Logo of Tirunelveli Today
English

Palayamkottai Ayirathamman Kovil

Idol of Ayirathamman Urshavar adorned beautifully in Muthangi alangaram

பாளையங்கோட்டை மாநகரின் மத்தியில் அமையப் பெற்றுள்ளது ஆயிரத்தம்மன் திருக்கோவில்.

மைசூர், குலசேகரன்பட்டினம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா மிகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த தசரா திருவிழாவின் முக்கிய கோவிலாக திகழ்வதே இந்த ஆயிரத்தம்மன் திருக்கோவில் தான்.

இந்த திருக்கோவிலில் உறையும் அம்மன் முன்னர் இருந்த இடம் பட்டாளத்து திடல் என்று அழைக்கப்படும் எருமைக் கடா மைதானம் ஆகும். இது தற்போதும் சமாதானபுரம் பட்டாளத்து மாரியம்மன் கோவில் எதிரே காணப்படுகிறது. இங்கு தான் முதலில் ஆயிரத்தம்மன் எழுந்தருளியிருந்ததாகவும், பின்னர் தான் இப்போதைய இக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இன்றும் இந்த பட்டாளத்து திடலில் ஆதி ஆயிரத்தம்மன் சிறிய பீட வடிவில் அருள்பாலிக்கிறாள்.

திருக்கோவில் வரலாறு:

Aayirathamman Urshavar temple nameboard hung at the temple entrance and a glimpse of sanctum in the background
முற்காலத்தில் இப் பகுதி ஆங்கிலேயர் ஆட்சியில் படை வீரர்கள் சூழ்ந்து வாழ்ந்து வந்த இடமாக இருந்துள்ளது. இதை பட்டாளத்திடல் என்று அப்பொழுது கூறுவார்கள். அந்தப் பகுதியிலே ஒரு ஓலை குடிசையிலே ஒரு அம்மன் கோவில் இருந்து வந்தது. அதை மக்கள் வழிபட்டு வந்தனர். வழக்கம் போல ஒரு ஆடி மாதத்தில் இந்தப் பகுதியில் தொற்று நோய் பரவியது. அதனால் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் மிகவும் கலவரம் அடைந்தனர், அவதிப்பட்டனர். ஆகவே மக்கள் அனைவரும் ஒன்று கூடி அம்மனை வேண்டி பிரார்த்தித்து, பொங்கலிட்டு வழிபடுவோம், நமது கவலைகள் எல்லாம் தீரும், நோய் தீரும் என்று எண்ணி வழிபட்டனர். அந்த நேரத்தில் அங்கு இருந்த பட்டாளத்து வீரர்களும் இதே நோய்க்கு ஆளானதால் அவர்களும் ஒட்டு மொத்தமாக கோவிலுக்கு வந்து அம்மையை வழிபட்டனர். இதனால் பட்டாளத்து வீரர்கள் அன்று பணிக்கு செல்லவில்லை. இதனை அறிந்த அந்த அணியின் தலைவனாக இருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி அந்த வீரர்களை அழைத்து கோபத்துடன் ஏன் நீங்கள் எல்லோரும் இன்று ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்தீர்கள் என்று கேட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி பயமுறுத்தினான். சில வீரர்கள் அந்த ஆங்கிலேயரிடம்,, ஐயா எங்கள் பகுதியில் ஒரு நோய் பரவி உள்ளது எனவே நாங்கள் இங்குள்ள அம்மனுக்கு பொங்கல் வைக்க சென்றிருந்தோம்,. அதனால் வர முடியாமல் போய்விட்டது எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆனாலும் கோபம் தணியாத அந்த ஆங்கிலேயன் அந்த அம்மனா உங்களை காப்பாற்ற போகிறாள் என்று ஏளனமாக பேசி, அந்த அம்மனை எனக்குக் காட்டுங்கள் என்று கூறினார். சில வீரர்கள் அந்த ஆங்கிலேயரை அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். ஓலைக் குடிசையில் இருந்த அந்த அம்மன் சிலையை கண்டதும் இதைப் போய் வணங்குகிறீர்களே என்று கேலி கூறி, ஏளனமாகப் பேசி, தன் கையிலிருந்த துப்பாக்கியால் அந்த அம்மனை நோக்கி தாறுமாறாக சுட்டான். அதனால் அம்மன் சிலை மீது துப்பாக்கி குண்டு பட்டு சிலையின் பல பகுதிகள் நொறுங்கிவிட்டன.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

அன்று இரவு அந்த ஆங்கிலேயனுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு அம்மை நோய் உண்டாகி அவதியுறுகிறார்கள். இதைக் கண்ட ஆங்கிலேயர் தன்னுடைய தவறால் தான் இந்த மாதிரி ஒரு பெரிய துயரம் நமது குடும்பத்திற்கு வந்தது என்பதை தெரிந்து கொண்டு நேரே அம்மன் கோவில் முன்பு வந்து தன்னுடைய தவறுக்கு வருந்தி பிராயச்சித்தம் தேடினான். அப்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் வேப்பிலையை நீங்கள் உங்கள் வீட்டு வாசலில் கட்டி விடுங்கள். வேப்பிலையை அரைத்து தாங்கள் கசப்பாக இருந்தாலும் அதை எடுத்து சாப்பிடுங்கள். நிச்சயமாக அம்மன் அருளால் தங்களுக்கு ஏற்பட்ட வியாதி பூரண குணமாகும் என்று கூறினார்கள். மனம் திருந்திய அந்த ஆங்கிலேயன் அந்த மக்கள் கூறியது போல செய்ய அந்த குடும்பம் முழுவதுமே நோயில் இருந்து விடுபட்டது. ஆயிரம் பட்டாள வீரர்கள் வழிபட்டதால் இவளுக்கு ஆயிரத்தம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அம்மனின் சக்தியும் அருளும் புரிய வந்தது எனவே மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கோவில் கட்டி, அதில் ஆயிரத்தம்மனை பிரதிஷ்டை செய்ய நினைத்தார்கள்.

ஆனால் துப்பாக்கிச் சூட்டில் ஆயிரத்தம்மன் சிலை பழுதுபட்டதால், வேறு ஒரு மாற்று சிலையை சிற்பி மூலம் செய்து வைக்க ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் அன்று இரவே பக்தர்களின் கனவில் அம்மன் வந்து உன் தாய்க்கு உடலில் ஊனம் ஏற்பட்டால் மாற்றுவாயா? என்னை மாற்றுவது மட்டும் எப்படி நியாயம் எனக் கேட்டு, தான் இப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறி மறைந்தாள். மறுநாள் அந்த பக்தர்கள் அனைவருக்கும் தங்களுக்கு கனவில் வந்த அந்த செய்தியை கூறியவுடன்., புதிதாக கட்டிய கோவிலுக்குள் அந்த துப்பாக்கியால் துளையிடப்பட்ட அம்மன் விக்ரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றுவரை வழிபாட்டில் இருக்கிறது. பிற்காலத்தில் மூலிகை மருந்து கலவைகள் சாத்தப்பட்டு துளைகள் சரிசெய்யப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஆயிரத்தம்மன் விக்ரகம், பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்திசுவரர் திருக்கோயில் வெளி பிரகாரத்தில் வடக்கு நோக்கிய சன்னதியில் துர்க்கா பரமேஸ்வரி ஸ்ரீ ஆயிரத்தம்மன் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு காட்சியளிக்கிறாள்.

திருக்கோவில் அமைப்பு:

Devotees carrying Karakam(Pot) on their head during festival at Aayirathamman temple festival and other devotees watching the procession
பாளையங்கோட்டை நகரின் மத்தியில் திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவில் மேற்கு தேர் வீதியில் அமையப் பெற்றுள்ளது இக்கோவில். முகப்பில் அம்மைக்கு நேர் எதிராக சுடலைமாடசாமி பூட வடிவில் காட்சியளிக்கிறார். உள்ளே சென்றால் முதலில் பலிபீடம், கொடிமரம், வேதாள அம்மன் ஆகியோர் கருவறைக்கு நேர் எதிராக இருக்கிறார்கள். பின் உள்ளே மண்டபத்துக்குள் சென்றால், கருவறையில் அம்மை எட்டு கரங்களோடு அமர்ந்த கோலத்தில், வீராவேசமாக அழகே உருவாக காட்சித் தருகிறாள்.

கருவறைக்கு வெளியே அம்மைக்கு வலப்புறம் தனி கொலு மண்டபம் உள்ளது. அங்கே செவ்வாய், வெள்ளி, தசரா மற்றும் விசேஷ நாட்களில் உற்சவ அம்மை எழுந்தருளி காட்சித் தருவாள். பிரகாரத்தில் கன்னி மூலையில் கன்னி விநாயகர் சன்னதி, முன் மண்டபத்தில் துர்க்கையின் பெரிய சித்திர சுவரோவியம் மற்றும் பரிவார மூர்த்திகளான சங்கிலி பூதத்தார், மாடன்-மாடத்தி மற்றும் பைரவர் ஆகியோர்களின் சன்னதியும் உள்ளது.

அம்மையின் சிறப்பு:

Two old photos of Goddess Aayirathamman; one photo showing idol smeared in sandalwood paste and floral alangaram and the other photo shows idol being taken out for procession.
இந்த ஆயிரத்தம்மன் இப்பகுதியிலுள்ள 11-அம்மன்களோடு சேர்ந்து 12-அம்மன்களில், தலைமை அம்மையாக திகழ்கிறாள். பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா விழாவின் நாயகியே இந்த ஆயிரத்தம்மை தான். இக்கோவிலை தலைமையாக கொண்டே மற்ற பதினோறு கோவில் அம்மன்களும் இணைந்து தசரா விழா ஒரு சேர வெகு விமரிசையாக நடைபெறும்.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

தசரா திருவிழா சிறப்பு:
இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுமார் 25 நாட்கள் இவ்விழா நகரமே விழாக்கோலம் காணும்படி சிறப்பாக நடைபெறும்.

இந்த தசரா விழாவுக்காக ஆவணி மாத அமாவாசை அன்று இத் திருக்கோவிலை தலைமையாக கொண்டு மற்ற அனைத்து அம்மன் கோவில்களிலும் தசரா விழாவுக்கான கால் நாட்டப்படும்.

தொடர்ந்து புரட்டாசி மாத அமாவாசைக்கு முதல் நாள் மாக்காப்பு அலங்கார பூஜை நடைபெறும். புரட்டாசி மாத மகாளய அமாவாசை அன்று காலை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறும். அன்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன தட்டி அலங்கார சப்பரத்தில் ஆயிரத்தம்மன் உடன் மற்ற அம்மன்களும் தனித் தனி சப்பரங்களில் இங்கு எழுந்தருளி, இங்குள்ள எட்டு தேர் வீதிகளிலும் உலா வருவார்கள். எட்டு தேர் வீதிகள் என்பது இங்குள்ள சிவன் கோவிலின் நான்கு தேர் வீதிகள் மற்றும் ராஜகோபால சுவாமி கோவில் நான்கு தேர் வீதிகளையும் குறிக்கும். அன்று இரவில் இதற்கென பல வருடமாக ஒரு பக்தர் பரம்பரை பரம்பரையாக காளி வேடமிட்டு ஆடி வருவார்.

"Devotees offering prayers and priests performing aarti to aayirathamman on the first day of Dussehra "

மறுநாள் காலை வீதி உலா முடிந்து அனைத்து அம்மன் சப்பரங்களும் இந்த ஆயிரத்தம்மன் கோவில் முன்பு எழுந்தருள பந்தலில் தசரா கொடி நாட்டப்படும். அதனை தொடர்ந்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அனைத்து அம்மன்களும் அந்தந்த கோவில்களில் கொலு மண்டபத்தில் கொலு இருப்பார்கள். இந்த விழாவின் பத்தாம் நாளான விஜய தசமி அன்று மாலை தாமிரபரணி நதிக்கரையில் இருந்து அந்தந்த கோவில்களின் சாமி கொண்டாடிகள் சார்பாக ஆற்றில் இருந்து புனித நீர் நிரப்பி கரகம் குடம் எடுத்து வரப்படும்.

அன்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகன தட்டி அலங்கார சப்பரத்தில் ஆயிரத்தம்மன் உடன் மற்ற அம்மன்களும் தனித்தனி சப்பரங்களில் இங்கு எழுந்தருளி, இங்குள்ள எட்டு தேர் வீதிகளிலும் உலா வருவார்கள். மறுநாள் மாலை இங்குள்ள பிரத்யேக தசரா பந்தலில் அனைத்து சப்பரங்களும் ஒன்றாக அணிவகுத்து நின்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

தொடர்ந்து அன்று நள்ளிரவு எருமைக் கடா மைதானத்திற்கு தன் பதினொறு தங்கைகள் ஆன மற்ற அம்மன்களுடன் எழுந்தருள, மகிஷாசூரனை ஆயிரத்தம்மன் சம்காரம் செய்தருளுவாள். இதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலை ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அனைத்து அம்மன் சப்பரங்களும் அணிவகுத்து நிற்க, பந்தலில் ஏற்றப்பட்ட தசரா கொடி இறக்கப்படும். பின்னர் அனைத்து அம்மன்களும் தத்தம் கோவில்களுக்கு சென்று ஆசார படையல் கண்டருளி கோவிலுக்குள் இறங்குவார்கள்.

தொடர்ந்து அன்று மாலை அனைத்து அம்மன்களும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள பேராத்துச்செல்வி அம்மன் கோவில் எழுந்தருள தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

அதற்கு மறுநாள் இரவு அனைத்து அம்மன்களும் தனித்தனி பூம்பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். அதற்கு மறுநாள் தொடங்கி அடுத்த ஒன்பது நாட்களும் அந்தந்த கோவில்களில் ஊஞ்சல் திருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்விழாவின் இறுதியாக ஊஞ்சல் உற்சவம் முடிந்த பத்தாம் நாள் அனைத்து அம்மன்களும் தனித் தனி சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர தசரா விழாவானது இனிதே நிறைவு பெறும்.

இப்படி 25 நாட்களுக்கு மேல், பன்னிரெண்டு அம்மன் கோவில்களை ஒன்று சேர்த்து இவ்விழா நடைபெறுவதால் பாளையங்கோட்டை தசரா திருவிழா உலக பிரசித்தி பெறுகிறது.

முக்கிய மற்ற விழாக்கள்:

இது தவிர இங்கு தை மாத செவ்வாய் கிழமைகள், சித்திரை மாதம் கொடை விழா, ஆடி மாதம் முளைப்பாரி விழா, ஆவணி மாதம் வருஷாபிஷேகம் ஆகியவையும் விமரிசையாக நடைபெறும்.

அமைவிடம்:

Aayirathamman temple name board in front of an idol placed in a large ground with several houses visible in the background

பாளையங்கோட்டை மாநகரின் மத்திய பகுதியில் உள்ள திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோவிலின் மேற்கு தேர் வீதியில் இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இங்கு செல்ல திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்தும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் நகரப்பேருந்துகள் உள்ளன.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 53 min (48.6km)
  • Tirunelveli - 8 min (2.9km)
  • Tiruchendur - 1 hr 29 min (55km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ரேவதி சரவணகுமார்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram