பிரம்மதேசம் (Brahmadesam)
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் கங்கைக்கு நிகரான சிறப்புக்களை உடைய கடனை ஆற்றின் தென் கரையில் அமையப்பெற்றுள்ள திருக்கோவில் பிரம்மதேசம்.
இந்த கோவிலின் புராண பெயர் "அயனீச்சுவரம்" என்றும் வரலாற்று பெயர் "ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்" என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது.
சுவாமி பெயர்: | கைலாசநாதர். |
அம்மை பெயர்: | பெரியநாயகி அம்மை. |
திருக்கோவில் விருட்சம்: | இலந்தை மரம். |
தீர்த்தம்: | பிரம்ம தீர்த்தம், கடனை நதி. |
சிறப்பு சன்னதி: | கங்காளநாதர், இலந்தையடி நாதர், நாலாயிரத்தம்மன். |
பிரம்மதேசம் பெயர்க் காரணம்:(Brahmadesam Name Reason)
முற்காலத்தில் பாண்டியர்கள் உடன் போரிட்டு அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட சில பகுதிகளை சோழர்கள் தங்கள் வசம் ஆட்சி செய்து வந்துள்ளார்கள். அப்போது இந்த தலத்துக்கு அருகேயுள்ள அயன் திருவாலீஸ்வரம் என்னும் ஊரில் திருவாலிநாதர் என்ற பெயரில் ராஜ ராஜ சோழன் ஓர் சிவன் கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளான். அந்த கோவிலில் நான்கு வேதங்களையும் கற்றறிந்த அந்தணர்கள் பலரை அழைத்து வந்து நித்தம் வேத பாராயணம் ஓத வைத்தான். அப்படி அந்த நான்மறை ஓத வந்த அந்தணர்களுக்கு அவர்கள் வாழ தானமாக வழங்கிய இடம் தான் புராண காலத்தில் "இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்" என்று அழைக்கப்பட்ட இன்றைய பிரம்மதேசம்.
தாயம் என்ற சொல்லுக்கு குறிப்பிட்ட காரணத்துக்காக ஒரு பொருளை தானமாக வழங்குதல் என்ற பொருளும் உண்டு. வேதம் ஓதுதலுக்கு பிரம்ம வித்யை என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை செய்த அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இடம் என்பதனால் பிரம்மதாயம் என்று இத்தலத்துக்கு பெயர் இருந்து பின்னர் அதுவே பிரம்மதேசம் என திரிந்ததாக கூறப்படுகிறது.
பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் வரலாறு:(Brahmadesam Kailasanathar Temple History)
முற்காலத்தில் அகத்தியரின் சீடராக திகழ்ந்த உரோமச மகரிஷி என்பவருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டுவிட அவர் பல தலங்களுக்கு சென்றும் சிவபெருமானை வணங்கி வருகிறார். அப்படி அவர் தென் திசையில் பொதிகை மலை அடிவார பகுதிக்கு வந்த போது கடனை ஆற்றின் தெற்கே இருந்த வனத்திற்குள் வரும்போது ஒரு இலந்தை மரத்தின் அடியில் சுயம்பு உருவில் இருந்த சிவலிங்கத்தை காண்கிறார். அந்த லிங்கத்திற்கு முறைப்படி பூஜைகள் செய்து வணங்கி வர அவருக்கு இறைவன் காட்சியளித்து அவருடைய பிரம்மகத்தி தோஷத்தை நீங்கச் செய்ததாக வரலாறு கூறப்படுகிறது.
ஆதி காலத்தில் பிரம்மனும், சிவபெருமானை புறக்கணித்து நடத்தப்பட்ட தட்சனின் யாகத்தில் பங்கு கொண்ட பாவத்தை போக்க இங்கு தீர்த்தம் உருவாக்கி இத்தலத்தில் வந்து கைலாசநாதரை வணங்கி அருள்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தான் இத்தலம் "அயனீச்சரம்" என்றும், இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றும் புராண காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. அயன் என்ற சொல்லுக்கு பிரம்மன் என்று பொருள்.
இதன் பின் வந்த காலங்களில் ராஜ ராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாகப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆதிகைலாயமாக பிரம்மதேசம் சிவன் கோவில் சிறப்பு:(Brahmadesam is special as Adikailayam)
தாமிரபரணி நதிக்கரையில் உரோமச முனிவர் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட தகுந்த இடங்களை தன் குருவான அகத்தியரிடம் கேட்க அவர் ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டு அது கரை சேரும் இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூற, அவ்வாறே உரோமச முனிவரும் ஒன்பது இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த ஒன்பது கோவில்கள் இன்றும் தாமிரபரணி நதிக்கரையில் நவகைலாய தலங்களாக விளங்கி வருகின்றன. அந்த ஒன்பது தலங்கள் பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகியவைகள் என ஒரு வரலாறு கூறப்பட்டாலும், குற்றாலம் தல புராணத்தில் ஆதி நவகைலாய தலங்களாக பிரம்மதேசம், அரியநாயகிபுரம், திருநெல்வேலி, கீழநத்தம், கங்கைகொண்டான், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, சேர்ந்தபூமங்கலம் ஆகிய ஒன்பது தலங்களே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக ஆதி நவ கைலாய தலங்களுக்கும், உரோமசர் கால நவ கைலாய தலங்களுக்கும் வேறுபாடு உள்ளது.
எப்படியிருந்தாலும் உரோமச மகரிஷி தன் பிரம்மகத்தி தோஷம் நீங்க முதலில் வழிபட்ட இந்த பிரம்மதேசமே ஆதி கைலாயம் என்று சிறப்பிக்கப்படுகிறது. இங்கு தன் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய பின்னர் தான் உரோமசர் தாமிரபரணி நதிக்கரையில் மற்ற தலங்களை நிறுவி வழிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுவாமி கைலாசநாதர்:(Kailasanathar Swamy)
இக்கோவில் கருவறையில் காட்சித்தரும் இறைவனின் பெயர் கைலாசநாதர். இவரே ஆதி கைலாயநாதர் என்று சிறப்பிக்கப்படுகிறார். இவருக்கு நாகாபரணம் அணிவித்தும், சந்தனக்காப்பு சாத்தியும் விசேஷ அலங்காரங்கள் செய்யப்படும்.
அம்மை பெரியநாயகி:
இங்கு தனி சன்னதியின் கருவறையில் காட்சித்தரும் அம்மையின் பெயர் பெரியநாயகி. வடமொழியில் இவள் பிருகன்நாயகி என்று அழைக்கப்படுகிறாள். இவள் தனது வலக் கரத்தில் மலர் ஏந்தியும், இடக் கரத்தை கீழே தொங்கவிட்ட படியும், சற்றே இடைநெளித்து, தன் முகத்தில் புன்சிரிப்பு காட்டி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இவள் பெயருக்கு ஏற்றாற் போல சற்றே பெரியநாயகி தான்.
இலந்தையடி நாதர் சன்னதி:
இத்திருக்கோவிலின் தல விருட்சமான இலந்தை மரம் தனி சன்னதியில் உள்ளது. இந்த மரத்திற்கு அடியில் தான் முன்னர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக உரோமச முனிவருக்கும், பிரம்மாவுக்கும் காட்சியருளினார். இங்கு ஆதியில் தோன்றிய இலந்தையடி நாதர் சன்னதி தனியாக அமையப்பட்டுள்ளது.
கங்காளநாதர்(பிட்சாடனர்) சன்னதி:
இங்கு சுமார் ஏழடி உயரத்தில் நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சித் தருகிறார் இத்தலத்தின் சிறப்பு வாய்ந்த மூர்த்தியான கங்காளநாதர். இவருடன் பூத கணங்கள், அப்சரஸ் கன்னிகள், இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய பரிவார மூர்த்திகளும் ஒரே சன்னதியில் காட்சித் தருகிறார்கள். இந்த சன்னதி அற்புத கலையம்சம் கொண்டது ஆகும்.
நாலாயிரத்தம்மன்:
முற்காலத்தில் ராஜ ராஜ சோழனால் வேதம் ஓதிய அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இத்தலம், வளமான ஊர் என்பதால் அடிக்கடி படையெடுப்புகளும், கள்வர்கள் தொந்தரவும் அதிகமாக இருந்தது. இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்காக, ராஜராஜ சோழன் தன்னுடைய படை வீரர்கள் நாலாயிரம் பேரை இங்கு காவல் வைத்திருந்தான். அந்த நாலாயிரம் வீரர்களும் வைத்து வணங்கிய அம்மன் தான் நாலாயிரத்தம்மன் என்று கூறப்படுகிறது.
இந்த ஊரில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலுக்கு வடமேற்கு திசையில் எல்லை காவல்தெய்வமாக இந்த நாலாயிரத்தம்மன், தனிக்கோவில் கொண்டு வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனின் உற்சவமூர்த்தத்துக்கு, பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்குள் தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது.
இந்த ஊரின் எல்லையில் வடக்கு நோக்கிய திருக்கோவிலில், வடக்கு வாசல் கொண்ட செல்வியாக அம்மை, தன் வலது காலை மடித்தும், இடது காலை தொங்க விட்டும், அமர்ந்த நிலையில், எட்டு திருக்கரங்களோடு, சிரித்த முகத்தவளாக கருவறையில் காட்சித்தருகிறாள்.
கருவறைக்கு வெளியில் உள்ள மண்டபத்திலும் தனியாக ஒரு அம்மையின் திருமேனி அமைப்பெற்றுள்ளது சிறப்பு. இவளே ஆதிகாலத்து அம்மையாக விளங்குகிறாள்.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Manimutharu WaterFalls - 38 min (19.2 km)
- Paana Theertham water Falls - 58 min (25.8 km)
- Malaiyalamedu pond - 53 min (31.2 km)
- Government museum - 1 hr 18 min (39.7 km)
காசிக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்
பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று வந்தால் காசிக்கு சென்று வந்த புண்ணியம்கிடைக்கும் என்று சொல்வார்கள் .
ஆதி கயிலாயங்களில் முதன்மையானதாக இந்தக் கோவில் திகழ்கின்றது. தென்மாவட்ட நவக்கிரக ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலில் உள்ள தனிச் சிறப்பாகும். தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கயிலாசநாதரை , பிரம்ம தேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது வலம் வருவதால், காசிக்கு சென்று சிவதரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் இங்கேயும் கிடைக்கும் என்பதுஐதீகம். அதனால் ஏராளமான மக்கள் இந்த திருத்தலத்தை நோக்கிய வருகை புரிகின்றனர்
சூரியன், உத்தராயணம் தட்சிணாயனம் காலங்களில் பிரம்மதேசம் கயிலாசநாதர் கருவறைக்கு வந்து தனது வெம்மையான கரங்களால் இறைவனை தழுவுகிறார். அந்த நேரத்தில் இத்தல இறைவனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் எதிரிகளின் தொல்லை அனைத்தும் நீங்கும்.
பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் அமைப்பு: (Brahmadesam Kailasanathar Temple Architecture)
பிரம்மதேசம் ஊரின் நடுவே ஏழு நிலை ராஜகோபுரங் கொண்டும், பிரம்மாண்ட மதில் சுவர்களை கொண்டும் கோட்டை போல அமையப் பெற்றுள்ளது இந்த பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில்.
இந்த கோவிலின் எதிரில் அழகிய தெப்பக்குளம் நீர் நிறைந்து காணப்படுகிறது. ஏழுநிலை ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் தெற்கே முதல் மூவர் சன்னதியும் அதனை தாண்டி முகப்பு மண்டபத்தின் நடுவே நந்தி, பலிபீடம், கொடிமரமும் அமையப்பெற்றுள்ளது.
இதனை தாண்டினால் சுவாமி சன்னதிக்கு செல்லும் வாயில் உள்ளது. அதன் ஒருபுறம் விநாயகரும், மற்றொரு புறம் சுப்பிரமணியரும் காட்சித்தருகின்றார்கள். இவர்களை வணங்கி, உள்ளே நுழையும் போது தெற்கே அதிகார நந்தி சன்னதி உள்ளது. இவரை வணங்கி அதிகாரம் பெற்று உள்ளே சென்றால் நேராக சுவாமி சன்னதி. அங்கே கருவறையில் கைலாசநாதர் அழகே உருவாக காட்சித் தருகிறார். முன் மண்டபத்தில் தென் திசை நோக்கிய படி நடராசருக்குரிய சன்னதியும், உற்சவ மூர்த்திகளுக்குரிய சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.
சுவாமி சன்னதி பிரகாரத்தை சுற்றி சூரியன், சுரதேவர், சப்தமாதர்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, கன்னி மூலையில் கணபதி, சுப்பிரமணியர், கஜ லெட்சுமி, துர்க்கை, சண்டிகேசுவரர், சந்திரன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக அமையப் பெற்றுள்ளன.
இந்த பிரகாரத்தின் முன்புறம் தனி சபையுடன் கூடிய சன்னதியில் புனுகு சபாபதி திருநடன காட்சியளிக்கிறார். இவர் ஓம் என்ற பிரணவ வடிவமைப்புடன் கூடிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமேனி ஆவார்.
வெளியே முன் மண்டபத்திற்கு வடக்கே, தென் திசை நோக்கிய படி தனி சன்னதியில் பிட்சாடனரும், தனி சன்னதியில் பைரவரும் காட்சித் தருகின்றனர்.
இதற்கு அடுத்து மீனாட்சி - சொக்கநாதருக்கும், உண்ணாமுலை - அண்ணாமலையாருக்கும் தனி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன. சுவாமி சன்னதிக்கு வடக்கு பக்கம் அம்மன் சன்னதி தனி நந்தி, தனி கொடிமரம், தனி பலி பீடம், தனி பிரகாரத்துடன் அமையப் பெற்றுள்ளது. அம்மன் சன்னதி பிரகாரத்தில் இவ்வூரின் காவல் தெய்வமான நாலாயிரத்தம்மன் உற்சவ திருமேனிக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் இப்பிரகாரத்தில் சரஸ்வதி அம்மைக்கும் தனி சன்னதி உள்ளது.
வெளிப்பிராகாரம் முழுவதும் கோட்டை மதில் சுவரால் சூழப்பட்டுள்ளது. திருக்கோவில் மேல்புறமும் தனியொரு வாயில் உள்ளது. நிறைய கலையம்சம் பொருந்திய சிற்பங்களும், கல் சங்கிலிகளும் கொண்டு மிக பிரம்மாண்டமாக இக்கோவில் காட்சித் தருகிறது.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
பிரம்மதேசம் திருக்கோவில் சிறப்புக்கள்:(Brahmadesam Temple Specialties)
முற்காலத்தில் இந்த கோவில் மிகப் பெரிய கோட்டையாக இருந்துள்ளது. இதனால் எதிரிகளின் படையெடுப்பும் அதிகம் இருந்துள்ளது. ஆக எதிரிகளின் படையெடுப்புகளில் இருந்து தப்பிக்கும் விதமாக இக் கோவிலின் கட்டுமானங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலின் இராஜ கோபுர திருநடைக்கதவுகள் மரத்தால் செய்யப்பட்டது ஆகும். இதின் சிறப்பம்சம் என்ன என்றால், அக்காலத்தில் அந்நியர்கள் படையெடுப்பின் போது இக் கோவிலுக்குள் தஞ்சம் புகும் மக்கள் கோவில் நடைக் கதவுகளை அடைத்து விடுவார்களாம். அந்த கதவுகளை யானைகளை கொண்டு முட்டச் செய்து எதிரிகள் திறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கதவுகளில் கூர்மையாண ஆணிகள் சிறிய இடைவெளியில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை யானையை கொண்டு கதவுகளில் மோதச் செய்தால் அந்த ஆணிகள் வெளியேறி முட்டும் யானைகளின் மீது குத்தி காயப்படுத்தும் படி இக்கதவுகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அது போல இத் திருக்கோவில் மதில் சுவர்களும் அந்நியர்கள் படையெடுத்து வருவதை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் இராஜ கோபுரத்தின் உள் தட்டுகளில் நின்று பார்த்தால் நான்கு திசைகளிலும் இருந்து யார் வருகிறார்கள் என்று பார்த்து எதிரிகளை கண்காணிக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.
இக் கோவிலுக்குள் ஓர் நெற் குத்தும் பிறை எற்ற கல் மண்டபம் ஒன்று உள்ளது. இதில் தான் தேவையான நெல் அனைத்தும் சேகரிப்படுமாம். போர் ஏற்படும் காலங்களில் இதில் உள்ள நெற் குவியல்களை குத்தி அரிசியாக்கி தான் உணவு சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இக்கோவிலுக்குள் நுழைந்ததும் அழகிய கூரை போன்ற அமைப்புடைய முகப்பு மண்டபம் காணப்படுகிறது. இந்த கூரை கல்லில் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
இக் கோவிலில் உள்ள திருவாதிரை மண்டபமும் சிற்பக் கலையின் திறமையை நமக்கு பறைசாற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்லில் செதுக்கிய யாழிகளே தூண்களாக உள்ளன. இந்த மண்டபத்தின் முன்புறம் மேலே குரங்குகள் தாவிச் செல்வதை போன்ற சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள தூண்களில் இராமன், வாலியை மறைந்திருந்து தாக்கும் இராமயண சிற்பம் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இராமன் ஒரு தூணிலும், போர் புரியும் வாலி - சுக்ரீவன் மற்றொரு தூணிலும் இருக்க, ராமன் இருக்கும் தூண் அருகே நின்றால் வாலி - சுக்ரீவன் தெரியும் படியும், வாலி - சுக்ரீவன் இருக்கும் தூண் அருகே நின்றால் ராமர் தெரியாத படியும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ராஜ கோபுரத்தின் நிழல் முழுவதும் இத் திருக்கோவில் முன் புறத்தில் அமையப்பெற்றுள்ள தெப்பக்குளத்தின் நீரில் விழுந்து பிரதிபலிப்பது சிறப்பம்சமாக கூறப்படுகிறது.
சிவபெருமான் தான் அத்திச்சுரம் என்று சிறப்பிக்கப்படும் சிவசைலம், திருவாலீச்சுரம் என்று சிறப்பிக்கப்படும் அயன் திருவாலீஸ்வரம், அயனீச்சுவரம் என்று சிறப்பிக்கப்படும் பிரம்மதேசம் ஆகிய இம் மூன்று தலங்களிலும் சுயம்பு மூர்த்தியாக உள்ளதை அத்திரி மகரிஷியிடம் தெரிவித்துள்ளதாக பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இத் திருக்கோவிலின் மேற்கு வெளிப்பிரகாரத்தின் ஒரு இடத்தில் உள்ள வட்ட வடிவ கல்லில் ஏறி நின்று பார்த்தால் இத் திருக்கோவிலின் மூன்று கோபுரங்கள் மற்றும் முக்கிய விமானங்களை ஒரே இடத்தில் நின்ற படியே நாம் தரிசிக்கலாம்.
இங்கு உத்திராயண புண்ணியக் காலம், தட்சிணாயன புண்ணியக் காலம் என்று சிறப்பிக்கப்படும் இரண்டு காலங்களின் தொடக்கத்திலும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் இத்தல கருவறை கைலாசநாதர் திருமேனியின் மீது விழுகிறது என்பது சிறப்பம்சம்.
இங்குள்ள நந்தி ஒரே கல்லில் மிகவும் பிரம்மாண்டமாகவும், கலைநயத்துடனும் செதுக்கப்பட்டது என்ற சிறப்பை கொண்டது.
பிரம்மதேசம் கோவிலின் முக்கிய திருவிழாக்கள்:(Important Festivals of Brahmadesam Temple)
இங்கு பங்குனி மாதம் தெப்பத் திருவிழா, ஆடி மாதம் நந்தி களபம், ஐப்பசி திருக்கல்யாணம், ஐப்பசி கந்த சஷ்டி விழா, கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசி மாதம் சிவராத்திரி ஆகிய விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்: திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது அம்பாசமுத்திரம்.
இங்கு செல்ல திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறி, அம்பாசமுத்திரத்தில் இறங்கி, அங்கிருந்து 10 நிமிட பயணமாக சிற்றூந்துகள், நகரப்பேருந்துகள் மற்றும் தனியார் கட்டண வாகனங்களில் இத்தலத்தை சென்றடையலாம்.