திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-13ல்.,
42. ஆழ்வார்திருநகரி என்ற திருக்குருகூர்ச் சருக்கம்.
44. பிரம்ம தீர்த்தச் சருக்கம்.
46. திருச்செந்தூர்ச் சருக்கம்.
47. சங்கமத்துறை தீர்த்தச் சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
42. ஆழ்வார்திருநகரி என்ற திருக்குருகூர்ச் சருக்கம்:
திருமால் கோவில் கொண்டிருக்கிற ஒரு ஸ்தலம் திருக்குருகூர் ஆகும். இங்கு திருமாலுக்கு இணையாக அழ்வார் எண்ணப்படுவதால், இதற்கு அழ்வார்திருநகரி என்றும் ஒரு திருப்பெயர் உண்டு. தாமிரபரணியின் தென் கரையில் அமைந்திருக்கும் இந்தத் ஸ்தலத்தில் சக்கரத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இந்தத் தீர்த்தத்தில் நீராடி சக்கர பாணியைத் தொழுதால், வல்வினைகள் நீங்கப் பெற்று வைகுந்த பதவி பெறலாம். அத்திரி, அகத்தியர், பிருகு, மார்க்கண்டேயர் ஆகிய முனிவர்களும் இங்கு வந்து நீராடி மாயவனை வணங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க இந்த தீர்த்தத்திற்குக் கிழக்கே பஞ்ச கேத்ரம் என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. அந்தத் தீர்த்தத்தில் நீராடி ஆதிநாதனை வணங்குவோர் அனைவரும் அமர வாழ்வு பெறுவர் என்று கூறிச் சூதமா முனிவர் அடுத்துள்ள நவலிங்கபுரத்தை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
திருக்குருகூருக்கு நேர் கிழக்கே நவலிங்கபுரம் என்னும் ஒரு ஸ்தலம் இருக்கிறது. இந்த ஸ்தலத்தில் விஞ்சையர் இசைக்கும் வீணையின் நாதமும், விப்பிரர் ஊதும் வேத ஒலியும், முனிவர்கள் செய்யும் வேள்வி ஒலியும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். யோகிகள், ஞானிகள், சித்தர்கள், கந்தர்வர் ஆகியோர் இங்கே வந்து தாமிரபரணியில் நீராடிச் செல்வர்.தாமிரபரணியின் தென்பால் உள்ள நவதீர்த்தங்களும் இங்கே வந்து, புதுமையாகத் தோன்றியுள்ள நவலிங்கத்தை வணங்கி வழிபட்டுச் செல்லும். மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து நீராடி, இந்த நவலிங்கத்தை வணங்கி வந்தால், நவ நிதியமும் பெறுவர். தாமிரபரணியின் இரு கரைகளிலும் ஒன்பது ஸ்தலங்களில் திருமால் கோவில்கள் அமைந்திருக்கின்றன. இவை நவத்திருப்பதிகள் என்று விளங்குகின்றன. ஏகாதசியில் விரதம் இருந்து, துவாதசியில் நீராடி நவதிருப்பதிகளுக்கும் சென்று வணங்கி வந்தால் பிறவிப் பெருங்கடலை நீந்திப் பெருமானின் திருவடிப் பேற்றினை பெறுவர் என்று சொல்லிச் சூதமா முனிவர் பிரம்ம தீர்த்தம் பற்றிச் சொல்கிறார்.
44. பிரம்ம தீர்த்தச் சருக்கம்:
சிவபெருமானை மதிக்காமல் சிறுவிதி தக்கன் செய்த வேள்விக்குச் சென்று வந்த பாவத்தைத் தொலைப்பதற்காக பிரம்ம தேவன் எத்தனையோ வேள்விகளைச் செய்தான், எங்கெங்கோ தவம் செய்தான். ஆயினும் அப்பாவம் தொலையவில்லை. கயிலாயம் சென்று சிவபெருமானைக் கண்டு காரணம் கேட்டான். பிரம்ம தேவா.! செய்ய வேண்டியதைச் செய்யாமல், செய்யக் கூடாததைச் செய்யலாமா? உரிய இடத்தைச் சேராமல் உலகம் எல்லாம் சுற்றி என்ன பயன்? நீ உடனே தாமிரபரணிக்குச் செல். அதன் கரையில் எமக்கு ஒரு கோவில் உருவாக்கி, லிங்கப் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணியில் நீராடிப் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்து வழிபட்டு வா, உன் பாவம் தொலையும் என்று இறைவன் கூறுகிறார்.
இறைவன் கூறியபடியே பிரம்மன் தாமிரபரணிக்கு வந்தான். தாமிரபரணியில் நீராடி, வேணுவன நாதரையும், வேணுவன நாயகியையும் வணங்கி நவலிங்கபுரத்தை அடுத்து ஒரு வளமான இடத்தில், ஆகம விதிப்படி ஒரு கோவிலை உருவாக்கி, லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனையும், பூஜை புனஸ்காரமும் செய்து வணங்கி வந்தான். சில காலம் கழித்துச் சிவபெருமான் அவனுக்கு காட்சித் தந்தார். பிரம்ம தேவா.! உன் பாவம் எல்லாம் தொலைந்து விட்டது, நீ பிரம்மலோகம் போகலாம் என்று அருள்புரிகிறார். அப்போது பிரம்மா தேவன் பெருமானிடம் ஒரு வரம் கேட்கிறார். இறைவா..! இந்தத் ஸ்தலமும், தீர்த்தமும் எனது பெயரிலேயே பிரம்மேஸ்வரம், பிரம்ம தீர்த்தம் என்றும் விளங்க வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு இறைவனும், பிரம்ம தேவா.! ஸ்தலமும், தீர்த்தமும் மட்டும் அல்ல எமது பெயரும் உன் பெயரால் விளங்கும் என்று அருளிச் சென்றார். அதன்படி பிரம்மேஸ்வரம் என்றும், பிரம்ம தீர்த்தம் என்றும், ஈசன் பெயர் பிரமேஸ்வரர் என்றும் வழங்கி வருகிறது. இத்தலத்துக்கு கிழக்கே தாமிரபரணியின் தென் கரையில், அக்கினி தீர்த்தம், இலட்சுமி தீர்த்தம், வேத தீர்த்தம், அலரி தீர்த்தம், வாயு தீர்த்தம், வன்னி தீர்த்தம், நரசிங்க தீர்த்தம் என்றும் பல தீர்த்தங்கள் இருக்கின்றன என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்ததாக சோமேஸ்வர தீர்த்தச் சருக்கம் பற்றிச் சொல்கிறார்.
45. சோமேஸ்வரர் சருக்கம்:
சந்திரன் குரு பத்தினியுடன் தகாத உறவு கொண்டான். இதையறிந்த குரு, "சயரோகம்" பிடிக்கட்டும் என்று சந்திரனுக்குச் சாபம் கொடுத்து விட்டார். சந்திரன் சிவபெருமானிடம் சென்று முறையிட்டான். முறைகெட்டவனின் முறையீட்டை முக்கண்ணர் கேட்டார். அவன் குற்றத்தை மன்னித்து, சாபம் நீங்க ஒரு வழி சொன்னார். தாமிரபரணிக்கு போ.! அதில் நீராடு சாபம் நீங்கும் என்று சொன்னார். இறைவன் ஏவலின்படி, சந்திரன் தாமிரபரணிக்கு வந்தான். அதன் புதுப்புனலில் நீராடினான். அங்கேயே ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். பின் வானுலகம் சென்றான். அவன் வழிபட்ட இறைவனின் பெயர் சோமேஸ்வரர் என்றும், அந்தத் ஸ்தலம் சோமேஸ்வரம் என்றும், தீர்த்தம் சோம தீர்த்தம் என்றும் வழங்குகின்றன என்று கூறிச் சூதமா முனிவர், நைமிசாரணிய முனிவர்களே.! அடுத்து தீராத வினை எல்லாம் தீர்க்கும் திருமுருகன் கோவில் கொண்டிருக்கும் திருச்செந்தூர் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லத் தொடங்கினார்.
46. திருச்செந்தூர்ச் சருக்கம்:
"ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்று எட்டு யுகங்களுக்கு மாளாமல் ஆள வேண்டும்" என்ற வரத்தைப் பெற்றுத் தேவர்களைக் கொடுமை செய்த சூரபத்மனைத் சம்காரம் செய்த சுப்பிரமணியக் கடவுள் கோவில் கொண்டிருக்கின்ற, செந்திலம்பதி என்றும், திருச்சீரலைவாய் என்றும் விளங்குகின்ற திருச்செந்தூரின் பெருமை கடலினும் பெரிது. அந்தச் செந்தூர்க் கடலில் மூழ்கி எழுந்து, பின் நாழிக்கிணற்றில் நன்னீராடி, ஆறுமுகனின் அடிபணியும் அனைவரும் அமர வாழ்வு பெறுவர். வருணன் தாமிரபரணியைத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பி, ஆறுமுகப் பெருமானை நோக்கித் தவம் செய்தான். இதை அறிந்த அகத்தியர் வருணனின் விருப்பப்படியே தாமிரபரணியை அவனுக்கு திருமணம் செய்வித்து ஆறுமுகப்பெருமானிடம் அழைத்து வந்தார். ஆறுமுகப் பெருமானும் அந்தத் தம்பதியை வாழ்த்தி அருள் புரிந்தார்.
பின்னர் அகத்திய முனிவர் ஆறுமுகப்பெருமானை முருகா.! மெய் ஞானத்தையும், மூன்று தமிழையும் எனக்குப் போதித்து அருள வேண்டும் என்று வேண்டினார். கந்தனும் கருணைகொண்டு அகத்திய முனிவரின் தலைமேல் தம் திருவடியை வைத்து, மூன்று தமிழையும், சகல ஞானத்தையும் போதித்து அருளினார். அன்று முதல் தவமுனி தமிழ் முனியாகவும் ஆனார் என்று கூறிச் சூதமா முனிவர் தொடர்ந்து சங்கமத்துறை தீர்த்தம் பற்றிச் சொல்லுகிறார்.
47. சங்கமத்துறை தீர்த்தச் சருக்கம்:
பொதிகை மலையில் புறப்பட்ட தாமிரபரணி ஆறு பல புண்ணிய தீர்த்தங்களை கொண்டு பாவங்களை போக்கி பயிர்களுக்கும், உயிர்களுக்கும் உரமூட்டி, கலை, இலக்கிய பண்பாடு காத்து, நிறைவாக வங்கக் கடலில் சென்று சங்கமம் ஆகிறது. வருணனை மணந்த தாமிரபரணி வங்கக்கடலில் வருணனோடு வளங்கள் பல பெற்று வாழ்கிறாள் என்று சூதமா முனிவர் "தாம்பிரபன்னி" பற்றிச் சொல்லுகிறார்.
48. தாமிரபரணிச் சருக்கம்:
உமையவள் பொற்கரத்தில் தோன்றி, கயிலையில் கவின்மிகு காவினில் உலவிய தாமிரபரணி என்னும் நதி, சிவபெருமானின் ஆணைப்படி அகத்திய முனிவரின் கமண்டலத்தில் சேர்ந்து அகத்திய முனிவரால் தெற்கே கொண்டு வரப்பெற்று, பொதியை மலையில் விடப் பெற்றுப் பூமியெல்லாம் நடைபோட்டுப் பொன் கொழிக்கச் செய்தாள். பிற நதிகளுக்கு இல்லாத பெருமை, இந்த தாமிரபரணிக்கு உண்டு.
கோதாவரி மாயையிடம் தோன்றியது, கங்கை கலைமானிடம் தோன்றியது, காவிரி திருமகளிடம் தோன்றியது, ஆனால் தாமிரபரணி உமாதேவியிடம் தோன்றியது. தாமிரபரணியின் நீரின் உளுந்து மூழ்கும் அளவு நீரை உண்டால் கூட, காய்ச்சிய இரும்பில் பட்ட நீரைப்போல் பாவம் காணாமல் போய்விடும். முன் பிறவியில் புண்ணியம் செய்த உயிர்கள் மட்டுமே தாமிரபரணியில் சராசரங்களாகப் பிறக்க முடியும். புண்ணியம் செய்தோருக்கு மட்டுமே தாமிரபரணியின் தான பானங்கள் எளிதில் கிடைக்கும். தாமிரபரணியில் நீராடியோருக்கு முக்தி கிடைக்கும். தரிசனம் செய்தோருக்குத் தவப்பலன் கிடைக்கும். தொடுவோருக்கு ஞானம் உண்டாகும் என்று வேதங்கள் சொல்கின்றன.
நெருப்பின் நடுவில் நின்று நீண்ட காலம் தவம் செய்த பலனும், அறுபதினாயிரம் ஆண்டு காலம் கங்கையில் நீராடிய பலனும், தாமிரபரணியில் ஒரு பொழுது நீராடினால் கிடைக்கும். உயிர்கள் செய்த பாவங்களை எல்லாம் போக்கி உயர் கதி தருவதால், இந்த தாமிரபரணி தாய்க்குப் "பாவநாசினி" என்ற ஒரு சிறப்புப் பெயரும் உண்டு. உலகில் உள்ள நதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகத்தில் மட்டுமே பலன் தரும். ஆனால் இந்த தாமிரபரணி ஆறு எல்லா யுகங்களிலும் பலன் தரும். தாமிரமும், முத்தும் இன்றும் தாமிரபரணி தந்து கொண்டு தான் இருக்கிறாள். தாமிரபரணியின் பெருமை பற்றி எல்லா வேதங்களாலும், எல்லாச் சாத்திரங்களாலும், எல்லாப் புராணங்களாலும், எல்லா ஆகமங்களாலும் கூட முழுமையாகச் சொல்லிவிட முடியாது. தாமிரபரணியின் கதையைக் கேட்டால், குழந்தை பேறு இல்லாதோர் குழந்தையைப் பெறுவர். கன்னியர் நல்ல கணவனைப் பெறுவர். நோயுடையார் நோய் நீங்கப் பெறுவர். பாவிகள் பாவம் நீங்கப் பெறுவர் என்று சொன்ன சூதமா முனிவர் மேலும் , "கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே..! இவ்வாறு தாமிரபரணியின் பெருமையை வியாச முனிவர் அவருடைய மகன் சுகமுனிவருக்குச் சொன்னார். அது கேட்ட சுகமுனிவர், உடனே தென்பொதியை மலைக்குச் சென்று, தாமிரபரணி தொடங்குகின்ற இடத்தில் இருந்து அது கடலில் கலக்கும் சங்கமத் துறை வரை உள்ள அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி சிவனையும் திருமாலையும் வணங்கினார் என்று சொன்னார் சூதமா முனிவர்.
அதனைக்கேட்ட நைமிசாரணிய முனிவர்கள், சூதமா முனிவரை வணங்கி , முனிவர் பெருமானே..! தாமிரபரணித் தாயின் தன்மையையும், தகைமையையும் அற்புதமாகச் சொன்னீர்கள். அமுதமாக இருந்தது. இனி அகத்திய முனிவர், உலோபா முத்திரை அம்மைக்குச் சொன்ன வேணுவன ஸ்தலத்தின் பெருமையைக் கேட்க விரும்புகிறோம். தயவு செய்து சொல்லியருள வேண்டுகிறோம் என்று வேண்டினார்கள். அதன்படியே சூதமா முனிவர் கூறத் தொடங்கினார்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 14