Logo of Tirunelveli Today
English

Ambasamudram Kasipanathar Temple(அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில்)

Well decorated statue of Ambasamudram Kasipanathar Temple Natarajar.

அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில்(Ambasamudram Kasipanathar Temple)

தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில் அமையப் பெற்றுள்ளது அம்பாசமுத்திரம் மரகதாம்பிகை உடனுறை காசிப நாதர் திருக்கோவில். இக் கோவில் எரிச்சாளுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

சுவாமி பெயர்: காசிப நாதர்.

அம்மை பெயர்:  மரகதாம்பிகை.

திருக்கோவில் விருட்சம்: நெல்லி மரம்.

தீர்த்தங்கள்: தாமிரபரணியில் காசிப தீர்த்தம், ருத்ர தீர்த்தம், கோகில தீர்த்தம், புழுமாறி தீர்த்தம்.

சிறப்பு சன்னதிகள்: எரித்தாண்டார், மகா விஷ்ணு.

Picture of Ambasamudram Kasipanathar Temple and Maragathaambikai.

அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில் வரலாறு:(Ambasamudram Kasipanathar Temple History)

முற்காலத்தில்  காசிப முனிவர் தாமிரபரணி நதிக்கரைக்கு தல யாத்திரை வந்த போது வெண் மணலால் சிவ லிங்கம் பிடித்து சிவ பூஜை  செய்தார். அவர் பிடித்து வைத்த சிவ லிங்கமே இங்கு அவர் பெயரால் காசிப நாதர் என்ற பெயரில் காட்சித் தருவதாக ஒரு வரலாறும், காசிப முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் சிவபெருமானை வேண்டி யாகம் ஒன்று செய்ததாகவும், அந்த யாகத்தின் பயனாக சிவபெருமான் காட்சியளிக்க, தான் பூஜிக்க ஒரு சிவ லிங்கம் வேண்டும் என காசிபர் கேட்க, அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி தானே ஒரு சிவ லிங்கமாக மாறி காட்சியளித்தார் சிவபெருமான். அந்த லிங்கத்தை காசிப முனிவர் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அவர் பெயரால் அந்த லிங்கம் காசிப நாதர் என்று அழைக்கப்பட்டதாகவும் மற்றொரு வரலாறும் கூறப்படுகிறது.

The compound wall of Ambasamudram Kasipanathar Temple

எரித்தாண்டார் சன்னதி வரலாறு:

முற்காலத்தில் சிவசர்மா என்ற அந்தணன் தல யாத்திரையாக இப் பகுதிக்கு வருகின்றார். அப்போது இக் கோவிலில் அர்ச்சகராக இருந்த சாந்தவேதன் என்பவருடன் நட்பு கொண்டு பழகுகிறார். தான் பொதிகை மலை சென்று அகத்தியரை தரிசிக்க செல்வதாகவும், தான் வரும் வரை தன்னிடம் இருந்த விலை உயர்ந்த பொக்கிஷங்கள் நிரம்பிய கைத்தடி ஒன்றை கொடுத்து பாதுகாத்து வரும்படி கூறிவிட்டு சென்று விடுகிறார். பல காலம் அகத்தியரை தேடி பொதிகை மலையில் அலைந்து திரிந்து, மன உறுதியோடு பொறுமையாக காத்திருந்து அகத்தியரின் தரிசனம் கண்ட பின்னர் திரும்பி அம்பை நகருக்கு வருகிறார். திரும்பி வந்த சிவசர்மா நேராக காசிப நாதர் கோவிலுக்கு சென்று தன் நண்பராகிய சாந்தவேதனை சந்தித்து தான் ஒப்படைத்த பொக்கிஷங்கள் நிரம்பிய தடியை திரும்ப கேட்க, சாந்தவேதரோ தாங்கள் யாரென்றே எனக்கு தெரியவில்லை, என்னிடம் நீங்கள் எந்த பொருளையும் திருப்பி தரவும் இல்லை எனக் கூறி சிவசர்மாவை ஏமாற்றுகிறார். இந்த விஷயம் ஊர் பெரியோர்களிடம் முறையிடப்பட, அவர்கள் சாந்தவேதனை காசிப நாதர் கோவிலுக்குள் உள்ள புளிய மரத்தடியில் சத்தியம் செய்ய கூறுகிறார்கள். அவரும் கொஞ்சம் கூட பயமின்றி அந்த புளிய மரத்தடியில் பொய் சத்தியம் செய்திட, சிவபெருமான் அந்த புளிய மரத்தோடு சேர்த்து சாந்தவேதனை எரித்து விடுகிறார். பின்னர் சிவசர்மாவின் வேண்டுதலை ஏற்று சாந்தவேதனை உயிர்பித்தருள, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்ட சாந்தவேதன், சிவசர்மாவின் பொக்கிஷங்களை அவரிடம் திருப்பி ஒப்படைத்தாக கூறப்படுகிறது.

இதே வரலாற்றை கன்னடியன் கால்வாய் உண்டான வரலாற்றோடு சேர்த்து வேறு விதமாகவும் கூறுகிறார்கள். அதிலும் பொய் சத்தியம் செய்த சாந்தவேதனை சிவபெருமான் புளிய மரத்தோடு எரித்ததாகவே கூறப்படுகிறது. இவ்வாறு எரித்து பின் உயிர்பித்து ஆட்கொண்டதால் அவருக்கு எரித்தாண்டார், எரிச்சாளுடையார் என்ற பெயர்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Golden idols of urshavar with his two wives decorated with garland in Ambasamudram Kasipanathar Kovil Temple

சுவாமி காசிப நாதர்:

கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத் திருமேனியாக காட்சித் தருகிறார் காசிப நாத சுவாமி. இவருக்கு திருப்போத்துடைய நாயனார், திருப்போத்துடைய மகா தேவர், திருப்போத்துடைய பட்டாரகர், காசிநாதர் ஆகிய வேறு பெயர்களும் உண்டு.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

அம்மை மரகதாம்பிகை:

தெற்கு நோக்கிய தனிக் கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்க விட்டபடியும், நெற்றியில் ஒளி வீசும் மாணிக்க பட்டையும், மூக்கில் முக்குத்தி மற்றும் புல்லாக்கு மின்னவும், புன்முறுவல் பூத்த படி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள் அம்மை மரகதாம்பிகை.

Ambasamudram Kasipanathar Temple amman decorated with santhanam.

சுவாமி எரித்தாட்கொண்டார்:

மேலப் பிரகாரத்தின் மேற்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித் தருகிறார் எரித்தாண்டார். இவரே காசிப முனிவரின் யாக குண்டத்தில் இருந்து தோன்றிய லிங்கம் என கூறப்படுகிறது.

சுவாமி மகா விஷ்ணு:

சுவாமி எரித்தாண்டார் உக்கிர சொரூபமாக காட்சியளித்ததால், அவரின்  உக்கிரத்தை தணிக்கும் விதமாக அவருக்கு நேர் எதிரே மகா விஷ்ணு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இங்கு சுவாமியின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அம்மை தன் அண்ணனான மகா விஷ்ணுவிடம் வேண்டுகோள் செய்ய, மகா விஷ்ணு, சிவபெருமானை சாந்தப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Idol of Ambasamudram Kasipanathar Kovil Natarajar.

அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில் அமைப்பு:(Ambasamudram Kasipanathar temple Architecture)

தாமிரபரணி நதிக்கரையின் வடக்கு கரையில் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமையப் பெற்றுள்ளது இந்த காசிப நாதர் திருக்கோவில்.கிழக்கு மொட்டை கோபுர வாசல் வழியே இத் திருக்கோவிலுக்குள் நுழைந்தால் உள்ளே கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை அமையப் பெற்றுள்ளது.

சுவாமி சன்னதியின் நுழைவாயிலின் ஒரு புறம் விநாயகரும், மற்றொரு புறம் சுப்பிரமணியரும் காட்சியளிக்க அவர்களை வணங்கி உள்ளே சென்றால் கருவறையில் காசிப நாதர் காட்சியளிக்கிறார்.அவருக்கு முன்புறம் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் மரகதாம்பிகை காட்சியளிக்கிறாள்.

திருக்கோவில் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக நால்வர், அறுபத்து மூவர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், எரித்தாண்டார், மகா விஷ்ணு, ஆறுமுக நயினார், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், புனுகு சபாபதி, நடராஜர் - சிவகாமி அம்மை, நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோர் தனி சன்னதியில் காட்சித் தருகிறார்கள்.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில் சிறப்புக்கள்(Ambasamudram Kasipanathar Kovil Specialities):

வடக்கே கங்கை ஆற்றின் கரையில் காசி விசுவநாதர் திருக்கோவில் இருப்பதை போல இங்கு தெற்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் காசிப நாதர் திருக்கோவில் அமையப் பெற்றுள்ளது.

இத் திருக்கோவில் கல்வெட்டில் முள்ளி நாட்டு ராஜ ராஜ சதுர்வேதி மங்கலத்து இளங்கோக்குடி என இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறந்து விளங்கி வருகிறது.

இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட திருவாட்சியுடன் கூடிய புனுகு சபாபதி, மணி மண்டப தூண்கள், வசந்த மண்டப தூண்கள் மற்றும் சிற்பங்கள், மயில் மீது அமர்ந்திருக்கும் ஆறுமுக நயினார் ஆகியவை கல் சிற்ப வேலைப்பாடுகளின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அம்பாசமுத்திரம் காசிபநாதர் முக்கிய திருவிழாக்கள் (Ambasamudram Kasipanathar Kovil Temple Festivals)

இங்கு பங்குனி மாதம் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.

Ambasamudram Kasipanathar Temple Sivalingam is decorated well with flowers.

இந்த திருவிழாவிற்காக காசிப நாதர் சன்னதியில் கொடியேற்றமாகி, அம்பை ஊருக்குள் இருக்கும் அம்மையப்பர் திருக்கோவிலுக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருள திருவிழா மற்றும் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

இந்த பங்குனி திருவிழாவின் எட்டாம் திருநாள் இத் தல நடராஜர் எழுந்தருளி, அகத்திய பெருமானுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் விமரிசையாக நடைபெறும்.

பங்குனி கடை நாள் தேரோட்டம் முடிந்து, சித்திரை முதல் நாள் விசு தீர்த்தவாரி விமரிசையாக நடைபெறும்.

இவை தவிர இங்கு தைப் பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆனி உத்திரம், கந்தர் சஷ்டி, மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்களும் சிறப்பாக நடைபெறும்.

அமைவிடம் :(Ambasamudram Kasipanathar Driving Directions)

திருநெல்வேலி - பாபநாசம் சாலை வழியில் நெல்லை மாநகரில் இருந்து சுமார் 40 கி. மீ தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கு ஊரின் முகப்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ளது காசிபநாத சுவாமி திருக்கோவில்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 2hr 2min(89.4km)
  • Tirunelveli - 1hr 1min(36.4km)
  • Thiruchendur - 2hr 38min(107km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ரேவதி சரவணகுமார்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram