Logo of Tirunelveli Today
English

Karivalam Vandha Nallur Kovil

வாசிப்பு நேரம்: 12 Mins
No Comments
Front view of the KarivalamVanthaNallur temple Gopuram

தென்பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களுள் ஒன்றாக விளங்கி வருவது கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மை உடனுறை பால்வண்ணநாதர் திருக்கோவில்.

தென்பாண்டி நாட்டின் பஞ்சபூதத்தலங்களாவது.,

  1. சங்கரன்கோவில் - நிலம்
  2. கரிவலம்வந்த நல்லூர் - நெருப்பு
  3. தேவதானம் - ஆகாயம்
  4. தாருகாபுரம் - நீர்
  5. தென்மலை - காற்று
    ஆகியவையாகும்.

இவற்றுள் கரிவலம்வந்தநல்லூர் நெருப்பு தலமாக விளங்குகிறது. எனவே திருவண்ணாமலைக்கு நிகரான சிறப்பை இது பெறுகிறது.

சுவாமி பெயர்: பால்வண்ணநாதர்.
அம்மை பெயர்: ஒப்பனையம்மை.
திருக்கோவில் விருட்சம்: களா மரம்.
தீர்த்தம்: நிட்சேப நதி, சுக்கிர தீர்த்தம், அக்னி தீர்த்தம்.
சிறப்பு, சன்னதி: முகலிங்கநாதர், வீரசண்முகர், பராசக்தி பீடம்.

திருக்கோவில் வரலாறுகள்:

Front entrance view of the KarivalamVanthaNallur temple
முற்காலத்தில் இந்திரன், சயந்தன் எனும் இரண்டு தேவர்களும் இறைவனின் சாபத்தால், பூவுலகில் காரி, சாந்தன் என்ற பெயர்களில் வேடர் குலத்தில் பிறந்தனர்.

அவர்கள், இங்குள்ள களாவனத்தில் சுற்றித் திரிந்தபோது, யானை ஒன்று நிற்பதனைக் கண்டு, அதன் மீது அம்பு தொடுத்தனர்.

அந்த யானையின் உடலை, அம்பு துளைத்தபோது, அந்த யானை சிவலிங்கத்தைப் பூசனை செய்து கொண்டிருந்தது. அம்பெய்த இருவரும் யானையருகே வந்து பார்த்தபோது, சிவபூசை செய்து கொண்டிருந்த யானையை கொன்று விட்டதை உணர்ந்தனர்.

இதனுடைய பாவப்பழி நம்மையே வந்து சேரும் என நினைத்து வருந்தினர். அந்தச்சமயத்தில் இறைவன் அவர்கள் முன்பாகத் தோன்றி, "முன்வினைப்பயனால் தண்டனை பெற்ற யானைக்கு வரமளிக்கவே உங்களை இங்கு ஈர்த்து வரச்செய்து இச்செயல் செய்யத் தூண்டுதல் செய்தோம்!" இதற்காக மனம் வருத்தம் வேண்டாம் என்று கூறியருளினார். அதன்பின்பு, யானையை உயிர்ப்பித்து, வரங்களையும் அளித்தருளினார் இறைவன்.

இந்த கரிக்கு (யானைக்கு) வரம் தந்தருளிய காரணத்தால்" கரிவர நல்லூர்" எனப் பெயர் உண்டாயிற்று.

மேலும், காரியும், சாந்தனும் சாபவிமோசனம் பெற்றனர். அவர்களின் பழைய உருவான இந்திரன், சயந்தனாக உருவைப் பெற்றுக் கொண்டனர் என்பது ஒருவகை வரலாறாக இருக்கிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

மற்றொரு வரலாறு:
ஆதிகாலத்தில் பாற்கடலை கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது. அதனை தேவர்கள் உண்டால் நன்மை பயக்கும், அசுரர்கள் உண்டால் அரக்கத்தனம் பெருகி அழிவுநிலை அதிகரிக்கும் என்பதை அறிந்த மஹாவிஷ்ணு, மோகினி அவதாரம் பூண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வண்ணம் பங்கிட்டு அளித்தார். இதனால் வெகுண்ட அசுரர்கள் தம் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்று முறையிட்டார்கள்.

அவர், அவர்களுடைய ஏக்கத்தைப் போக்கும் வகையில் பூலோகத்தில், கருவைப்பதி என்ற தலத்தில் பால் தடாகம் ஒன்றினை உருவாக்கினார். இதைக் கேள்விப்பட்ட தேவர்கள், அந்தத் தடாகத்திலிருந்து அரக்கர்கள் பாலை அருந்தினார்கள் என்றால் அவர்களும் வலிமை பெற்றுவிடுவார்களோ என்று அஞ்சினார்கள். உடனே சிவபெருமானைத் தஞ்சமடைந்தார்கள். அவர் அந்த பால் தடாகத்தால் வரவிருக்கும் ஆபத்தினை உணர்ந்து, ஓர் அந்தணச்சிறுவன் வேடம் புனைந்து அதனுள் மூழ்கி எழ, அது வெறும் நீர்த்தடாகமாக மாற்றிவிட்டது. இதனால் அசுரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இவ்வாறு பால் தடாகத்தில் மூழ்கி, அதனை நீர் தடாகமாக மாற்றியதால் இங்கே கோயில்கொண்டிருக்கும் ஈசன் பால்வண்ணநாதர் என்றும், சுக்கிரன் உருவாக்கிய தடாகம், சுக்கிர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒருமுறை இந்திரனுக்கும் அவன் மகனுக்கும் வேடர்களாக மாறும்படி சாபம் ஏற்பட்டது. அதைப் போக்கிக்கொள்ள அவர்கள் இத்தலத்துக்கு வந்து பால்வண்ண நாதரை பூஜித்து வந்தனர். இவ்வாறு இவர்கள் பூஜிக்க, இரவுநேரத்தில் யானை ஒன்றும் வந்து ஈசனை பூஜித்தது.

மறுநாள் இறைவன் சந்நதிக்குப் போகும்போது ஏற்கெனவே யாரோ பூஜித்துச் சென்றுவிட்டிருந்த அடையாளங்களை இந்திரன் கண்டான். தங்களையும் மீறி யார் இவ்வாறு பூஜித்திருப்பார்கள் என்று அறிந்து கொள்ள இரவில் ஒளிந்திருந்து கண்காணித்தார்கள். அப்போது ஒரு யானை அவ்வாறு பூஜிப்பதைக் கண்டார்கள். உடனே வெகுண்டு அதனைக் கொல்ல அம்பு எய்தபோது அந்த யானை சட்டென்று வெள்ளை யானையாகிய ஐராவதமாக மாறியது.

தன் தலைவனான இந்திரனைத் தேடி வந்த ஐராவதம் தான் பூஜை செய்த தலத்திலேயே அவனைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டது. இறைவன் அருளால் இந்திரனும் அவன் மகனும் சாபம் விலகி அவர்களின் சுய உருவை பெற்றிருந்தார்கள். இந்திரன் சாபம் தீர்ந்ததாலும், யானை (கரி) வலம் வந்து வணங்கியதாலும், இத்தலம் கரிவலம் வந்த நல்லூர் என்று பெயர் பெற்றது. என்பது ஒரு வரலாறாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.

இதனால் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்திரனும், சயந்தனும் இறைவனை வணங்கிய வண்ணம் நிற்கின்றனர் என மற்றொரு வரலாறும் கூறப்படுகிறது. இச்சரிதத்தை விளக்கும் விதமாக, இங்குள்ள மகாமண்டபம் சுவரில் மூலிகை வர்ண ஓவியங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

ஒப்பனையம்பிகை தபசு வரலாறு:

Enchanting murals of two women worshipping Amman deity of KarivalamVanthaNallur temple
பார்வதியம்மை பரமசிவனிடத்தில் சகளநிட்கள கோலத்தில் தங்களை தரிசிக்க விரும்புகிறேன், அந்த தரிசனத்தை காட்டியருள வேண்டும் என விண்ணப்பிக்க, சிவமோ அம்மையை பூஉலகம் சென்று களா மரங்கள் நிறைந்த பகுதியில் தவமிருப்பாயாயின், யாம் உனக்கு சகள நிட்கள கோலத்தில் காட்யளிப்போம் என வாய்மொழி அருளுகிறார்.

அதன்படி அம்மை பூஉலகம் அடைந்து நிட்சேப நதிக்கரையில், களா மரங்கள் நிறைந்த பகுதியில் நின்று ஒற்றைக்கால் தபசு புரிகிறாள். அம்மையின் அந்த தவத்திற்கு இறங்கி சிவபெருமான் சகள நிட்கள சொரூபமான முகலிங்கநாதராக காட்சியளித்தார்.

அம்மை தவசு புரிந்த நிட்சேப நதிக்கரையின், களா மர வனமே, இன்றைய கரிவலம்வந்தநல்லூர் ஆகும்.

சங்கரன்கோவிலில் கோமதியாக தவமிருந்து சங்கரநாராயணராக காட்சிபெற்ற அம்மை, இந்த கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மையாக தவமிருந்து முகலிங்கநாதர் காட்சிபெற்றாள்.

சுவாமி பால்வண்ணநாதர்:

Enchanting murals of two women worshipping Amman deity of KarivalamVanthaNallur temple
கருவறையில் சுவாமி பால்வண்ணநாதர் லிங்கத்திருமேனியாக காட்சித்தருகிறார். இவர் பால் போன்ற வெள்ளைத்திருமேனி என்பதால் பால்வண்ணநாதர் என அழைக்கப்படுகிறார். வடமொழியில் இவருக்கு க்ஷீரவர்ணேஸ்வரர் என்று பெயர்.

அம்மை ஒப்பனையம்பாள்:
கருவறையில் அம்மை நான்கு திருக்கரங்கள் கொண்டு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வடமொழியில் இவளுக்கு அதுல்யசெளந்தர்யநாயகி என்று பெயர். தென்பாண்டி நாட்டில் அருள்பாலிக்கும் காந்திமதி, மீனாட்சி, கோமதி, உலகம்மை மற்றும் பல கோவில்களின் அம்மைகள் இரண்டு பரம் கொண்ட திருமேனியாக காட்சியளிக்க, இங்கு மட்டுமே அம்மை நான்கு கரங்கள் கொண்டிருப்பது சிறப்பம்சம்.

பராசக்தி பீடம்:
இங்கு அகத்தியர் ஸ்ரீ சக்கர ரூபத்தில் அம்மையை பிரதிஷ்டை செய்து வணங்கியுள்ளார். இதுவே பராசக்தி பீடம் ஆகும். திருக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் இந்த பராசக்தி பீடம் தனி சன்னிதியாக அமையப்பெற்றுள்ளது.

முகலிங்கநாதர்:
இங்கு அம்மையின் தபசிற்கு இறங்கி சுவாமி, சகள நிட்கள சொரூபமாக காட்சியளித்த முகலிங்கநாதரின் உற்சவத்திருமேனி உள்ளது.

அதென்ன சகளநிட்கள சொரூபம்?
சைவ சமயத்தில் முழுமுதற் பரம்பொருளாக வழிபடப்படுவது சிவபெருமானே ஆகும். முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்ற சிவப்பரம்பொருள் சுத்த சிவம். அந்தத் தத்துவங்களில் நின்று, ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருள அருவம், அருவுருவம், உருவம் ஆகிய திருமேனி கொண்டு விளங்குகின்றார்.

இதில் அருவத்திருமேனி கொண்ட சிவபெருமானை "சத்தர்'' என்றும், அருவுருவத் திருமேனி கொண்ட சிவபெருமானை "பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனி கொண்ட சிவபெருமானை "பிரவிருத்தர்' என்றும் கூறுவர்.

அருவ நிலை:
இந்த அருவ வடிவம், சுத்த சிவ தத்துவத்திலும், ஞானமே வடிவாகிய திருமேனியாக உள்ளது. இதை "நிட்கள சொரூபம்" என்று கூறுவது உண்டு. நிட்களம் என்பது வடிவம் இல்லாதது ஆகும். அதில் ஞானசக்தி தனித்தும் கிரியா சக்தி தனித்தும் பொருந்தி வியாபிக்கும். இந்நிலையை "லய சிவம்' எனவும் கூறுவர். இது படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் இச்சையுடையது. இந்த சிவம் ஞான சக்தியைப் பொருந்தி நின்றால் சிவன் எனவும், கிரியா சக்தியைப் பொருந்தி நின்றால் சக்தி எனவும் வழங்குவர். அருவ நிலையாகிய நிட்கள சிவத்தை, கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் மனதினால் தியானித்து வழி படத்தக்க ஞான வடிவம் கொண்டது.

அருவுருவ நிலை:
இந்த சிவத்திருவுருவம் சாதாக்கிய தத்துவத்தில் (மூர்த்தி தத்துவம்) போற்றிப் புகழப்படுகிறது. இதை "சகள நிட்கள சிவம்'' என்றும் கூறுவர். இது வடிவுடையதும் வடிவில்லாததுமாகிய இரு தன்மையும் கூடி நிற்பது, ஞான சக்தியும் கிரியா சக்தியும் சம அளவில் பொருந்தி தியானிப்பது. இதை போக சிவம் என்றும் கூறுவார்கள். இந்த சகள நிட்கள சிவமே சிவலிங்க வடிவமாகும். சிவலிங்கம் "அசவலிங்கம்' என அழைக்கப்பெறும். அசவம் என்பது போக்கும்வரவும் இல்லாதது எனப் பொருள்படும். சிவலிங்கத்தில் காணக்கூடிய அந்த உருவம்-சகளம், இன்னது என கூற முடியாதது. உறுப்புகள் இல்லாமல் இருப்பது அருவம். நிட்களத்திற்கு உருவம் உண்டு, உறுப்புகள் இல்லை. இவ்விரு தன்மைகளும் பெற்றதால் சிவலிங்கம் அருவுருவத் திருமேனி.

ஆக இப்போது சகள நிட்களம் என்றால் என்ன என்று புரிந்திருக்கும்.

வீரசண்முகர்:
சுவாமி கோவில் உள் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் வீரசண்முகர் சன்னதி அமையப்பெற்றுள்ளது. கேட்ட வரம் தரும் ஷண்முகர் இவர் என்று போற்றப்படுகிறார். இவருடைய சன்னதியில் திருமணம் முடித்தால் வாழ்க்கையில் அனைத்துப் பேறுகளையும் பெறலாம் என்பது ஐதீகம்

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

திருக்கோவில் அமைப்பு:
கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ள இக்கோயில் மிக பிரமாண்டமானது. தற்போது சில வருடங்களுக்கு முன் 125 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இராஜகோபுரம் தரிசித்துவிட்டு உள்ளே நுழைந்தால், வாயிலில் ஒருபுறம் தல விநாயகரும், மறுபுறம் தல முருகனிம் சன்னதி கொண்டுள்ளார்கள்.

அவர்களை வணங்கி உள்ளே நுழைந்தால், முன் மண்டபம் இருக்கிறது. இதன் விதானத்தில் மூலிகை வர்ணத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

முன்மண்டபத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்திருக்கின்றன. அடுத்து உள்ளே சென்றால் அதிகாரநந்தி, அகத்தியர், சந்திரன், சூரியன் மூவரும் நம்மை வரவேற்கிறார்கள்.

கர்ப்பகிரகத்தில் பால்வண்ணநாதர் சுயம்புவாக, வெண்ணிறத்தவராய் காட்சியளிக்கிறார். கருவறை சுற்றியுள்ள பிராகாரத்தில் வலம் வரும்போது துர்க்கை, 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னிமூல விநாயகர் மற்றும் பஞ்சலிங்கங்களும், உற்சவதிருமேனிகளும் காட்சிதருகின்றனர்.

கருவறைக்கு பின்புறம் அம்மையின் தவத்திற்கு மகிழ்ந்து காட்சியளித்த லிங்கோத்பவர் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து வீரசண்முகர், பிரம்மா, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நடராஜர்-சிவகாமியம்மை சன்னதி என வணங்கிவிட்டு நடந்தால் தல விருட்சமான களாமரத்தினை அடையலாம். அடுத்து பைரவர் தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தால், வெளிபிராகாரத்தில் அகத்திய பெருமான் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கர பராசக்தி எழிற்கோல தரிசனம் அருள்கிறார்.

அடுத்து உதயமார்த்தாண்டேஸ்வர், சடையப்பர் அஆகிய சன்னதிகளும் அமையப்பெற்றுள்ளது. தொடர்ந்து நடந்தால் சோலையில் பல்வகை மரங்களும், ஈசானமூலையில் மேலிருந்து புற்றொன்று தொங்கும் அதிசய இடமும் காணலாம்.

பின் தனிக்கோவிலாக சுவாமி கோவிலுக்கு வடபக்கம் ஓப்பனையம்மை கோவில். இங்கு இவளுக்கும் தனியாக கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் உள்பிரகாரம், பள்ளியறை ஆகியவைகள் அமையப்பெற்றுள்ளது.

சுவாமி கோவிலுக்கும் அம்மை கோவிலுக்கும் இடையே வசந்த மண்டபமும், அம்மே கோவிலுக்கு எதிரே வேலைப்பாடுடன் கூடிய திருவாதிரை மண்டபமும் தெற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது.

வெளிபிரகாரத்திருச்சுற்று முடியும் இடத்தில் மேற்கு நோக்கிய லட்சுமணேஸ்வரர், அம்பாள் தனிச்சன்னதியும் இறுதியாக நவக்கிரக சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.

சிறப்புக்கள்:

Front view of KarivalamVanthaNallur agni sthalam with trees in the background and white temple wall to the left side and a small image of siva lingams in the left corner
கரி என்பதற்கு யானை எனப்பொருள். ஆக, யானை வலம் வந்த ஊர் என்பதால் கரிவலம்வந்தநல்லூர் ஆயிற்று. ஆனால், கோயில் கல்வெட்டுக்களில் "ஆர் நாட்டு கரிவர நல்லூர்" எனக் குறிப்புடன் காணப்பெறுகிறது.

கரியாகிய யானை வலம் வந்து வரம் பெற்றமையால், இவ்வூர் கரிவரநல்லூர் என அழைக்கப்பட்டு, இப்பெயரே நாளடைவில் கரிவலம்வந்தநல்லூர் என பேச்சு வழக்கினில் மருவிப்போனது.

பாண்டி நாட்டுப் பஞ்சபூதத் தலங்களுள் இது நெருப்பு என்னும் அக்கினி தலமாக போற்றப்படுகிறது. அடிமுடியைக் காணமுடியாத தீப்பிழம்பாய், நான்முகனுக்கும், திருமாலுக்கும் தம்மை வெளிப்படுத்தி காட்சியளித்தார் சிவபெருமான் என்பது வரலாறு. அதனால் இங்கு பால்வண்ணநாதரின் கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் சோதி வடிவமாகத் திகழும் லிங்கோத்பவர்த்திருமேனி காட்சியளிக்கிறது.

இங்குள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இதுவும் பஞ்சபூதங்களுள் நெருப்பை குறிப்பதாய் உள்ளது.

இந்தத் தீர்த்தத்தோடு, சுக்கிர தீர்த்தம், சூல தீர்த்தம், தேவ தீர்த்தம் என பிற தீர்த்தங்களும் இங்கு காணப்படுகிறது.

இக்கோயிலைக் கட்டிய அதிவீரராம பாண்டிய மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால், அவர் இறந்த பிறகு, இத்தல சுவாமியாகிய பால்வண்ணநாதரே அவருக்கு ஈமச்சடங்குகளை செய்வித்து திதியும் கொடுத்துள்ளார் என்று கூறுப்படுகிறது. இந்நிகழ்வு இத்திருக்கோயிலில் வருடாந்திர விழாவாக நடைபெறுகிறது.

தேவாரப்பாடல்கள் பெறவில்லை என்றாலும் ஸ்ரீவரதுங்கராமபாண்டியர், காஞ்சிபுரம் சிதம்பரநாத முனிவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், நமச்சிவாயக் கவிராயர், கல்லல் குகமணிவாசக சரணாலய சுவாமிகள், காளமேகப்புலவர், சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயர், எட்டிசேரி திருமலை வேற்கவிராயர், சங்குப்புலவர், மலையடிகுறிச்சி பிச்சையா நாவலர், கரிவலம்வந்தநல்லூர் ராமசாமி பிள்ளை ஆகியோர் இத்தல ஈசனை பாடியுள்ளனர்.

திருக்கருவை முகலிங்க வெண்பா அந்தாதி, திருக்கருவை பால்வண்ணத்தந்தாதி, திருக்கருவை நீரோட்டக வெண்பா அந்தாதி, கருவை நாயகமாலை, திருக்கருவை வருக்கமாலை, திருக்கருவை இரட்டை மணிமாலை, திருக்கருவை பால்வண்ணப்பத்து, திருக்கருவை ஒப்பனையம்மன் வருகைப்பத்து, திருக்கருவை ஒப்பிலாவல்லியம்மன் பத்து, திருக்கருவை முப்பிடாதியம்மன் பத்து, திருக்கருவை வீரசண்முகர் வருக்கச் சமயமாலை, திருக்கருவை வீரசண்முகர் வாழ்த்துப் பாமாலை, திருக்கருவை தலபுராண போற்றிக் கலிவெண்பா., ஆகியவைகள் இத்தலத்தின் மீது பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.

அகத்தியர், காகபுசுண்டர், லட்சுமணன், பிரம்மா, விஷ்ணு, சூரியன், சந்திரன், வருணன், சுக்கிரன் ஆகியோர் வழிபாடு செய்த தலம்.

தேவர்களை வெல்வதற்காக அசுரர்கள் பொருட்டு சுக்கிரன் தடாகம் அமைத்து வழிபாடு செய்ய., தேவர்கள் சிவனிடம் முறையிட, ஈசனோ சிறுவன் வேடத்தில் தடாகத்தில் மூழ்கி எழ, சுக்கிரன் சிறுவனை விரட்ட வனத்திற்குள் ஓடி மறைந்த இடத்தில் பால்வண்ணநாதராக இறைவன் சுக்கிரனுக்கு காட்சியளித்து அருள்புரிந்தார்.

இந்திரஜித்தை கொன்ற பாவம் தீர லட்சுமணன் லிங்கம் அமைத்து இங்கு வழிபட்டுள்ளார். இது மேற்கு திசை நோக்கியபடி இலக்குமணேஸ்வரர் சன்னதியாக அமையப்பெற்றுள்ளது.

இந்த கரிவலம்வந்தநல்லூர் கோவில், அருகிலுள்ள பிரசித்தி பெற்ற தலமான சங்கரன்கோயிலுக்கும் முந்தைய புராதனமான கோயில் என்று கூறப்படுகிறது. இங்குள்ள பால்வண்ணநாதர் பூஜைக்கு சங்கரன்கோயில் நந்தவனத்திலிருந்துதான் மலர்கள் எடுத்துச்செல்வார்கள் என்றும் கூறுகிறார்கள்.

முக்கிய திருவிழாக்கள்:

KarivalamVandaNallur Amman adorned beautifully with colourful flower garlands
சித்திரை பெளர்ணமி அன்று தீர்த்தவாரியும் தொடர்ந்து வசந்த உற்சவமும் விமரிசையாக நடைபெறும்.

ஆவணி மாதம் இங்கு ஆவணித்தபசு விழா கொடியேற்றமாகி, பத்தாம் நாள் தேரோட்டத்துடன் விமரிசையாக நடைபெறும். இதில் பதிமூன்றாம் நாள் ஆவணி மாத பூராடம் நட்சத்திரத்தன்று ஒப்பனையம்பிகை ஒற்றைக்காலில் தவக்கோலம் பூண்டு தபசு இருக்க, சுவாமி இடபத்தில் முகலிங்க ரூபமாக காட்சியளித்து, பின்னர் யானை வாகனத்தில் பால்வண்ணநாதராக காட்சியளித்து அம்மையை ஆட்கொள்கிறார்.

பங்குனி மாதம் இங்கு சுவாமிக்கு கொடியேற்றமாகி, தேரோட்டத்துடன் பன்னிரெண்டு நாள் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இதுதவிர ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, மாசி மாத சிவராத்திரி ஆகியவைகளும் முக்கிய விழாக்களாக நடைபெறும்.

KarivalamVanthaNallur idols procession taking place with priests performing aarthi and a crowd of devotees offering prayers

திருநெல்வேலி மாவட்டம்., சங்கரன்கோவில் நகரிலிருந்து இராசபாளையம் செல்லும் வழித்தடத்தில் கரிவலம்வந்தநல்லூர் அமையப்பெற்றுள்ளது.

-திருநெல்வேலிக்காரன்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 2HR 4MIN(110KM)
  • Tirunelveli jn - 1hr 33min (73.9km)
  • Thiruchendur - 2hr 58min(144km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ஜானகி அரவிந்த்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram