திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-14ல்.,
49. அகத்திய முனிவர் உலோபாமுத்திரைக்கு ஸ்தல மகிமை உரைத்த சருக்கம்.
50. அகத்தியருக்கு மணக்கோலம் காட்டியருளிய சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
49. அகத்திய முனிவர் உலோபாமுத்திரைக்கு ஸ்தல மகிமை உரைத்த சருக்கம்:
கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே.! குறுமுனி கூறியது போல் என்னால் கூற இயலாது. ஆயினும் அவரை வணங்கி என்னால் இயன்றவரை கூறுகிறேன். தேவர்களும், முனிவர்களும், விஞ்சையரும், ஞானிகளும் எப்பொழுதும் வேணுவனத்தில் குழுமி இருப்பர். அங்கே சகல தீர்த்தங்களும் அறங்களும் அமைந்திருந்தன. மறையவர் சாலைகளும், அடியவர் சாலைகளும், மாடங்களும், கோபுரங்களும், மணி மேடைகளும் அமைந்திருந்தன. தாமிரபரணியில் நீராடிப் புராரியை வணங்க பொருத்தமான ஸ்தலம். அதனால் தான் தமிழ்முனி தமது துணை உலோபாமுத்திரையோடு அங்கு சென்று ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்தார்.அகத்திய முனிவரும், உலோபா முத்திரையும் ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அகத்திய முனிவர் தமிழுக்கு இலக்கணம் செய்தார். சொல், எழுத்து, பொருள், யாப்பு, அணி என்று ஐந்து இலக்கணமும் செய்தார். பல மருத்துவ நூல்களும் செய்தார். அந்நாளில் ஒரு நாள், உலோபாமுத்திரை அகத்திய முனிவரிடம் , சுவாமி.! தென்றல் தவழும் தென்பொதியை மலையை விட்டு விட்டு, இந்த வேணுவனத்தில் வந்து, ஆசிரமம் அமைத்த காரணம் என்ன? என்று கேட்கிறாள். அதற்கு அகத்தியர் பெண்ணே.! வேதங்களே இங்கு வந்து மூங்கில்களாக முளைத்திருப்பதாலும், விமலனார் வேணுவன நாதராக வந்து தோன்றியிருப்பதாலும், அம்மை உமையவளே காந்திமதியாக வந்து அறம் செய்து அன்னம் வழங்குவதாலும், அந்தணரின் வேள்வி அட்டியின்றி நடப்பதாலும், உலகெல்லாம் அழியும் ஊழிக்காலத்திலும் அழியாமல் இருப்பதாலும், இந்த வேணுவனம் என்னும் திருநெல்வேலி சிறப்புடையது. அதனால் இங்கு வர விரும்பினேன் என்று கூறி மேலும் தொடர்ந்தார். பெண்ணே.! இத்தலத்தின் மகிமையை முன்பு ஒருநாள் சதாசிவன் சனகாதி முனிவர்களுக்குச் சொன்னார். அதை நான் இப்பொழுது உனக்குச் சொல்கிறேன் என்று சொல்லி அகத்தியர் மேலும் சொன்னார். மற்ற ஸ்தலங்களில் பல வருடங்கள் மந்திரம் சொல்லிப் பெறுகின்ற பலனை, இங்கு ஒரு முறை சொன்னாலே பெறலாம். அந்தணர்களுக்கு பூமி தானம் செய்தவர்கள், அந்தப் பூமியில் விளைகின்றன நெல்லில் - ஒரு நெல்லுக்கு ஒரு கோடி வருடம் வாழ்வர்.
திருமூலநாதர் முன்னாலோ, தக்ஷிணாமூர்த்தி முன்னாலோ, நடராசர் முன்னாலோ, வேண்ட வளர்ந்த நாதர் முன்னாலோ நின்று மனம் ஒன்றி, அஞ்செழுத்து மந்திரத்தை ஊதினால் இருவினையும் நீங்கி இன்ப வீடு எய்துவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் இவை மூன்றும் இங்கே சிறப்பாக உள்ளன. இங்குள்ள மனிதர்கள் எல்லோரும் தேவர்கள், பெண்கள் எல்லோரும் தேவதைகள், மரங்களும் தாவரங்களும் வேதங்கள், பறவைகள் எல்லாம் புராணங்கள், விலங்குகள் எல்லாம் கலைகள், இங்கு அன்னம் இட்டவர் குபேர செல்வம் பெறுவர், வெற்றிலை பாக்கு கொடுத்தார் விமலன் அருளை பெறுவர், இவ்வாறு பேறு பெற்றோர் எண்ணிக்கை ஆகாய நட்சத்திரங்களிலும் அதிகம், ஆற்று மணலினும் அதிகம். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வை சொல்கிறான் கேள்.
வயதான ஓர் ஏழை வேதியன், அழுக்கேறிய கிழிந்த ஆடையைப் போர்த்திக் கொண்டு, ஒரு கையில் பஞ்சாங்கமும், ஒரு கையில் ஊன்று கோலும் வைத்துக் கொண்டு, பல ஊர்களும் சுற்றி அலைந்து களைத்து இந்த வேணுவனத்திற்கு வந்தான். மூங்கில் மூட்டின் அடியில் அமர்ந்து இளைப்பாறினான். அடுத்த நிமிடமே உற்சாகம் ஏற்படுவதை உணர்ந்தான். பின் பொற்றாமரை தடாகத்தில் தண்ணீர் அருந்தினான். உணவு உண்டது போன்ற திருப்தி ஏற்பட்டது. இது ஒரு சிறப்பான ஸ்தலமாக இருக்கும் போல் தெரிகிறதே என்று எண்ணி மீண்டும் மூங்கில் மூட்டின் கீழ் வந்து அமர்ந்தான். அப்போது அங்கே வணிகன் ஒருவன் ஒரு விலைமாதருடன் வந்தான். அந்த வணிகன் மிகவும் மோசமானவன், ஈவு இரக்கம் இல்லாதவன். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதை நம்பாதவன். சுத்த அயோக்கியன். முன் செய்த ஒரு சிறு தவப்பயனால் இந்தத் தலத்துக்கு வந்து சேர்ந்தான். அவனும் அந்த பொண்ணும் வேதியன் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து சற்றுத் தள்ளி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த முதிய வேதியன், வணிகனிடம் சென்று, அய்யா.! மிகவும் தாகமாக இருக்கிறது கொஞ்சம் வெற்றிலை பாக்குத் தாரும் என கேட்டான். வெற்றிலையும் இல்ல.! பாக்கும் இல்ல.! சென்று வாருங்கள் என்று வெடுக்கென்று சொல்லி விட்டான். உடனே அவன் அருகிலிருந்த அந்தப் பெண், பாவம்.! தாகமாக இருக்கிறது என்று கேட்கிறார், ஒரு வெற்றிலையும், ஒரு பாக்கும் கொடுங்கள் என்று சொல்கிறாள். அவள் சொல்லைத் தட்ட முடியாத வணிகன், வேதியருக்கு அரை வெற்றிலையும், அரை பாக்கும் கொடுத்தான். வெற்றிலை பாக்கைப் பெற்று கொண்ட வேதியன் அவர்களை வாழ்த்தி விட்டுச் சென்றான். பின்னர் வணிகனும் அவனுடன் இருந்த விலைமாதாகிய பெண்ணும் பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையும் வணங்கிச் சென்றனர். இருவரும் இணை பிரியாது பல்லாண்டுகள் வாழ்ந்து மறைந்தனர்.
திருநெல்வேலி ஸ்தலத்தில் வைத்து அந்த விலைமாது, வேதியனுக்கு வெற்றிலை பாக்கு கொடு என்று சொன்னதால், மறு பிறவியில் அவள் இந்திராணியாக பிறந்தாள். அவளுடைய சொல்லை கேட்டு வெற்றிலை பாக்கு கொடுத்ததால் வணிகன் இந்திரனாக பிறந்தான். இத்தகைய பெருமைக்குரிய ஸ்தலம் இந்தத் திருநெல்வேலித் ஸ்தலம். இந்த ஸ்தலத்தை நினைத்து இத்தலத்தில் உயிர் விட்டாலும் அவர்கள் அமர வாழ்வு பெறுவர். ஆகையால் தான் இத்தலத்தில் ஆசிரமம் அமைத்தோம் என்று உலோபாமுத்திரை அம்மைக்கு அகத்திய முனிவர் திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலித் தலத்தின் பெருமையைச் சொன்னார். பின்னர் பெண்ணே.! இங்கு தான் இறைவன் மணக்கோலம் காட்டியருள்வதாகச் சொல்லியுள்ளார், ஆகையால் வா கோவிலின் உள்ளே செல்வோம் என்று சொல்லி உலோபாமுத்திரை அம்மையை கோவிலின் உள்ளே அழைத்துச் சென்றார் என்று சூதமா முனிவர் இறைவன் திருமணக்கோலம் காட்டி அருளியது பற்றியும் கூறுகிறார்.
50. அகத்தியருக்கு மணக்கோலம் காட்டியருளிய சருக்கம்:
இறைவன் வாக்குப்படி அகத்தியர் திருநெல்வேலியில் காத்திருந்தார். இறைவா.! திருநெல்வேலிப்பதியில் வைத்துத் திருமணக்கோலம் காட்டுவதாக திருவாய் மலர்ந்தருளினீர். திருமணம் ஆகி ஏழு நாட்கள் ஆகியும் இன்னும் வரவில்லையே என்ன காரணம் என்றும் தெரியவில்லையே என்று அகத்திய முனிவர் வருந்திக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான் - உமையம்மையோடு இடப வாகனத்தில் காட்சித் தந்தார். இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில் அகத்தியர் ஆடிப் பாடி துதித்தார். அப்போது சங்கங்கள் முழங்கின. தடாரி, பேரிகை, குடமுழவு, முரசம் ஆகியவை ஆர்த்தன. நாரதரும், தும்புருவும் வீணை மீட்டினர். மேனகை, ஊர்வசி, திலோத்தமை, ரம்பை ஆகியோர் ஆடி வந்தனர். கின்னரர், கிம்புருடர், கெருடர், கந்தர்வர் ஆகியோர் பாடினார். தேவர், முனிவர், சித்தர் ஆகியோர் சூழ்ந்து வந்தனர். தேவமாதர்கள் கவரி வீசினர், இடபக் கொடிகள் வானமெங்கும் காட்சியளித்தன. பூதங்கள் மணிக் குடை பிடித்தன. வானவர்கள் பூ மழை பொழிந்தனர். ஆயிரம் கோடி சூரியன் ஒன்று கூடி வந்தது போன்ற பேரொளிச் சுடராகச் சிவபெருமான் அம்மை உமையவளோடு அகத்திய முனிவருக்குத் திருமணக் கோலம் காட்டியருளினார். அந்தக் கண் கொள்ளாத காட்சியைக் கண்ட அகத்திய முனிவர் ஆனந்த கண்ணீர் சொரிய அம்மை - அப்பன் இணையடிகளில் வீழ்ந்து வணங்கினர். திருவடியில் விழுந்து வணங்கிய அகத்திய முனிவரை, வாரியெடுத்து நெஞ்சாரத் தழுவினார் இறைவன். உலோபாமுத்திரையும், தாமிரபரணி தாயும் இறைவனின் திருவடியில் வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றனர். பின் மூவரும் இறைவனை போற்றி துதித்தனர். இதனால் திருவுள்ளம் கனிந்த சிவபெருமான், அகத்தியா.! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றார்.
இறைவா.! இன்று காட்டியருளிய இந்த மணக்கோலத்தை ஆண்டு தோறும் இதே நாளில் இங்கு எல்லோருக்கும் காட்டியருள வேண்டும். இந்தக் காட்சியை காணுகின்ற அன்பர்களுக்கெல்லாம் நற்கதியை நல்க வேண்டும் என்று கேட்டார் அகத்திய முனிவர். அதற்கு இறைவனும் அவ்வாறே அருளினோம் என்று கூறுகிறார். அப்போது திருமால், பிரம்மன், இந்திரன், வாயு, வருணன், அக்கினி, எமதருமன், ஆகியோரும் வணங்கினர், அவர்களுக்கும் வேண்டிய வரங்களைக் கொடுத்து, இறைவன் அம்மையோடு கோவிலுக்குள் கொலு வீற்றிருந்தார். அப்போது திருமால், திசைமுகன், இந்திரன், அக்கினி , வாயு, வருணன், எமதருமன் ஆகிய எல்லோரும் அகத்தியரைப் போற்றி புகழ்ந்தார்கள். முக்கண்ணருக்கு இணையான முனிவர் பெருமானே.! தங்களால்தான் இறைவனின் திருமணக்கோலம் இந்த திருநெல்வேலிப்பதியில் வைத்து எங்களுக்கு கிடைத்தது. ஆகையால் இந்த திருநெல்வேலி பதிக்கு நாங்கள் ஏதாவது நன்மை செய்ய வேண்டும். நீங்கள் சிவனுக்கு இணையானவர் உங்களுக்கு எங்களால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை.! ஆகையால் இந்த திருநெல்வேலிப்பதிக்கு நாங்கள் ஏதாவது செய்கிறோம் என்று சொல்லி, திருமகளின் கருணை திருநெல்வேலிக்கு என்றென்றும் உண்டு என்று திருமால் சொன்னார். கலைமகளின் அருளும், வேதங்களின் ஓசையும் என்றென்றும் இங்கே நிலைத்திருக்கும் என்று பிரம்மன் சொன்னான். இடையூறு இல்லாத வகையில் என்றென்றும் இங்கே மழை பொழியும் என்று இந்திரன் சொன்னான். நீரால் எக்கேடும் வராது.! நீர் நிலைகள் என்றென்றும் நிறைந்திருக்கும் என்று வருணன் சொன்னான். கடுங்காற்றும் கொடுங்காற்றும் என்றும் இங்கே காலடி எடுத்து வைக்காது என்று வாயு சொன்னான். நெருப்பால் எக்கேடும் இங்கே நிச்சயம் நேராது என்று அக்கினி சொன்னான். வா என்று அழைக்கும் வரை இங்கு வரவே மாட்டேன் என எமதருமன் சொன்னான். அவ்வாறு அத்தனை பேரும் அவரவர் தன்மைக்கு ஏற்ப வரங்களை வழங்கிச் சென்றனர் என்று சூதமா முனிவர் சொல்லி, நைமிசாரணிய முனிவர்களே.! இந்தத் திருநெல்வேலி ஸ்தலத்திற்கு வேறு சில பெயர்களும் இருக்கின்றன என்று சொல்லிச் சொன்னார்.
அறம்வளர்த்தபுரம், அனவரததானபுரம், கன்னிப்பதி, காமக்கோட்டம், கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம், சர்வதீர்த்தபுரம், தருமஷேத்ரம், தட்சிண கயிலை, தாருகாவனம், தென் காஞ்சி, தேவதாரு வனம், நெல்வேலி, சாலிவாடி, பரப்பிரம்மபுரம், மெய் சித்தி தலம், வேய்வனம், வேணுவனம் ஆகிய பெயர்களும் உண்டு. இந்தப் பெயர்களில் ஏதாவது ஒரு பெயரைச் சொன்னாலே போதும் சொன்னவர் நற்கதி பெறுவர். இங்கு இருந்தோர், இருப்போர் ஆகியோர் வேண்டும் வரத்தைக் கொடுப்பதே எமக்கு வேலை.! நீயும் எம்முடன் இங்கேயே இரு.! என்று இறைவன் அருளினார்.இறைவனின் அருளாணையைக் கேட்ட அகத்திய முனிவர், உலோபாமுத்திரை அம்மையுடன், அங்கேயே தங்கி இருந்து இறைவனுக்கு வேண்டிய பணிவிடைகளை எல்லாம் செய்து வந்தார்கள் என்று சொல்லிச் சூதமா முனிவர், நைமிசாரணிய முனிவர்களே.! இந்தத் திருநெல்வேலி பதியை பற்றி இன்னும் பல சிறப்புக்கள், பெருமைகள் இருக்கின்றன. அவற்றையும் சொல்கிறேன் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக கயிலாயச் சிறப்புகள் பற்றி கூறத் தொடங்கினார்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 15