Thirumalaikovil

சிலப்பதிகாரத்தில் நெடுவேள் குன்றம் என்று சிறப்பித்து கூறப்படும் இந்த “திருமலைக்கோவில்” மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு சற்று தள்ளி “ஓம்” என்னும் பிரணவ வடிவம் கொண்ட தனி குன்றின் மீது சுமார் 500 அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ளது.

சுவாமி பெயர்: திருமலைக்குமரன்.
திருக்கோவில் விருட்சம்: புளிய மரம்.
தீர்த்தம்: பூஞ்சுனை (அஷ்ட பத்ம திருக்குளம்).
சிறப்பு சன்னதி: உச்சி பிள்ளையார், பைரவர், திருமலைக்காளி.

திருக்கோவில் வரலாறு:


முற்காலத்தில் தற்போது கோவில் அமைந்துள்ள திருமலை மீது திருமலைக் காளி கோவிலும், ஒரு புளிய மரமும் அந்த மரத்தின் அடியில் ஒரு வேலும் மட்டுமே இருந்திருக்கிறது. இங்கு திருமலைக் காளி கோவிலில் அர்ச்சகராக இருந்த பூவன் பட்டர் என்பவர் ஒரு நாள் பூஜைகளை முடித்து விட்டு இங்கிருந்த புளிய மரத்தின் அடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது முருகப் பெருமான் அப்பட்டரின் கனவில் தோன்றி இது தனக்கு சொந்தமான மலை என்றும், தன்னுடைய திருமேனி இங்குள்ள கோட்டைத்திரடு என்னும் இடத்தில் மண்ணிற்குள் புதைந்து உள்ளதகாவும், அதனை கட்டெறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து சென்று அடையாளம் காட்டும் என்றும், அந்த திருமேனியை எடுத்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டும் படியும் கூறி அருளுகிறார். இதனைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த பட்டர் தான் கண்ட கனவை அப்போது இப்பகுதியை ஆட்சி செய்த பந்தள மன்னரிடம் சென்று கூறுகிறார்.

மறுநாள் பந்தள மன்னர் முன்னிலையில் பட்டர் முருகப் பெருமான் கனவில் கூறிய கோட்டைத்திரடு என்னும் இடத்தில் கட்டெறும்புகள் ஊர்ந்து செல்லும் புற்றினை அடையாளம் காட்ட, அரண்மனை வீரர்கள் அந்த இடத்தை தோண்டிட அங்கு முருகப் பெருமானின் திருமேனி விக்ரகம் கிடைக்கப் பெற்றது. அதனை எடுத்து வந்து திருமலையில் பிரதிஷ்டை செய்து பந்தள மன்னர் இந்த திருக்கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது.

“மூக்கன்” என்ற சிறப்பு பெயரில் குமரன்:


இங்குள்ள முருகப் பெருமானின் திருமேனியை புற்றிற்குள் இருந்து தோண்டி எடுக்கும் போது கோடாரி பட்டு மூக்கில் சிறு தழும்பு ஏற்பட்டு விட்டதாகவும், அந்த தழும்பு கூட முருகப் பெருமானுக்கு அழகாக அமைந்துவிட்டதால் மூக்கன் என்று செல்லமாக அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காண்டி என்ற பெயர்களும், பெண் குழந்தைகளுக்கு மூக்கம்மாள் என்ற பெயர்களும் வைக்கின்ற வழக்கமும் குழந்தைகளுக்கு இத் தல முருகப் பெருமானை வேண்டிக் கொண்டு மூக்கு குத்தும் வழக்கமும் பின்பற்றப்பட்டு வருகிறதாகவும் கூறுகிறார்கள்.

திருமலைக்கோவில் சிவகாமி பரதேசி அம்மையார் வரலாறு:


இன்று நாம் காணும் திருமலைக் குமரன் திருக்கோவில் சீரோடும் சிறப்போடும் விளங்குவதற்கு இங்கு வாழ்ந்த பெண் துறவியான சிவகாமி பரதேசி அம்மையார் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த திருமலைக்கோவிலை பற்றி பேசும் போதெல்லாம், சிவகாமி பரதேசி அம்மையாரை நினைக்காமல் இருக்க முடியாது. அச்சன்புதூர் என்னும் ஊரில் செல்வச் செழிப்பாக பிறந்து வளர்ந்த இந்த அம்மையார், திருமலைக் குமரனுக்காக பிற்காலத்தில் அனைத்தையும் துறந்து காவி தரித்து பெண் துறவியாக வாழ்ந்து பல திருப்பணிகளை இங்கு செய்துள்ளார்கள்.

இந்த அம்மையாருக்கு திருமணமாகி நிறைவான பொருட் செல்வங்கள் பல இருந்தும், குழந்தைச் செல்வம் இல்லாதது பெரிய குறையாக இருந்தது. இதனால் இந்த தம்பதிகள் மனம் வருந்தத்தில் மூழ்கி இருந்தது. இருந்தும் இவர்கள் இருவரும் இறை சேவையிலும், பொது சேவையிலும் இறங்கினார்கள். இங்கு வரும் வழி போக்கர்கள் தங்கி செல்லவும் பசியாறவும் பல மண்டபங்களையும், சத்திரங்களையும் உருவாக்கினார்கள். இப்படி இவர்கள் பொது சேவைகளுக்காகவும், ஆன்மீக சேவைகளுக்காகவும் தங்கள் சொத்துக்களை செலவிடுவதை பொறுக்க முடியாத உறவினர்கள், அந்த அம்மையாரின் கற்பில் களங்கம் உண்டாக்கி வீண் பழி சுமத்தினார்கள்.

இதனை பொறுக்க முடியாத சிவகாமி அம்மையார், தான் கற்புநிலை தவறாதவள், களங்கமற்றவள் என்பது உண்மை என்றால் தான் தெருவின் மேலக்கோடியில் திரும்புவதற்கு முன்னர், தன்னை பழித்து பேசியவர்களின் வீட்டில் இடி விழட்டும்’ என்று சாபமிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்ல, அவர் சாபமிட்டபடி அது கடுங் கோடை காலம் என்றாலும் சட்டென இடியும், மின்னலும் தோன்றிட, மறு விநாடியே அம்மையாரை பற்றி தவறாக பேசியவர் வீட்டில் இடி விழுந்தது. எனவே அவரைப் பற்றி புறம் பேசியவர்கள் அது கண்டு அஞ்சி நடுங்கி நின்றார்கள். அன்றிலிருந்து இவரின் அற்புத சக்தியையும், பெருமையையும் ஊர் மக்கள் புரிந்து கொண்டார்கள்.

ஆனால் சிவகாமி பரதேசி அம்மையாரின் மனமோ, தனக்கென ஒரு குழந்தை இல்லையே என ஏங்கி அமைதி இன்றி தவித்தது. அப்போது அந்த ஊருக்கு ஓர் தெய்வ துறவி எழுந்தருளுகிறார். அவரை பணிந்து வரவேற்று உபசாரங்கள் செய்து நின்ற அம்மையாரின் மனக்கவலையை புரிந்து கொண்ட அந்த துறவி, தாயே…! நீங்களோ தெய்வப்பிறவி. உங்களுக்கென்று குழந்தை ஏது? உங்களுக்கு திருமலையின் அடிவாரத்தில் அகத்தியருக்கே தமிழ் போதித்த முருகப் பெருமானே மகனாய் கிடைப்பான்’ என கூறி ஆசி வழங்குகிறார்.

இதனைக் கேட்டு மகிழ்ந்த சிவகாமி பரதேசி அம்மையார், ஐயா.. ! என் குழந்தை எங்கே இருப்பான்? எனக்கு எப்படி கிடைப்பான்? என துறவியிடம் வினவுகிறார்.

அதற்கு துறவி, கவலைப்படாதீர்கள் தாயே திருமலை அடிவாரத்தில், நீங்கள் செல்லும் இடத்தில் ஒரு பொட்டல் காடு இருக்கும். அதன் மேலே வண்டு ஒன்று ஆடிக்கொண்டிருக்கும். அங்குதான் முருகன், குழந்தையாய் உங்களுக்கு கிடைப்பான்’ என கூறி அருளினார்.

உடனே சிவகாமி பரதேசி அம்மையார் அது கேட்டு மகிழ்ச்சி அடைந்து, தன் கணவரை அழைத்து கொண்டு துறவி குறிப்பிட்ட இடம் நோக்கி செல்கிறார். அப்போது துறவி குறிப்பிட்டபடியே ஒரு குறிப்பிட்ட பொட்டல் காடு இருந்தது. அதில் கருமை நிற வண்டு ஒன்று ரீங்காரமிட்டு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே உள்ள குளக்கரையில் குழந்தையின் அழும் குரல் கேட்க, அருகே ஓடிச்சென்று அம்மையார் பார்க்க அங்கே முருகனே குழந்தையாக கிடந்தார். அந்த குழந்தையை எடுத்து ஆரத்தழுவி தன் மார்போடு அணைத்து மகிழ்ந்தார் சிவகாமி பரதேசி அம்மையார்.

குழந்தையாக இருந்த முருகப் பெருமான், திருமலை முருகனாய் சிவகாமி அம்மைக்கு காட்சி தந்து, அதன் பின் திருமலையில் மறைந்து அருளினார். முருகன் வண்டு ஆடிய பொட்டலில் கிடைத்த காரணத்தினால், அந்த இடத்துக்கு ‘வண்டாடும் பொட்டல்’ என பெயர் ஏற்பட்டு இன்றளவும் விளங்கி வருகிறது.

ஆக திருமலைக் குமரனே தனக்காக குழந்தையாக வந்ததால் அவனை தன் புதல்வனாகவே பாவிக்க தொடங்கிய அந்த அம்மையார், அக்காலத்தில் முள்செடிகளும் மூங்கில் புதர்களும் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்த திருமலைக்கோவிலை சீரமைக்க எண்ணி, மலைக்கு மேல் அருள்பாலித்த திருமலைக்குமாரனை தரிசித்து அவனை தன் புதல்வனாக எண்ணி சபதமேற்று அந்த கோவிலுக்கு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்காக வண்டாடும் பொட்டலில் மடம் அமைத்தார். திருப்பணி தொடங்கியவுடன் பரதேசி அம்மையாரின் வடிவமும் மாறியது. காவி உடுத்தினார். கழுத்தில் ருத்ராட்சம் தரித்தார். கரங்களில் வேலாயுதமும் கமண்டலமும் ஏந்தியபடி, நெற்றியில் திருநீறும் குங்குமமும் தரித்து திருமலைக் குமரனுக்கு சேவைகள் செய்ய தொடங்கினார்.

அங்கு வந்த பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கினார். கோடை காலத்தில் நீர் மோர், பானகம் வழங்கினார். தான் தொடங்கி வைத்த திருப்பணிகள் நிலையாக நடைபெற, ஏராளமான நன்செய் நிலங்களையும் மானியமாக்கி வைத்தார். மலையின் மேலே உள்ள வசந்த மண்டபத்தின் திருப்பணி தொடங்கியது. ஏறத்தாழ 500 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையில் பணியை தொடங்கினார் அம்மையார். இதற்காக முருகன் அடிமைகளை அழைத்தார். தற்போது போல அப்போது படிகளும் கிடையாது. வாகனங்கள் ஏறிச் செல்ல வழியும் கிடையாது. செல்லும் வழியில் கால் வைக்க மட்டுமே பாறையில் சிறு சிறு குழி இருக்கும். அதன் வழியாகத்தான் பாறைகளை தூக்கிச் செல்ல வேண்டும்.

சிவகாமி பரதேசி அம்மையார் நினைத்திருந்தால் திருமலையை குடைந்து கூட முருகப்பெருமான் கோவிலுக்குரிய திருப்பணிகளை செய்திருக்க முடியும். ஆனால் இது தன் புதல்வன் குடியிருக்கும் மலை எனவும் இம்மலைக்கு பங்கம் எதுவும் ஏற்படக்கூடாது என்று கருதியும், வேறு இடங்களில் இருந்து கற்களைக் கொண்டு வந்தார்.

மலை உச்சிக்கு தன்னோடு வேலை செய்யும் ஊழியர்களோடு, அம்மையாரும் தலைச் சுமையாக கற்களை தூக்கிச் சென்றார். நடந்து கூட செல்லமுடியாத இடத்தில் பாறைகளை முதுகில் தூக்கியபடி, மேலே கொண்டு சென்றவர் களிடம் இருந்து நழுவி விழும் பாறைகளை தனது தலையால் தடுத்து, பின் தூக்கிச் சென்றும் திருப்பணிகளை செய்தார். அதற்கு அவரது தெய்வ சக்தி ஒத்துழைத்தது. சில நேரங்களில் பாறைகளை கயிறு கட்டி இழுத்த போது, தனது தலை முடியை சேர்த்துக்கட்டி பாறைகளை மேலே இழுத்துச் சென்றுள்ளார். இப்படித்தான், திருமலையில் வசந்த மண்டபம் உள்பட பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் கோவில் தெப்பக்குளத்தை முழுவதுமாக தூர்வாரி, அதை செம்மைப்படுத்தும் பணியையும் மிக நேர்த்தியாக செய்து முடித்தார் பரதேசி அம்மையார். தற்போதும் கோயில் மலை உச்சியில் அழகாகக் காட்சிதரும் அந்த பூஞ்சுனை தெப்பக்குளமும், திருக்கோவிலில் உள்ள ஒவ்வொரு தூண்களும் சிவகாமி பரதேசி அம்மையார் பெயரை எடுத்தியம்பும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

இவ்வளவு அற்புத திருப்பணிகளையும் செய்து முடித்து தன் வாழ்நாளில் மீதம் இருந்த நாட்களையும் தன் புதல்வன் திருமலைக்குமரனுக்காக செலவிட்ட அந்த தெய்வ அம்மையார் இறுதியில் திருமலைக் குமரனுக்கு நேர் எதிராக மலைக்கு கிழக்கே சிறிது தொலைவில் ஜீவ சமாதி அடைந்தார்.

சுவாமி திருமலைக்குமரன்:


இங்கு கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் திருமலைக்குமரன் நான்கு கரங்களுடன் மேல் வலது கரத்தில் சக்தி ஆயுதம் ஏந்தியும், மேல் இடது கரத்தில் வச்சிராயுதம் ஏந்தியும், கீழ் வலது கரத்தை அபய முத்திரை காட்டியும், கீழ் இடது கரத்தை சிம்ம கர்ண முத்திரை காட்டியும், வேலும், சேவற் கொடியும் ஏந்தியபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரின் பின்புறம் அவரது வாகனமான மயிலும் இருக்கிறது. இவரை உற்று நோக்கினால் இவரது மூக்கில் உள்ள சிறு தழும்பை நாம் காணலாம். விழாக் காலங்களில் இவருக்கு வெள்ளிக் கவசம் சாத்தி அலங்காரம் செய்யப்படுகிறது.

உச்சி பிள்ளையார்:
மலை மீது அமையப் பெற்றுள்ள இந்த திருக்கோவிலின் முகப்பில் 16 படிகள் ஏறிச் சென்று வணங்கும் சன்னதியில் உச்சி பிள்ளையார் அருள்பாலிக்கிறார். இந்த பதினாறு படிகளை ஏறிச் சென்று உச்சி பிள்ளையாரை முறைப்படி வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிட்டும் என்று கூறப்படுகிறது.

தில்லை காளி:
இந்த மலை கோவிலின் வடக்கு பிரகாரத்தில் தனிக் கோவிலில் வடக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறாள் தில்லைக் காளி அம்மன். இவளே இத்தல காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள். திருமலையில் குமரன் கோவில் அமையப்பெறுவதற்கு முன்பு இருந்தே இங்கு தில்லைக் காளி, கோவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பைரவர்:
இங்கு காட்சித்தரும் பைரவர் சற்றே ஆறடி உயரம் கொண்ட ஆளுயரத் திருமேனி ஆவார். இவருடன் காட்சித்தரும் இவரது வாகனமான நாய் இங்கு இல்லை. இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்வது சிறப்பு பலன்களை தரும்.

திருக்கோவில் அமைப்பு:


இயற்கை எழில் சூழ்ந்த வயல்கள் மற்றும் சோலைகளுக்கு நடுவே உள்ள திருமலை மீது இந்த கோவில் அமையப் பெற்றுள்ளது.

இந்த கோவிலின் அடிவாரத்தில் கிழக்கு நோக்கிய விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகரை வணங்கி விட்டு மலை ஏறிச் செல்ல சுமார் 544 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இங்குள்ள படிக்கட்டுக்கள் வழியாக ஏறிச் சென்றால் திருமலைக்குமரன் கோவிலை சென்றடையலாம். இந்த படிக்கட்டுகள் வழியாக ஏறிச் செல்லும் வழியில் இடும்பனுக்கும், தடுவட்ட விநாயகருக்கும் தனிக் கோவில் உள்ளது.

படிக்கட்டுகள் முடிந்தவுடன் மலைக்கு மேலே முதலில் உச்சி பிள்ளையார் சன்னதி அமையப் பெற்றுள்ளது. இவரை வணங்கி சற்றே முன்னேறி சென்றால் ஆதியில் வேல் இருந்த இந்த திருக்கோவில் தல விருட்சமாகிய புளிய மரம் உள்ளது. இந்த புளிய மரத்தை சுற்றி மேடை அமைக்கப்பட்டு அதில் விநாயகர், லிங்கம், வேல் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இதனை தாண்டி சென்றால் தெற்கு திசை நோக்கிய வாயில் ஒன்று உள்ளது. இதுவே இந்த திருக்கோவிலுக்குள் செல்ல பிரதானமாக பயன்படுத்தபட்டு வந்த நிலையில் தற்போது கிழக்கு வாயிலில் புதிதாக ஒரு ராஜ கோபுரம் கட்டப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது.

இந்த ராஜ கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம் மற்றும் மயில் வாகனம் அமையப் பெற்றுள்ளது. அதனை தாண்டி சென்றால் அடுத்து மகா மண்டபமும், அதனை அடுத்து அர்த்த மண்டபமும், திருமலைக்குமரன் அருள்பாலிக்கும் கருவறையும் அமையப் பெற்றுள்ளது.

மகா மண்டபத்தில் கருவறைக்கு வட பக்கம் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை உடனாகிய சண்முகப் பெருமான் காட்சித் தருகிறார். தென் பக்கம் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் திருமலைக்குமரனின் உற்சவர் காட்சித் தருகிறார்.

கருவறை சுற்றி உள்ள உள் பிரகாரத்தில் விநாயகர், இத்தல பிரத்யேக உற்சவர்கள், சிவபெருமான், பார்வதி அம்மை, சண்டிகேசுவரர், பைரவர் ஆகியோர்கள் பரிவார தெய்வங்களாக காட்சித் தருகிறார்கள்.

இந்த திருக்கோவிலை சுற்றியுள்ள வெளி பிரகாரத்தில் உச்சி பிள்ளையார் சன்னதியை தாண்டி மேற்கு பிரகாரத்தில் பூஞ்சுனை அமையப் பெற்றுள்ளது. இந்த பூஞ்சுனையின் கரையில் சப்தகன்னியர்கள் அருள்பாலிக்கிறார்கள். அதனை தாண்டி நடந்தால் வடமேற்கு மூலையில் வட திசை நோக்கிய தில்லைக்காளி கோவில் அமையப் பெற்றுள்ளது.

வடக்கு பிரகாரத்தில் இருந்து பார்த்தால் இந்த கோவிலுக்கு வடக்கே அமையப் பெற்றுள்ள அடவிநயினார் அணைக்கட்டினையும், மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும் கண்டு ரசிக்கலாம்.

திருக்கோவில் சிறப்புக்கள்:


இங்கு திருமலைக்குமரனுக்கு பார்வதி அம்மையே தன் வாயால் உபதேசித்த “தேவி பிரசன்ன குமார விதி” படி எட்டு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் மற்ற தலங்களை போல சுவாமியின் பாதுகைகள் பள்ளியறை சேர்க்கப்படாமல், வித்தியாசமாக மூலவருக்கே பால், பழம் நிவேதனம் மற்றும் சயன பூஜை செய்யப்படுகிறது.

இத்தலத்தின் தீர்த்தமான பூஞ்சுனை திருக்குளத்தை முருகப் பெருமானின் அபிஷேகத்திற்காக அகத்தியர் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த பூஞ்சுனையில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் பெயர்களில் மூன்று குழிகள் உள்ளதாகவும், அவற்றில் எப்போதும் நீர் நிறைந்தே இருக்கும் என்றும், ஒருவேளை எப்போதாவது இக்குழிகளில் நீர் குறைந்தால், உடனே மழை பொழிந்து இந்தக் குழிகளில் தண்ணீரை நிரப்பி விடும் என்று கூறப்படுகிறது.

இந்த பூஞ்சுனையில் முன்னர் தினம் ஒரு குவளை மலர் மலர்ந்ததாகவும், அதனை சப்த கன்னியர்கள் பறித்து இந்த திருமலைக்குமரனுக்கு சாத்தி வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது 2019-ல் இத் திருக்கோவிலின் கிழக்கு வாயிலில் ஐந்து நிலை இராஜ கோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு, திருப்பணிகள் பல செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

முன்னர் 544 படிகள் வழியாக மட்டுமே ஏறிச் சென்று தரிசிக்கும் படி அமைந்திருந்த இத் திருக்கோவிலுக்கு தற்போது மலை மீது வாகனங்களில் செல்வதற்கு ஏற்ற படி சாலை வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

முக்கிய திருவிழாக்கள் :


இங்கு தைப் பூச திருவிழா அன்னக் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்களுக்கு மேல் மிக விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது திருமலைக்குமரன் வண்டாடும் பொட்டல் மற்றும் பைம்பொழில் ஊருக்குள் எழுந்தருள்வார். இந்த விழாவின் ஒன்பதாம் நாள் தேரோட்டமும் சிறப்பாக நடைபெறும்.

ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவும் இங்கு பத்து நாட்களுக்கு மேல் சிறப்பாக நடைபெறும்.

கார்த்திகை மாதம் கடைசி திங்களன்று பைம்பொழில் சிங்காரப் பொய்கையில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

இது தவிர வைகாசி விசாகம், மாதாந்திர கடைசி வெள்ளி, மாதாந்திர கார்த்திகை மற்றும் விசேஷ நாட்களிலும் திருமலைக் குமரனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இங்கு திருமலைக்குமரனுக்கு தனி தங்கத்தேரும் உள்ளது. அதற்கு உபதாரர்கள் கட்டணம் செலுத்தினால் அன்று தங்கத்தேர் உலாவும் நடைபெறும்.

அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம்., தென்காசி நகருக்கு மேற்கே சுமார் 26 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது திருமலைக்கோவில்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்துகள் மூலம் தென்காசி சென்று இறங்கி, அங்கிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் தனியார் கட்டண வாகனங்களில் ஏறி திருமலைக்கோவிலை சென்றடையலாம்.

-திருநெல்வேலிக்காரன்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!