Logo of Tirunelveli Today
English

பங்குனி உத்திரம் (Panguni Uthiram)

வாசிப்பு நேரம்: 8 mins
No Comments
A poster illustrating Panguni Uthiram with the marriage of God and Goddess.

பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரம் நாள்தான் பங்குனி உத்திரம் என கொண்டாடப்படுகிறது. அந்த தினமே முருகனுக்குரிய சிறப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது .தமிழ் மாதத்தில் 12 ஆம் மாதமாக பங்குனி மாதம் விளங்குகிறது. நட்சத்திரங்களில் 12 ஆம் நட்சத்திரமாக உத்திர நட்சத்திரம் இருக்கிறது.12 என்னும் எண்ணில் வரக்கூடிய பங்குனி உத்திரம் 12 கைகளையுடைய முருகப் பெருமானுக்கு விசேஷ தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து முருகன் கோவில்களிலும் வருடம்தோறும் திருவிழாக்கள் நடைபெறுகிறது.

சிறப்புக்குரிய பங்குனி உத்திரம் பிறந்த வரலாறு (History of Panguni Uthiram )

முற்காலத்தில் அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வேளையில் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான் புறப்படுகின்றார். அசுரனை அழிப்பதற்கு பங்குனி மாதத்தில் தன் தாய், தந்தைரை வணங்கி பயணத்தை தொடர்கின்றார் அந்த சமயத்தில், வழியில் சிறிய மலை ஒன்று பெரிதாக வளர ஆரம்பித்தது. வேலவனின் படைகளை வழிமறித்தது. அதற்கான காரணம் என்ன! என்று நாரதரிடம் கேட்க ‘ அகத்திய முனிவரின் சாபத்தினால் கிரவுஞ்சன் எனும் அசுரன் அசையாமல் மலையாகி நிற்கின்றான். ஆனாலும் தன்னை கடந்து செல்பவர்கள் இடத்தில் மிகவும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கின்றான் ‘ என்று நாரதர் கூறுகிறார்.

‘அதுமட்டுமல்லாது பக்கத்தில் இருக்கும் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியான யானை முகம் கொண்ட, தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு வருகிறான். அவன் தேவர்களுக்கு மிகுந்த துன்பத்தை கொடுக்கிறான் ‘ என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.

உடனே முருகப்பெருமான் தன் தளபதி வீரபாகுவை அழைத்து படையில் பாதியை கொண்டுசென்று , தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிடுகிறார்.

முருகப்பெருமானுக்கும் அசுரனுக்கும் நிகழ்ந்த போர்

முருகப்பெருமானின் படைத்தலைவன் வீரபாகு படையோடு வருகிறான் என்பதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து போராடுகிறான். கடும் போர் நடக்கிறது. போர்க்களத்தில், முருகப்படையின் வீரரான வீரகேசரியை தன் கதாயுதத்தால் தாரகாசுரன் மார்பில் அடித்து சாய்க்கின்றான். இதைபார்த்த வீரபாகு கோபம் கொண்டு, தாரகாசுரனை கடுமையாக தாக்குகிறான். ஆனால் தாரகாசுரனோ திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச்சாய்க்க, மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் போர் தொடுக்கிறான்.

எதிர் தாக்குதல் நடத்த முடியாது தாரகாசுரன் தன்னுடை மாய வேலைகள் மூலமாக எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் செல்கின்ற செல்கின்றான் . வீரபாகுவும் விடாது தொடர்ந்து மலைக்குள் நுழைய, கிரவுஞ்சமலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை தாக்குகின்றன.

இதை நாரதர் முருகப்பெருமானிடம் தெரிவிக்கிறார். கோபம் கொண்ட முருகப்பெருமான் தாரகாசுரனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை சமாளிக்க முடியாது மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட முருகப்பெருமான், தன் சக்திவாய்ந்த வேலினை கையில் எடுத்து வீசுகிறார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறாக்கி உடைத்து, தாரகாசுரனை கொல்கிறது. இந்த போரின் முடிவுக்குப் பிறகு இந்திரனின் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமான், மணந்தார். அந்த சிறப்புக்குரிய நாள்தான் பங்குனி உத்திரமாகும்.

குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த பங்குனிஉத்திரம் (Panguni Uthiram Kuladeivam Vazhipaadu)

முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாட்டிற்கும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா திருக்கோவிலை வழிபடும் நாளாக இந்தப் பங்குனி உத்திர திருநாள் அமைந்திருக்கிறது. பங்குனி உத்திர நாள் அன்று மக்கள் தங்கள் குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா கோவில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்கள் குல தெய்வம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அன்று ஒன்று கூடி பொங்கல் வைத்தும், படையல் இட்டும், தேங்காய் உடைத்தும், மொட்டை அடித்தும், காத்து குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் குலதெய்வங்களை பங்குனி உத்திர விழா வினை மிகவும் சிறப்பாக வழிபடுகிறார்கள்.

பழனியில் சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திரம் திருவிழா (Panguni Uthiram Festival in Pazhani)

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக விளங்கும் பழனியில் திருவாவினன்குடியில் அமைந்து இருக்கும் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் தேரோட்டத்துடன் கூடிய மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தினர் ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் புனித நீரை கொண்டு வருவார்கள். பழனியில் போகரால் உருவாக்கப்பட்ட நவபாசாண முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.. பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும் என்பதால் நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பம் படாமல் காப்பதற்கு . மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் முருகனை குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழாவாக பங்குனி உத்திரம் அமைந்திருக்கிறது.

திருக்குறுங்குடி அழகியநம்பி பங்குனி திருவிழா(Thirukurungudi Azhagiya Nambi Panguni Festival)

வைணவ திவ்ய தேச ஸ்தலங்கள் நூற்றியெட்டினுள் ஒன்றாகத் திகழ்வது திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோவில் ஆகும். இங்குப் பஞ்சகேத விமானத்தின் கீழ் மூலவர் ஸ்ரீ நம்பிராயர் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். வைஷ்ணவ திருக்கோவிலான இங்கு மஹேந்திரகிரி நாதர் என்ற பெயரில் சைவ கடவுளான சிவபெருமானும் தனி சன்னிதியில் காட்சித் தருகிறார். மேலும் இங்குப் பக்கம் நின்ற பிரான் என்று போற்றப்படும் பைரவர் சந்நிதியும் அமையப்பெற்றுள்ளது. பைரவரின் மூச்சுக்காற்றில் சன்னிதி தீபம் அசையும் அதிசய நிகழ்வை இங்குத் தரிசிக்கலாம். இந்தத் திருக்கோவிலில் பல உற்சவங்கள் நடைபெற்றாலும், பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவமும், கார்த்திகை மாதம் நடைபெறும் கைசிக ஏகாதசி விழாவும் பிரசித்தி பெற்றதாகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பங்குனி உத்திரம் திருவிழா(Srivilliputhur Panguni Uthiram Festival)

திருவரங்கத்து நம்பெருமாளே, பங்குனி உத்திர நாளன்று திருவில்லிபுத்தூர் எழுந்தருளிக் கோதையை கைப்பிடித்தார் என்று கூறப்படுவது உண்டு. பெருமாளின் மனதையே ஆண்டதால் கோதை அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்கப்பட்டாள். இந்த வரலாற்று நிகழ்வை மையமாகக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.

சிவசைலம் பங்குனி திருவிழா (Sivasailam Panguni Festival):

ஆழ்வார்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி, கடனா நதிக்கரையில் அமையப்பெற்றுள்ள ஸ்தலம் சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ சிவசைலப்பர் திருக்கோவில். இந்தத் திருக்கோவில் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளதால் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இந்தச் சிவசைலம் திருக்கோவிலில் பங்குனி திருவிழா வருடந்தோறும் கொடியேற்றத்துடன் துவங்கி, அன்று முதல் பன்னிரண்டு நாட்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

சோமசுந்தரர் - மீனாட்சி கல்யாணகோலம்

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். பங்குனி உத்திர நாளன்று சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை ஆபரணங்களால் அலங்கரித்த மணவறையில் மணமக்களாக அமர்த்தி வேதங்கள் ஓத , வாத்தியங்கள் முழங்க, ஸ்லோகங்கள் வாசிக்க ,ஹோமம் வளர்த்து , தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைபோகம் மிகவும் கோலாகலமாக பங்குனி உத்திரம் அன்று நடைபெறும்.

பங்குனிஉத்திரம் திருமண திருவிழா ஆன்மா பதியாகிய சிவத்துடன் பசு இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக் காட்டுவதாகும். இந்த சிறப்பான தினத்தன்று அம்மையப்பனுக்கு திருமணம் நடந்த நிகழ்வு குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகலில் உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் என உணவு உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இந்த வைபவத்தை கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.

பங்குனிஉத்திரம் விசேஷ சிறப்புகள் (Specialties of Panguni Uthiram)

பங்குனி உத்திர நாளன்று தெய்வத் திருமணங்கள் நடந்திருப்பதால் தெய்வீக மாதம் என்று அழைக்கப்படுகின்றது. பங்குனி உத்திரத்தில் முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டு நாளாகும். வள்ளி அவதரித்த தினமாக மற்றும் பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. மதுரை மாநகரில் மீனாட்சிதேவி - சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடைபெறுகிறது.. தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாளாகவும் திகழ்கிறது. இராமபிரான் சீதாதேவியை கைப்பிடித்த நன்னாள் மற்றும் லட்சுமணன்- ஊர்மிளை, பரதன்- மாண்டவி,, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் - ரங்கநாதர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திர நாள் ஆகும்.

சுவாமிமலையில் முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த நாள் பங்குனி உத்திர நாள் ஆகும். பங்குனி உத்திரத்தில்தான் கேரளாவில் பந்தளராஜன் மகனாக ஐயப்பன் அவதரித்தார்.

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் "பல்குநன்" என்று பெயர் பெற்ற தினமாக மற்றும் பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்த தினமாகவும் பங்குனி உத்திரம் திகழ்கிறது.

பங்குனி உத்திரத்தில்தான் காரைக்கால் அம்மையார், முக்தி பெற்ற நாளாகும்.

மிகவும் சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திரம் திருமண விரதம் மற்றும் கல்யாண விரதம் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த தினத்தில் சிவபெருமானையும், கந்தனின் திருமணக் கோலத்தையும் வணங்கி வழிபட திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்ற நம்பிக்கையோடு மக்கள் வழிபடுகின்றனர்.

தெய்வீக திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றதால் அனைத்து கோவில்களிலும் பங்குனிஉத்திரம் அன்று மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது ஆண்டாள் ஸ்ரீரங்கநாதரை கைபிடித்து மணந்த நாளும் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வைபவமாக கொண்டாடப்படுகிறது. காஞ்சி போன்ற க்ஷேத்திரங்களில் ஸ்ரீரங்கநாதர் ஆண்டாள் திருமணத்தை வைணவர்கள் தாயார் திருமண உத்சவங்களாகவும் – பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகவும் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரத்தில் சந்திரன் உத்திர நட்சத்திரத்தின் ராசியான கன்னிக்கு செல்கிறார். அதனால் மனதுக்கு உகந்த திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகமாக கருதப்பட்டு வருகிறது..

A woman devotee performing a religious ritual during Panguni Uthiram.

பங்குனி உத்திரம் அன்று விரதம் இருக்கும் முறை (All about Panguni Uthiram Fasting)

இந்த பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திரம் அன்று விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருப்பது நல்ல பலனைத் தரும். அன்றைய தினம் மனதில் பக்தியோடு முருகப் பெருமானை நினைத்து அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி வணங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும்திருமுருகாற்றுப்படை,, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற நூல்களை படிப்பது சிறப்பானதாகும். ‘ஓம் சரவண பவ’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க சொல்ல வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருப்பது சிறப்பாகும். வயதானவர்கள் உடல் நலம் பாதிப்புள்ளவர்கள் அவர்களுடைய உடல்நலத்திற்கு ஏற்றவாறு பால், பழம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம்.

நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் முருகனுடைய திருக்கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து விரதத்தை முடிக்க வேண்டும். அருகில் முருகன் கோவில் இல்லாதவர்கள் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்யலாம் . கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே தெய்வத்தை வணங்கி தீபம் ஏற்றி பிரசாதம் வைத்து வழிபடுவதும் சிறப்பாகும்.

இந்த விரதம் மேற்கொண்டால் விரைவில் தோஷங்கள் விலகி விரைவில் திருமண யோகம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும்.

மேலும் 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவார்கள் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் சிறப்பாககொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் வேண்டுதல் நிறைவேற்ற பக்தர்கள் காவடி எடுத்தும் பாதயாத்திரையாக நடத்தும் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்

பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் மற்றும் திருமண தடைகள், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

பங்குனி மாத உத்திர திருநாளில் இறைவனை பக்தியோடு வழிபட்டால் வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சி நிலைக்கும் என்பதால் மக்கள் இந்த விசேஷ நாளில் மிகவும் பக்தியுடன் வழிபட்டு பல நன்மைகளை பெறுகின்றனர்.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram