Logo of Tirunelveli Today
English

Athalanallur Gajendra Varathar Thirukkovil

Temple tower of sri gajendra varadha perumal temple.

அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் திருக்கோவில்

கஜேந்திரன் என்ற யானையின் பக்திக்கு இறங்கி பெருமாள் காட்சியளித்து அருள் செய்த "ஆனை காத்த நயினார் கோவில்" என்று சிறப்பிக்கப்படும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் திருக்கோவில். 

மூலவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனாய ஆதி மூலப் பெருமாள்.

உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனாய கஜேந்திர வரத பெருமாள்.

தல விருட்சம்: நெல்லி மரம்.

தீர்த்தம்: தாமிரபரணி, விஷ்ணு பாத தீர்த்தம், கஜேந்திர மோட்ச தீர்த்தம்.

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் இந்திரத்துய்மன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். அவன் விஷ்ணு மீது மனதொன்றிய தூய பக்தி செலுத்தி வந்தான். அவ்வாறு ஒருநாள் மனமொன்றிய நிலையில் மன்னன் பூஜையில் ஆழ்ந்திருந்த போது, அங்கு வந்த அகத்திய முனிவரை மன்னன் கண்டு கொள்ள முடியாது இருந்தான், இதனால் வெகுண்ட அகத்திய முனிவர்  அவனை யானையாகப் பிறக்கும் படி சாபமிட்டு விட்டார். தன் நிலை உணர்ந்த மன்னன், முனிவரை பணிந்து தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு, சாபத்திற்கு விமோசனம் வேண்டினான்.

மனமிறங்கிய அகத்திய முனிவரும், இந்திரத்துய்மா... நீ யானையாக மாறினாலும் திருமாலிடம் பக்தி கொண்டிருப்பதோடு, முற்பிறவியும் உனக்கு நினைவில் இருக்கும் என்றும் முதலை ஒன்று யானையாக இருக்கும் உன் காலைக் கவ்விட, அக்கணமே திருமால் தோன்றி உனக்கு விமோசனம் அளிப்பார் என்று கூறி சாப விமோசனம் அருளினார்.

An idol of gajendra varadha perumal.

பெற்ற சாபத்தின் படி, இந்திரத்துய்மன் கஜேந்திரன் என்ற யானையாக உறுமாறி, காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். இருந்தும் அவனுடைய திருமால் பக்தியும் அவன் பெற்ற சாபமும் அவனுக்கு நினைவில் இருந்தன. தன் சாப விமோசனத்தை எதிர்பார்த்து தினமும் திருமாலை வணங்கி துதித்துக் கொண்டிருந்தான். 

இங்கு இப்படி இருக்க, ஒரு கந்தர்வன் ஆற்றில் குளிப்பவர்களின் கால்களை விளையாட்டாகப் பிடித்து இழுத்து தொந்தரவு செய்து கொண்டிருந்தான். ஒருநாள் நீராடிய முனிவர் ஒருவரின் காலையும் விளையாட்டாக அந்த கந்தர்வன் பிடித்திழுக்க, அம் முனிவர் வெகுண்டு அவனை முதலையாகப் பிறக்குமாறு சாபமிட்டு விட்டார். தன் நிலை உணர்ந்த கந்தர்வன் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு மன்றாடிட, அம் முனிவரோ கஜேந்திரன் என்ற ஒரு யானை வரும், அப்போது அதன் காலை நீ கவ்வ திருமாலின் சக்கரத்தால்  உனக்கு சாப விமோசனம் கிட்டும் என்றும் கூறி அருளினார்.

ஆக முனிவரின் சாபத்தின் படி அந்த கந்தர்வனும் முதலையாக உறுமாறி, ஒரு தடாகத்தில் வந்து வாழ்ந்து வந்தான்.

கஜேந்திரன் என்ற அந்த யானை பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, இறுதியில் தாமிபரணி நதிக் கரையில் உள்ள ஒரு தடாகத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த தடாகமே முதலையாக சாபம் பெற்ற கந்தர்வன் வாழும் தடாகம் ஆகும்.

ஒருநாள் கஜேந்திரன் திருமாலை வழிபட, தடாகத்துக்குள் மலர்ந்திருந்த தாமரை மலரை பறிப்பதற்காக தடாகத்தில் இறங்கிட, அங்கிருந்த முதலை, யானையின் காலைக் கவ்வி தண்ணீருக்குள் இழுக்க, துதிக்கையில் தாமரை மலரை ஏந்திய கஜேந்திர யானையோ, தான் வழிபடும் திருமாலை "ஆதிமூலமே" என்று அழைத்ததுடன் பிளறியது, அப்போது தன் பக்தன் துயர் துடைக்கும் பொருட்டு திருமால் அங்கு தோன்றி, சக்கராயுதத்தை பிரயோகித்து முதலையை தண்டித்து, கஜேந்திரனை காத்து அருள் புரிந்தார். பின்னர் முதலைக்கு சாப விமோசனம் அளித்திட அது கந்தர்வனாகவும், யானைக்கு சாப விமோசனம் அளித்திட அது இந்திரத்துய்மனாகவும் மாறியதாக வரலாறு கூறுகிறது. 

Front view of thiru kavithalayam.

திருமால் அருளால் முதலையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட கஜேந்திரன் மோட்சத்திற்கு செல்வதற்கு முன், திருமாலைப் போற்றிப் பாடிய கஜேந்திர துதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமாலை போற்றும் சுலோகங்களில் முக்கியமான ஒன்றாக இந்த கஜேந்திர துதி விளங்குகிறது. அதைக் கேட்டு மகிழ்ந்த திருமால், இந்த கஜேந்திர துதியை மனமுருக படிப்பவர்களுக்கு எல்லாப் பாவங்களும் அழிந்து சகல நலன்களும் உண்டாகும் என்றும் மரண தறுவாயில் தனது நினைவு ஏற்பட்டு அவர்கள் மோட்சத்தை அடைவார்கள் என்றும் வரமளித்ததாக ஸ்ரீ மத் பாகவதம் என்ற நூல் குறிப்பிடுகிறது. 

கஜேந்திரன் யானை, திருமாலை ஆதிமூலமே என்று அழைத்து மோட்சம் பெற்ற நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்த பல திருக்கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்று தான், இந்த அத்தாளநல்லூர் ஆகும். ஸ்ரீ மத் பாகவதத்தில் கஜேந்திர மோட்சம் நடைபெற்ற இடமாக இந்த தாமிரபரணிக் கரையே குறிப்பிடப்பட்டுள்ளது.

Decked up idol of perumal in tirunelveli temple.

மூலவர் ஆதி மூலப் பெருமாள்:

இங்கு கருவறையில் ஆதி மூலப் பெருமாள் நின்ற கோலத்தில், நான்கு திருக் கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அவருக்கு இடப்பக்கம் பூமா தேவியும், வலப் பக்கம் ஸ்ரீ தேவியும் காட்சித் தருகிறார்கள். ஆதிமூலமே என்று அழைத்த யானைக்கு அருள் செய்த காரணத்தால் இவருக்கு ஆதி மூலப் பெருமாள் என்ற திருநாமம் விளங்கிற்று. 

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

உற்சவர் கஜேந்திர வரதர்:

இங்கு உற்சவர் மண்டபத்தில் கஜேந்திர வரதனாக, பெருமாள் கையில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தி, அபய முத்திரை காட்டி, நான்கு கரங்களோடு, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருக்கோவில் அமைப்பு:

Outer view of gajendra varadha perumal temple in tirunelveli.

வயல் வெளிகள் சூழ்ந்த அழகிய சோலைகளுக்கு மத்தியில், தாமிரபரணி ஆற்றின் கரையில் கிழக்கு திசை நோக்கி  அமையப் பெற்றுள்ளது அநுத திருக்கோவில்.

கோவிலின் முகப்பில் உள்ள  கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால், உள்ளே... பலிபீடம், கொடி மரம், மூலவர் சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீ கருடாழ்வார் சன்னதி ஆகியவற்றை தரிசிக்கலாம். உள்ளே கஜேந்திர மோட்சத்தை சித்திரிக்கும் ஓவியம் இருக்கிறது. மேலும் தர்மர், பீமன், இரண்யனை வதம் செய்யும் ஸ்ரீநரசிம்மர், போதி மரத்தடி புத்தர் ஆகிய தூண் சிற்பங்களையும், கல்லில் வேட்டுவப் பெண்ணாக ஸ்ரீபார்வதி, வாலி, சுக்ரீவன், ஸ்ரீராமன் மற்றும் விசுவாமித்திரர் ஆகியோரது சிற்பங்களும் உள்ளன.

கருடாழ்வாரை வணங்கி உள்ளே சென்றால் கருவறையின் முன் மண்டபத்தில் உற்சவரும், கருவறையில் மூலவரும் காட்சித் தருகிறார்கள். 

திருக்கோவில் உள் பிராகாரத்தில், பன்னிரு ஆழ்வார்கள், ஸ்ரீ வேணு கோபாலன், தெற்கு நாச்சியார், வடக்கு நாச்சியார் என்ற இரண்டு தனித்தனி தாயார்களையும் தனி சன்னதிகளில் தரிசிக்கலாம். இதற்கு அடுத்த வெளி பிரகாரம் முழுவதும் நந்தவனமாக பராமரிக்கப் பட்டு வருகிறது. 

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

திருக்கோவில் சிறப்புக்கள்:

இங்கு தாமிரபரணி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் இங்கு நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு சமமாக கருதப்படுகிறது.

Painting of gajendra perumal god in his bird vehicle.

இந்த தலத்திற்கு கரி காத்த புரி, பொய்மாம் பொழில், கஜேந்திரபுரி, அத்தாணி நல்லூர், ஆனை காத்த நயினார் கோவில் என்ற வேறு பெயர்களும் உள்ளது.

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு தைப் பூசத்தை ஒட்டி பெரிய திருவிழா நடைபெறும்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகளும், கருட சேவையும் வெகு விமரிசையாக நடைபெறும்.

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் திறப்பு விழாவும் கோலாகலமாக நடைபெறும்.

Front view of gajendra perumal temple.

அமைவிடம்:

நெல்லை மாவட்டம்., திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலை வழியில் சுமார் 26 கி. மீ தொலைவில் உள்ள வீரவநல்லூர் ஊரிலிருந்து 3 கி. மீ தொலைவில் உள்ளது அத்தாளநல்லூர்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothkudi - 2hr 1min(85.8km)
  • Tirunelveli - 1hr 9min(35.7km)
  • Tiruchendur - 2hr 36min(104km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ரேவதி சரவணகுமார்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram