Piravipini Theerkum Thirukutralam

திருக்குற்றாலம் கோவில்
திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின், திரிகூடமலை அடிவாரத்தில் சிவமதுகங்கை அருவியின் கரையில், சங்கு வடிவில் அமையப்பெற்றுள்ளது திருக்குற்றாலம் திருக்கோவில்.

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டின் 14-தலங்களுள் ஒன்றாக விளங்குவது., திருக்குற்றாலம் குழல்வாய்மொழி அம்பாள் உடனாய திருக்குற்றாலநாதர் திருக்கோவில்.

சுவாமி பெயர்: திருக்குற்றாலநாதர்.
அம்மை பெயர்: குழல்வாய்மொழி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: குறும்பலா மரம்.
தீர்த்தங்கள்: தேனராகிய சிற்றாறு, சிவமதுகங்கை, வடவருவி.
சிறப்பு சன்னதிகள்: ஆதி குறும்பலா, பராசக்தி பீடம், சித்ரசபை, வாசுகி சன்னதி, பஞ்சதரிசன சன்னதி, மணக்கோலநாதர் சன்னதி, அகத்தியர் சன்னதி.

திருக்கோவில் வரலாறு:


கயிலையில் அம்மை அப்பன் திருக்கல்யாண வைபவத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இறைவன் அகத்தியரை நோக்கி தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் பொதிகையில் வாழக்கடவாய் என ஆணையிட்டார்.

அப்போது முனிவர் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தையும் திருநடனத்தையும் காண இயலாதே என வருந்த இறைவன் பொதிகை மலைச்சாரலில் தம்மை பூசித்து வழிபட தம் திருக்கல்யாண கோலத்தை காட்டியருளுவோம் என அருள்புரிந்தார்.

அகத்தியரும் அவ்வாறே தென்திசை நோக்கி வரும் வேளையில் இக்குற்றாலம் வந்தபோது இப்பகுதி வைணவ ஆதிக்கத்திலும், குற்றாலம் விஷ்ணு கோவிலாகவும் இருந்தது. எனவே உடம்பெல்லாம் விபூதி பூசி, கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து வந்த சைவரான அகத்திய முனிவரை இத்திருக்கோவிலுக்குள் செல்ல வைணவர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் மனவருத்தத்துடன் அங்கிருந்து மேற்கு திசை நோக்கி நடந்து திருவிலஞ்சி அடைந்து குமரனை தரிசித்து குற்றாலத்தில் நடந்த அவமானத்தை கூறி முறையிடுகிறார். உடனே குமரப்பெருமான் வஞ்சகரை வஞ்சத்தால் தான் வெல்ல வேண்டும், எனவே நீர் வைணவராக வேடம் பூண்டு திருக்கோவிலுக்குள் செல்க என மொழிந்தார். அகத்தியர் இலஞ்சியில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து, குமரன் கூறிய படியே குற்றாலத்திற்கு மீண்டும் திரும்பி வந்து, அருவியில் நீராடி தன் மேனி முழுவதும் திருநாமம் இட்டு, வைணவ அடியாராக வேடம் பூண்டு உள்ளே செல்ல, அவரை மிகப்பெரிய வைணவ அடியாரென்றே நம்பிய வைணவர்கள் அவருக்கு சகல மரியாதைகளும் செய்து வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச்சென்றனர்.

கருவறைக்குள் சென்ற அகத்தியர், அர்ச்சகர்களை பூஜைக்குரிய திரவியங்களை எடுத்துவர அனுப்பிவிட்டு, நின்ற கோலத்தில் காட்சியளித்த பெருமாளை வணங்கி, அவரின் தலையில் கை வைத்து அழுத்தி திருமேனி குறுக குறுக என வேண்டியபடியே குறுக்கி சிவலிங்கமாக மாற்றினார். அன்று முதல் இக்கோயில் சிவத்தலமாக உள்ளது என்று வரலாறு கூறுகின்றது.

சுவாமி குற்றாலநாதர்:


இங்குள்ள இறைவன் திருக்குற்றாலநாதர்., கருவறையில் லிங்கத்திருமேனியாய் காட்சியளிக்கிறார். அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கும் பொருட்டு இவருக்கு இன்றளவும் மூலிகை தைலத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது.

மேலும் இப்பெருமான் அருவிக்கரையில் வீற்றிருப்பதால், இவருக்கு குளிர் காரணமாக தலைவலி, சுரம் வருவதை தவிர்க்கும் பொருட்டு (இறைவன் மீது கொண்ட அன்பு மிகுதியால்) அர்த்தசாம பூசையின் போது மூலிகைகள் கலந்த கசாயம் நிவேதனம் செய்யப்படும். இதற்கு குடுனி நிவேதனம் என்று பெயர்.

இந்த தைலத்தையும், குடுனியையும் பிரசாதமாக பெற்று பயன்படுத்தினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

அகத்தியர் வைணவ கோவிலாக இருந்த இவ்வாலயத்தை சைவ கோவிலாக மாற்றும் போது, விஷ்ணுவிற்கு வலப்புறம் இருந்த ஸ்ரீ தேவி சன்னதியை குழல்வாய்மொழியம்மை சன்னதியாகவும், இடப்புறம் இருந்த பூ தேவி சன்னதியை பராசக்தி சன்னதியாகவும் மாற்றியதாக வரலாறு.

அம்மை குழல்வாய்மொழி:
இங்குள்ள அம்மை குழல்வாய்மொழி. வடமொழியில் வேணுவாக்வாகினி என்றும் அழைக்கப்படுகிறாள். (மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழலில் இருந்து எழும் இசையை காட்டிலும் இவளுடைய குரல் இனிமை வாய்ந்ததாக பொருள்).

கருவறையில் அம்மை நின்ற திருக்கோலம். வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடக்கரத்தை கீழே தொங்கவிட்டபடியும் புன்முறுவல் பூத்த முகத்தவளாய் காட்சிதருகிறாள்.

தரணி பீடம்:
அம்மையின் சக்தி பீடங்களுள் இத்தலம் “தரணி பீடம்” என்று சிறப்பிக்கப்படுகிறது. இங்கே பராசக்தி, ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்ற நம்பிக்கை நிலவுவதால் இந்த பீடத்துக்கு, தரணி பீடம் (தரணி – பூமி) என்று பெயர் ஏற்பட்டது. ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் உள்ளதாக நம்பிக்கை. எனவே, பெளர்ணமியன்று இரவுப்பொழுதில் இங்கு நவசக்தி பூஜை பிரசித்தமாக நடத்தப்படுகிறது.

பராசக்தி உக்கிர சொரூபமாக விளங்குவதால், இவளுக்கு எதிரே காமகோடீஸ்வரர் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாத பெளர்ணமி மற்றும் புரட்டாசி நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்துக்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. நம் பிரார்த்தனைகள் பலிக்கும்.

மணக்கோலநாதர்:
இத்திருக்கோவில் மேற்கு பிரகாரத்தில் கிழக்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது மணக்கோலநாதர் சன்னதி. இங்கு திருமணக்கோலத்தில் அம்மையப்பரும், தாரைவார்க்கும் கோலத்தில் மகாவிஷ்ணுவும், திருமணக்காட்சியை தரிசித்தபடி அகத்தியர் மற்றும் பிருங்கி மகரிஷி ஆகியோரும் காட்சித்தருகின்றனர்.

சித்ரசபை:
நடராஜர் திருநடனம் புரியும் பஞ்சசபைகளுள் இங்கு சித்திரசபை அமையப்பெற்றுள்ளது. இதன் மேற்கூரை முழுவதும் அழகிய செப்புத்தகட்டால் வேயப்பட்டு, அதன் உட்பகுதி முழுவதும் அழகிய மூலிகை வர்ணத்தால் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இயற்கை மூலிகை ஓவியங்களால் வரையப்பட்ட இந்த சபைக்குள் மூலிகை ஓவிய வடிவிலேயே நடராஜர் காட்சிதருகிறார்.

மேலும் இங்கு இத்திருக்கோவில் வரலாற்றை விளக்கும் வகையில் அகத்தியர் விஷ்ணுவை குறுக்கி சிவனாக மாற்றிய வரலாறும், திருவிளையாடல் புராண நிகழ்வுகள், ஈசனின் பல்வகை தாண்டவங்கள் என அனைத்தும் இயற்கை மூலிகை ஓவிய வடிவிலேயே தீட்டப்பட்டுள்ளது சிறப்பம்சம்.

திருக்கோவில் அமைப்பு:


மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், அருவிக்கரையில் கிழக்கு திசை நோக்கி, சங்குவடிவத்தில் அமையப்பெற்றுள்ளது இக்கோவில்.

மூன்றுநிலை கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் வலப்புறம் பெரிய மண்டபம் அமையப்பெற்றுள்ளது. அதனைதாண்டி சென்றால் குடவருவாயிலுக்கு தென் பக்கம் தல விநாயகர் சன்னதியும், வட பக்கம் சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளது.

குடவருவாயில் வழியாக உள்ளே சென்றால் சுவாமி சன்னதியும், அவருக்கு வலப்புறம் குழல்வாய்மொழியம்மை சன்னதியும், இடப்புறம் பராசக்தி பீடம் சன்னதியும் என மூன்று பிரிவுகளாக காட்சியளிக்கிறது இத்திருக்கோவில்.

சுவாமி சன்னதி முன்னே வெளிபிரகாரத்தில் நான்கு கால் மண்டபம், பலிபீடம், கொடிமரம், நந்தி சன்னதி மற்றும் திரிகூட மண்டபம் ஆகியவை அமையப்பெற்றுள்ளது.

சுவாமி சன்னதி முன்புற மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளும், தென்திசை நோக்கியபடி இத்தலத்திற்குரிய நடராஜரான சித்ரசபாபதியும் காட்சியளிக்கிறார்கள்.

இக்கோயிலில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி சன்னதிகளும், செண்பக விநாயகர், அம்பல விநாயகர், ஆறுமுக நயினார், தட்சணாமூர்த்தி, கன்னி விநாயகர், சூரியன், அறுபத்துமூவர், வான்மீகிநாதர், சம்புகேஸ்வரர், அண்ணாமலைநாதர், திருமூலநாதர், ராமலிங்கர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், கைலாசநாதர், துர்க்கை, பராசக்தி, சைலப்பர், வல்லப விநாயகர், நன்னகர பெருமாள், பாபநாசர்-உலகம்மாள், நெல்லையப்பர்-காந்திமதியம்மாள், மணக்கோலநாதர், நாறும்பூநாதர், சகஸ்ரலிங்கம், பால்வண்ணநாதர், சொக்கலிங்கர்-மீனாட்சி, சாஸ்தா, மதுநாதேஸ்வரர்-அறம்வளர்த்த நாயகி, சோமலிங்கர், அகஸ்தியர், வாசுகி, மகாலிங்கம், சங்கரலிங்கம், காசிவிஸ்வநாதர், பெரிய ஆண்டவர் சாஸ்தா, சிவாலய முனிவர், பைரவர் உபசன்னதிகளும் உள்ளன.

திருக்கோவில் சிறப்புக்கள்:


தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டின் 14-தலங்களுள் ஒன்றான இங்குள்ள தல விருட்சமான குறும்பலா மரத்துக்கும் ஒரு தனிப்பதிகம் பாடப்பட்டுள்ளது சிறப்பம்சம் ஆகும்.

முற்காலத்தில் திருஞானசம்பந்தர் இங்கே வந்தபோது, அருவிக்கரையிலுள்ள கோயிலில் உள்ள குறும்பலாநாதரைக் கண்டார். “குறும்பலா பதிகம்” பாடினார் என்றும், இதே தலத்தில் பிறிதோர் இடத்தில் உள்ள கூத்தர் கோயில் இறைவனை “குற்றாலப் பதிகம்” பாடினார் என்றும் கூறப்படுகிறது.

இக்கோயில் பிற கோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையப்பெறாமல், சங்கு வடிவில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பாகும். திருக்கோவிலை மேலிருந்து பார்த்தால் சங்கு வடிவில் காட்சியளிப்பதை உணரலாம்.

“கு” என்றால் பிறவிப்பிணி என்றும், “தாலம்” என்றால் நீக்குதல் என்றும் பொருள். ஆக “கு+தாலம்=குத்தாலம்” . பிறவிப்பிணி நீக்குவதால் குத்தாலம் என்று வழங்கி குற்றாலமாக மருவியது என்றும், இப்பகுதி முன்னர் குறுகிய ஆலமரங்கள் அடர்ந்த வனமாக இருந்ததால் “குறுஆலம்” என்று வழங்கி குற்றாலமாக மருவியது என்றும் கூறப்படுகிறது.

இக்கோவிலின் தல விருட்சம் குறும்பலா மரம். இந்த குறும்பலாமரத்தின் கீழ் “ஆதிகுறும்பலாநாதர்” பீட வடிவில் காட்சி தருகிறார். இந்த மரத்தில் காய்க்கும் பலா பழங்களை யாரும் பறிப்பதில்லை. இதிலுள்ள பலாச்சுளைகள் அனைத்தும் சிவலிங்க தோற்றத்தில் இருக்கும். இதனை பழமையான நூல்களுள் ஒன்றான குற்றாலக்குறவஞ்சி, “”சுளையெலாஞ் சிவலிங்கம்” என்று சிறப்பித்து கூறுகிறது. இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் வந்திருந்து., குற்றாலத்துக்கு ஒரு பதிகமும், இந்த குறும்பலாவுக்கு ஒரு தனிப்பதிகமும் பாடியிருக்கிறார்.

மேலும் இங்கு சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்த ஆதி குறும்பலா மரத்தின் காய்ந்த பகுதிகளும் தனியறையில் பாதுகாக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

இத்தலத்திலுள்ள தீர்த்தங்களில் வடவருவியும், தேனருவி என்ற சிவமதுகங்கையும் சிறப்புடையவை. வடவருவியில் மூழ்கினாரது பாவம் கழுநீராகப் பிரிந்து ஓடும் என்பது இத்தல ஐதீகம்.

இத்திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் சுவாமி சன்னதி பின்புறம் ஒரு மேற்கு பார்த்த சிவன் சன்னதி இருக்கிறது. இங்கு தான் அர்ஜீனன் தான் காசியில் இழந்த சம்புடம் என்னும் பொருளை மீட்டெடுத்தான். அந்த சன்னதியின் முன் நின்று, ஒரே இடத்திலிருந்தபடியே மேற்கு திசை நோக்கிய லிங்கம், மேற்கு முக விநாயகர், சுவாமி விமானம், தேனருவியாகிய சிற்றாறு, திரிகூடமலை ஆகிய ஐந்தையும் ஒரு சேர தரிசிக்கலாம்.

முக்கிய திருவிழாக்கள்:


இங்கு சித்திரை விசு, ஐப்பசி விசு மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழாக்கள் கொடியேற்றமாகி பத்து நாட்கள் வரை விமரிசையாக நடைபெறும்.

பெரும்பாலான சிவாலயங்களில் நடைபெறும் உற்சங்களில் ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம், இங்கு சித்திரை விசு, ஐப்பசி விசு, மார்கழி திருவாதிரை ஆகிய மூன்று திருவிழாக்களிலும் ஐந்தாம் நாள் தேரோட்டம் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும்.

இது தவிர திருவிழா காலங்களில் இங்கு நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி, வெள்ளை சாத்தி அலங்காரங்களும், தாண்டவ தீபாராதனையும் பிரசித்தி பெற்றது ஆகும்.

இங்கு நடைபெறும் சித்திரை விசு மற்றும் ஐப்பசி விசு திருவிழாவிற்கு இங்கிருந்து 5-கி.மீ தொலைவில் உள்ள இலஞ்சி கோவில் குமாரர் குற்றாலத்திற்கு எழுந்தருள்வதும் விசேஷம்.

இதுதவிர மார்கழி திருவாதிரை விழாவில் நடராசர் சித்ரசபை எழுந்தருளி அபிஷேகம் மற்றும் திரிகூட மண்டபத்தில் எழுந்தருளி தாண்டவ தீபாராதனையும் விமரிசையாக நடைபெறும்.

கார்த்திகை சோமவாரம், மாசி சிவராத்திரி ஆகியவையும் இங்கு விசேஷம்.

சைவத்தில் நால்வராலும் போற்றி பாடப்பட்ட இத்திருக்கோவிலை தரிசித்தால் பிறவிப்பிணி நீங்கி முக்தி கிட்டும் என்பது திண்ணம்.

அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம்., தென்காசி நகரிலிருந்து மேற்கே சுமார் 5 கி. மீ தொலைவில். திருநெல்வேலி நகரிலிருந்து மேற்கே சுமார் 52 கி மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது.

-திருநெல்வேலிக்காரன்

About

Avatar

Check Also

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா “திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி” என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.