ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.
காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.
ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.
பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.
ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.
நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.