திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-12ல்.,
36. குட்டத்துறைத் தீர்த்தச் சருக்கம்.
38. மங்களேஸ்வரத் தீர்த்தச் சருக்கம்.
39. பிதிர் தீர்த்தச் சருக்கம்.
40. திருவைகுண்டத் தீர்த்தச் சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
36. குட்டத்துறைத் தீர்த்தச் சருக்கம்:
நீதி நெறி தவறாமல் காசி மாநகரை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வினைப்பயனால் குட்ட நோய் ஏற்பட்டது. ராஜ வைத்தியம் பல செய்து பார்த்தும் அவனது நோய் தீரவில்லை. கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்கி நோய் தீர வேண்டும் என்று வேண்டினான் பல ஆண்டுகள் ஆகியும் பலன் இல்லை. மனம் உடைந்து போனான். ஒருநாள் வழக்கம் போல கங்கையில் நீராடிக் காசி விஸ்வநாதரை வணங்கி, இறைவா.! என்னால் தாங்க முடியவில்லை இன்று என் நோயைக் குணமாக்கித் துன்பத்தை போக்கு, இல்லையேல் உன் முன்னாலையே என் உயிரை போக்கிக் கொள்வேன் என்று சொல்லி அவர் முன்னாலேயே அமர்ந்தும் விட்டான். அப்போது காசி விஸ்வநாதர் அவனுக்கு காட்சி கொடுத்து, மன்னா.! தென்திசையில் தமிழ் வளர்த்த பொதியை மலையில் தோன்றிய புண்ணிய நதியான தாமிரபரணி, ஐந்திணை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களிலும் பாய்ந்து செந்நெல், கரும்பு ஆகிய பயிர்களை வாழ வைப்பதோடு, கலை, பண்பாடு, இலக்கியம், ஆன்மிகம் ஆகிய தமிழ் உயிர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தாமிரபரணியின் கரையில் சிந்துபூந்துறை என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. நீ அங்கு சென்று அந்தத் தீர்த்தத்தில் நீராடி, தொல்லை எல்லாம் தீர்த்தருளும் எல்லையில்லாக் கருணை கொண்ட நெல்லையப்பரை வணங்கு, உன் நோய் தீரும் என்று கூறி அருளுகிறார்.
காசி விஸ்வநாதரின் கருணை மொழியைக் கேட்டுக் காசி மன்னன் தனது பரிவாரம் புடை சூழ திருநெல்வேலி மாநகருக்குப் புறப்பட்டு வந்தான். சிந்துபூந்துறைக்குக் கிழக்கே ஓர் இடத்தில் நீராடினான். பின் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி திருமூலமகாலிங்கப் பெருமானையும், சுவாமி நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி தன்னுடைய குட்ட நோயைத் தீர்த்து அருள வேண்டும் என்று வேண்டி கொண்டு அங்கேயே சிறிது காலம் தங்கியும் இருந்தான். ஒருநாள் அவன் தாமிரபரணியில் நீராடி விட்டு வெளியே வந்த போது அவனை பிடித்திருந்த குட்ட நோய் சுவாமி நெல்லையப்பர் கருணையால் அவனை விட்டு நீங்கியது. இறைவன் அருளால் வினை பொடிப்பொடியாக ஆவது போல, ஈசன் அருளால் குட்ட நோய் முற்றிலும் நீங்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த காசி மன்னன், ஆடிப்பாடி நெல்லையப்பரை வணங்கி, அவருக்கு அனைத்து விதமான அபிஷேகங்களும் செய்வித்து பூஜைகள் செய்து இறுதியாக தனது இருப்பிடமான காசி மாநகருக்கு தன் பரிவாரங்களுடன் திரும்பி சென்று விட்டான். காசி மன்னன் நீராடி குட்ட நோய் நீங்கப்பெற்றதால் சிந்துபூந்துறை அருகே உள்ள இந்த தீர்த்தக்கட்டம் குட்டத்துறை தீர்த்தம் என்னும் பெயர் பெற்றது என்று சொல்லிச் சூதமா முனிவர், சடாயு தீர்த்தத்தின் பெருமைகள் பற்றிக் கூறத் தொடங்கினார்.
37. சடாயு தீர்த்தச் சருக்கம்:
கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே, ஆதியில் திருமால் இராமனாக அயோத்தி மன்னன் தசரதனுக்கு புதல்வனாக பிறந்து சீதையை மணந்து, தாய் சொன்ன சொல்லைக் கேட்டு வனத்துக்கு வந்த காலத்தில்,இராவணன் வஞ்சகமாகச் சீதையைக் கவர்ந்து செல்ல, அதைக் கண்ட சடாயு இராவணனுடன் சண்டையிட, இராவணன் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்திக் குற்றுயிரும், குலை உயிருமாக ஆக்கிவிட்டுச் சென்று விட, இராமனை கண்டு நடந்த விவரத்தை கூறிவிட்டுத்தான் சாக வேண்டும் என்று உயிரைப் பிடித்து இழுத்து நிறுத்திக் கொண்டிருக்க, சீதையைத் தேடி வந்த இராமன் சடாயுவைக் கண்டான். இராமனைக் கண்ட சடாயு, இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதை சொல்லித் தன்னைப் பற்றியும் சொன்னான். பின் நிம்மதியாக தனது உயிரையும் விட்டு விடுகிறான். இராமன் சடாயுவுக்கு அந்த இடத்திலேயே ஈமக் கடன்களைச் செய்து தாமிரபரணியில் நீராடி அதன் கரைகளில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து ஆகம விதிப்படி பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்து பரம்பொருளே இங்கேயே அமர்ந்து தென்புலத்தார்களுக்கு நற்கதி அருள வேண்டும் என்று வேண்ட சிவபெருமானும் அவ்வாறே ஆகட்டும் என்று கூறி அருளுகிறார். அந்த தலம் இராமேசநல்லூர் என்றும் அங்குள்ள தீர்த்தம் "சடாயு தீர்த்தம்" என்றும் வழங்கி வருகிறது. இந்த ஸ்தலத்துக்கு வடக்கே தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள ஒரு கற்பாறையில் இராமன் தனது பாதத் தடத்தினை பதித்து வைத்திருக்கிறார் என்று சொல்லிச் சூதமா முனிவர் மங்களேஸ்வர தீர்த்தச் சருக்கம் பற்றி சொல்லத் தொடங்கினார்.
38. மங்களேஸ்வரத் தீர்த்தச் சருக்கம்:
பாஞ்சாலியை பாண்டவர்கள் ஐவரும் மணந்து கொண்டதால், அவர்களுக்கு ஒரு வரைமுறையான வாழ்க்கையை நாரதர் ஏற்படுத்திக் கொடுத்தார். முதல் வருடம் தருமனுடனும், அடுத்து வீமனுடனும், அடுத்து அர்ஜுனனுடனும், அடுத்து நகுலனுடனும், ஐந்தாம் வருடம் சகாதேவனுடனும் வாழ்க்கை நடத்துவாள். இவ்வாறு ஐந்து வருடங்கள் முடிந்த பின்னர், ஆறாம் ஆண்டு தருமனிடம் இருந்து தருமனிடம் இருந்து தொடங்கி கொள்ளுங்கள். ஆனால் உங்கள் ஐவரில் ஒருவருடன் பாஞ்சாலி தனிமையில் இருப்பதை எவராவது பார்த்தால், அவர் உடனே ஆயுதம் துறந்து தவ வேடம் தாங்கி ஓராண்டு காலம் தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்று நாரத முனிவர் ஏற்பாடு செய்தார். இந்த ஏற்பாட்டை அவர்கள் ஆறுபேரும் மனதார ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.
ஒருநாள் ஒரு அந்தணன் ஓடோடி வந்து பார்த்தனைப் பார்த்து, என் பசுவையும் கன்றையும் கள்வர்கள் கவர்ந்து செல்கின்றனர். நீ தான் வந்து மீட்டுத் தரவேண்டும் என்று கூறி முறையிடுகிறான். அந்தணன் சொன்னதை கேட்ட அர்ஜுனன், பயப்பட வேண்டாம் உமது பசுவையும், கன்றையும் நான் மீட்டுத் தருகிறேன் என கூறி தனது காண்டீபம் என்னும் வில்லை எடுப்பதற்காக குடிலுக்குள் நுழைந்தான். அங்கே தருமனும், பாஞ்சாலியும் தனிமையில் இருந்தனர். பார்த்தனாகிய அர்ஜுனன் அதனை பார்த்து விட்டான். ஆயினும் அந்தணனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக காண்டீபத்தை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே வந்து கள்வர்களை விரட்டிப் பிடித்து அந்தணனின் பசுவையும், கன்றையும் மீது வந்து அந்தணனிடம் ஒப்படைத்தான். பின்னர் குடிலுக்கு வந்து நாரத முனிவர் கூறியதை போல ஆயுதம் துறந்து, காவியுடை தரித்து, ஐவரிடமும் விடைபெற்றுத் தீர்த்த யாத்திரை புறப்பட்டு விட்டான். தீர்த்த யாத்திரை புறப்பட்ட அர்ஜுனன் கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, வைகை போன்ற நதிகள் அனைத்திலும் நீராடி விட்டு தாமிரபரணிக்கு வந்து சேர்ந்தான்.
தாமிரபரணியில் நீராடி நெல்லையப்பர், காந்திமதி அம்மனை வணங்கிப் பாண்டிய மன்னனின் தலைநகரமான மணவை மாநகருக்குச் சென்றான். அங்கும் தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி மங்களேஸ்வர பெருமானை வணங்கி, பாண்டிய மன்னனின் அரசபைக்கு சென்றான். அங்கு பாண்டியன் மகளை திருமணம் செய்து கொண்டான். ஒருநாள் மங்களேஸ்வர தீர்த்தத்தில் நீராடச் சென்றான். அப்போது ஒரு முதலை அவனது காலை கவ்வி இழுத்தது. இடக்காலை கவ்வி இழுக்க, வலக்காலால் முதலையை உதைத்தான் அர்ஜுனன். உடனே அந்த முதலை ஒரு கந்தர்வனாக மாறி, அர்ஜுனா.! ஒரு முனிவரின் சாபத்தால் நான் முதலையாகக் கிடந்தேன். இன்று உன்னால் அந்த சாபம் நீங்கப் பெற்றேன் என்று சொல்லித் தன்னுலகம் சென்றான்.
அர்ஜுனன் மங்களேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அதற்கு முறைப்படி பூஜை செய்து வணங்கி பல வரங்களும் பெற்று இந்திரபிரஸ்தம் சென்றான். நைமிசாரணிய முனிவர்களே.! இந்த மங்களேஸ்வர தீர்த்தத்திற்கு மேற்கே செப்பறைத் துறை என்ற ஒரு துறை இருக்கிறது. அந்த துறையில் நீராடி அழகிய கூத்தப் பெருமானை வணங்கினால் பிறவா நெறியைப் பெறுவர் என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்ததாக தென்புலத்தார் தீர்த்தச் சருக்கம் பற்றி கூறுகிறார்.
39. பிதிர் தீர்த்தச் சருக்கம்:
திருமால் கோவில் கொண்டிருக்கின்ற அழகர் கோவில் என்னும் ஒரு ஸ்தலம் தாமிரபரணி கரையில் உள்ளது. குற்றால மலையின் வழியாக ஓடி வரும் சித்ரா நதி இந்த ஸ்தலத்தில் தாமிரபரணியுடன் கலக்கிறது. இந்த ஸ்தலத்தில் உள்ள பிதிர் தீர்த்தத்தில் நீராடி, அங்கேயே கோவில் கொண்டிருக்கிற கோவிந்தனை வணங்கினால் வைகுண்ட பதவி கிட்டும். அங்கே கோதண்ட ராமன் அமைத்த கோவிலும், கோதண்டத்தால் உருவாக்கிய ஒரு தீர்த்தமும் உண்டு. இந்த இடத்தில் தான் கயத்தாறும் வந்து தாமிரபரணியில் கலக்கிறது. இதன் தென்பாகம் உள்ள தெக்கண தீர்த்தத்தில் நீராடி ருத்திரேஸ்வரரை வணங்கினால் தீராத வினையெல்லாம் தீரும். இதற்கு தெற்கே வியாக்கிரபாத முனிவர் நீராடிய வியாக்கிர தீர்த்தம் இருக்கிறது. இதன் அருகே வியாச முனிவர் நீராடி வழிபாட்டு வரம் பெற்ற வியாச தீர்த்தம் இருக்கிறது என்று சொல்லிச் சூதமா முனிவர் திருவைகுண்டத் தீர்த்தம் பற்றி சொல்லத் தொடங்கினார்.
40. திருவைகுண்டத் தீர்த்தச் சருக்கம்:
பல வளங்களும் நிறைந்த பசுமையான நகரம் திருவைகுண்டம். இங்கே திருமால் கள்ளர்பிரானாக கோவில் கொண்டிருக்கிறார். இது ஒரு சிறப்பான ஸ்தலம். இந்த தலத்தில் இருக்கின்ற திருவைகுண்டத் தீர்த்தத்தில் நீராடிக் கைலாசநாதரை வணங்கினால் திருக்கையிலாய பதவியை பெறலாம். இங்குள்ள கள்ளர்பிரானை வணங்கினால் திருவைகுண்ட பதவியை பெறலாம். இத்தகைய சிறப்பான ஸ்தலம் இது என்று கூறிய சூதமா முனிவர் அடுத்ததாக காந்தீஸ்வரத் தீர்த்தம் பற்றி சொல்லத் தொடங்குகிறார்.
41. காந்தீஸ்வரச் சருக்கம்:
கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே.! திருவைகுண்டத் தீர்த்தத்தின் கீழ்ப்பக்கம் காந்தீஸ்வரத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. சித்தர்களில் மிகவும் சிறந்த சித்தரான கருவூர்ச் சித்தர், பல தீர்த்தங்களிலும் நீராடி விட்டு வீடுபேறு பெற விரும்பி இந்த ஸ்தலத்தில் உள்ள காந்தீஸ்வர தீர்த்தத்திற்கு வந்தார். இதில் நீராடி இதன் கரையில் அமர்ந்து யோக முறைப்படி இறைவனை வழிபட்டார். இறைவனும் அவருக்கு காட்சித் தந்தார். இறைவனைக் கண்ட சித்தர் எல்லையற்ற மகிழ்வு கொண்டு, இறைவனின் திருவடியில் வீழ்ந்து வணங்கினார். அப்போது இறைவன் அவரிடம், என்ன வரம் வேண்டும் என கேட்க பிறவா வரம் வேண்டும் என சித்தர் கேட்கிறார். அவ்வாறே தந்தோம் என சுவாமியும் அவருக்கு வரம் அருள, இறைவா.! காந்தி (ஒளி) மையமாக விளங்குவதால் இன்று முதல் நின் பெயர் காந்தீஸ்வரர் என்றும், இந்த ஸ்தலம் காந்தீஸ்வரம், இங்குள்ள தீர்த்த கட்டம் காந்தீஸ்வரத் தீர்த்தம் என்றும் விளங்க வேண்டும் என்று கருவூரார் இறைவனை வேண்டிக் கேட்டுக்கொள்கிறார். அதனையும் அவர் விருப்பப்படியே இறைவன் தந்தருள அன்று முதல் அப்படியே விளங்கி வருகிறது என்று கூறி முடித்த சூதமா முனிவர் அடுத்ததாக திருக்குருகூர் பற்றி சொல்லத் தொடங்கினார்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 13