இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் முதல் நிலை நகராட்சியாக விளங்குகிறது. தென்காசிக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக சங்கரன்கோவில் அமைந்துள்ளது. சங்கரன்கோவில் நகராட்சியில் சங்கர நாராயணர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்கிறது.
சங்கரன்கோவில் 2014 - ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த நகராட்சிக்கு உரிய சிறப்பாகும். பெரிய பருவகால உழவர்சந்தையில் மிகப்பெரிய பிரபலமாக சங்கரன்கோவில் நகராட்சி அமைந்துள்ளது.
முதன்முதலில் சங்கரன்கோவில் நகராட்சி திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வந்தது. அதன் பிறகு சங்கரன்கோவில் நகராட்சி கல்வி மையத்திற்கு தலைமையிடமாய் செயல்படும் என்று தமிழக அரசு 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. மிகப்பெரிய மற்றும் நல்ல கல்லூரிகள் இந்த நகராட்சியில் அமைந்து இருப்பதால் கல்விக்கு முக்கியத்துவம் இருக்கும் இடமாக விளங்குகிறது
2011 ஆம் ஆண்டு சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்த மக்கள்தொகை 70, 574 ஆகும். இவர்களில் 50% பெண்கள், 50% ஆண்கள் என இருக்கின்றனர். 68% கல்வியறிவு பெற்று விளங்குகின்றனர். பெண்களின் கல்வியறிவு 60% , ஆண்களின் கல்வியறிவு 77%, ஆகும். 59.5% இந்திய தேசிய சராசரி கல்வி அறிவு பெற்ற நகராட்சியாய் விளங்குகிறது. . சங்கரன்கோவில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாக இருக்கின்றனர்.
Image credits : sankarankovil.com
நெசவுத் தொழிலுக்கு பெருமை பெற்ற இடமாக சங்கரன்கோவில் விளங்குகிறது. நமது இந்திய தேசத்திற்கு உயிர்நாடியாக நெசவுத்தொழில் அமைந்துள்ளது. சங்கரன்கோவிலில் நெசவுத்தொழில் முதன்மைத் தொழிலாக மக்கள் மேற்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப் படுகிறது. இந்த ஆடைகள் அனைத்தும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சங்கரன்கோவிலில் வேளாண்மை தொழிலானது நெசவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக சிறப்பு வாய்ந்த தொழிலாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சங்கரன் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களிலும் இந்த தொழிலை மக்கள் செய்து வருகின்றனர்.
சங்கரன்கோவிலில் மொத்தம் மூன்று சந்தைகள் அமைந்திருக்கின்றது. அதில் பழைய பேருந்து நிலையம் மற்றும் சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம் அருகிலும் உள்ள தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த காய்கறி சந்தையில் 70 க்கும் மேற்பட்ட அங்காடிகள் இருக்கின்றது. காலை 6 மணி முதல் 10.30 மணி வரை நடக்கும். உழவர் சந்தையில் ஏராளமானோர் பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர் .
சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு எதிரே உழவர் சந்தை அமைந்திருக்கிறது.
தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர்சந்தைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மலர்சந்தை சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள மலர் சந்தையில் அனைத்து விதமான மலர்களும் கிடைக்கிறது .இச்சந்தையிலிந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒருமுறை சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் போட்டி ஏற்பட்டது . ஈஸ்வரன் பெரியவரா! அல்லது நாராயணன் பெரியவரா !என வாதிட்ட போது சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என அசரீரி ஒலிக்க சிவனும் விஷ்ணுவும் ஒன்று சேர்ந்து காட்சியளித்த புகழ்பெற்ற திருத்தலமே சங்கரநாராயணர் கோவில் என்பதாகும்.
