Logo of Tirunelveli Today
English

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் (Sankarankovil Sankara Narayanar Temple)

Deities are kept with full alangaram in sankarankovil temple

பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக திகழும் சங்கரநாராயணர் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு எழுப்பப்பட்ட பழமை வாய்ந்த புகழ்பெற்ற திருக்கோவில் ஆகும்.

புராண காலத்தில் புன்னை வனம் என்று அழைக்கப்பட்ட இந்த தலம், சங்கர நயினார் கோவில் என்றே அழைக்கப்பட்டு தற்போது சங்கரன்கோவிலாக மருவியுள்ளது.

இந்த தலத்துக்கு பூ கைலாயம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்ற பெயர்களும் உண்டு.

சுவாமி பெயர்: சங்கர லிங்க சுவாமி.
அம்மை பெயர்: கோமதி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: புன்னை மரம்.
தீர்த்தம்: நாக சுனை, சங்கர தீர்த்தம், கௌரி தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , அகத்திய தீர்த்தம் , சர்வ புண்ணிய கோடி தீர்த்தம்(அம்பிகையின் அபிஷேக தொட்டி ).
சிறப்பு சன்னதி: சங்கர நாராயணர், வன்மீகநாதர் புற்றுக் கோவில், தெற்கு நோக்கிய துர்க்கை அம்மன்.

சங்கரன்கோவில் திருக்கோவில் வரலாறு (Sankarankovil temple history)

முற்காலத்தில் தேவர்களுள் ஒருவனான மணிக்கிரீவன் என்பவன் தான் பெற்ற சாபத்தினால் பூ உலகில் பிறந்து புன்னை வனம் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதியில் இருந்த கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோவிலின் நந்தவனத் தோட்டத்தில் காவலனாக பணியாற்றுகிறான். அப்போது ஒரு முறை அந்த நந்தவனத்தில் உருவான புற்று ஒன்றை திருத்தம் செய்ய மண்ணை கொத்திய போது அதில் இருந்த நாகப் பாம்பின் மீது கோடரி பட்டு, அதன் வால் வெட்டுப்படுகிறது. இதனால் புற்றிலிருந்து இரத்தம் கசிந்து வருவதை கண்டு அதிர்ச்சியுடன் நிற்கிறான் மணிக்கிரீவன்.

அதே நேரம் களக்குடியை ஆட்சி செய்த மன்னன் உக்கிர பாண்டியன் என்பவன் மதுரையை நோக்கி தன் பரிவாரங்களுடன் செல்லும் போது, அவனது பட்டத்து யானை பெருங்கோட்டூர் என்னும் தலத்திற்கு வந்தவுடன் திடீரென்று பிளிறிக் கொண்டே தன் தந்தத்தால் அங்கிருந்த நிலப் பகுதியில் குத்தி நகராமல் நின்றது . இதனைக் கண்டு அனைவரும் திகைத்து நிற்கின்றனர். மன்னன் இதனைக் கண்டு ஏதேனும் தெய்வ குற்றம் ஏற்பட்டிருக்குமோ என வருந்திக் கொண்டிருக்கும் போது, அங்கு மணிக்கிரீவன் மன்னனை சந்தித்து புன்னை வனத்தில் நடந்த நிகழ்வுகளை கூறுகிறான்.

உடனே மன்னனும் அங்கு சென்று அந்த இடத்தை கண்டு, தன் வீரர்கள் மூலம் அந்த இடத்தை திருத்தம் செய்ய அதற்குள் இருந்து ஓர் சிவலிங்கம் வெளி வந்தது. இதனைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சியில் மெய் மறந்து நிற்க, வானில் இருந்து ஓர் அசிரீரி குரல் அவ்விடத்தில் தோன்றிய அந்த சுயம்பு லிங்கத்துக்கு கோவில் எழுப்புமாறு கூறியது.

இதனை ஏற்ற மன்னன் உக்கிர பாண்டியனும் அந்த காட்டை திருத்தி இந்த பெருந் திருக்கோவிலை கட்டி, சுற்றி நகரையும் அமைத்து, தன் யானை நிலத்தில் குத்திய பெருங்கோட்டூரிலிருந்து பிடி மண் எடுத்து வர திருவிழாவையும் நடத்தினான் என வரலாறு கூறுகிறது.

கோமதியம்மை வரலாறு: (Sankarankovil Gomathi Amman History)

சங்கரன் கோவிலில் குடிகொண்டிருக்கும் கோமதி அம்மனை பாம்பாட்டி சித்தர் குண்டலினி சக்தியாகவும், வாளைகுமாரியாகவும், பாம்பு வடிவமாகவும் வழிபட்டிருக்கிறார். ஆதலால் காளஹஸ்திக்கு அடுத்தபடியாக இந்த திருத்தலம் ராகு-கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் , கால சர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும், செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

Two frames of deities in the Arulmigu Sankarankovil gomathi amman kovil swamy is being decorated for car festival.
முற்காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரண்டு நாக தேவர்கள் இருந்து வந்தார்கள். அதில் சங்கன் என்பவன் சிவ பக்தனாகவும், பதுமன் என்பவன் விஷ்ணு பக்தனாகவும் விளங்குகிறான். இவர்கள் இருவருக்குள்ளும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற சர்ச்சை ஏற்பட, அவர்கள் இருவரும் கைலாயம் சென்று பார்வதி தேவியிடம் தங்கள் சந்தேகத்திற்கு விடை கேட்க, பார்வதியும் இதற்கு விடை காண சிவபெருமானை வேண்டி நிற்க, சிவபெருமானோ பார்வதி தேவியை அழைத்து பூ உலகில் உள்ள புன்னை வனம் சென்று தவமியற்றும் படியும் தக்க வேளையில் தாம் அங்கு தோன்றி காட்சியளிப்போம் என கூறியருள்கிறார். அதன்படி பார்வதி தேவியும் புன்னை வனம் வந்து ஒற்றை காலில் நின்று தவமியற்றுகிறாள். அம்மையின் அந்த கடுந் தவத்திற்கு இறங்கி ஆடி மாதம் உத்ராடம் நட்சத்திரம் கூடிய பெளர்ணமி தினத்தில் அரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தவும், பார்வதி தேவி மற்றும் சங்கன், பதுமன் ஆகியோர்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் பொருட்டும் சிவபெருமான், விஷ்ணுவோடு இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தருளினார். அப்படி அம்மைக்கு காட்சியளித்த சங்கரநாராயணர் திருக்கோலத்தில் இன்றும் இங்கு சுவாமியை நாம் தரிசிக்கலாம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

சுவாமி சங்கரலிங்கம்: (Sankara Narayanar Swamy)

Picture of Sankara Narayanar Swamy, Sankarankovil temple.
கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் லிங்கத் திருமேனியராய் காட்சியளிக்கிறார் சங்கர லிங்க சுவாமி. இவருக்கு கூழை நாதர், சீராசை நாதர், சங்கர நயினார், பூ கைலாய நாதர் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.

அம்மை கோமதி: (Sankarankovil Gomathi Amman)

கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவாரபாலகிகள் காவல்புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்க விட்டபடியும், சற்றே இடைநெளித்து, புன்முறுவல் பூத்த திருமுகத்தவளாய், நின்ற கோலத்தில் ஆனந்த காட்சியளிக்கிறாள் அம்மை கோமதி. இவளுக்கு ஆவுடையம்மன், மகா யோகினி, சங்கர கோமதி, ஆவுடை நாச்சியார் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.

சங்கர நாராயணர் சிறப்பு (Sankara Narayanar Specialities) :

Deities Sivan linga, siva-vishnu avatar and sankarankovil gomathi amman can be seen.

Image credits : hindu-blog.com

இங்கு தனி சன்னதியில் உள்ள சங்கர நாராயணர், வலது பாகத்தில் சிவனாகவும், இடது பாகத்தில் விஷ்ணுவாகவும் இணைந்து காட்சித் தருகின்றார்.

இதில் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையின் சடைமுடியில் கங்கை, பிறை சந்திரன், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன், திருவாச்சியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கும் படியும், மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மாலைகள் இவற்றுடன் திருவாச்சியில் நாக வடிவில் பதுமன் குடைபிடிக்கும் படியும் காட்சித் தருகிறார் சங்கர நாராயணர்.

புற்று கோவில் வன்மீகநாதர் சிறப்பு:

Stone-built Vanmikanath Putru Temple at Sankarankovil Sankara Narayanar Temple

Image credits : tripadvisor.com

இங்கு சங்கரலிங்க சுவாமி சன்னதி பின்புறம் புற்றுக் கோவில் உள்ளது. இதில் வன்மீகநாதர் காட்சித் தருகிறார். சர்ப்ப தோஷங்கள் நீங்க இவருக்கு சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. கல்லால் அமைக்கப்பட்ட புற்றுக் கோவில் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

ஆடித்தபசு விழா சிறப்பு:

Festival crowd can be seen in the sankarankovil temple car festival

Image Credits: Malai Malar

இங்கு ஆடி மாதம் பெளர்ணமி திதியும், உத்திராட நட்சத்திரமும் கூடிய நாளில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாய் நடைபெறும்.

அன்று காலை கோமதி அம்மை சகல விதமான அபிஷேகங்களும் கண்டு, ஒற்றை காலை நிறுத்தியும், ஒற்றை காலை தூக்கி மடித்தும், இரு கரங்களையும் தன் தலைக்கு மேல் கூப்பியபடி தவசுக்கோலம் பூண்டு தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி., தெற்கு தேர் வீதி-மேற்கு தேர் வீதி சந்திப்பில் உள்ள தவசு மண்டகப்படி சேர்ந்து தவசு இருப்பாள்.

அன்று மாலை அம்மையின் தவசிற்கு இறங்கி, வெள்ளி இடப வாகனத்தில் சுவாமி சங்கரநாராயணர் (சிவன், விஷ்ணு இணைந்த திருக்கோலம்) எழுந்தருளி, தெற்கு தேர் வீதியில் உள்ள தவசு பந்தலில், அம்மை கோமதிக்கு காட்சியளிப்பார். இதனை தொடர்ந்து கோமதியம்மை, சுவாமியை மூன்று முறை வலம் வந்து, மாலை மாற்றி கொள்வார். இதன் பின்னர் இரவு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி சங்கரலிங்கர் எழுந்தருளி, அம்மை கோமதிக்கு காட்சியளித்து ஆட்கொள்வார்.

ஆடி பௌர்ணமி அன்று உத்தராட நட்சத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிசனம் அன்னை கோமதிக்கு கிட்டியது. அந்த புனித தரிசனத்தை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு மிக சிறப்பாக ஆடி மாதத்தில் கொண்டாடபடுகிறது. இந்த விழாவில் அன்னை கோமதிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் ஏற்றப்படுகிறது.. 10 நாட்கள் கோமதி அம்மை காலையிலும் மாலையிலும் இரவிலும் வீதி உலா வருகிறாள்.

இறைவன், இறைவிக்கு சங்கரநாராயண கோலத்தில்11ஆம் நாள் காட்சி தருகிறார். மேலும் இது அன்னையின் சஹஸ்ராரம் விழுந்த ஸ்தலம் ஆதலால் அன்னை இங்கே மஹா யோகிநியாக, தபஸ் ஸ்வரூபிணியாக காட்சியளிக்கிறாள். அம்பிகை சன்னதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. தனி சிறப்பு இதில் அமர்ந்து பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டிக்கொண்டு பலன் பெறுகிறார்கள். மேலும் பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்வதை கண்கூடாக பார்க்கலாம்.

இங்கு அம்பிகையின் புற்றுமண் பிரசாதம் பெற்றுச் செல்வது அதிகமாக நடந்து வருகிறது . இந்த பிரசாதத்தை உட்கொண்டால் வயிற்றுவலி மற்றும் உடல்வியாதிகள் தீரும் என்பது அனேக பக்தர்களின்பரிபூரண நம்பிக்கையாகும். குழந்தை வரம் வேண்டியும் பிரார்த்தனைகள் நடக்கிறது. இங்கேதான் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைத்துள்ளது.

இந்த ஆடித் தபசு விழாவை காண இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அன்று தங்கள் வயலில் விளைந்த நெல், காய்கறிகள் மற்றும் தானியங்களை கோமதி அம்மைக்கு செலுத்தி வழிபடுவது சிறப்பம்சம் ஆகும்.

கோமதி அம்மைக்கு சிறப்பாக நடக்கும் பூஜைகள்

கோமதி அம்மைக்கு கோவிலில் ஆறு கால பூஜைகள்மிகவும் சிறப்பாக நடக்கிறது. சுவாமிக்கு நடைபெறக்கூடிய அத்தனை பூஜை உபசாரனைகளும் அம்பிகைக்கும் நடக்கிறது. சங்கரன்கோவில் அம்பிகைக்கு என தங்க ஊஞ்சல் உள்ள பள்ளியறை இருக்கின்றது.

பள்ளிஎழுச்சி பூஜை முடிந்த பிறகு முதல் மகாதீபாராதனை அம்பிகைக்கே முதலில் நடக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ ஜொலிக்கும் தங்க ரதத்தில் அம்பிகை கோமதி வீதி உலா வருகிறாள். திங்கள் கிழமை மலர்ப்பாவாடையும் , செவ்வாய்கிழமை வெள்ளிபாவாடையும் , வெள்ளிகிழமை தங்க பாவாடையும் அம்பிகைக்கு சாத்தப்படுகிறது.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் அம்பிகைக்கு நவாவர்ண பூஜை கோலாகலமாக நடைபெறுகிறது. . தினந்தோறும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை சொல்லப்படுகிறது.. விசேஷமான நாட்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு நடைபெறுகிறது.

கோமதி அம்மனுக்கு தினமும் காலையிலும், உச்சி வேளையிலும், சாயங்கால பூஜையிலும், இரவு பள்ளியறை பூஜைக்கு முன்பாக நான்கு வேளைகளும் அபிஷேகம் நடக்கிறது. இங்கு தங்கம், வெள்ளி என பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். முடி காணிக்கைசெலுத்துவது மற்றும் நடக்கிறது மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதும் பிரதானமாக உள்ளது.

சங்கரன்கோவில் திருக்கோவில் அமைப்பு (Sankarankovil Temple Architecture) :

Internal architecture of sankara narayanar temple, Sankarankovil temple

Image credits : navrangindia.in

இங்கு ஊரின் நடுவே ஒன்பது நிலைகள் கொண்ட அகலமான ராஜ கோபுரத்தோடு அமையப் பெற்றுள்ளது இத் திருக்கோவில்.

திருக்கோவில் ராஜ கோபுர வாயிலுக்கு முன்புறம் வடக்கே நாக சுனை தீர்த்தம் அமையப் பெற்றுள்ளது. அந்த நாக சுனை தீர்த்தத்தை தலையில் தெளித்து விட்டு, இராஜ கோபுர வாயிலில் உள்ள விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி குடவருவாயில் வழியே உள்ளே சென்றால் பரந்து விரிந்த முன் மண்டபத்தை காணலாம்.

இந்த முன் மண்டபத்தின் நடுவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தியும், அதனை தொடர்ந்து கொடிமரம், பலிபீடம் ஆகியவைகளும் அமையப் பெற்றுள்ளன.

தொடர்ந்து இரண்டாம் கோபுர குடவருவாயில் முன்புறம் உள்ள விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி உள்ளே நுழைந்தால் அதிகார நந்தி காட்சியளிக்கிறார். அவரைத் தாண்டி நேராக அமையப் பெற்றுள்ளது சுவாமி சன்னதி. உள்ளே இருபுறமும் துவார பாலகர்கள் காவல்புரியும் கருவறைக்குள் காட்சித் தருகிறார் சங்கர லிங்க சுவாமி.

கருவறை முன் மண்டபத்தில் இடப்புறம் தெற்கு நோக்கி சிவகாமி அம்மை உடன் நடராசப் பெருமான் அருள்பாலிக்கிறார். அடுத்து சுவாமி சன்னதி திருச் சுற்றில் பரிவார மூர்த்திகளாக சூரியன், நால்வர், அறுபத்து மூவர்கள், சப்த கன்னியர்கள், லிங்க மூர்த்திகள், தட்சிணாமூர்த்தி, கன்னிமூலை சர்ப்ப விநாயகர், யோக நரசிம்மர், சுப்பிரமணியர், புற்றுக்கோவில் வன்மீகநாதர், விநாயகர், சண்டிகேஸ்வரர், காசி விசுவநாதர் - விசாலட்சி, துர்க்கை, பைரவர், சந்திர பகவான் ஆகியோர்கள் காட்சித் தருகிறார்கள். முன்புறம் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர் மற்றும் கோமதி அம்மை சன்னதியும் அமையப் பெற்றுள்ளது.

அடுத்து சுவாமி சன்னதிக்கு வலப்புறம் சங்கரநாராயணர் சன்னதி பிரத்யேகமாக அமையப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்து கோமதி அம்மை சன்னதியும் அமையப் பெற்றுள்ளது.

கோமதி அம்மை சன்னதிக்கு முன் புறம் தனி நந்தி, பலிபீடம், கொடி மரம் ஆகியவைகள் அமையப் பெற்றுள்ளது. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் தனி நந்தியும், சக்ர குழியும் உள்ளது.அதற்கு அடுத்து அர்த்த மண்டபமும், கருவறையில் கோமதி அம்மை சன்னதியும் அமையப் பெற்றுள்ளது. தொடர்ந்து பிரகாரத்தில் பள்ளியறை, சரஸ்வதி சன்னதி, புற்று மண் தொட்டி அகியவையும் அமையப் பெற்றுள்ளது.

தெற்கே சுவாமி சன்னதி, வடக்கே அம்மை சன்னதி, மத்தியில் சங்கர நாராயணர் சன்னதி ஆகிய மூன்று சன்னதிகளையும் மையமாக கொண்டு வெளி பிரகாரமும், அகலமான முன் மண்டபமும் அமையப் பெற்றுள்ளது. இந்த முன் மண்டபத்தின் வடகிழக்கில் தெற்கு நோக்கிய சண்முகர் சன்னதியும் அமையப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்து தனியாக சபாபதி சன்னதியும் தெற்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது.

முன் மண்டபத்தில் இது தவிர நவக்கிரக சன்னதியும், மணிக்கிரீவன் சிற்பமும் இருக்கிறது. வெளி பிரகாரத்தின் பின் புறம் இத்தல விருட்சமாகிய புன்னை மரமும், சர்ப்ப தோஷ நிவர்த்திக்குரிய சன்னதியும் இருக்கிறது.

பல்வேறு காலங்களில் பல்வேறு மன்னர்களாலும், ஜமீன்களாலும், செல்வந்தர்களாலும் திருப்பணி செய்யப்பட்டு விரிவாக கட்டப்பட்டுள்ளது இக்கோவில்.

சங்கரன்கோவில் கோவில் பூஜை நேரம்
( Sankarankovil  Temple Pooja Timings)

திங்கள் முதல் வியாழன், சனி & ஞாயிறு காலை 5.00 மணி முதல் 12.30 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

வெள்ளிகிழமை காலை 5.00 மணி முதல் 1:00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

பரிகார ஸ்தலமாக விளங்கும் சங்கரநாராயணர் திருக்கோவில்: (SANKARANARAYANAR THIRUKKOIL SIRAPPUGAL)

Long view of sankarankovil temple
இங்கு சிவன் பாதி, விஷ்ணு பாதி இணைந்து சங்கர நாராயணராக காட்சித் தருவது சிறப்பம்சம் ஆகும்.

இங்கு தரப்படும் புற்று மண் பிரசாதம் நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறது. கோமதி அம்மை சன்னதி உட்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் இந்த புற்று மண்ணை நிரப்பி வைத்துள்ளார்கள். இதிலிருந்து நாம் நமக்கு தேவையான மண்ணை பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்.

இங்கு பக்தர்கள் கோமதி அம்மைக்கு நேர்ந்து கொண்டு மாவிளக்கு எடுத்து வழிபடுவது சிறப்பாகும். இதற்காக இங்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவு கூடி மாவிளக்கு எடுப்பார்கள். அப்போது பிரார்த்தனைக்குரிய பக்தரை அம்மையின் சன்னதியில் மல்லாக்க படுக்க வைத்து அவர்களின் தலை, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் மாவிளக்கை வைத்து வழிபடுவார்கள்.

இந்த மாவிளக்கு வழிபாடு செய்வதற்காக முறைப்படி விரதம் இருந்து பச்சை அரிசி அல்லது தினையை இடித்து மாவாக்கி அதனுடன் வெல்லம் கலந்து மாவிளக்கு தயார் செய்வார்கள் என்பது சிறப்பம்சம்.

இங்கு தங்கள் உடம்பில் உள்ள நோய்களுக்காக வேண்டிக் கொண்டு அவைகள் குணமாகியவுடன் அந்தந்த உடல் உறுப்புக்கள் பொறிக்கப்பட்ட வெள்ளி தகடுகளையும், விஷக்கடி கண்டவர்கள், கொடிய விஷ ஜந்துக்களை கனவில் கண்டவர்கள் அந்தந்த விஷ ஜந்துக்களின் உருவங்களை வாங்கி கோவில் உண்டியலில் செலுத்தும் வழக்கமும் இருக்கிறது.

இந்த கோவில் சிறந்த நாக தோஷம் மற்றும் சகல தோஷங்களுக்கும் பரிகாரத் தலமாக விளங்குவதால் ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற திருக்கோவிலில் வடக்கு நோக்கி காட்சியருளும் துர்க்கை அம்மன் இங்கே தெற்கு திசை நோக்கி காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும்.

இங்குள்ள சங்கர நாராயணர் சன்னதியின் உள் மண்டபம் மற்றும் பிரகாரத்தை சுற்றிலும் இயற்கை மூலிகை வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியங்கள் காட்சியளிக்கிறது.

இந்த கோவிலில் விடுதலைக்காக போராடிய பூலித்தேவருக்கு தனி அறை உள்ளது. அதில் அவருடைய திருவுருவ படம் இருக்கிறது.

பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களுள் மண் தலமாக விளங்கும் இத்தலத்தில் ஆண்டிற்கு இரு முறை சித்திரை மற்றும் புரட்டாசியில் சூரியன் உதித்தெழும் போது தன் ஒளிக் கதிர்களை கருவறையில் உள்ள சங்கர லிங்கத்தின் மீது செலுத்தி வணங்குவது சிறப்பம்சம் ஆகும்.

இங்கு சிருங்கேரி மடத்தை சேர்ந்த நரசிம்ம பாரதி தீர்த்தர் அவர்களால் வழங்கப்பட்ட ஸ்படிக லிங்கம் ஒன்று உள்ளது. இதற்கு தினந்தோறும் விசேஷ அபிஷேகமும், பூஜையும் நடைபெற்று வருகிறது.

இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் தொடக்கமாக, கோவில் யானை பெருங்கோட்டூர் சென்று அங்கு பிடி மண் எடுத்து வருவது சிறப்பம்சம்.

இங்குள்ள கோமதி அம்மன் சன்னதியின் முன் மண்டபத்தில் திருவாவடுதுறை ஆதின 11வது பட்டம் அவர்களால் உருவாக்கப்பட்ட சக்ரகுழி உள்ளது. இதில் அமர்ந்து தவமியற்றுவது நற்பலன்களை தரும்.

முக்கிய திருவிழாக்கள் : (Important Festivals at Sankarankovil Temple)

Car festival held at Sankarankovil Temple

Image Credits : pavitrya.com

இங்கு சித்திரை மாதம் சுவாமி சன்னதியில் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந் திருவிழா நடைபெறும். திருவிழாவின் ஒன்பதாம் நாள் சித்திரை தேர் ஓடும். இது சுவாமிக்கு நடைபெறும் பெரிய திருவிழா ஆகும்.

இங்கு ஆடி மாதம் கோமதியம்மை சன்னதியில் கொடியேற்றமாகி பன்னிரெண்டு நாட்கள் ஆடித் தபசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆடித் தபசு திருவிழாவே இத் தலத்தின் சிறப்பு வாய்ந்த விழாவாகும்.

ஐப்பசி மாதம் கோமதி அம்மை சன்னதியில் கொடியேற்றமாகி திருக்கல்யாண திருவிழா சுமார் 12-நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

ஐப்பசி மாதம் இத் தல சுப்பிரமணியருக்கும், சண்முகருக்கும் கந்த சஷ்டி திருவிழா இனிதே நடைபெறும். இதில் இத்தல ஆறுமுக நயினாருக்கு நடைபெறும் ஆறுமுகார்ச்சனை மற்றும் ஆறுமுக தீபாராதனை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

கார்த்திகை மாதம் சோமவார வழிபாடும், திருக்கார்த்திகை சொக்கப்பனை ஏற்றுதலும் சிறப்பாக நடைபெறும்.

மார்கழி மாதம் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி வழிபாடும், திருவாதிரை திருநாளை ஓட்டி திருவெம்பாவை வழிபாடும் விமரிசையாக நடைபெறும். மார்கழி திருவாதிரை அன்று இத்தல நடராச பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.

மார்கழி மாதம் மற்றொரு சிறப்பாக விஷ்ணுவிற்குரிய வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பாக நடைபெறும். அன்று இங்குள்ள சங்கரநாராயணர் எழுந்தருளி பரமபத வாசல் திறந்து காட்சியளிப்பார்.

தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் இங்கு தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இது தவிர மாசி சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை வருஷ பிறப்பு, நடராஜருக்குரிய ஆறு அபிஷேகங்கள், மாதாந்திர பிரதோஷம் ஆகியவைகளும் சிறப்பாக நடைபெறும்.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

சங்கரநாராயணர் தெய்வீக அலங்காரம்

சங்கரநாராயணர் எப்போதும் அழகிய அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஸ்படிக லிங்கமான சந்திரமௌலீஸ்வரருக்கு சன்னதியில் அபிஷேகம் செய்யப்படுகிறது. கோவிலில் சிறப்பு விசேஷங்கள் விழாக்கள் அனைத்தும் தினந்தோறும் சிறப்பாக நடைபெறுகின்றது. மொட்டை அடித்தல், காது குத்தல், திருமணம் ,அன்னதானம்,கல்வி அறிவு பெற.. குடும்பம் நலம் பெற, தொழில் முன்னேற்றத்திற்கு என பலவிதமான விசேஷ யாகங்கள், சமூக சேவைகள் அனைத்தும் இந்த திருத்தலத்தில் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் பூஜை நேரங்கள்(ARULMIGU SANKARANARAYANA SWAMY THIRUKOIL POOJAI NERANGAL)

திருவனந்தல் காலை 6.00 மணி, விளாபூசை பூஜை காலை 6.30 மணி, சிறு காலசந்தி பூஜை காலை 8.30 மணி ,காலசந்தி காலை 10.30 மணி, உச்சிகால பூஜை பகல் 12.30 மணி, சாயரட்சை மாலை 5.30 மணி, அர்த்தசாம பூஜை இரவு 9.00 மணி என சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் தவறாது முறையாக பூஜை செய்யப்படுகிறது.

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கு சங்கர நாராயணர்கோவிலில் கோவில் வேண்டிக் கொள்ளலாம். துன்பங்கள் விலகி அனைத்து நலன்களும் உண்டாகும்.

ஆடித்தபசு, பிரம்மோத்ஸவம், ஐப்பசி திருமண விழா போன்ற பண்டிகைகளின் போது சங்கரநாராயணர்திருக்கோவிலில் மிகவும் பெரிய விசேஷ திருவிழாவாக அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வந்து தரிசனம் காண்பர்.
சங்கரன் திருக்கோவிலுக்கு செல்வதற்கு வழிகாட்டியாக நகரத்தில் ஏராளமான சுற்றுலா ஏஜென்சிகள் சுற்றுலா வழிகாட்டிகள் மொழிபெயர்ப்பாளர்களையும் ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் நமக்கு அனைத்து விபரங்களையும் வழங்குகிறார்கள். மேலும் அங்கு குடியிருக்கும் மக்களும் கோவிலின் சிறப்புகளை பற்றி மிகவும் ஆர்வத்தோடு நம்மிடம் பகிர்வதற்கு உதவியாக இருக்கின்றனர்.

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில்(ARULMIGU SHANKARANARAYANA SWAMY THIRUKKOIL)

சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக சங்கரனும் நாராயணனும் இணைந்து காட்சியளிக்கும் சங்கரன்கோவில் சென்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி சிறப்புடன் வாழலாம் என்பது திண்ணம்.

சங்கரன் கோவில் அமைவிடம் மற்றும் முகவரி
திருநெல்வேலி மாவட்டம்., திருநெல்வேலி - திருவில்லிப்புத்தூர் சாலை வழியில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 54 கி. மீ தொலைவில் சங்கரன்கோவில் அமையப் பெற்றுள்ளது.
முகவரி: ஸ்ரீ சங்கர நாராயணாகோயில், சங்கரன்கோயில் சாலை, சங்கரன்கோயில், தமிழ்நாடு 627756

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேனி, குமுளி, திருவில்லிப்புத்தூர், இராசபாளையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சங்கரன்கோவில் வழியாக செல்லும்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothkudi - 2hr 12min(107km)
  • Tirunelveli - 1hr 19min(62.8km)
  • Tiruchendur - 2hr 51min(115km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ரேவதி சரவணகுமார்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram