பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள்.
இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் முதலாவதாக சூரியனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் "திருவைகுண்டம்".
108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
மூலவர் பெயர்: | வைகுண்டநாதர் (நின்ற கோலம்). |
உற்சவர் பெயர் : | கள்ளர்பிரான் (சோரநாதர்). |
தாயார்கள்: | வைகுந்தநாயகி, சோரநாதநாயகி. |
விமானம்: | இந்திர விமானம். |
திருக்கோவில் விருட்சம்: | பவள மல்லி. |
தீர்த்தம்: | தாமிரபரணி, கலச தீர்த்தம். |
வைகுண்டநாத பெருமாள் திருக்கோவில் வரலாறு:(History of Sri Vaikundanatha Perumal Temple)
முற்காலத்தில் சத்யலோகத்தில் பிரம்மன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, கோமுகாசூரன் என்ற அரக்கன் அவரிடமிருந்து நான்கு வேதங்களையும் அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் இதனை அறிந்து வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மஹாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி, தன் கையிலிருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி ”பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா” என்று அனுப்பி வைத்தார். அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜெயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.
இதையறிந்த பிரம்மன் தன் கையிலிருந்த கெண்டியை ஓர் பெண்ணாக்கி “ பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா” என்று அனுப்பி வைத்தார். அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி சோலைகள் நிறைந்த, தாமிரபரணி பாயும் இந்த திருவைகுண்டமே தவத்திற்குரிய சிறந்த இடம் என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.
பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி அவருக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசூரனை வதம்செய்து அவனிடமிருந்த நான்கு வேதங்களையும் மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.
பிரம்மன் அகம் மகிழ்ந்து, தனக்காக எப்படி வைகுண்டத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ, அவ்வண்ணமே இங்கு நித்யசேவை சாதித்து அடியவர்களுக்கு அருள்புரிய வேண்டும் என விண்ணப்பம் செய்ய பெருமாளும் இங்கு வைகுண்டநாதராக நித்யசேவை சாதிக்கிறார். இதனால் இத்திருப்பதியும் "திருவைகுண்டம்" என்றே சிறப்பிக்கப்படுகிறது.
பிரம்மன் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை நிறுவி பூசித்ததாலும், இங்கு தாமிரபரணி “ கலச தீர்த்தம்” என்று சிறப்புப்பெற்றது.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Kongaraya Kurichi River Beach - 15 min (8.5 km)
- Thiruvarangapatti kammai - 21 min (9.5 km)
- Reddiarpatti Hill - 41 min (27.4 km)
- Vallanadu black buck wildlife sanctury - 32 min (15.3 km)
- CHINNA VAAIKAL - 16 min (6.1 km)
பாண்டியர் காலத்தில் கோவில் எழும்பிய வரலாறு:
முன்னர் பிரம்மனால் பூஜிக்கப்பட்ட வைகுண்டநாதர் எழுந்தருளியிருந்த சிறிய கோவில், பிற்காலத்தில் சிதிலமடைந்து மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பிற்காலத்தில் இப்பகுதியை பாண்டியர்கள் ஆட்சி செய்த போது, தற்போது கோவில் உள்ஏ பகுதிகளில் அரண்மனைப் பசுக்கள் மேய்வது வழக்கம், இப்பசுக் கூட்டத்தில் ஒரு பசு வைகுண்டபதி புதையுண்ட இடத்திற்கு நேர் மேலே உள்ள துவாரத்தில் தினமும் தனது பாலைச் சொறிந்தது. இதைக் கண்ட பசு மேய்ப்பவர் அரசரிடம் தெரிவித்தார். அரசனும் தன் படை சூழ இங்கு வந்து பூமியை பயபக்தியுடன் தோண்ட, அங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் சாளக்கிராம மாலையணிந்து,சங்கு, சக்கரம் மற்றும் கதை தாங்கி அபயமுத்திரையுடன் காட்சி தந்தார். இதன் பின்னர் தான் பாண்டிய மன்னன் இத்திருக்கோவிலை பிரம்மாண்டமாக கட்டியதாக வரலாறு கூறுகிறது.
கள்ளராக மாறிய பெருமாள் திருவிளையாடல்:
முற்காலத்தில் திருவைகுண்டம் நகரில் காலதூசகன் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் பிறர் பொருளை திருடும் குணம் கொண்டவன் என்றாலும் பெருமாள் மீது பக்தி கொண்டவன். இவன் திருடச்செல்லும் முன், தான் திருடும்பொழுது யாருடைய கண்ணில் படாமலும் யாரிடமும் பிடிபடாலும் இருக்க வேண்டும் என்று திருவைகுண்டநாதரை வேண்டிக்கொள்வான். அதன்படி திருடிய பொருளில் பாதியை பெருமாள் சன்னதியில் சேர்த்துவிட்டு, மீதியிருப்பதை தன் நண்பர்களுக்கும் ஏழை, எளியவர்களுக்கும், கலைஞர்களுக்கும் என தர்மம் செய்துவந்தான். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாக திருவைகுண்ட தலத்தில் கலச தீர்த்தத்தில் நீராடி பெருமாளை தினமும் சேவித்து வாழ்ந்து வந்தான்.
இவ்வாறு இருக்க ஒரு நாள் நள்ளிரவில் மணப்படை அரண்மணையில் பெரும் பொக்கிஷங்களை கொள்ளையடித்து தப்பிவந்தான் காலதூசகன். ஆனால் இவனது சகாக்கள் அரண்மனை காவலாளிகளிடம் பிடிபட்டனர். இவர்களின் மூலம் விபரங்களைத் தெரிந்து கொண்ட அரசன் கால தூசகனை சிறைபிடித்து வர காவலாளிகளுக்கு உத்தரவிட்டான். இதை அறிந்த காலதூசகன் திருவைகுண்டநாதரை சரணடைந்து தம்மிடம் உள்ள பொக்கிஷங்களை கோவில் கைங்கரியத்திற்கே அர்ப்பணித்துவிடுவதாக வேண்டிக்கொண்டான்.
சரணடைபவர்களை காப்பதை தன் சங்கல்பமாகக் கொண்ட பெருமாள், காலதூசகனின் தூய பக்திக்கு செவி சாய்த்து, பெருமாளே காலதூசகன் வேடம்புனைந்து அரசவைக்குச் சென்றார். அரசரும் கள்வர் வேடத்திலிருந்தவரை நோக்கி திருடிய உம்மை பார்க்கும் பொழுது எனக்கு கருணையே ஏற்படுகிறது நீ யார்? எனக் கேட்டார்.
கள்ளராக வந்த பெருமாள் அரசரை நோக்கி, அரசரே உன் தவறை நீ உணரவில்லை அரசாங்கத்தின் செல்வங்கள் யாவும் உம்மாலும் உம்மை சுற்றியுள்ளவர்களாலும் வீணடிக்கப்படுகிறது. பணத்திற்கு நான்கு தாயாதிகள் (பங்காளிகள்) உண்டு. அதாவது தர்மம்,அரசன்,திருடன்,அக்னி ஆகியோராவர். இவர்களில் அரசன் என்பவன் தர்மத்தைக் கடைபிடித்து குடிமக்களைக் காக்கவேண்டும். நீவிர் அவ்வாறு செய்யத்தவறியதால் அதை உமக்கு உணர்த்தவே இத்திருவிளையாடலை நடத்தினோம் என்றும் நான் உலகைக் காக்கும் வைகுந்த பெருமாள் என்றும் கூறி அரசருக்கு காட்சியளித்து ஞானத்தையும் நல்ல புத்தியையும் எடுத்துரைத்தார்.
இவ்வாறு கள்ளனை காத்தருள் புரிந்ததால் திருவைகுண்டபதி, கள்ளபிரான் (சோரநாதன்) என்றும் அழைக்கப்பட்டார். இன்றும் இங்குள்ள உற்சவர் பெருமாள் "கள்ளர்பிரான்" என்றே அழைக்கப்படுகிறார்.
மூலவர் வைகுண்டநாதர்:
கருவறையில் இந்திரவிமானத்தின் கீழ் ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதை ஆகியவை ஏந்தியபடி, அபயமுத்திரை காட்டி கிழக்கு முகமாக காட்சியளிக்கிறார். இவருக்கு தினமும் இங்கு பாலால் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும்.
வைகுந்தநாயகி தாயார்:
இங்கு ஸ்ரீ தேவியின் அம்சமான பெரியபிராட்டியாய் நான்கு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறாள் வைகுந்தநாயகி தாயார். இவளுக்கு பெருமாளின் வலப்புறம் தனிசன்னதி அமையப்பெற்றுள்ளது.
சோரநாதநாயகி தாயார்:
இங்கு பூ தேவியின் அம்சமான பூமிபிராட்டியாய் நான்கு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறாள் சோரநாதநாயகி தாயார். இவளுக்கு பெருமாளின் இடப்புறம் தனிசன்னதி அமையப்பெற்றுள்ளது.
பழமையான சந்தன கருடன்:
பெருமாள் சன்னதியின் முன்மண்டபத்தில் வடக்கு நோக்கியபடி ஒரு சன்னதியில் பழைய கருடவாகனம் உள்ளது. மிகவும் பழைமையான இக்கருடனுக்கு சந்தனம் பூசி காப்பு செய்துள்ளார்கள். இவரை இங்கு தரிசிப்பது சிறப்பு.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
- KA Hotel - 2-star hotel
- Sree Bharani Hotels - 3-star hotel
- Hotel Imperial Regency - 2-star hotel
- SRI RAM HOTEL
- Hotel BlueMoon
உற்சவர் கள்ளர்பிரான் சிறப்பு:
இங்கு உற்சவரான கள்ளப்பிரான், ஸ்ரீ தேவி, பூ தேவி என இருதேவிகளும், இருபுறமிருக்க காட்சியளிக்கிறார். சாமுத்திரிகா லட்சணப்படி செல்வ செழுமை கொண்டவர்கள் சிரித்தால் கன்னத்தில் குழி விழும். அதுபோலவே இங்கு கள்ளர்பிரானின் கன்னத்தில் குழி விழுந்து காணப்படுகிறது. கள்ளர்பிரானை வடிவமைத்த சிற்பி இவரின் அழகில் மயங்கி, கன்னத்தில் செல்லமாக கிள்ளிவிட்டாராம். அதனால் ஏற்பட்ட அக்குழியே நிரந்தரமாக தங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.
நம்மாழ்வார் பாடிய பாலில் திருவைகுண்டம் பற்றிய விளக்கம்:
"புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே"
என்று நம்மாழ்வார் பாடியுள்ளார்.
இதற்குரிய விளக்கம்:
நம்மாழ்வார் தனது பாசசுரத்தில் "புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று" என்று மங்களாசாசனம் செய்துள்ளார். "பசியாக இருக்கும் ஒருவர் வீட்டில் சமையல் முடியும்வரை படுத்திருந்து காத்திருப்பார். பசி அதிகரிக்கும் போது, ஆர்வமிகுதியால் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் மேலும் தாமதமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே நம்மாழ்வாருக்கு அருள்வதற்காக வந்த பெருமாள், அவர் பக்தியில் உயர்நிலை அடையும் வரை முதலில் புளிங்குடியில் கிடந்தும், பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இந்த திருவைகுண்டத்தில் நின்றும் சேவை சாதிக்கின்றார்" என்று வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான், நம்மாழ்வாரின் இந்த பாசுரத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
வைகுண்டநாத பெருமாள் திருக்கோவில் அமைப்பு: (Sri Vaikundanatha Perumal Temple Architecture)
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமையப்பெற்றுள்ள இக்கோவில், ஒன்பது நிலை ராஜகோபுரத்தை கொண்டது.
சுமார் 136 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தின் ஒன்பது நிலைகளும் அழகிய சுதைச்சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரம் தான் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்களின் மிகப்பெரிய கோபுரம் ஆகும்.
இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால், அழகிய விஸ்தாரமான முன் மண்டபத்தில் நடுவே கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் நடுநயமாக பெருமாள் சன்னதியும், நேரெதிரே கருடன் சன்னதியும் உள்ளது.
பெருமாள் சன்னதிக்கு தெற்கே வைகுந்தநாயகி சன்னதியும், வடக்கே சோரநாதநாயகி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.
இதுதவிர கோவிலுக்குள் கிருஷ்ணர், லட்சுமி நரசிம்மர், மணவாள மாமுனிகள், பன்னிரு ஆழ்வார்கள், ராமர் ஆகியோரின் சன்னதியும், வடக்கே பரமபதவாசலும் அமையப்பெற்றுள்ளது.
வெளி பிரகாரத்தில் சுற்றி நந்தவனமும், வடக்கு பிரகாரத்தில் பரமபத வாசலை ஒட்டி மண்டபமும் அமையப்பெற்றுள்ளது.
முன்மண்டபத்தின் வடக்கே தென்திசை நோக்கியபடி அமையப்பெற்றுள்ள "திருவேங்கடமுடையான்" சன்னதி சிறப்புப்பெற்றது. இங்கு தான் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக பல சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.
இச்சன்னதியில் நாயக்கர் காலத்தை சார்ந்த அற்புதமான கற்சிற்பங்கள் உள்ளன. அவை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. குறிப்பாக ஆதிசேஷனை குடையாகக் கொண்டு அமர்ந்த கோலத்தில் உபய நாச்சியார்களுடன் காட்சி தரும் வைகுண்ட பெருமாள் சிற்பம், மூன்று உலகங்களும் தன்னுள் அடக்கம் என்று உணர்த்தும் அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த பெருமாள் சிற்பம், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை உணர்த்தும் இராமர், அனுமன் சிற்பம், கணவனின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், பலவித கோலங்களில் வானரங்கள் என ஆயிரம் கதை சொல்லும் சிற்பங்கள் அனைத்தும் தத்ரூபமாக அமையப்பெற்றுள்ளது.
வைகுண்டநாத பெருமாள் திருக்கோவில் சிறப்புக்கள்: (Specialties of Sri Vaikundanatha Perumal Temple)
இந்த தலத்தை நம்மாழ்வார் திருவாய்மொழியின் 3571 மற்றும் 3575 ஆகிய பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இங்கு சித்திரை மாதம் ஆறாம் நாளிலும், ஐப்பசி மாதம் ஆறாம் நாளிலும், கருவறையிலுள்ள வைகுண்டநாதர் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பம்சம்.
ஆக நவதிருப்பதிகளுள் சூரியன் தலமாக விளங்கும் இங்கு பெருமாளை, சூரியனை வழிபடுவது கூடுதல் சிறப்பு.
இத்தலத்தில் பல கல்வெட்டுக்கள் உள்ளன, அதில் ஒரு கல்வெட்டில் திருவரங்கப்பெருமான் பல்லவராயர் என்பவர் தான் இங்கு வைகுந்தநாயகி தாயாரை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறது. மேலும் இக்கல்வெட்டுப்படி இங்குள்ள பெருமாளின் திருநாமம்., "திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளபிரான்" என்று சிறப்பித்து கூறுகிறது.
மற்ற திருக்கோவில்களில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாள், இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க நின்றகோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு.
கி.பி.1801ம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட போது இத்திருக்கோயிலை கோட்டையாக பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அக்காலத்தில் இத்தென்பாண்டி நாட்டின் வைணவ தலங்கள் அனைத்தும், இத்திருவைகுண்டம் கோவிலை மையமாக வைத்தே நிர்வகிக்கப்பட்டுள்ளது.
வைகுண்டநாத பெருமாள் முக்கிய திருவிழாக்கள்: (Festivals of Sri Vaikundanatha Perumal Temple)
இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும்.
இந்த திருவிழாவின் ஐந்தாம் நாள் காலை, நத்தம் விஜயாசன பெருமாள், திருப்புளிங்குடி காய்சினவேந்தன், ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வார் மற்றும் பொலிந்துநின்றபிரான் பல்லக்கில் எழுந்தருளி திருவைகுண்டம் வருவார்கள்.
நம்மாழ்வார் இங்கு எழுந்தருளி கள்ளர்பிரானை மங்களாசாசனம் செய்தருள, இரவில் அன்ன வாகனத்தில் நம்மாழ்வார் எழுந்தருள, கருடவாகனத்தில் நான்கு கோவில் பெருமாள்களும் எழுந்தருளி காட்சியளிப்பார்கள்.
சித்திரை திருவிழாவில் இங்கு தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும்.
வைகாசியில் ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள், இத்தல கள்ளர்பிரான் ஆழ்வார்திருநகரி எழுந்தருளி கருடசேவை காட்சியருளுகிறார்.
இதுதவிர புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடைபெறும் முன்பத்து, பின்பத்து திருவிழாக்கள் ஆகியவையும் இங்கு சிறப்புப்பெற்றதாகும்.
அமைவிடம்: திருநெல்வேலி மாநகரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 24-கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருநெல்வேலி புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் திருவைகுண்டம் வழியாக செல்லும்.