Thirupudaimaruthur

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறும், கடனை ஆறும் சங்கமிக்கும் இயற்கை ஏழில் சூழ்ந்த இடத்தில் அமையப்பெற்றுள்ளது திருப்புடைமருதூர் கோமதி அம்மை உடனுறை நாறும்பூநாதர் திருக்கோவில்.

இந்த தலம் புராணத்தில் “புடார்ஜீனம்” என்று வழங்கப் பெறுகிறது. அர்ஜீனம் என்றால் மருத மரம் என்று பொருள். பாரத தேசத்தில் மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட முக்கிய தலங்கள் மூன்று. அவற்றுள் இத்தலம் கடைசியாக உள்ளதால் இத்தலம் புடார்ஜீனம் ஆகும்.

தெற்கே மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட தலம் மல்லிகார்ஜீனம். மத்தியில் தமிழகத்தில் மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட தலம் மத்தியார்ஜீனம். கடைசியில் தமிழகத்தில் மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட தலம் புடார்ஜீனம்.

ஆக மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட மத்தி தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூரும், கடைசி தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூரும் தமிழகத்தில் அமைந்துள்ளது.

சுவாமி பெயர்: நாறும்பூநாதர் (புடார்ஜீனேஸ்வரர்).
அம்மை பெயர்: கோமதி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: மருத மரம்.
தீர்த்தங்கள்: முனி தீர்த்தம், சுரேந்திர மோட்ச தீர்த்தம், தாமிரபரணி.
சிறப்பு சன்னதி: பிரம்ம தண்டம், ஆதி மருத மரம்.

திருக்கோவில் வரலாறு:


முற்காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, மற்றும் அனைத்து தேவர்களும் சிவபெருமானை வழிபட சிறந்த இடம் ஒன்றை தேடினார்கள். அப்போது வானில் இருந்து ஒரு குரல், பிரம்மன் கையில் உள்ள தண்டத்தை கங்கை நதியில் விடுங்கள், அந்த தண்டம் எங்கு சென்று நிற்கிறதோ அதுவே சிறந்த இடம் என அசிரீரியாக ஒலித்தது. அதன் படி பிரம்மன் தன் கையில் இருந்த தண்டத்தை கங்கையில் விட, அது அப்படியே மிதந்து கடலில் சென்று, தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தை அடைந்து அங்கிருந்து ஆற்றின் வழியே எதிர்த்து மேற்கு திசை நோக்கி சென்று ஓர் இடத்தில் நிலைபெற்றது. அந்த இடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், சரசுவதி, மகாலட்சுமி மற்றும் தேவாதி தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த பிரம்ம தண்டத்தையும், சிவலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்து வணங்கி சிவபெருமானின் அருளை பெற்று தேவலோகம் திரும்பினார்கள். அவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கம் காலப் போக்கில் மண் மூடி மறைந்து விடுகிறது.

பிற்காலத்தில் மருத மர வனமாக இருந்த இப்பகுதியை பாண்டிய மன்னன் ஒருவன் ஆட்சி செய்கிறான். அந்த மன்னன் ஒரு நாள் வேட்டையாட இந்த மருத மர காட்டிற்குள் வந்த போது மான் ஒன்றை கண்டு துரத்துகிறான். அந்த மானின் மீது அவன் அம்பை எய்த, அந்த மானோ ஒரு மருத மர பொந்திற்குள் சென்று மறைகிறது. மறைந்த அந்த இடத்தை மன்னன் தோண்ட வீரர்களிடம் ஆணையிட, அவர்களும் அந்த இடத்தை தோண்டுகிறார்கள். அப்போது அந்த இடத்தில் இருந்து ஒரு சிவலிங்கம் வெளிப்படுகிறது. அதனை பார்த்து அதிசயித்த மன்னனுக்கு, இந்த லிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து கோவில் கட்டுவாயாக என வானில் இருந்து அசிரீரி குரல் கேட்கிறது. அதன்படி மன்னனும் திருக்கோவில் கட்டி அந்த இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான் என்பது வரலாறு.

இந்திரனுக்கு பிரம்மகத்தி தோஷம் போக்கிய வரலாறு:
முற்காலத்தில் விருத்திராசூரன் என்னும் அரக்கனை இந்திரன் கொன்றதால் அவனை பிரம்மகத்தி தோஷம் பிடித்து கொண்டது. அந்த தோஷம் நீங்க தகுந்த பரிகாரத்தை கூறும்படி தன் குருவான வியாழ பகவானிடம் வேண்டி நின்றான் இந்திரன். வியாழ பகவானும் பூ உலகில் உள்ள மருத வனத்தில் தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி அங்கு எழுந்தருளியுள்ள ஈசனை வழிபட்டால் பிரம்மகத்தி தோஷம் போகும் என கூறி அருளுகிறார்.

அதன்படி இந்திரனும் பூ உலகம் வந்து மருத வனத்தில் உள்ள தாமிரபரணியில் நீராடி, அங்கிருந்த இறைவனை வணங்கி தவம் இருக்கிறார். இந்திரனின் தவத்திற்கு இறங்கிய சிவபெருமான், ஓர் தை மாத பூச நட்சத்திரத்தின் குரு ஹோரையில் இந்திரனுக்கு இடப வாகனத்தில் காட்சியளிக்கிறார். அவரை வணங்கி அங்குள்ள தாமிரபரணி தீர்த்தத்தில் இந்திரன் தீர்த்தவாரியாடிட அவருடைய பிரம்மகத்தி தோஷம் அகன்றதாக வரலாறு கூறப்படுகிறது.

கருவூர் சித்தருக்கு செவி சாய்த்த திருவிளையாடல்:
முற்காலத்தில் கருவூர் சித்தர் என்பவர் சிவபெருமான் உறையும் கோவில்கள் அனைத்திற்கும் ஒவ்வொன்றாக சென்று வழிபட்டு வருகிறார். அப்போது ஒருமுறை இந்த திருப்புடைமருதூர் தலத்திற்கும் கருவூர் சித்தர் வருகிறார். அப்படி அவர் இங்கு வரும் போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. எனவே ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே சோலைகளில் பூத்து குலுங்கிய மலர்களின் மணத்திற்கு நடுவே இருந்த ஈசனை நாறும்பூநாதா என அழைக்கிறார். அதற்கு ஈசனும் செவி சாய்த்து என்னை நினைத்து தியானித்தபடியே ஆற்றைக் கடந்து வா என கூறுகிறார். அதன்படி கருவூர் சித்தரும் ஆற்றைக் கடந்து வந்து இத்தல ஈசனை தரிசித்தார். அவர் கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்த்த ஈசன், சற்றே இடப் பக்கம் சாய்ந்த திருக்கோலத்தில் தான் இன்றும் காட்சியளிக்கிறார். கருவூர் சித்தரின் குரலுக்கு செவி சாய்த்த இந்த ஈசன் அவர் அழைத்தபடியே “நாறும்பூநாதர்” என்னும் பெயரோடு தான் இன்றும் அருள்பாலிக்கிறார்.

சுவாமி நாறும்பூநாதர்:


இங்குள்ள இறைவன் நாறும்பூநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் கருவூர் சித்தரின் குரலுக்கு செவி சாய்த்த கோலத்தில் இடப்புறம் சாய்ந்த திருமேனியராய் காட்சித் தருகிறார். இவரின் மேனியில் மானின் காலடி பட்ட தழும்பும், வீரர்கள் கோடரியால் வெட்டிய தழும்பும் உள்ளது.

அம்மை கோமதி:
இங்குள்ள அம்மை கோமதி, கைலாய மலையின் ஒரு பகுதியாக விளங்கும் நீலக்கல்லால் ஆன சுயம்பு திருமேனி என இத்தல புராணம் கூறுகிறது. கருவறையில் அம்மை அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகம் கொண்டு, ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறுகரத்தை தொங்க விட்டபடியும் சற்றே இடை நெளித்து நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

பிரம்ம தண்டம்:
முற்காலத்தில் பிரம்மனால் கங்கையில் விடப்பட்ட அவரது தண்டம் இத்தலத்தில் ஏறி நின்றதாக கண்டோமல்லவா, அந்த பிரம்ம தண்டமே இங்கு அம்மை சன்னதி நுழைவாயில் அருகில் மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஆதி மருத மர சன்னதி:
இந்த திருக்கோவிலுக்கு பின்புறம் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தனி சன்னதியில் ஆதியில் மான் ஒளிந்து லிங்கம் வெளிப்பட்ட மருத மரத்தின் அடிப்பகுதி உள்ளது. அதில் இந்திரன் வணங்கிய கோலத்தில் காட்சித்தருகிறார்.

திருக்கோவில் அமைப்பு:
தாமிரபரணி ஆறு உத்திரவாகினியாக வடக்கு நோக்கி பாயும் இடத்தில் ஆற்றின் கிழக்கு கரையில் கிழக்கு திசை நோக்கி அமையப் பெற்றுள்ளது இந்த திருப்புடைமருதூர் கோவில்.

ஐந்து நிலைகளும், பதினொரு கலசங்களும் கொண்ட ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் முன் மண்டபத்தில், பலிபீடம், நந்தி மற்றும் கொடிமரம் ஆகியவை அமையப் பெற்றுள்ளது.

அதனை தாண்டி நடந்தால் இரண்டாம் வாயிலுக்கு தென்புறம் விநாயகர் சன்னதியும், வடபுறம் சுப்பிரமணியர் சன்னதியும் இருக்கிறது. இவர்களை வணங்கி உள்ளே நுழைந்தால் இரண்டாம் வாயிலின் குடவறைக்குள் உள்ள மண்டபத்திற்குள் வடதிசை நோக்கியபடி அதிகார நந்தி காட்சி தருகிறார். அவரை வணங்கி உள்ளே சென்றால் சுவாமி சன்னதியை அடையலாம்.

சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதியும், கிழக்கு நோக்கிய உற்சவர் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.

முன் மண்டபத்திற்கு அடுத்து அர்த்தமண்டபம் அதை தாண்டி கருவறை. கருவறையில் சாய்ந்த திருமேனியராக நாறும்பூநாதர் காட்சியளிக்கிறார்.

சுவாமி சன்னதிக்கு தென்புறம் அம்மை சன்னதி அமையப்பெற்றுள்ளது. அங்கே அர்த்த மணுடபம் தாண்டி கருவறையில் கோமதி அம்மை காட்சியளிக்க அவளுக்கு எதிரே சிறிய நந்தியும் அமையப்பெற்றுள்ளது.

உள் திருச்சுற்றில் பரிவார மூர்த்திகளாக சூரியன், பிரம்ம தண்டம், சூரதேவர், நால்வர், சப்தகன்னியர், கன்னி மூல விநாயகர், சுவாமி கோஷ்டத்தின் தென் பக்கம் தட்சிணாமூர்த்தி, மேற்கு பக்கம் மகாலட்சுமியுடன் கூடிய மகாவிஷ்ணு, வடக்கு பக்கம் பிரம்மன், உற்சவர் மண்டபம், மகாலட்சுமி, சரசுவதி, சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், சகஸ்ர லிங்கம், சனீஸ்வரர், புனுகு சபாபதி, பைரவர், சந்திரன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சித்தருகிறார்கள்.

வெளித் திருச்சுற்றில் கன்னி மூல விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சன்னதியோடு முன் பக்கம் நவக்கிரக சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.

முன் பக்கம் இக்கோவிலை கட்டிய பாண்டிய மன்னனின் ஆளுயர சிற்பமும் உள்ளது. திருக்கோவிலுக்கு வெளியே பின்புறத்தில் தாமிரபரணி ஆற்றின்கரையில் தீர்த்தவாரி படித்துறையும் அமையப்பெற்றுள்ளது.

திருக்கோவில் சிறப்புக்கள்:
இங்கு கருவறையில் இறைவன் நாறும்பூநாதர் செவி சாய்த்த கோலத்தில் காட்சி தருகிறார்.

இங்கு யோக நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தி தனியாக காட்சி தருகிறார்.

இங்கு பல அரிய வகை இயற்கை மூலிகை வர்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியங்களும், மிகுந்த கலை நுட்பம் கொண்ட மர சிற்பங்களும் உள்ளன.

இந்த கோவிலின் ஐந்து நிலை ராஜகோபுரத்துக்குள் ஏறிச் செல்ல படிகள் உள்ளன. அதன் வழியே ஏறிச் சென்றால் ஒவ்வொரு தளங்களின் சுவர்களிலும் வண்ணமயமான மூலிகை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் விஜயநகரப் பேரரசின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த சித்திரகூடத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகளும், சிவபுராணம், விஷ்ணு புராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம், பெரிய புராணம் ஆகியவற்றோடு தலபுராண கதைகளும் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மேலும் வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற தாமிரபரணி போர் பற்றிய காட்சிகளும் இங்கு ஒரு தளத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

முக்கிய திருவிழாக்கள்:
இங்கு தை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் தைப்பூசத்திற்கு முதல் நாள் தேரோட்டமும், தைப்பூசத்தன்று தீர்த்தவாரியும் வெகு விமரிசையாய் நடைபெறும்.

தைப்பூசத்தன்று காலை இங்கு நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிவார்கள். அன்று இரவு தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.

இது தவிர மாசி மாத சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை சொக்கப்பனை, மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாய் நடைபெறும்.

அமைவிடம்: திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 28 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருப்புடைமருதூர்.

இங்கு செல்ல திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு நகரப்பேருந்து உள்ளது.

இதுதவிர புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறி, வீரவநல்லூரில் இறங்கி, அங்கிருந்து சிற்றூந்துகள், நகரப்பேருந்துகள் மற்றும் தனியார் கட்டண வாகனங்களில் இத்தலத்தை சென்றடையலாம்.

–  திருநெல்வேலிக்காரன்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!