சங்கரன்கோவிலில் பழமையான புகழ் பெற்ற ஸ்தலமாக சங்கரநாராயணர் கோவில் அமைந்துள்ளது. 108 சக்தி தலங்களில் ஒன்றான சங்கரன்கோவிலில் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் ஆடித்தவசுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
சங்கரன்கோவிலில் உள்ள ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி கோவில் திருத்தலமானது ஸ்ரீ நாராயணன் மற்றும் சிவபெருமானின் ஒன்றிய வடிவத்தில் உருவான தனித்துவம் வாய்ந்த கோவிலாகும் இந்த வடிவமே ஸ்ரீ சங்கர நாராயணன் வடிவமாக திகழ்வது என்பது இந்த கோவிலுக்கு உரிய தனிச்சிறப்பாகும்.சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது சங்கரன்கோவில் திருக்கோவில்
கி.பி.1022 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ சங்கர நாராயணர் கோவில் உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இந்த திருத்தலத்தில் மூலவராக இறைவன் சங்கரலிங்கசுவாமி எழுந்தருளி இருக்கின்றார் . இறைவி கோமதி அம்மன் ஆவுடை அம்மனாக காட்சியளிக்கிறார். கோவிலின் முதன்மைப் பெண் தெய்வம் கோமதி அம்மன் என்பதால் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. கோமதி அம்மன் ஆதிசக்தியான பார்வதியின் அம்சமாக காட்சி தருகிறாள்.மேலும் இந்தத் திருத்தலத்தில் சிவனும் நாராயண`னும் பாதி பாதி உருவங்களாக இணைந்து மிகப்பெரிய சக்தியாக காட்சி தருகின்றனர் என்பதால் ஏராளமான பக்தர்கள் திருத்தலத்திற்கு வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
10 நாட்களுக்கு நடைபெறும் சித்திரை பிரமோட்சவம்
12 நாட்களுக்கு நடைபெறும் ஆடிமாத ஆடி தபசு திருவிழா
ஐப்பசி மாதம் 10 நாட்களுக்கு நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாணம்
தை மாதம் நடைபெறும் தெப்பத் திருவிழா தை கடைசி வெள்ளிக்கிழமை ஒவ்வொரு தை மாதமும் நடைபெற்று வருகிறது.
இவை அனைத்தும் மிகச்சிறந்த திருவிழாவாக கோவிலில் வருடா வருடம் நடைபெற்று வருகிறது.
Image credits : sankarankovil.com
அனைத்து விழாவையும் விட ஆடி மாதத்தில் வரக்கூடிய தபசு திருவிழாவானது தனித்துவம் வாய்ந்த திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு மாவிளக்கு போடும் வேண்டுதல்களும் பிரத்யேகமாக கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடித் தவசு விழா உத்திராட நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் சங்கரநாராயணர் கோமதி அம்மையாருக்கும் , சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த சிறப்பு தினம் என்பதால் அதனை நினைவு கூறும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
ஆடித்தபசு நாட்களில் இங்கு அமைந்துள்ள ஸ்ரீசக்கர பீடத்தில், தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், மனநலமற்றவர்கள் நோயாளிகள், ஆகியோரை அமரவைத்தால், அவர்களுடைய நோய்கள் நீங்கி குணம் பெறுவார்கள்.
இந்துக்களின் தெய்வீக வழிபாட்டு நம்பிக்கையில் புற்று வழிபாடு ஒரு சிறந்த வழிபாடாக உள்ளது. சங்கரன் கோவிலில் புற்று மண்ணை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். புற்றுமண்ணே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. புற்று மண் பிரசாதம் தெய்வத் தன்மையும், மருத்துவக் குணமும் கொண்டது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
சங்கரன்கோவில் திருத்தலத்தில் உள்ள புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாக கருதப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட இந்த புற்று மண்ணை உடலில் பூசிக்கொள்வது நோய்கள் மீண்டும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது மட்டுமன்றி தங்கள் வயக்காடுகளில் மற்றும் வீடுகளில் தெளித்தால் சிறப்பான பலன் கிடைக்கும். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ விஷப்பூச்சிகள் வராது என்பதும், செல்வம் செழிப்பு உண்டாகும் எனும் கருத்து மக்களிடையே நிலவுகிறது.
சங்கரன் கோவிலில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செங்கோட்டை குளம். காரில் பயணம் செய்தால் 1 மணி 30 நிமிடத்தில் அந்த இடத்திற்கு சென்று விடலாம் . இந்த நகராட்சியில் தான் பாபநாசம் உள்ளது. 69 .5 கி.மீ. தொலைதூரமே உள்ள இந்த இடத்தை சென்று சேர்வதற்கு காரில் 130 நிமிடம் பயணம் போதுமானதாக இருக்கும். மேலும் 72.8 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்வேலி சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடமாக திகழ்கிறது.
சங்கரன்கோவில் ரயில் நிலையம் மக்களுடைய வசதிக்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் ஆறு ரயில்கள் சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் வண்ணம் அமைந்துள்ளன.
மதுரையில் இருந்து செங்கோட்டை வரை வந்து செல்வதற்கு மூன்று ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது செங்கோட்டையிலிருந்து மதுரை வரை மற்ற மூன்று ரயில்கள் தன்னுடைய பயணத்தை தொடர்கிறது. அதுபோலவே விரைவு இரயில் சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் வந்து போகின்றது. அதில் ஒரு விரைவு ரயிலானது சென்னை முதல் செங்கோட்டை வரையும் மற்றொன்று மற்றொரு விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து சென்னை வரையும் செல்கின்றது.
சங்கரன்கோவில் மாநகராட்சியில் 2 பேருந்து நிலையங்கள் மக்களுக்காக செயல்பட்டு வருகிறது. பழைய பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் தற்போதைய பெயரில் அழைக்கப்படுகிறது. தந்தை பெரியார் பேருந்து நிலையம் புதிய பேருந்துநிலையமாக செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளான ஏழு மற்றும் 208 ஆகியவற்றிற்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது . மேலும் 41 மற்றும் 71 ஆகிய 2 பெரும் நெடுஞ்சாலைகளின் மத்தியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. ஆதலால் ஆயிரக் கணக்கான பேருந்துகள் தினமும் வந்து சென்ற வண்ணம் இருக்கின்றது. . இந்த பேருந்து போக்குவரத்து வசதிகள் மக்கள் செல்வதற்கு வசதியாக அமைந்திருக்கிறது,
சங்கரன்கோவிலிருந்து திருநெல்வேலி,கோவில்பட்டி, தென்காசி, இராஜபாளையம், திருப்பூர், சிவகாசி, குமுளி, தூத்துக்குடி ,திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், மதுரை, செங்கோட்டை, போடி, திருச்சி, சென்னை, கோயமுத்தூர்,நாகர்கோவில் , பொள்ளாச்சி, , விருதுநகர், தேனி, ஊட்டி என தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இருக்கின்றது . கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆகிய முக்கியமான நகரங்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் தென்காசிக்கு சென்று அங்கிருந்து செல்லலாம். பாண்டிச்சேரி,. பெங்களூர் , போன்ற நகரங்களுக்கும் செல்வதற்கும் பேருந்து வசதிகள் இருக்கின்றது.
மதுரை விமான நிலையம் அடைவதற்கு பேருந்தில் செல்வதாக இருந்தால் 2 மணி 32 நிமிடத்தில் அடையலாம்.
திருவனந்தபுரம் விமான நிலையம் செல்வதற்கு பேருந்தில் செல்வதாக இருந்தால் 4 மணி நேரத்தில் அடையலாம்.
தூத்துக்குடி விமானநிலையம் செல்வதற்கு பேருந்தில் போவதாக இருந்தால் 1 மணி 52 நிமிட நேரத்தில் அடையலாம்.
சிறப்பு சங்கரன்கோவில் நகராட்சியில் அனைத்து விதமான வசதிகளும் இருப்பதால் ஏராளமான பயணிகள் சுற்றுப்புறத்தை ஆவலோடு கண்டு களிப்பதற்கு வருகை புரிகின்றனர்.