி ரத்த வீதிகளில் உலா வருவார்கள்.

ஏழாம் திருநாள் நடராஜர் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி தரிசனம்:

பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாம் திருநாளான பங்குனி 11 (24/03/2021) ஆம் தேதி இரவு 7.00 மணி அளவில் இந்தக் கோவிலின் சிறிய நடராஜரான ஸ்ரீ சௌந்தர சபாபதி சிவப்பு சாத்தி திருக்கோலத்தில் எழுந்தருளி, பெரிய பிரகாரங்களில் உலா வருவார். தொடர்ந்து இரவு 9.00 மணி அளவில் வெள்ளை சாத்தி திருக்கோலத்தில் எழுந்தருளிப் பெரிய பிரகாரங்களில் உலா வருவார்.

எட்டாம் திருநாள் நடராஜர் பச்சை சாத்தி தரிசனம்:

பங்குனி உத்திர திருவிழாவின் எட்டாம் திருநாளான பங்குனி 12 (25/03/2021) ஆம் தேதி காலை 8.00 மணி அளவில் ஸ்ரீ சௌந்தர சபாபதி பச்சை சாத்தி திருக்கோலத்தில் எழுந்தருளி, பெரிய பிரகாரங்களில் உலா வருவார்.

ஒன்பதாம் திருநாள் சட்டத்தேரோட்டம்:

பங்குனி உத்திர திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான பங்குனி 13 (26/03/2021) ஆம் தேதி காலை 8.00 மணி அளவில் ஸ்ரீ சந்திரசேகரர் - ஸ்ரீ பவானி அம்மை சட்டத்தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வருவார்கள்.

பத்தாம் திருநாள் பாண்டிய மன்னனுக்கு செங்கோல் வழங்கிய திருவிளையாடல் விழா:

பங்குனி உத்திர திருவிழாவின் பத்தாம் திருநாளான பங்குனி 14 (27/03/2021) ஆம் தேதி மாலை மணி 6.00 அளவில் திருக்கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ காந்திமதி அம்மை, பாண்டியமகாராஜா எழுந்தருளச் செங்கோல் வழங்கும் விழா வெகுவிமரிசையாக நடைபெறும். முன்னர் பாண்டிய மன்னனுக்கு வழங்கப்பட்ட செங்கோலுடன், சுவாமியின் பாதமும் சேர்த்து தற்போது திருக்கோவில் அறநிலையத்துறை அதிகாரி மற்றும் அறங்காவலர் குழு தலைவரிடம் வழங்கப்படும். அவர்கள் சுவாமியின் திருப்பாதத்தை வெள்ளி தாம்பாளத்தில் வைத்துத் தலையில் சுமந்தும், செங்கோலை கையில் ஏந்தியும் திருக்கோவில் பிரகாரங்களை சுற்றி வரும் நிகழ்வு நடைபெறும்.

இதுவே திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் சிறப்பம்சம் ஆகும்

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram