Tirunelveli Pittapurathi Amman Kovil

திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில்

திருநெல்வேலி மாநகரின் எல்லைக் காவல் தெய்வமாக விளங்கும், ஸ்ரீ பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில்.

மூலவர்: பிட்டாபுரத்தி அம்மன்.

அம்மைக்கு விளங்கும் வேறு பெயர்கள்: நெல்லை மாக் காளி, சண்பகச் செல்வி, வடக்கு வாசல் செல்வி.

சிறப்பு சன்னதி: அகோர விநாயகர்.

தீர்த்தம்: தாமிரபரணி.

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் பிரம்மனை குறித்து கடுந் தவம் இருந்தனர். அவர்களின் தவத்திற்கு இறங்கிய பிரம்மன் அவர்கள் முன் தோன்றி வேண்டும் வரம் அளிப்பதாக கூற, சும்பன், நிசும்பன் இருவரும் தங்களுக்கு எந்த காலத்திலும் அழிவு நேரக் கூடாது என வரம் கேட்கின்றனர், அதற்கு பிரம்மன் அழிவற்ற வரம் தரலாகாது, வேறு வரம் கேளுங்கள் என்று கூறிட, தங்களுக்கு எந்த ஒரு ஆண் மகனாலும் மரணம் நிகழக் கூடாது என்ற வரம் கேட்கின்றனர். பெண்கள் என்றால் போரில் சுலபமாக வென்று விடலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. பிரம்மனும் அவ்வாறே அவர்கள் கேட்ட வரங்களை அழித்து அருள்புரிந்தார். பெற்ற வரத்தினால் தங்களுக்கு அழிவில்லை என்ற ஆணவம் தலைக்கு ஏறிட, அரக்கர்கள் இருவரும் மூன்று உலகங்களையும் தங்கள் வசப்படுத்தி தேவர்களையும், முனிவர்களையும் அடிமைப்படுத்தி சித்ரவதை செய்கின்றனர்.

இதனை பொறுக்க முடியாத இந்திரன் மற்றும் தேவர்கள் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் பார்வதி அம்மையை உற்று நோக்கி தேவர்களை துன்புறுத்தும் அரக்கர்களை சம்காரம் செய்து தேவர்களை காத்தருளும் படி கூறிட, பார்வதி அம்மை துர்க்கையை அழைத்து, சும்பன் மற்றும் நிசும்பனை அழித்திட ஆணையிடுகிறாள். துர்க்கையும் அந்த உத்தரவை ஏற்று பூலோகம் வந்து, தன் அம்சமாக காளியை படைத்து, தன் படைகளுக்கு தலைவியாக நியமித்து, காளி தேவியிடம் அசுரர்களை எப்படியாவது தந்திரமாக பேசி இந்த இடத்திற்கு அழைத்து வருவாயாக என்று கூறி அனுப்புகிறாள். அவ்வாறே காளியும் மோகினிப் பெண்ணாக உருவம் மாறி அசுர லோகத்தை அடைந்து அங்கிருந்த சண்டன் மற்றும் முண்டன் ஆகியோர்களிடம் தங்கள் அரசரை சந்திக்க வேண்டும் எனக் கூற, சண்டனும், முண்டனும் அரக்கர்களிடம் அனுமதி பெற்று மோகினியை அசுரர்களின் சபைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கிருந்த அரக்கர்கள் மோகினியின் அழகில் மயங்கி, அவளை தங்களுடனே தங்கும் படி கூற, வெகுண்ட மோகினி நான் வரைவனத்து கவுசிகையின் தோழி, நீங்களோ மூவுலக மன்னர்கள், உங்கள் தகுதிக்கு ஏற்ற கன்னியராய் கண்டு உடன் சேர்த்து கொள்க எனக் கூறி அங்கிருந்து கிளம்பி தங்கள் இருப்பிடம் சேர்ந்து கவுசிகையின் அருகில் நிற்கிறாள். அசுரர்களோ தன் படைத் தளபதியை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி எப்படியாவது கவுசிகை மற்றும் மோகினியை அசுர லோகம் கொண்டு வர உத்தரவிடுகிறார்கள்.

அவ்வாறே படைத் தளபதியும் கவுசிகை மற்றும் மோகினியாகிய காளியின் இருப்பிடம் தேடி வந்து, அவர்களிடம் தங்கள் அசுர அரசர்களை மணந்து கொள்ளும் படி கூற, வெகுண்டெழுந்த அம்மையின் கோபம் தாங்காமல் பயந்து அசுரர் படைத் தலைவன் அங்கிருந்து தப்பித்து அசுரலோகம் அடைந்து தன் அரசர்களிடம் நடந்ததை கூறுகிறான். இதனைக் கேட்டு பெருங் கோபங் கொண்ட அரக்கர்கள் தங்கள் படை வீரர்களை திரட்டி போருக்கு அனுப்புகிறார்கள். முதலில் தூமலோசனன் தலைமையில் போருக்கு வந்த அரக்கர்களை, காளியானவள் கோபத்தோடு வீழ்த்தி தூமலோசனனை சம்காரம் செய்கிறாள். அடுத்ததாக சண்டன், முண்டன் தலைமையில் அரக்கர்கள் போருக்கு வந்து தங்கள் திறமைகளை வெளிக் காட்ட, இறுதியில் காளியானவள் தன் வாளால் வெட்டி முண்டனையும், சூலத்தால் குத்தி சண்டனையும் சம்காரம் செய்கிறாள்.

அப்போது தேவர்கள் அனைவரும் பூ மழை பொழிய, இருவரின் தலைகளையும் கொண்டு கவுசிகையாகிய துர்க்கையின் காலடியில் சமர்பித்து வணங்கி நிற்கிறாள். கவுசிகை மகிழ்ந்து சண்ட முண்டனை அழித்ததால் சாமுண்டி என்ற நாமம் வழங்கி காளியை சிறப்பித்தாள். அதே நேரம் தன் வீரர்கள் மாண்டு போனதை அறிந்த சும்பன், நிசும்பன் இருவரும் அசுரப் படைகளோடு போருக்கு வர, கவுசிகையானவள் தன் உடம்பிலிருந்து சப்த மாதர்களாகிய எழுவரையும் படைத்து, அசுரர்களோடு போர்புரிய, சப்த மாதர்கள் எழுவரும் சேர்ந்து சும்பனை சம்காரம் செய்திட, கவுசிகையானவள் விசுவரூபம் கொண்டு நிசும்பனை சூலத்தால் குத்தி சம்காரம் செய்தருளினாள். தேவர்கள் மற்றும் முனிவர்கள் அங்கு தோன்றி இக் காட்சியை கண்டு ஆனந்தம் கொண்டு பூ மழை பொழிந்து துதித்து மகிழ்ந்தனர்.

காளியாக தோன்றி தூமலோசனன், சண்டன் மற்றும் முண்டனை சம்காரம் செய்த அம்மையே நெல்லை மாக் காளி என்னும் பிட்டாபுரத்தி அம்மையாக திருநெல்வேலி மாநகரின் வடமேற்கில் வடக்கு வாசல் கொண்ட கோவிலில் எல்லைக் காளியாக இருந்து காவல் புரிந்து வருவதாக திருநெல்வேலி தலப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பிட்டாபுரத்தி அம்மை:

இங்கு கருவறையில் பிட்டாபுரத்தி அம்மை சுமார் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் கொண்டு, வலது காலை பீடத்தின் மேலே வைத்து, இடது காலை தொங்க விட்டு, அமர்ந்த கோலத்தில், வலது கைகளில் அரவம், வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் அக்னி, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி காட்சித் தருகிறாள். அம்மையின் திருமேனி கருவறை வாசலின் அளவை தாண்டி மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

அகோர விநாயகர்:

இந்த திருக்கோயிலில் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித் தருகிறார் அகோர விநாயகர். நான்கு கரங்களும் துதிக்கையும் துண்டிக்கப்பட்ட நிலையில் காட்சி தருவதால், இவருக்கு அகோர விநாயகர் என்ற பெயர் விளங்கியதாக கூறப்படுகிறது.

முற்காலத்தில் அந்நியர்கள் படையெடுப்பின் போது பின்னப்படுத்தப்பட்டதாம் இந்த விநாயகர் விக்கிரகம். பின்னம் அடைந்த விக்கிரகத்தை வழிபாட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதால், இவரை வழிபட்டு வந்த குடும்பத்தினர் விக்கிரகத்தை திருக் குளத்தில் சேர்ப்பித்தார்களாம். ஆனால் அவர்கள் கனவில் தோன்றிய விநாயகர் மீண்டும் தன்னை அப்படியே பிரதிஷ்டை செய்து வழிபடும்படி வலியுறுத்த, அந்தக் குடும்பத்தினரும் அப்படியே செய்தார்களாம். அத்துடன் நான்கு திருக்கரங்கள் மற்றும் துதிக்கையுடன் பூரணத் திருவுருவில் வெண்கலக் கவசமும் செய்து அணிவித்துள்ளார்கள்.

இந்த விநாயகர் மிகுந்த சக்தி வாய்ந்தவராக விளங்குகிறார். இவர் முன் வைத்து தான் பிள்ளைகளுக்கு பார்வை பார்த்து பிள்ளைகளுக்கு வேர் கட்டி, மை இடப்படுகிறது.

திருக்கோவில் அமைப்பு:

வடக்கு நோக்கிய திருக்கோவிலுக்குள் நுழைந்தால் முன் மண்டபத்தில் சிறிய பலி பீடம், கொடிமரம், பெரிய பலி பீடம், வேதாளம் ஆகியவை அம்மனுக்கு நேர் எதிரே இருக்கிறது. அவற்றை வணங்கி முன்னே நடந்தால் அம்மை சன்னதி நுழைவாயிலின் மேற்கே, கிழக்கு நோக்கிய அகோர விநாயகர் சன்னதியும், கிழக்கை வடக்கு நோக்கிய அனுக்ஞை விநாயகர் சன்னதியும் இருக்கிறது. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் மகா மண்டபம் தாண்டி கருவறையில் பிட்டாபுரத்தி அம்மன் காட்சித் தருகிறாள். மகா மண்டபத்தில் கிழக்கு நோக்கிய சன்னதியில் நெல்லையப்பர், காந்திமதி, வள்ளி – தெய்வானை உடனாய சுப்பிரமணியர், உற்சவர் பிட்டாபுரத்தி அம்மன், அஸ்திர தேவி, ஸ்ரீபலி அம்மன் ஆகியோர் காட்சித் தருகிறார்கள். முன் மண்டபத்தின் வட கிழக்கில் தெற்கு நோக்கிய பைரவர் சன்னதியும், வடக்கு நோக்கிய கொலு மண்டபமும் உள்ளது.

முன் மண்டபத்தில் பல திருக்கோவில்களின் அம்மன் ஓவிய படங்கள் அழகாக காட்சித் தருகின்றன. இது தவிர வெளிப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கிய விநாயகர் சன்னதி, மற்றும் சுடலைமாட சுவாமி சன்னதி ஆகியவையும் அமையப் பெற்றுள்ளன.

திருக்கோவில் சிறப்புகள்:

இந்த அம்மை திருநெல்வேலி மாநகரின் எல்லைக் காவல் தெய்வமாக விளங்குவதால், வைகாசி மாதம் இவளுக்கு முதலில் திருவிழா நடைபெற்றப் பின்னரே, நெல்லையப்பர் கோவிலின் பிரசித்தி பெற்ற ஆனி திருவிழா துவங்கும்.

பொதுவாக குழந்தைகள் பிறந்தால் தீட்டு என்றும் பதினாறு நாட்களுக்கு அந்த குடும்பத்தினர் கோவிலுக்கு செல்லக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் இங்கு பிறந்த குழந்தையை கூட அழைத்து வந்து வேர் கட்டி வழிபடலாம்.

இந்த அம்மை பிள்ளைகளைக் காக்கும் காளியாக விளங்குகிறாள். இவள் சன்னதியில் தினமும் காலை மற்றும் இரவு பூஜைகளின் போது மந்திரம் ஓதப்பட்ட புனித நீரானது சங்கில் வைத்து பக்தர்களின் மீது தெளிக்கப்படும். இதனால் சகல திருஷ்டிகளும், பீடைகளும், தீய சக்திகளும் நீங்குவதாக நம்பிக்கை.

இங்கு குழந்தைகளுக்கு ஏற்படும் அறுபத்து நான்கு விதமான நோய்கள், சீர் தட்டுதல் போன்றவற்றிற்கு கைகளில் வேர் கட்டி, நெற்றியில் மையிடப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் சகல நோய்களும் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் இங்கு, நோயால் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து அம்மனை வழிபட்டு வேர் கட்டி, மையிட்டு செல்வது இக் கோவிலின் சிறப்பம்சமாகும்.

இங்குள்ள கருவறை அம்மைக்கு வருடத்தில் ஒருமுறை புரட்டாசி மாதம், விஜய தசமி அன்று முழு சந்தனக் காப்பு சாத்தப்படும். அன்று மட்டுமே அம்மையின் முழு உருவத்தையும் தரிசிக்கலாம்.

இங்கு அம்மனுக்கு புட்டு பிரசாதமே பிரதான நிவேதனமாக படைக்கப்படுகிறது.

முன்னர் இந்த அம்மன் நெல்லையப்பர் கோவிலுக்குள் இருந்ததாகவும், தன் பக்தை ஒருவள் பிரசவ வலியால் துடித்திட, அம்மையானவள் திருக்கோவில் விட்டு எழுந்தருளி, தன் பக்தைக்கு பிரசவ கால உதவிகள் செய்து அவளுக்கு அருள்புரிந்து, அம்படியே இங்கு தங்கிவிட்டதாகவும் ஒரு செவி வழி கதை இப் பகுதியில் கூறப்படுகிறது.

திருக்கோவில் திருவிழாக்கள்:

இங்கு வைகாசி மாதம் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் ஒன்பதாம் நாள் அம்மன் சட்டத் தேரில் எழுந்தருள்வாள். பத்தாம் நாள் காந்திமதி அம்மை சன்னதியிலுள்ள பொற்றாமரை தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி காண்பாள்.

புரட்டாசி மாதம் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெறும். விஜய தசமி அன்று பரி வேட்டை உற்சவமும், அன்று இரவு திருநெல்வேலி மாநகரில் உள்ள 26 அம்மன்கள் புடை சூழ சிம்ம வாகன சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவாள்.

இது தவிர ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, தை செவ்வாய், பிரதி மாத கடைசி வெள்ளி, மாத பிறப்பு ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வட மேற்கில் இந்த திருக்கோவில் அமையப் பெற்றுள்ளது. நகரின் முக்கியப் பகுதி என்பதால் பேருந்து வசதி அதிகம் உள்ளது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மேற்கே சுமார் 3.5 கி. மீ தொலைவில் உள்ளது.

-திருநெல்வேலிக்காரன்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.