உலகின் தொன்மையான நடராஜர் அருளும் செப்பறை
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் நதியின் வடகரையில் அமையப்பெற்றுள்ள அழகிய கிராமம் ராஜவல்லிபுரம். ராஜவல்லிபுரம் ஊரிலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது செப்பறை ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோவில்.
சுவாமி பெயர்: | நெல்லையப்பர். |
அம்மை பெயர்: | காந்திமதி. |
திருக்கோவில் விருட்சம்: | வில்வ மரம். |
தீர்த்தம்: | தாமிரபரணியின் புஷாபதன தீர்த்தக்கட்டம். |
சிறப்பு சன்னதி: | செப்பறை அம்பலம் அழகியகூத்தர் சன்னதி. |
செப்பறை அழகியகூத்தர் திருக்கோவில் வரலாறு(History of Chepparai Azhagiya koothar Thirukovil):
முற்காலத்தில் தற்போதைய கோவில் அமையப்பெற்றுள்ள இப்பகுதியை மணப்படைவீடு என்னும் நகரை தலைநகராகக் கொண்டு ராமபாண்டியன் என்னும் மன்னனர் ஆட்சி செய்து வந்தார். ராமபாண்டிய மன்னர் திருநெல்வேலியில் உறையும் சுவாமி நெல்லையப்பர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அதன் காரணமாக தினமும் திருநெல்வேலி சென்று சுவாமி நெல்லையப்பரை தரிசித்த பிறகே உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதனால் அவரால் ஆற்றைக் கடந்து திருநெல்வேலிக்கு செல்லமுடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் மனம்வருந்தி உணவருந்தாமலே இருந்தார். அன்று இரவில் மன்னரின் கனவில் சுவாமி நெல்லையப்பர் தோன்றி, "இனிமேல் உன் மாளிகைக்கு அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன் என கூறியதுடன், சிதம்பரத்திலிருந்து சிற்பி ஒருவன் தனது நடனம் புரியும் வடிவமுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகே குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும்.
அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு", என திருவாய் மலர்ந்தருளினார். அதன்படியே, சிற்பி ஒருவர் வடதிசையிலிருந்து நடராஜரின் விக்ரகம் ஒன்றை சுமந்து வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை மிகவும் கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. எனவே சற்று நேரம் இளைப்பாறும் பொருட்டு, அச்சிலையை அவர் ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். ராமபாண்டியன் அதிர்ச்சியடைந்து சிலையை தேடிச்சென்றார். அப்பொழுது ஓரிடத்தில் (தற்பொழுது கோவில் அமையபெற்றுள்ள இடத்தில்) சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருப்பதனையும், . அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று கொண்டிருப்பதையும் கண்டார். உடனே ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது சுவாமி உத்தரவிட்டபடியே பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் செப்பு தகடுகளால் வேயப்பட்ட நடன சபை ஒன்றை உருவாக்கி தனி சன்னதி அமைத்தார். இவர் நெல்லையப்பரின் மீது கொண்டிருந்த பக்தியால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கு ஸ்ரீ நெல்லையப்பர் என்றும், அம்மைக்கு ஸ்ரீ காந்திமதி என்றும் திருநெல்வேலி திருக்கோவிலின் பெயரையே சூட்டிமகிழ்ந்தார். எனவே இது திருநெல்வேலி கோவிலின் சாரப்பதி ஆகும்.
இங்கு அருள்புரியும் நடராஜரின் திருநாமம் ஸ்ரீ அழகியகூத்தர்.
உலகின் முதல் நடராஜர் வரலாறு:
முன்னர் சிதம்பரத்தை ஆட்சி செய்த சிங்கவர்மன் என்னும் மன்னன், நமச்சிவாயமூர்த்தி என்ற சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை உருவாக்க ஆணையிட்டான். அதன்படி சிற்பியும் மிக நேர்த்தியாக நடராஜர் சிலையை செய்துமுடித்தார். அந்த நடராஜர் சிலை தாமிரத்தால் செய்யப்பட்டு பிரமிக்கவைக்கும் அழகில் தோன்றினாலும், அதற்கு பதிலாக தங்கத்தினால் சிலையைச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனக் கருதி தங்கத்தால் மற்றொரு நடராஜர் சிலையைச் செய்ய ஆணையிட்டான். சிற்பி அதனையும் சிறப்பாக செய்து முடித்தார். ஆனால் மன்னன் வந்து காணும்போது அந்த தங்க நடராஜர் சிலை மீண்டும் தாமிரச் சிலையாகவே மாறி காட்சியளித்தது.
இதனால் வருந்திய மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான், “நான் உன் கண்களுக்கு மட்டுமே தங்கமாகத் தெரிவேன். பிறர் கண்ளுக்குத் தாமிரமாகவே தெரிவேன்’’ என்று கூறியருளினார். இதனால், மகிழ்ந்த மன்னர் அந்த இரண்டாவதாக செய்யப்பட்ட நடராஜரையே சிதம்பரத்தில் நிறுவினான்.
முதலில் செய்யப்பட்ட தாமிரச்சிலையை வைத்திருந்த சிற்பியின் கனவில் தோன்றிய சிவபெருமான் அந்தச் சிலையை எடுத்துக்கொண்டு தென்னாட்டுக்குச் செல்லுமாறு அவனுக்கு ஆணையிட்டார். அதன்படி அவன் கொண்டுவந்த முதல் தாமிர நடராஜர் சிலையே பின்னர் இங்கு செப்பறையில் அழகியகூத்தராக நிறுவப்பட்டது.
சுவாமி நெல்லையப்பர்:
கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித்தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து விசேஷ காலங்களில் அலங்காரம் செய்யப்படும்.
காந்திமதியம்மை:
தெற்கு நோக்கிய கருவறையில் ஒரு கரத்தில் மலர் தாங்கி, மற்றோரு கரத்தை தொங்கவிட்டு, சற்றே இடைநெளித்து நின்ற கோலத்தில், புன்சிரிப்பு மிளிர காட்சித்தருகிறாள் அம்மை காந்திமதி.
செப்பறை அழகியகூத்தர் கோவில்(Chepparai Azhagiyakoothar Thirukovil):
செப்பு(செம்பு) தகடுகளால் வேயப்பட்டு அழகுடன் காட்சியளிக்கும் தாமிரசபைக்குள் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார் சிவகாமி அம்மை உடனாய அழகியகூத்தர். இவர் பெயருக்கு ஏற்றாற்போல கொள்ளை அழகுடன் திருநடனக்கோலம் காட்டியருளுகிறார்.
செப்பறை அழகியகூத்தர் திருக்கோவில் பூஜை நேரம்
( Chepparai Azhagiya koothar Temple Pooja Timings)
காலை 7.30 மணி முதல் 10:30 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை
செப்பறை அழகியகூத்தர் திருக்கோவில் அமைப்பு(Chepparai Azhagiyakoothar Thirukovil Structure):
திருக்கோவில் வாயிலை கடந்து உள்ளே சென்றால் அதிகார நந்தி மற்றும் சூரியபகவான் சன்னதி உள்ளது. அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியோரை தரிசிக்கலாம். பின்னர் உள்ளே சென்றால் நேராக கிழக்கு பார்த்த கருவறை.
கருவறைக்கு வெளியே ஒரு புறம் விநாயகரும், மறுபுறம் சுப்பிரமணியரும் துவாரபாலகர்களோடு இருக்க, உள்ளே கிழக்கு நோக்கி காட்சித்தருகிறார் இறைவன் ஸ்ரீ நெல்லையப்பர். இவரை தரிசித்து சற்றே திரும்பினால், இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சித்தரும் அன்னை ஸ்ரீ காந்திமதியையும் தரிசிக்கலாம்.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Naranammalpuram Riverview - 14min(7km)
- Chitraaru river bridge - 17min(9.3km)
- Thenkalam water reservoir - 23min(11.6km)
- Namma Nellai Selfie Spot - 25min(11.6km)
- Murappanadu Dam Thamirabharani river - 29min (29.3km)
இறைவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் மத்தியில் உள்ள செப்பறை நடன சபையில் அன்னை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேதராய் ஸ்ரீ அழகிய கூத்தர் காட்சித்தருகிறார். இவரையும் வணங்கி பிரகார வலம் வந்தால், பரிவார மூர்த்திகளான மெய்கண்டார், சுரதேவர், கன்னி விநாயகர், குரு பகவான், விசுவநாதர்-விசாலாட்சு, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், ஸ்ரீ சந்தன சபாபதி, பைரவர் ஆகியோரையும் தரிசத்து அருள்பெறலாம்.
செப்பறை அழகியகூத்தர் திருக்கோவில் சிறப்புகள்(Chepparai Azhagiyakoothar Temple Specialities):
இக்கோவிலின் தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தமாக தாமிரபரணியும் விளங்குகிறது.
சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு தான் நடராஜர் பிரதானமாக அருள்பாலிக்கிறார். இங்கு இவருக்கு தனித்தேர் இருக்கிறது.
முற்காலத்தில் இங்கு வாழ்ந்த வீரபாண்டியன் என்ற மன்னன் ராமபாண்டியனின் எல்கைக்குட்பட்ட சிற்றரசன். இவன் செப்பறையில் இருந்த நடராஜர் சிலையை கண்டு அதன் அழகில் மயங்கியிருந்தான். அதேபோல தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என சிற்பியிடம் கூறினான். சிற்பியும் சிலை செய்யும் பணியை துவக்கினார். இறுதியில் சிலை செய்யும் பணியும் முடிந்தது. சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான் மன்னன் வீரபாண்டியன். இதே போல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியை கொன்றுவிடும்படி தன் வீரர்களுக்கு உத்தரவிட்டான். ஆனால் வீரர்களோ சிற்பி மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கடும் கோபம் கொண்டான். சிற்பியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளை துண்டித்தான். இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் தற்போதும் உள்ளன.இதன் பிறகு சிற்பிக்கு மரக்கை பொருத்தப்பட்டது. கலையின் மேல் ஆர்வமுடைய அந்தச்சிற்பி, மரக்கைகளின் உதவியுடன், முன்னை விட அழகாக மற்றொரு நடராஜர் சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினார். அவ்வாறு கிள்ளிய வடுவுடன் கூடிய சிலையை இன்றும் கருவேலங்குளம் கோயிலில் தரிசிக்கலாம்.
இவ்வாறு ஒரே சிற்பி செய்த ஐந்து நடராஜர் அருளும் தலங்கள், பஞ்சபடிம தலங்களாக சிறப்பிக்கப்படுகின்றன.
அவைகள்.,
- சிதம்பரம்
- செப்பறை
- கரிசூழ்ந்தமங்கலம்
- கருவேலங்குளம்
- கட்டாரிமங்கலம்.
ஆக பஞ்சபடிம தலங்களுள் சிறப்பு பெற்றதாக இந்த செப்பறை விளங்குகிறது.
இங்குள்ள அழகியகூத்தப்பெருமானுக்கு, சிதம்பரத்தை போலவே நிறைய விலைமதிப்புள்ள ஆபரணங்கள் இருக்கின்றன. விழாக்காலங்களில் இன்றும் கூத்தருக்கு அனைத்து ஆபரணங்களும் அணிவிக்கப்படுகின்றன.
இவருக்கு நடைபெறும் ஆனி உத்திரம் மற்றும் மார்கழி திருவாதிரை அபிஷேகத்திற்கு வருடந்தோறும் பழனியில் இருந்து பஞ்சாமிர்தம் வரவழைக்கப்படுகிறது.
இங்கு இவருக்கு நடைபெறும் தாண்டவ தீபாராதனை பிரசித்தி பெற்றது. விழாக்காலங்களில் மண்டபத்தில் எழுந்தருளும் கூத்தப்பெருமானுக்கு சோடஷ தீபாராதனையை, குறிப்பிட்ட ராகத்தில் வாசிக்கப்படும் தவில், நாதஸ்வரத்தின் இசைக்கு ஏற்ப ஏற்றி, இறக்கி காட்டியருளுவார்கள்.
தற்போது உள்ள கோவில் புதிதாக கட்டப்பட்டது என்றும் அதற்கு முந்தைய கோவில் தாமிரபரணி ஆற்றை ஒட்டி இருந்ததாகவும், ஒரு வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது அக்கோவில் சிதிலமடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்த போது இங்கிருந்த பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாம். அப்படி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் செப்பறை கோவிலுக்குரிய பெரிய சப்பரம் ஒன்றும், பூத வாகனம் ஒன்றும் அடங்கும். அந்த பெரியசப்பரம் தற்போது முறப்பநாடு சிவன் கோவிலிலும், பூத வாகனம் தற்போது திருவைகுண்டம் சிவன் கோவிலிலும் உள்ளதாம்.
செப்பறை மகாத்மியம் என்னும் வடமொழியில் இயற்றப்பட்ட நூல் ஒன்று இத்தலத்தின் சிறப்புகளை விவரிக்கிறது.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
- Hotel Sree Annamalaiyar Park - 3-star
- TVK Regency - 2-star
- RR INN Group Of Hotels - 3-star
- OYO 65612 Hotel NPK Grand
செப்பறை அழகியகூத்தர் கோவில் முக்கிய திருவிழாக்கள்(Important festivals in Chepparai Azhagiyakoothar Temple):
இங்கு சிதம்பரம் திருக்கோவில் போன்றே ஆனி திருமஞ்சன திருவிழா மற்றும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாக்களில், திருவாதிரைக்கு முதல் நாள் நடராஜ பெருமான் திருத்தேரில் உலா வருவதை காண கண்கள் கோடி வேண்டும். சிதம்பரம் தலத்திற்கு அடுத்தபடியாக இங்கு தான் நடராஜ பெருமானுக்கு என தனித்தேர் உள்ளது சிறப்பம்சமாகும்.
திருவாதிரை திருநாள் அன்று இங்கு அதிகாலை நடைபெறும் பசு தீபாராதனை சிறப்பு வாய்ந்தது. இதற்காக பக்தர்கள் பலர் முதல் நாளே இங்கு வந்து தங்கி, அதிகாலையில் தாமிரபரணி நதியில் நீராடி தரிசிப்பார்கள். பின்னர் உச்சிக்காலத்தில் நடராஜருக்கு நடன தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெறும். அப்பொழுது நடராஜ பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகையில், திருவெம்பாவை பாடல் பாட பட்டு தீபாராதனை நடைபெறும்.
இதுதவிர நடராஜருக்குரிய வருடாந்திர ஆறு அபிஷேக நாட்கள், மாத திருவாதிரை நாட்களில் இங்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
இங்கு மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று அழகியகூத்தப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.
அமைவிடம்:
திருநெல்வேலி மாநகரிலிருந்து வடகிழக்கே சுமார் 18கி.மீ தொலைவில் உள்ளது ராஜவல்லிபுரம் கிராமம். அங்கிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது செப்பறை.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து ராஜவல்லிபுரம் மார்க்கமாக செல்லும் நகர பேருந்தில் சென்று ராஜவல்லிபுரத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். திருவாதிரை திருநாள் அன்று மட்டும் சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து செப்பரைக்கே இயக்கப்படும்.