இலஞ்சி என்ற சொல்லுக்கு ஏரி, குளம், மடு, பொய்கை, மதில், மகிழ மரம் என பல பொருள் உண்டு என இலஞ்சி தல புராணம் குறிப்பிடுகிறது.
“இலஞ்சி” என்ற சொல்லை பல கவிஞர்கள் தங்கள் கவிப்பாக்களில் பயன்படுத்தி உள்ளனர். “இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே” என அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தை குறிப்பிடுகிறார். அது போல மதுரைக் காஞ்சியில் “ஒளிறு இலஞ்சி” என்றும் மலைபடுகடாகத்தில் ” சுடர்ப்பூ இலஞ்சி” என்றும் சிறப்பிக்கப் பட்டுள்ளது.
இயற்கை வளங்கள் நிறைந்த இலஞ்சி என்னும் இந்த ஊரானது மா, பலா, வாழை, கமுகு, தென்னை போன்ற மரங்கள் மற்றும் நெல் வயல்கள் சூழ்ந்த சோலையாக திகழுகிறது.
இலஞ்சி குமாரர் கோவில் என்றே இத்தலம் அழைக்கப்பட்டாலும் இங்கு ஈசனே நடுநயமாக காட்சித் தருகிறார்.
முருகன் சன்னதி சுவாமி பெயர்: | திருவிலஞ்சிக்குமாரர். |
சிவன் சன்னதி சுவாமி பெயர்: | இருவாலுக நாதர். |
அம்மை பெயர்: | இருவாலுக ஈசர்க்கினியாள். |
திருக்கோவில் விருட்சம்: | மகிழ மரம். |
தீர்த்தம்: | சித்ரா நதி. |
திருக்கோவில் வரலாறு:
ஆதி காலத்தில் திரிகூடாசல மலையின் அடிவாரத்தில் கபில முனிவர், துர்வாச முனிவர், காசிப முனிவர் ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள். அவர்களின் சந்திப்பின் போது பல ஆன்மீக கருத்துக்களை பற்றி உரையாடிக் கொண்டிருக்க, மூம் மூர்த்திகளில் நிமித்த காரண கடவுள் யார் என்ற சந்தேகம் தோன்றுகிறது. காசிப முனிவரோ படைக்கும் கடவுளான பிரம்மனே என்றும், துர்வாச முனிவரோ காக்கும் கடவுளான திருமாலே என்றும், கபில முனிவரோ அழிக்கும் கடவுளான சிவனே என்றும் மாறுபட்ட கருத்துக்களை கூறினார்கள். அப்போது துர்வாச முனிவர் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வணங்கி தங்கள் ஐயம் தீர்த்து வைக்க பணிகிறார். அவரின் வேண்டுகோளை ஏற்ற முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும், ஆடகப் பொன் மேனியும் கொண்ட கட்டிளமை கோலத்தில் தோன்றி பிரம்மாவாகவும், திருமாலாகவும், ருத்திரனாகவும் இணைந்த மும்மூர்த்தி வடிவில் காட்சியருளி தாமே நிமித்த காரண கடவுள் என்பதை தெளிவுபடுத்தியதாகவும், அந்த தரிசனத்தை கண்டு தங்கள் ஐயம் தீர்ந்த முனிவர்கள் தங்களுக்கு காட்சியளித்தது போலவே இத்தலத்தில் எழுந்தருளி இங்கு வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டதற்கு இணங்க, இங்கு முருகப் பெருமான் வரதராஜ குமரனாக அருள்பாலிப்பதாக இலஞ்சி தல புராணம் கூறுகிறது.
இருவாலுக நாயகர் (சிவன்) வரலாறு:
முற்காலத்தில் கைலாயத்தில் நடைபெற்ற சிவன் – பார்வதி திருக்கல்யாணம் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், சகல ரிஷிகளும், முனிவர்களும் மற்றும் பிற கடவுளர்களும் அங்கு கூடியதால் வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்து விட, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து தென் திசை சென்று பூமியை சமநிலைபடுத்தும்படி கட்டளையிடுகிறார். அப்போது தான் திருமணத்தை தரிசிக்க முடியாதே என வருந்திய முனிவருக்கு, தெற்கே பொதிகை மலையில் திருமணக் கோலத்தில் காட்சியளிப்பதாக கூறி அருளுகிறார். இதனை ஏற்ற அகத்திய முனிவரும் தென் திசை நோக்கி பயணித்து வருகிறார். அப்போது திருக்குற்றாலம் என்னும் தலத்திற்கு அவர் வந்து அங்குள்ள கோவிலுக்குள் நுழையும் போது, அங்கிருந்த வைணவர்கள் சைவரான அகத்தியரை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் மனம் வருந்தி கால் போன போக்கில் நடந்த அகத்திய முனிவர் திருவிலஞ்சி தலத்திற்கு வருகிறார். அங்குள்ள திருவிலஞ்சிக் குமரனை தரிசித்து குற்றாலத்தில் தனக்கு நேர்ந்த அவமானங்களை கூறி வருந்துகிறார். தமிழ் முனிவராகிய அகத்தியரின் வருத்தத்தை தீர்க்கும் பொருட்டு முருகப்பெருமான் காட்சியளித்து, வஞ்சகர்களை வஞ்சகத்தால் வெல்க என்று கூறி சிவாகமங்களையும் உபதேசித்து அருளுகிறார். அதன் படி சித்ரா நதிக்கரையில் வெண் மணல் எடுத்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்குகிறார். பின்னர் முருகப்பெருமான் கூறியபடி குற்றாலம் சென்று வைணவர் வேடத்தில் திருக்கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த விஷ்ணுவை வணங்கி அவரது தலையில் கை வைத்து அழுத்தி சிவலிங்கமாக மாற்றியருளினார் என்று வரலாறு விவரித்து கூறுகிறது.
ஆக அகத்தியர் திருக்குற்றாலம் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டி இங்கு சிவபூசை செய்த வெண் மணல் லிங்கமே இத்தலத்தின் ஈசனான இருவாலுக நாயகர் ஆகும்.
சுவாமி திருவிலஞ்சி குமரன்:
இங்கு எழுந்தருளி உள்ள வரதராஜ குமரன் என்று சிறப்பிக்கப்படும் திருவிலஞ்சி குமரன் நான்கு கரங்கள் கொண்டு வேல் தாங்கியும், மயிலை வாகனமாக கொண்டபடியும், நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சியருள்கிறார்.
சுவாமி இருவாலுக நாயகர்:
இரு என்ற சொல்லுக்கு பெருமை என்று பொருள், வாலுகம் என்ற சொல்லுக்கு வெண் மணல் என்று பொருள். ஆக அகத்தியர் பிரதிஷ்டை செய்த பெருமை மிக்க வெண் மணல் லிங்கம் என்பதால் இத்தல ஈசன் இருவாலுக நாயகர் என்ற பெயரில் கருவறையில் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவருக்கு மருந்து சாத்தி, குவளை அணிவிக்கப்பட்டுள்ளது. இவர் மணல் லிங்கம் என்பதால் அபிஷேகம் கிடையாது.
அம்மை இருவாலுக ஈசர்க்கினியாள்:
இத்தல அம்மை இருவாலுக ஈசர்க்கினியாள் என்ற அழகிய பெயர் கொண்டு கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை தொங்கவிட்ட படியும், சிரித்த முகத்தவளாக, இடை நெளித்து நின்ற கோலத்தில் தெற்கு திசை நோக்கி காட்சித் தருகிறாள்.
திருக்கோவில் அமைப்பு:
இயற்கை எழில் சூழ்ந்த வயல்கள் மற்றும் சோலைகளுக்கு நடுவே, சித்ரா நதியும், ஐந்தருவியாறும் சங்கமிக்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ள இத் திருக்கோவிலுக்குள் செல்ல கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இரண்டு வாயில்கள் உள்ளன.
கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் உள்ளே அழகிய நந்தவனம் நம்மை வரவேற்கிறது. நந்தவனத்தை தாண்டினால் சரவண மண்டபம் என்னும் பெயரில் அழகிய முன் மண்டபம் அமையப் பெற்றுள்ளது. இந்த மண்டபத்தை தாண்டி செல்லும் உள் வாயிலின் தென்புறம் தல விநாயகர் காட்சியளிக்கிறார். அவரை வணங்கி உள்ளே நுழைந்தால் நேராக கிழக்கு நோக்கிய இருவாலுக நாயகர் சன்னதி. கருவறையில் உறையும் இருவாலுக நாயகருக்கு எதிராக வெளியே அவருடைய வாகனமான நந்தி, கொடி மரம், பலி பீடம் ஆகியவைகள் அமையப் பெற்றுள்ளன. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் தனி சன்னதியில் இருவாலுக நாயகருக்குரிய உற்சவ சோமாஸ்கந்தர் மற்றும் அம்பாள் அருள்பாலிக்கிறார்கள். அதே முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் இத்தல அம்மையான இருவாலுக ஈசர்க்கினியாள் காட்சித் தருகிறாள்.
சுவாமி இருவாலுக நாயகர் சன்னதிக்கு தெற்கே தனி சன்னதியில் காட்சியளிக்கிறார் இத்தல நாயகனாக விளங்கும் திருவிலஞ்சிக்குமார சுவாமி. அவருக்கு இருபுறமும் முறையே வள்ளியும், தெய்வானை அம்மைகளும் காட்சித் தருகிறார்கள். இவரது சன்னதிக்கு எதிரே இவருடைய வாகனமான மயில் மற்றும் தனி கொடிமரம், பலிபீடம் ஆகியவையும் இருக்கிறது.
இந்த இரண்டு சன்னதிகளையும் ஒருங்கிணைத்து விளங்கும் பிரகாரங்களில் முறையே பரிவார மூர்த்திகளாக அதிகார நந்தி, சூரியன், சுரதேவர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், கன்னி மூல கணபதி, உற்சவர் திருவிலஞ்சி குமாரர், வேணு கோபாலர், காசி விசுவநாதர் – விசாலாட்சி, திருக்குற்றாலநாதர் – குழல்வாய்மொழி அம்மை, அய்யனார், அகத்தியர், சப்த கன்னியர்கள், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சண்முகப்பெருமான், நடராஜர், பைரவர், சந்திர பகவான் ஆகியோர் காட்சித் தருகிறார்கள்.
திருக்கோவிலின் வெளிப் பிரகாரம் முழுவதும் நந்தவனமாக பராமரிக்கப்படுகிறது. இந்த நந்தவனத்தில் இத்தல விருட்சமான மகிழ மரம் மற்றும் நாகலிங்க மரம், வில்வ மரம், மா மரம் போன்ற எண்ணற்ற மரங்களும், பூச்செடிகளும் நிறைந்து காணப்படுகிறது.
திருக்கோவில் சிறப்புக்கள்:
இங்கு முருகப் பெருமான் அழகிய இளமைக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இக்கோவிலில் முறையே திருவனந்தல், விளா பூஜை, கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய ஆறுகால வழிபாடுகள் நித்தம் நடைபெற்று வருகிறது.
இந்த கோவில் மகுட ஆகப்படி முறையே கருவறை, அர்த்த மண்டபம், மணி மண்டபம், மகா மண்டபம் ஆகிய அங்கங்களை கொண்டு அமையப் பெற்றுற்ளது.
இந்த தலத்தின் இலஞ்சிக் குமரனே திருக்குற்றாலத்தின் துவார சுப்பிரமணியராகவும், பிரத்யேக பஞ்ச மூர்த்திகளுள் ஒருவராகவும் திகழ்வது சிறப்பு.
இந்த இலஞ்சி தலம் முன்னர் தென் ஆரிய நாட்டின் ஆளுகையில் இருந்ததாக குற்றால குறவஞ்சியிலும், திருவிலஞ்சி உலா என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னர் தொண்டைமான் மன்னர் இங்கு கோட்டை மற்றும் கொத்தளங்கள் அமைத்து ஆட்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சாட்சியாக கோட்டை கிணறு, யானை கட்டிய கட்டுத்தறி, கோட்டை கிணறு, தொண்டைமான் குளம் ஆகியவைகள் இன்றும் வழக்கத்தில் காணப்படுகிறது.
முக்கிய திருவிழாக்கள் :
இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் திருவிழா வெகு கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி இருவாலுக நாயகரும், இலஞ்சிக் குமரனும் காட்சித் தருவார்கள். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும்.
ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவும் இங்கு விமரிசையாக நடைபெறும். இவ் விழாவின் முதல் நாள் பிரம்மனாகவும், இரண்டாம் நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் சிவனாகவும், நான்காம் நாள் மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் சதாசிவனாகவும் காட்சித்தரும் இத்தல குமரன் ஆறாம் நாள் வெள்ளி மயிலேறி சென்று சூரனை சம்காரம் செய்து அருள்பாலிப்பார்.
தை மாதம் இத்தல குமரன் திருக்குற்றாலம் எழுந்தருள, குற்றாலநாதர் உடன் சித்ர சபை எதிரிலுள்ள திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
மாசி மாதம் மேலகரத்தில் நடைபெறும் நாள் கதிர் கொள்ளும் திருவிழாவுக்கு தென்காசி மற்றும் திருக்குற்றாலம் திருக்கோவில் அஸ்திரதேவருடன் இத்தல அஸ்திரதேவரும் எழுந்தருளி சிறப்பு சேர்ப்பார்.
இது தவிர திருக்குற்றாலத்தில் நடைபெறும் சித்திரை விசு மற்றும் ஐப்பசி விசு திருவிழாவுக்கு இத்தல திருவிலஞ்சி குமரன் எழுந்தருளி விழாவின் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை பத்து நாட்களும் குற்றாலத்தில் தங்கி இருந்து சிறப்பு சேர்ப்பார்.
அமைவிடம் : திருநெல்வேலி மாவட்டம்., தென்காசி நகருக்கு மேற்கே சுமார் 5 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது இலஞ்சி.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்துகள் மூலம் தென்காசி சென்று இறங்கி, அங்கிருந்து நகரப்பேருந்துகள் மற்றும் தனியார் கட்டண வாகனங்களில் ஏறி இலஞ்சி கோவிலை சென்றடையலாம்.
-திருநெல்வேலிக்காரன்.