வீரவநல்லூர் பூமிநாதர் திருக்கோவில்
திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் அமையப் பெற்றுள்ளது எமனை உயிர்பித்தருளிய மற்றும் பூமா தேவி வழிபட்ட வீரவநல்லூர் பூமி நாத சுவாமி திருக்கோவில்.
சுவாமி பெயர்: பூமிநாத சுவாமி.
அம்மை பெயர்: மரகதாம்பிகை .
திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம்.
தீர்த்தம்: தாமிரபரணி., சிவ கங்கை தீர்த்தம்.
திருக்கோவில் வரலாறு:
மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை எட்டி உதைத்தல்:
முற்காலத்தில் மிருகண்டு முனிவர் மற்றும் அவருடைய துணைவியார் மருத்துவவதி ஆகியோர் சிறந்த சிவ தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு நீண்ட நாட்களாக மக்கள் செல்வம் இல்லை. தங்களின் பெயர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டி சிவபெருமானை சரணடைந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஓர் அழகிய ஆண் குழந்தை அந்த தம்பதிகளுக்கு பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டி வளர்த்து வருகின்றார்கள்.
நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமும் வளர்ந்து வந்த மார்க்கண்டேயன் அவனது ஜாதக குறிப்புப்படி தனது பதினாறு வயதில் இறந்து போய்விடுவான் என்று ஜோதிடர்கள் கூறிவிடுகிறார்கள். இதனை அறிந்த அந்ந தம்பதியினர் சிறு வயதிலேயே தங்கள் குழந்தை இறக்கப் போவதை எண்ணி கவலையில் இருக்க, இதனை அறிந்த மார்க்கண்டேயனோ தன்னை எப்படியும் சிவபெருமான் காத்து அருள்புரிவார் என்று கூறி அவர்களை தேற்றிக் கொண்டிருந்தான்.
மார்க்கண்டேயன் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதுடன், தன்னை முழுமையாக சிவபெருமானிடம் சரணடையச் செய்திருந்தான். ஜாதக்கத்தில் குறிப்பிட்டபடி மார்க்கண்டேயனுக்கு பதினாறு வயதும் வருகிறது, அன்று மார்க்கண்டேயன் கோவிலுக்குள் சிவ பூஜை செய்து கொண்டிருந்தான். அப்போது அவனுடைய உயிரை எடுத்துச் செல்ல வந்த எம தூதர்கள், மார்க்கண்டேயன் சிவ பூஜையில் இருப்பதைக் கண்டு, விலகி நிற்கின்றனர்.
அப்போது எமதர்மன், மார்க்கண்டேயனின் உயிரைத் தானே எடுப்பதாகச் சொல்லி, மார்க்கண்டேயனை நெருங்கிட, எமதர்மனை கண்ட மார்க்கண்டேயன் சிவபெருமானை இறுக கட்டியணைத்து சரணடைகிறான். அப்போது மார்க்கண்டேயன் உயிரை பறிப்பதற்கு எமதர்மன் பாசக் கயிற்றை வீசிட, அந்தப் பாச கயிறானது சிவபெருமானையும் சேர்த்து கட்டியிழுக்கிறது. அது சமயம் சிவபெருமான் கடுங் கோபத்துடன் அங்கு தோன்றி, எமதர்மனை தன் காலால் எட்டி உதைத்து, மார்க்கண்டேயனை காத்து அவனுக்கு என்றும் பதினாறாக இருக்க வரம் அருளினார்.
சுவேத கேது மகராஜாவுக்காக எமதர்மனை எட்டி உதைத்தல்:
முற்காலத்தில் சுவேத கேது என்னும் அரசன் தனது வயது முதிர்ந்த காலத்தில் தான் நிர்வகித்த அரசுப் பொறுப்புகளை தனது பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, தன் மனைவி உடன் சன்னியாசம் மேற் கொண்டு, பல தலங்களுக்கும் யாத்திரையாக சென்றான், அப்படி வரும் வழியில் அவனது மனைவி மரணம் அடைந்து விட, அங்கேயே தன் மனைவிக்கு உரிய இறுதி சடங்குகளை செய்துவிட்டு, தன்னுடைய யாத்திரையைத் தொடர்ந்தான் சுவேத கேது என்னும் அந்த மன்னன்.
தன் மனைவி மரணத்தை தழுவும் போது அவள் பட்ட வேதனைகளை நினைத்து பார்த்து, தனக்கும் மரணம் நேரும் போது அத்தகைய துன்பங்கள் வருமோ என்று எண்ணி பயமுற்றான். தன் மரண பயம் நீங்கும் பொருட்டு முனிவர் ஒருவரை தரிசித்து, மிருத்யுஞ்சய மந்திரம் உபதேசம் பெற்று, அதை உச்சரித்தவாறே மற்ற தலங்களுக்கும் சென்று சிவ தரிசனம் செய்து வந்தான்.
அப்படி ஒரு நாள் அவன் திருநெல்வேலியில் உறையும் நெல்லையப்பர் கோயிலைத் தரிசிக்க வந்த போது அவனுடைய ஆயுட் காலம் முடிவடைய இருந்ததால், எமதர்மன் அவன் எதிரில் தோன்றி பாசக் கயிற்றை வீசினான். அப்போது சுவேத கேது அரசன் மிகுந்த மன உறுதியுடன் மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்து, சிவபெருமானை தியானித்தான். அப்போதும் எமதர்மன் சுவேத கேதுவை துன்புறுத்த முயல, நெல்லையப்பர் கருவறை லிங்கத் திருமேனியில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், எமதர்மனை தன் காலால் எட்டி உதைத்து, சுவேதகேதுவுக்கு மரணம் பயம் நீக்கி அருள்புரிந்தார்.
இப்படி இரண்டு முறை சிவபெருமான் எமனை தன் காலால் தன் பக்தர்களுக்காக எட்டி உதைத்து திருவிளையாடல் புரிந்தார்.
அப்படி சிவபெருமானால் எட்டி உதைக்கப்பட்ட எமதர்மன், நிலை குலைந்து, செயலற்றுப் போய், இந்த வீரவநல்லூர் தலத்தில் வந்து வீழ்ந்து கிடந்தான். இதனால் எமதர்மன் தனது பணிகளை செய்ய முடியாமல் போக, பூமியில் இருப்பவர்களுக்கு இறப்பு இல்லாமல் போனது. இதனால் பூமியின் எடையும் அதிகரித்து கொண்டே செல்ல, பூமியின் அதிக எடையைத் தாங்க முடியாமல் தவித்த பூமா தேவியானவள், எமதர்மன் செயலற்றுக் கிடந்த இந்த பகுதிக்கு வந்து, எமதர்மனின் நிலை கண்டு வருந்தி அங்கு தீர்த்தம் உருவாக்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்கிறாள்.
பூமா தேவியின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அவளுக்கு காட்சியளித்ததுடன் அவளது வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் வீழ்ந்து கிடந்த எம தர்மனை மீண்டும் உயிர்பித்து, சிவ பக்தர்களுக்கு மரண பயம் காட்டி துன்புறுத்த கூடாது எனக் கூறி அருள்புரிந்தார்.
இங்கு பூமா தேவி சிவனை வழிபட்டதால் இத்தல ஈசன் “பூமி நாத சுவாமி” என்ற பெயரும், எமதர்மனை உயிர்பித்து வீரச் செயல் புரிந்ததால் இத்தலம் “வீரவநல்லூர்” என்றும் அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
சுவாமி பூமி நாதர்:
கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் லிங்கத் திருமேனியராய் காட்சியளிக்கிறார் பூமி நாத சுவாமி. இவருக்கு விசேஷ காலங்களில் கவசம் மற்றும் நாகாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்படுகிறது.
அம்மை மரகதாம்பிகை:
கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவாரபாலகிகள் காவல்புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்க விட்டபடியும், சற்றே இடைநெளித்து, புன்முறுவல் பூத்த திருமுகத்தவளாய், நின்ற கோலத்தில், மரகத பச்சை நிறத்தவளாய் ஆனந்த காட்சியளிக்கிறாள் மரகதாம்பிகை.
திருக்கோவில் அமைப்பு:
கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கும் இக் கோவில் நுழைவாயிலில் மொட்டை கோபுரம் அமையப் பெற்றுள்ளது. இந்த மொட்டை கோபுரத்துக்கு எதிரே வெளியே அழகிய மண்டபம் ஒன்றும், அதனைத் தாண்டி சற்று தொலைவில் தெப்பக் குளமும் இருக்கிறது.
மொட்டை கோபுரம் தாண்டி உள்ளே நுழைந்தால் நீண்ட முன் மண்டபம் நம்மை வரவேற்கிறது. இதில் பலி பீடம், நந்தி, கொடி மரம் மற்றும் திருவாதிரை மண்டபமும், நடராஜர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும், சுவாமி – அம்பாளுக்குரிய வாகனங்களும் காட்சியளிக்கின்றன.
அடுத்த குடைவறை வழியே உள்ளே நுழைந்தால் நேராக சுவாமி பூமிநாதர் சன்னதி. அவருக்கு வட புறம் அம்மை மரகதாம்பிகை சன்னதி. இரண்டு சன்னதிக்கும் நடுவே அழகிய மண்டபமும், பொதுவாக ஒரு அழகிய பிரகாரமும் அமையப் பெற்றுள்ளது.
இங்கு பரிவார மூர்த்திகளாக முறையே விநாயகர், சுப்பிரமணியர், அதிகார நந்தி, சூரியன், நால்வர், சுர தேவர், அறுபத்து மூவர், சப்த மாதர், தட்சிணா மூர்த்தி, சோமாஸ்கந்தர், நடராஜர், சிவகாமி அம்மை, கன்னி மூல விநாயகர், சண்டிகேசுவரர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர்களும் அருள்பாலிக்கிறார்கள்.
திருக்கோவில் சிறப்புக்கள்:
பாண்டிய நாட்டு மன்னன் ‘அதிவீர வழுதி மாறன்’ என்பவனை ‘வகுளத்தாமன்’ என்னும் மன்னன் போரிட்டு தோற்கடித்த காரணத்தினால் தனது நாடு, நகரம் அனைத்தையும் இழந்த அதிவீர வழுதி மாறன் தென் திசை நோக்கி கால் போன போக்கில் நடந்து வந்த போது, இந்த வீரவநல்லூர் பகுதியை அடைந்து, இங்குள்ள பூமி நாத சுவாமியை மனமுறுக வேண்டி, தன் நிலையை கூறி கண்ணீர் மல்க நின்றான். அப்போது இறைவன் அசிரீரியாக வெளிப்பட்டு, மன்னா கலங்காதே உன் எஞ்சிய படைகளை திரட்டிக் கொண்டு நீ போர்க்களம் புகுவாயாக, நிச்சயம் உனக்கே வெற்றி என கூறி அருளினார். அதன்படியே அதி வீர வழுதி மாற பாண்டியனும் தன் எஞ்சிய படை வீரர்களை திரட்டி, தன்னை தோற்கடித்த மன்னுடன் போரிட்டு வெற்றி பெற்று இழந்த நாடு, நகரங்களை மீட்டான் என்று கூறப்படுகிறது.
இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் பூமி நாதரை, பூ மகள், எமதர்மன் தவிர இந்திரன், இந்திரனின் அமைச்சரான விசுமுகன், பிரம்மன், கண்ணன், விருகன், கங்கை ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளார்கள்.
முக்கிய திருவிழாக்கள் :
இங்கு தை மாதம் தைப் பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
ஆடி மாதம் ஆடிப்பூரத்தன்று இத்தல மரகாதாம்பிகை அம்மைக்கு வளைகாப்பு வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
ஐப்பசி மாதம் அம்மன் சன்னதியில் கொடியேற்றமாகி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடைபெறும்.
ஐப்பசி மாதம் இத்தல சுப்பிரமணியருக்கு கந்த சஷ்டி திருவிழா இனிதே நடைபெறும்.
கார்த்திகை மாதம் சோமவார வழிபாடும், திருக்கார்த்திகை சொக்கப்பனை ஏற்றுதலும் சிறப்பாக நடைபெறும்.
மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவை ஒட்டி கொடியேற்றமாகி பத்து நாட்கள் திருவிழாவும், தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும்.
இது தவிர மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை வருஷ பிறப்பு, நடராஜருக்குரிய ஆறு அபிஷேகங்கள், மாதாந்திர பிரதோஷ மற்றும் பெளர்ணமி பூஜைகளும் சிறப்பாக நடைபெறும்.
அமைவிடம் :
திருநெல்வேலி மாவட்டம்., திருநெல்வேலி – அம்பாசமுத்திரம் சாலை வழியில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 28 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது வீரவநல்லூர்.
-திருநெல்வேலிக்காரன்.