கன்னடியன் கால்வாய் வரலாறு

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, சுமார் கிலோமீட்டர் வரை பயணித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னக்காயல் என்னும் ஊரின் அருகே கடலில் சங்கமம் ஆகிறது. வற்றாது பாயும் ஜீவ நதி என்ற சிறப்பை பெற்ற தாமிரபரணி ஆறு தனது தண்ணீர் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை செழிப்படைய செய்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், தண்ணீரை சேமிக்கவும் இந்த தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பல்வேறு பெரிய அணைகள் மற்றும் சிறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீரை பிரித்து கொண்டு செல்ல பல்வேறு கால்வாய்களும் வெட்டப்பட்டு உள்ளன. அவற்றுள் முக்கியமான கால்வாயாக திகழும் கன்னடியன் கால்வாய் ஒரு சுவாரசியமான, ஆன்மீகம் தழுவிய வரலாற்றை தனது பின்னணியில் கொண்டுள்ளது. இந்த கன்னடியன் கால்வாயின் அந்த சுவாரசியமான வரலாற்றை பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. பல வைத்தியர்களை அழைத்து வந்து மருத்துவம் செய்தும் அவருடைய வயிற்று வலி தீரவில்லை. இதனால் வேதனையில் துடித்துக் கொண்டிருந்த மன்னரைக் காண ஒரு ஜோதிடர் வருகிறார். அந்த ஜோதிடர் மன்னனின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவனுடைய முன் ஜென்ம பயனால் தான் இந்த வயிற்று வலி உண்டாகி வேதனைப் படுத்துகிறது என்று கூறுகிறார். அதற்குத் தகுந்த பரிகாரங்கள் கூறும்படி மன்னன் ஜோதிடரிடம் கேட்க, அதற்கு ஜோதிடர் உன் உருவம் போன்ற அமைப்பில் எள்ளு தானியத்தால் ஒரு பொம்மை செய்து அதனை அந்தணர் ஒருவருக்கு தானம் செய்தால் உன்னுடைய முன் ஜென்ம பலன் அவருக்குச் சென்றுவிடும் என்று கூறுகிறார். மன்னனும் ஜோதிடர் கூறியபடியே எள்ளு தானியத்தால் தனது உருவ அமைப்பில் மன்னனும் ஜோதிடர் கூறியபடியே எள்ளு தானியத்தால் தனது உருவ அமைப்பில் ஒரு பொம்மையைச் செய்து அதனை தானம் அளிக்கத் தகுந்த அந்தணரைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அதனை தானம் பெற்றால் மன்னனுடைய முன் வினைப் பயனால் அவனைச் சேர்ந்த பாவமும் தங்களை சேர்ந்துவிடும் எனப் பயந்து யாரும் தானம் பெற முன் வரவில்லை. இதனால் மன்னன் தன்னிடம் தானம் பெறும் அந்தணருக்குப் பல பொன்னும் பொருளும் நிறைந்த முடிப்பை பரிசாகத் தருவதாக கூறி அறிவிப்பு செய்தான். இருந்தும் எந்த அந்தணர்களும் அவனிடம் தானம் பெற முன் வரவில்லை. இந்நிலையில் இது பற்றி அறிந்த கன்னட பிரம்மச்சாரி அந்தணன் ஒருவன், கேரள அரசனை சந்தித்து தான் அந்த தானத்தை பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறான். இதனால் மனம் மகிழ்ந்த அந்த மன்னன், அந்தணரை அழைத்து வந்து மரியாதை செய்கிறான். அந்தணர் அந்த உருவ பொம்மையைப் பெற தயாராகும் பொது ஒரு அதிசய நிகழ்வு நடைபெறுகிறது. அந்தப் பொம்மை தன்னுடைய வலது கரத்தை உயர்த்தி சுண்டு விரல், கட்டை விரல் இரண்டையும் மடித்து மற்ற மூன்று விரல்களை அந்தணனை நோக்கி நீட்டுகிறது. உடனே அந்தப் பிரம்மச்சாரி அந்தணன் அந்தப் பொம்மையை நோக்கி அதெல்லாம் முடியாது எனக் கூறுகிறான். ஆனாலும் அந்தப் பொம்மை மேலும் மோதிர விரலையும் சேர்த்து மடக்கி இப்போது இரண்டு விரல்களை அந்தணனை நோக்கி நீட்டுகிறது. அதற்கும் அந்த அந்தணன் முடியாது எனக் கூறிவிடவே, மீண்டும் அந்தப் பொம்மை ஒரு விரலை மட்டும் நீட்டிக்காட்டுகிறது. அப்போது அந்த அந்தணன் சரி என்று கூறுகிறான்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த கேரளா மன்னனும், அரச சபையில் இருந்தோரும் ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்க, மன்னர் அந்த அந்தணரிடமே காரணத்தைக் கேட்கிறார். அதற்கு அந்தணர், உனக்கு என்னுடைய மந்திரத்தில் எவ்வளவு பலன் கொடுத்தால் நீ என்னை பாதிக்காமல் போவாய் என அந்த பாவத்தைச் சுமக்கும் பொம்மையிடம் கேட்டேன், அதற்கு அந்தப் பொம்மை நீ மூன்று காலமும் செய்யும் பூஜைகளினால் பெறக்கூடிய பலனை முழுவதும் எனக்குத் தருவாயா என மூன்று விரல்களை உயர்த்தி என்னிடம் கேட்டது, நான் அதற்கு முடியாது எனக் கூறினேன், உடனே அது இரண்டு விரல்களை காட்டி, இரண்டு கால பூஜைகளின் பலனை எனக்குத் தருவாயா எனக் கேட்டது. அதற்கும் நான் முடியாது என மறுத்துவிட்டேன். இறுதியில் ஒரு கால பூஜை செய்யும் போது கிடைக்கக்கூடிய பலனையாவது தருவாயா என்ற நோக்கத்தில் ஒரு விரலை மட்டும் நீட்டிக்கேட்டது. அதற்கு நான் சரி என்று ஒத்துக்கொண்டேன் எனக் கூறுகிறார். இதனை கேட்டு மகிழ்ந்த மன்னனும், சபையோரும் அந்த அந்தணரைப் பாராட்டி மகிழ, மன்னனோ தான் அறிவித்தபடி பொன்னும், பொருளும் நிறைந்த முடிப்பு மற்றும் பொற்காசுகள் நிறைந்த மூட்டையை பரிசாக கொடுத்துக் கௌரவித்தார். இதனால் மன்னனை பிடித்திருந்த முன் ஜென்ம பாவ வினைகள் நீங்கியது.

மன்னனிடம் இருந்து பெற்ற அந்தப் பொற்காசுகள் நிரம்பிய மூட்டையை சுமந்து வந்த அந்தணன், பாவ மூட்டையை தீர்க்கும் பொருட்டு மன்னன் தனக்களித்த அந்தச் செல்வத்தை ஏதாவது நல்ல காரியம் செய்யப் பயன்படுத்த வேண்டும் என எண்ணுகிறான். அப்போது அவனுக்குப் பொதிகை மலையில் வாழும் தனது குருநாதராகிய அகத்திய முனிவரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதற்காகத் தயாரான அந்தணன் அம்பாசமுத்திரம் பகுதிக்கு வந்து தனக்கு தெரிந்த அந்தணன் ஒருவரிடம் தான் கொண்டு வந்த பொன் மூட்டைகளை, தவிட்டு மூட்டை என கூறி அதனை பத்திரமாக வைத்திருக்கும்படி ஒப்படைத்து விட்டு அகத்திய முனிவரின் தரிசனம் பெற பொதிகை மலைக்குச் செல்கிறான். அம்பாசமுத்திரத்தில் உள்ள அந்தணன் அங்குள்ள கோவில் ஒன்றில் குருக்களாகப் பணியாற்றி வந்ததால் அவர் மேல் நம்பிக்கை வைத்து அந்தப் பொன் மூட்டைகளை வழங்கிச் சென்றார்.

பொதிகை மலைக்குச் சென்ற அந்தக் கன்னட அந்தணன், பசி தூக்கம் பாராமல் மலை முழுவதும் சுற்றி அகத்திய முனிவரைத் தேடி அலைந்து, ஒரு வழியாக அவரின் தரிசனத்தை பெற்று அவரை துதித்து மகிழ்ந்தார். அப்போது பாவ மூட்டை நீங்கும் பொருட்டு தான் மன்னனிடம் பெற்ற பொன் மூட்டைகளை பற்றி அகத்திய முனிவரிடம் கூறி, அதனை ஏதாவது நல்ல காரியத்திற்கு பயன்படுத்த விரும்புகிறேன் எனவும் அதற்கு ஒரு நல்லவழி காட்டும்படியும் கூறி பணிந்து நிற்கிறார். அவரின் நல்ல உள்ளத்தைப் புரிந்து கொண்ட அகத்திய முனிவர் அங்கு ஒரு பசுவைத் தோன்ற செய்து, அதனை அந்த அந்தணனிடம் கொடுத்து, இந்தப் பசுவின் வாலை நீ பிடித்துக்கொள் அது ஓடிச் சென்று தாமிரபரணி ஆற்றின் கரையில் சென்று நிற்கும், அந்த இடத்தில் மக்களுக்குப் பயன்படுமாறு அணை ஒன்றை கட்டும்படியும், அங்கிருந்து அந்தப் பசுவின் வாலை மீண்டும் பிடித்துக்கொள்ள அது செல்லும் பாதை எல்லாம் ஒரு கால்வாயை வெட்டும்படியும் கூறி அருள்கிறார். அந்தப் பசு எங்கெல்லாம் படுத்து இளைப்பாறுகிறதோ அங்கெல்லாம் குளத்தை வெட்டும்படியும் கூறி அந்தணனை வாழ்த்தி அனுப்புகிறார். அந்தணனும் அகத்திய முனிவரைப் பணிந்து அவர் கொடுத்த பசுவுடன் அம்பாசமுத்திரம் பகுதிக்கு வந்து சேர்ந்து, தான் கொடுத்து வைத்த பொன் மூட்டைகளை அங்குள்ள அந்தணரிடம் வந்து கேட்டு நிற்கிறார். இதற்கிடையில் அந்தக் கோவில் அந்தணரோ அதில் பொற்காசுகள் இருப்பதை தெரிந்து கொண்டு, அதன் மேல் ஆசை வைத்து அந்தப் பொற்காசுகளை தான் எடுத்துக் கொண்டு அந்த மூடைகளில் தவிடை நிரப்பி வைத்து விடுகிறார். இப்போது அந்தத் தவிடு நிரம்பிய மூட்டையை அந்தணரிடம் கொடுக்க, அதனை வாங்கி பிரித்துப்பார்த்த கன்னட அந்தணர், தான் கொடுத்தது பொற்காசுகள் நிரம்பிய மூட்டை அல்லவா அதனை எங்கே எனக் கேட்க, அதெல்லாம் எனக்குத் தெரியாது நீர் தவிட்டு மூட்டை என கூறி தான் என்னிடம் கொடுத்துச் சென்றீர், அந்த மூடைகள் தான் இவை, பொற்காசுகளை பற்றி எல்லாம் எனக்கு ஏதும் தெரியாது எனக் கூறி ஏமாற்றி விடுகிறார் கோவில் அந்தணர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கன்னட அந்தணர், அது பற்றி அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னரிடம் புகார் தெரிவிக்கிறார். மன்னரின் அரசசபையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, கன்னட அந்தணர் கேரளா மன்னரிடம் இருந்து பொற்காசுகள் நிரம்பிய மூட்டையை பெற்றது உறுதியாகிறது. அதே நேரத்தில் கோவில் அந்தணர் தன்னிடம் தவிட்டு மூட்டை என்று கூறித்தான் அந்த மூட்டையை கொடுத்தார், தனக்கு அந்த மூட்டைக்குள் பொற்காசுகள் இருந்தது பற்றித் தெரியாது என உறுதியாகக் கூற, வேறு வழி இல்லாத மன்னன் அந்தக் கோவில் அந்தணரிடம் நீங்கள் பூஜை செய்யும் கோவிலில் நாளை எங்கள் அனைவரது முன்னிலையிலும் பொற்காசுகளை நான் எடுக்கவில்லை என சுவாமி மீது சத்தியம் செய்து கூற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கிறார்.

அதற்குச் சம்மதித்த அந்த அந்தணர், நாளைக் கோவிலுக்கு வருகிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். தன வீட்டுக்கு வந்த அந்தணர், சுவாமி மீது பொய் சத்தியம் செய்யப் பயந்து ஒரு சூழ்ச்சியை செய்கிறார். அதவாது அங்கிருந்த சுவாமியின் சக்தியைத் தனது மந்திரத்தால் ஆவாகனம் செய்து அங்கிருந்த புளிய மரத்திற்கு மாற்றி விடுகிறார். இப்போது அங்கிருந்த சுவாமி வெறும் கல் விக்ரகமாகத் தானே இருக்கிறது எனக் கருதி பொய் சத்தியம் செய்துவிடலாம் என முடிவெடுத்து நிம்மதியாகத் தூங்கிவிடுகிறான். கன்னட அந்தணனோ மற்ற அந்தணன் பணி செய்யும் கோவிலின் வாசலுக்குச் சென்று சுவாமியை வேண்டிக்கொண்டு அங்கேயே படுத்து இருக்கிறான். தனது குரு அகத்திய முனிவரையும் மானசீகமாக வணங்கித் தூங்குகிறான். அன்று இரவு அவனது கனவில் தோன்றிய அகத்தியர், நாளைக் கோவிலில் விசாரணை துவங்கும் போது, அந்தணனை சுவாமி மீது சத்தியம் செய்யச் சொல்ல வேண்டாம் எனவும், அங்கிருக்கும் புளிய மரத்தின் மீது சத்தியம் செய்யச் செல்லும்படியும் கூறி அருள்கிறார். அதன்படியே மறுநாள் கோவிலில் விசாரணை மன்னனின் முன்னிலையில் துவங்க, மன்னன் பிறப்பித்த உத்தரவுப்படி, கோவில் அந்தணன் சுவாமி மீது சத்தியம் செய்யத் தயாராகிறான். அப்போது குறுக்கிட்ட கன்னட அந்தணன், மன்னரிடம் இந்தச் சின்ன விஷயத்துக்காக எல்லாம் சுவாமி மீது சத்தியம் செய்ய வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக அங்கிருக்கும் புளிய மரத்தின் மீது சத்தியம் செய்தால் போதும் என விண்ணப்பம் செய்கிறான். மன்னனும் அதனை ஏற்று அங்கிருக்கும் புளிய மரத்தின் மீது சத்தியம் செய்தால் போதும் எனக் கூற, விழிபிதுங்கிய கோவில் அந்தணன் செய்வதறியாமல் திகைத்து நிற்க, வேறுவழி இல்லாமல் புளிய மரத்தின் மீது பொய் சத்தியம் செய்து தன்னிடம் கன்னட அந்தணன் கொடுத்தது தவிட்டு மூட்டைகள் தான் எனக் கூறுகிறான். அவன் பொய் சத்தியம் செய்த அடுத்த நொடியே புளிய மரத்தில் இருந்து ஒளிப்பிழம்பாகச் சுவாமி தோன்றி அந்த அந்தணனை எரித்து அழித்து விடுகிறார். இதனை கண்ட மன்னன் மற்றும் மக்கள் உண்மையை உணர்ந்து சுவாமியைப் பணிந்து நிற்கிறார்கள். இன்றும் அம்பாசமுத்திரம் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள காசிபநாதர் சிவாலயத்தில் இந்த வரலாற்று நிகழ்வை விளக்கும் வகையில், புளியமரத்தடியில் தனி சன்னதியில் எரிச்சாவுடையார் என்னும் பெயரில் சுவாமி காட்சி தருகிறார்.

இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் அந்தக் கோவில் அந்தணன் வீட்டில் இருந்து, பொற்காசுகள் நிறைந்த மூட்டைகளை மீட்டெடுத்து கன்னட அந்தணனின் கையில் கொடுக்க, அவர் தனது குரு அகத்திய பெருமான் கூறியபடி பசுவின் வாலை பிடித்து ஓட, அது நின்ற இடத்தில் ஒரு அணைக்கட்டையும், அங்கிருந்து பசு ஓடிச் சென்று நின்ற இடம் வரை ஒரு கால்வாயையும் வெட்டி, பசு ஓய்வு எடுத்த இடத்தில் எல்லாம் குளங்களை வெட்டி, அந்தக் குளங்களுக்கு இந்த கால்வாய் மூலம் தண்ணீர் செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டு வெற்றிகரமாக அனைத்தையும் அகத்தியர் கூறியபடி செய்து முடித்தார். இந்தக் கன்னட பிரம்மச்சாரி அந்தணர் கட்டிய இந்த அணைக்கட்டு தான் தற்போதைய கன்னடியன் அணைக்கட்டு மற்றும் இவர் வெட்டிய கால்வாய் தான் தற்போதைய கன்னடியன் கால்வாய் என்று ஒரு சுவாரசியமான வரலாறு இந்தக் கன்னடியன் அணைக்கட்டிற்கு பின்னால் கூறப்படுகிறது. மேலும் தாமிரபரணியில் உள்ள அணைக்கட்டுகளில் கன்னடியன் அணைக்கட்டு தான் முதன் முதலில் கட்டப்பட்ட அணைக்கட்டு என்ற சிறப்பு தகவலும் இதன் பின்னணியில் கூறப்படுகின்றன.

தற்போதும் தாமிரபரணி நதியில் பல அணைக்கட்டுகள் இருந்தாலும் இந்தக் கன்னடியன் அணைக்கட்டிலிருந்து தான் வருடந்தோறும் முதன் முதலாக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்பது கூடுதல் சுவாரசியமான தகவல் ஆகும்.

இந்த கன்னடியன் கால்வாய் வெட்டப்பட்டு முடித்த காலத்தில் சரியான பருவ மழை பொழியவில்லையாம். இதனால் வெட்டப்பட்டதில் இருந்து இந்த கால்வாய் வழியாக தண்ணீர் ஓடவில்லை. இதனை கண்டு மனம் வருந்திய கன்னட அந்தணன், தனது குருவான அகத்திய முனிவரை நினைத்து தவம் இயற்ற, அவனது தவத்திற்கு இறங்கி காட்சியளித்த அகத்திய முனிவர் அந்த கால்வாயின் கரையில் தற்போது தவம் இயற்றும் பகுதியில் ஒரு விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து அவருக்கு மிளகு அரைத்து பூசி, அவரை சுற்றி தண்ணீரை நிரப்பி பூஜிக்க சொன்னார். அவ்வாறு பூஜித்தால் மழை பொழியும் என கூறிவிட்டு மறைந்து விடுகிறார். அவரின் சொற்படியே கன்னட அந்தணனும் விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து மிளகு அரைத்த கலவையை பூசி, தண்ணீர் நிரப்பி பூஜை செய்ய, அகத்தியர் கூறிய படியே நல்ல மழை பொழிந்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிட, அந்த நீர் கன்னடியன் அணைக்கட்டில் பெருகி வழிந்து கன்னடியன் கால்வாய் வழியாகவும் பாய்ந்து ஓடி அவர் வெட்டிய குளங்கள் எல்லாம் நிரம்பி வழிந்தன. இந்த விநாயகர் கோவில் தற்போதும் சேரன்மகாதேவி கன்னடியன் கால்வாய் கரையில் “மிளகு பிள்ளையார் கோவில்” என்ற பெயரில் அமையப்பெற்றுள்ளது. தற்போதும் மழை பொய்க்கும் காலத்தில் இந்த விநாயகருக்கு மிளகு அரைத்து பூசி, கருவறை முழுவதும் தண்ணீர் நிரப்பி பூஜை செய்து, பின்னர் அந்த தண்ணீரை கால்வாய்க்குள் திறந்து விட, நல்ல மழை பெய்து கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அமைவிடம் / செல்லும்வழி:

திருநெல்வேலியில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பாசமுத்திரம் நகரின் அருகிலுள்ள சின்ன சங்கரன்கோவில் என்னும் ஊருக்கு அருகே மணிமுத்தாறு மற்றும் தாமிரபரணி ஆறு சந்திக்கும் இடத்தில் கன்னடியன் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இதற்கு திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி – வீரவநல்லூர் – கல்லிடைக்குறிச்சி – அம்பாசமுத்திரம் வழியாக சென்று வரலாம்.

About Lakshmi Priyanka

Avatar

Check Also

தாமிரபரணி ஆற்றின் முக்கிய அணைக்கட்டுகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகி, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆறு ஆண்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.