English

Tirunelveli Perathu Selvi Amman Kovil

திருநெல்வேலி பேராத்துச்செல்வி அம்மன் கோவில்

தாமிரபரணி ஆற்றில் கிடைத்த அற்புத செல்வியாம், ஸ்ரீ பேராத்துச்செல்வி அம்மன் திருக்கோவில்.

மூலவர்: பேராத்துச் செல்வி அம்மன்.

தீர்த்தம்: தாமிரபரணி (குட்டத்துறை)

விருட்சம்: வேம்பு.

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் தற்போது கோவில் அமையப் பெற்றுள்ள இந்த பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தார். அவருக்கு அம்பாளுக்கு என ஒரு தனி கோயில் கட்ட வழிபட வேண்டும் என விருப்பம். ஆனால் கோயில் கட்டுமளவிற்கு அவரிடம் வசதி இல்லை. எனவே, அம்பாள் சிலையாவது பிரதிஷ்டை செய்ய வேண்டும் என நினைத்தார். ஒருநாள் இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது கனவில் தோன்றிய அம்மை, தாமிரபரணி நதியின் நடுவே மூன்று அத்திமரங்கள் ஒன்றாக இருக்கும் இடத்தின் அருகில் ஆழமான பகுதி இருப்பதாக சுட்டிக் காட்டி, அந்த இடத்தில் தான் மறைந்து இருப்பதாக கூறினாள். மறுநாள் அவர், அந்த இடத்திற்கு சென்று வலையை வீசியும், ஆற்றுக்குள் நீந்தியும் தேடினார். அப்போது, அம்மையின் அழகிய விக்கிரகம் ஒன்று அவருக்கு கிடைத்தது. அம்பாளின் கருணையினால் கிடைக்கப்பட்ட அந்த விக்கிரகத்தை ஆற்றின் கரையில் ஓலை குடிசை அமைத்து பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்துள்ளார். பின்னர் அம்பாளின் பக்தர்கள் முயற்சியால் தற்போதுள்ள நிலைமைக்கு கோவில் எழுப்பப்பட்டு உள்ளதாக இக் கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.

"பேராத்துச் செல்வி " பெயர்க் காரணம்:

இந்த அம்மையின் விக்ரகம் பெரிய ஆறான தாமிரபரணி ஆற்றில் இருந்து கிடைக்க பெற்றதால் பெரிய ஆற்றுச் செல்வி அம்மன் என்று அழைக்கப் பெற்று பின்னர் மருவி பேராத்துச் செல்வி என வழங்கப் பெற்று, மற்போது பேராச்சி அம்மன் என்று வழங்கி வருகிறது.

இங்கு கருவறையில் அம்மை குத்துக் காலிட்டு அமர்ந்த கோலத்தில், எட்டு கரங்களுடன் சாந்த சுவரூபமாக காட்சித் தருகிறாள்.

திருக்கோவில் அமைப்பு:

தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் உயரமான மேடை மீது, வடக்கு திசை நோக்கி அமையப் பெற்றுள்ள இந்த கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் பலிபீடத்தை தரிசிக்க முடியும். பின்னர் இடது புறம் அரச மரமும், வேப்ப மரமும் இணைந்திருக்க அதன் அடியில் அருளும் சிவ லிங்கத்தையும், நாகர்களையும் தரிசித்து உள்ளே நுழையும் போது இடபக்க சுவற்றில் ஓவியமாக தீட்டப்பட்ட ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மனையும், துவார பாலகிகளையும் கண்டு மகிழ்ந்தவாறே உள்ளே நேராக திரும்பினால் கர்ப்பக் கிரகத்தில் அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ பேராத்துச்செல்வி அம்மனின் அற்புத தரிசனம் கிடைக்கும். அன்னையின் அழகை காண இரண்டு கண்களும், இப்பிறவியும் போதாது என்று நினைக்க தோன்றும் அளவிற்கு மெல்ல சிரிக்கும் தாயாய் காட்சித் தருகிறாள். பின்னர் பிரகாரம் வலம் வருகையில் பரிவார தெய்வங்களான ஸ்ரீ சங்கிலி பூத்தார், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ பேச்சி அம்மன், கன்னி மூலையில் அருளும் விநாயகர், சுயம்பு லிங்கம் ஆகியவற்றையும் தரிசித்து சற்றே மேல் நோக்கினால் அம்மன் கருவறை விமானத்தையும் தரிசித்து அருள் பெறலாம். பின்னர் கொலு மண்டபத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ உற்சவ அம்மனையும் கண்டு வணங்கி வெளியேறினால், அம்மன் கோவிலுக்கு எதிரில் மற்றொரு உயரமான மேடையில் அம்மனுக்கு நேர் எதிராக காட்சிதரும் ஸ்ரீ சுடலை மாட சாமியையும் தரிசிக்க முடியும்.

கோவிலுக்கு வெளியே அம்பாளுக்கு இடது புறத்தில் சலனமற்று ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் அரச மரத்துக்கு அடியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ சக்கர விநாயகர் திருக்கோவிலையும், அதற்கு அடுத்து அமையப் பெற்றுள்ள ஸ்ரீ குட்டத்துறை முருகன் திருக்கோவிலையும் கண்டு தரிசிக்கும் வகையில் இந்த கோவில் அமையப் பெற்றுள்ளது.

திருக்கோவில் சிறப்புகள்:

இக்கோயிலில் அம்பாள் தனது எட்டு கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியபடி, மிகவும் சாந்த சுவரூபமாக சிரித்த முகத்துடன் காட்சிதருவதால் "சாந்த சொரூப காளி" என்று அழைக்கப்படுகிறாள்.

இவ்விடத்தில் தாமிரபரணி நதிக்கு, "உத்திரவாகினி" என்று பெயர். பொதுவாக வடக்கு நோக்கி செல்லும் நதிகள் புண்ணியமானதாக கருதப்படும். இங்கும் தாமிரபரணி நதி வடக்கு நோக்கியே செல்கிறது. எனவே, இங்குள்ள தீர்த்தக் கட்டத்தில் நீராடி அம்பாளை வழிபடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது.

மன்னன் ஒருவன், இந்த தீர்த்தத்தில் நீராடி, குஷ்டநோய் நீங்கப் பெற்றான். எனவே இந்த தல தாமிரபரணி தீர்த்தத்திற்கு, "குட்டதுறை தீர்த்தம்'' என்ற பெயரும் உண்டு.
திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பாளுக்கு செவ்வரளி மாலை சாத்தி, மாவிளக்கு ஏற்றிவேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

திருக்கோவில் திருவிழாக்கள்:

இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதம் சித்திரை மூன்றாம் செவ்வாய்கிழமை கொடை விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

ஆடி மாதத்தில் இரண்டாம் செவ்வாய்கிழமை தொடங்கி கடை செவ்வாய்கிழமை வரை முளைக்கொட்டு உற்சவம் விமரிசையாய் நடைபெறும்.

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழாவும், அதையொட்டி பத்தாம் நாளான விஜயதசமி அன்று நடைபெறும் தசரா திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். தசரா திருவிழா அன்று இந்த அம்மன் சிம்ம வாகன சப்பரத்தில் எழுந்தருளி சுமார் 3-கி.மீ தொலைவில் உள்ள பாளையங்கோட்டை நகரை அடைந்து அங்கு சிம்ம வாகன சப்பரத்தில் எழுந்தருளி காட்சிதரும் பதினோரு அம்மன்களுடன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்து திருக்கோவில் திரும்பி அனைத்து அம்மன்களுடன் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி காண்பாள்.

தை மற்றும் ஆடி மாத செவ்வாய்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். அன்று இப்பகுதில் உள்ளோர் தாமிரபரணியில் நீராடி செவ்வரளிப்பூ மாலை சாத்தி அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரின் மையப்பகுதியில் இந்த திருக்கோவில் அமைய் பெற்றுள்ளதால் பேருந்து வசதி அதிகம் உள்ளது. நகர பேருந்துகளில் ஏறி, வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஐந்து நிமிட நடையில் இந்த கோவிலை அடையலாம்.

-திருநெல்வேலிக்காரன்.

Leave a Reply

Your email address will not be published.

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram