English

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-1)

வாசிப்பு நேரம்: 5 Minutes
No Comments

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என திருஞானசம்பந்தரும், "தண் பொருநைப் புனல் நாடு" என சேக்கிழார் பெருமானும், "பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திரு நதி" என்று கவிச் சக்கரவர்த்தி கம்பரும் பாடிப் புகழ்ந்த பெருமை மிகு தலம் திருநெல்வேலி காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில்.

சுவாமி பெயர்:

 1. திருமூலமகாலிங்கர் ( ஆதி மூலவர் )
 2. நெல்லையப்பர் ( வெட்டுபட்ட சுயம்பு மூர்த்தி )
 3. நெல்லை கோவிந்தர்.

அம்மை பெயர்: காந்திமதி அம்மை .

திருக்கோவில் விருட்சம்: மூங்கில் மரம்.

தீர்த்தங்கள்:

இந்த திருக் கோவிலுக்குள் 32 புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக தலப் புராணம் கூறுகிறது.

சிந்துபூந்துறை ( தாமிரபரணி ) தீர்த்தம், பொற்றாமரை குளம், பாடலங் கம்பை தீர்த்தம், கருயுறு மாறி தீர்த்தம், வருண நற் கம்பை தீர்த்தம், திரிகூடத் தாங்கு நின்றழைப்பித்த தீர்த்தம், அக்னி தீர்த்தம், உருத்திர தீர்த்தம், சக்கர தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், தரும தேவதை தீர்த்தம், பிசாசு மோசன தீர்த்தம், தேவ தீர்த்தம், குபேர தீர்த்தம், வயினவ தேவ தீர்த்தம், பிரத் தும்பன தீர்த்தம், சர்வ தீர்த்தம், சந்திர புஷ்கரணி தீர்த்தம், தரும தீர்த்தம், பாற்கடல் புஷ்கரணி தீர்த்தம், பக்த பிரிய தீர்த்தம், ருத்ர பாத தீர்த்தம், ரிஷி தீர்த்தம், எக்கிய தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், தேவ பாண்டி தீர்த்தம், சனற் குமார தீர்த்தம், துர்கா தீர்த்தம், கெளதம தீர்த்தம், குறுக்குத்துறை தீர்த்தம், அக்கினீஸ்வர தீர்த்தம், காருண்ய தீர்த்தம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களையும், கங்கையே வந்து தன் பாவங்களை போக்கிக் கொள்ள இங்கு வந்து நீராடும் புண்ணிய நதியான தாமிரபரணியையும் இத்தலம் கொண்டுள்ளதால் இத்தலத்திற்கு "சர்வ தீர்த்த புரம்" என்ற பெயர் வழங்கி வருவதாக தலப் புராணம் கூறுகிறது.

சிறப்பு சன்னதிகள்:

நின்ற கோல விநாயகர், மாக் காளை, முக்குறுணி பிள்ளையார், கங்காளநாதர், நெல்லை கோவிந்தர், மான் மற்றும் சிம்மத்தை வாகனமாக கொண்ட மகிஷாசூர மர்த்தினி , கைலாச பர்வத சோமாஸ் கந்தர், தாமிரபரணி அம்மன், பொள்ளாப் பிள்ளையார், சுர தேவர், நெல்லை சுப்பிரமணியர், தாமிர சபை, சகஸ்ர லிங்கம், பெரிய சபாபதி, திருப்பணி ஆறுமுக நயினார், கால பைரவர், திருவிழாக் கால பீமன், அனவரத லிங்கம், மஞ்சனை வடிவுடை அம்மன், ஞானானந்த தட்சிணாமூர்த்தி, கால் மாறி அமர்ந்த தட்சிணாமூர்த்தி, மதில் மேல் சங்கிலி பூதத்தார்.

திருக்கோவில் வரலாறு:

பெருமான் வெட்டுபட்ட வரலாறு:

முற்காலத்தில் மூங்கில் காடாக இருந்த இப் பகுதி, வழியே இராமக் கோன் என்பவர் இப் பகுதியை ஆட்சி செய்த இராமப் பாண்டியன் என்னும் மன்னனின் அரண்மனைக்கு மண் குடங்களில் பால் நிரப்பி தன் தலையில் வைத்து சுமந்த படி செல்வார். அப்படி ஒரு நாள் வழக்கம் போல அவர் பால் குடங்களை சுமந்து மூங்கில் காடு வழியே நடந்து செல்லும் போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் மூங்கில் முளை காலில் தடுக்கிட தலையில் இருந்த பால் நிரம்பிய குடங்கள் கீழே விழுந்து, அதிலிருந்த பால் முழுவதும் மூங்கில் முளையை சுற்றி கொட்டி விடுகிறது. ஆனால் பானைகள் மட்டும் உடையாமல் உருண்டோடி கிடக்கின்றன. அதனை கண்டு வியப்புற்ற இராமக் கோனோ சிந்திய பாலை பானைகளில் அரையும் குறையுமாக நிரப்பி அரண்மனை கொண்டு சேர்த்து விடுகிறான். பின்னர் தொடர்ந்து அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் அதே போல பால் கொண்டு மூங்கில் காடு வழியாக இராமக் கோன் நடந்து வருதலும், மூங்கில் முளை காலில் தடுக்கிட தலையில் இருந்த பால் நிரம்பிய குடங்கள் கீழே விழுந்து, பானை உடையாமல் பால் மட்டும் மண்ணில் கொட்டுதலும், கொட்டிய பாலை பானையில் நிரப்பி அரண்மனையில் சேர்த்தலும் நடைபெறுகிறது. அரண்மனைக்கு இராமக் கோன் தாமதமாக வருவதும், பாலின் அளவு குறைவதையும் கண்ட காவலாளிகள் அது பற்றி மன்னரிடம் புகார் தெரிவித்தார்கள். மன்னன் முன்னிலையில் இராமக் கோன் இனி இது போல தவறு நிகழாது என உறுதி மொழி அளித்திட அவனை எச்சரித்து மன்னர் அனுப்பி வைக்கிறார். இதனால் கோபங் கொண்ட இராமக் கோன் அந்த குறிப்பிட்ட மூங்கில் முளை காலை தடுக்குவதால் தானே நாம் தினசரி பால் குடம் கவிழ்ந்து அவதியுறுகிறோம் எனக் கருதி, தன் வீட்டில் இருந்து கோடாரியை எடுத்து சென்று அந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்த மூங்கில் முளையை வெட்ட, அங்கிருந்து இரத்தம் பீறிட்டு ஆறாக ஓடுகிறது. அதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற இராமக் கோன் அலறியபடியே அரண்மனைக்கு ஓடிச் சென்று மூங்கில் காட்டில் நடந்த சங்கதிகளை மன்னனிடம் தெரிவிக்கிறான். மன்னனும் அது கேட்டு வியப்புற்று தனது பரிவாரங்களுடன் அங்கு சென்று காண, இரத்தம் பீறிட்டு கொண்டே இருந்தது. மேற்கொண்டு அந்த இடத்தை கவனமாக தோண்டிட, பூமிக்குள் இருந்து சுயம்புவாக சிவலிங்கம் வெளி வருகிறது. அதனை கண்டு ஆச்சரியமும், இரத்தம் வருவதை கண்டு பயமும் கொண்ட மன்னன், இறைவனை நோக்கி வணங்கி அறியாமல் செய்து விட்ட பிழையினால் உங்கள் மேனியில் வெட்டுபட்டு விட்டது எங்கள் பிழையை பொறுத்து அருள்புரிய வேண்டும் என மனமுறுகி வேண்டிட , இரத்தம் வருவது நின்று வெட்டுபட்ட கோலத்தில் சிவலிங்கம் காட்சியளிக்கிறது.

வேண்ட வளர்ந்த லிங்கம் திருவிளையாடல்:

மூங்கில் காட்டில் இருந்து வெளி வந்த அந்த லிங்கமானது உருவில் சிறியதாக இருந்ததால், அதனை கோவில் கட்டி பிரதிஷ்டை செய்ய நினைத்த மன்னன் இராமப் பாண்டியன், இறைவனிடம் அந்த லிங்கத் திருமேனியை சற்று பேருருவாக மாற்றியருள விண்ணப்பம் செய்கிறான். அவனுடைய வேண்டுதலை ஏற்ற பெருமான், அந்த சிறிய லிங்கத் திருமேனியை வானுயர்ந்த லிங்கத் திருமேனியாக உயர்த்தி திருவிளையாடல் புரிகிறார். அந்த காட்சியை கண்டு பரவசம் கொண்ட மன்னன் மனதார சிவபெருமானை துதித்து மகிழ்கிறான். பின்னர் வானளவு உயர்ந்து விசுவரூபம் காட்டிய லிங்கத் திருமேனியை பூமியில் உள்ள உயிர்கள் உய்யும் பொருட்டு குறுகிட வேண்டி நின்றான். அந்த வேண்டுகோளையும் ஏற்று பெருமான் குறுகிய லிங்கமாக காட்சியளித்தார். அது கண்டு ஆனந்தக் களிப்புற்ற மன்னன் இராமப் பாண்டியன் அந்த லிங்கத்திற்கு ஆவுடையார் சாத்திட எண்ணம் கொண்டு, கற்றறிந்த வேதியர்கள் பலரை வரவழைத்து முறைப்படி முதல் ஆவுடையார் சாத்திட பெருமானோ உயர்ந்து நின்றார். அது கண்டு வியப்புற்ற மன்னன் மீண்டும் இரண்டாவது ஆவுடையார் சாத்திட பெருமானோ மேலும் நெடிதுயர்ந்து நின்றார். அப்போதும் மன்னன் மனம் தளராமல் மீண்டும் மூன்றாவது ஆவுடையார் சாத்திட, பெருமானோ மேலும் வளர்ந்து நின்றார். இப்படியே மன்னனும் 21 ஆவுடைகள் வரை சாத்திட, பெருமானும் வளர்ந்து கொண்டே வந்தார். இதற்கு மேலும் ஆவுடையார் சாத்திடுவது முறையாகாது என்று அறிந்து கொண்ட மன்னன், பெருமானை நோக்கி சாத்திய ஆவுடை பீடத்தின் அளவுக்கு ஏற்ற உயரத்தில் நிற்க வேண்டி பணிகிறான். ஆனாலும் பெருமான் உயரம் குறுகாமல் நின்று திருவிளையாடல் புரிய, வளரும் திருமேனிக்கு மேலும் ஆவுடை சாத்த முடியாத வருத்தத்தில் தன் உயிரை மாய்க்க துணிந்து வாளை உருவுகிறான் மன்னன். அப்போது அந்த லிங்கத்தில் இருந்து பெருமானின் கை வெளி வந்து அவனை தடுத்தாட்கொள்ள, வானில் இடப வாகனத்தில் பெருமான், அம்மையோடு காட்சியளித்து, உன்னை சோதிக்கவே யாம் திருவிளையாடல் புரிந்தோம் எனக் கூறி தன் முழு உயரத்தையும் கண்ட காரணத்தால், இனி நீ முழுதும் கண்ட இராமப் பாண்டியன் என சிறப்பிக்கப்படுவாய் எனக் கூறி அருள்புரிந்தார்.

இதன் பின் இராமப் பாண்டியன், அந்த லிங்கத்தை சுற்றி பெருங் கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தான் என்று வரலாறு கூறுகிறது.

(தொடர்ச்சி பகுதி-2ல் காண்க)

-திருநெல்வேலிக்காரன்.

Leave a Reply

Your email address will not be published.

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
 • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
 • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
 • போக்குவரத்து காவல்துறை : 103
 • மருத்துவ உதவி எண் : 104
 • தீயணைப்பு துறை : 101
 • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
 • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
 • குழந்தைகள் நலம் : 1098
 • பாலியல் துன்புறுத்தல் : 1091
 • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram