Logo of Tirunelveli Today
English

சித்திரை வருடப்பிறப்பின் சிறப்புகள்(Salient Features of Chithirai New Year)

Image of South Indian Traditional Pooja arrangement for Tamil New Year (Chithirai New Year)

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 14 - 4 - 2023 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று தமிழ் வருடப்பிறப்பான ஷோபகிருது ஆண்டு(2023-24) பிறக்கிறது. தமிழ் மாதத்தின் முதல் நாள், சித்திரை, தமிழ் ஆண்டின் முதல் நாளைக் குறிக்கிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த நாளை தமிழ் புத்தாண்டாக பாரம்பரியத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு பொதுவாக வசந்த உத்தராயணத்த்தில் வரக்கூடிய சிறப்பு தினமாகும்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என இயற்கையோடு ஒன்றி அழகாய்காட்சி தரும் தமிழ் மண்ணை போற்றும் விதமாக சித்திரை வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களும் சேர்ந்து ஆசி கூற, விளைந்த நெல் மணிகளை வணங்கும் உழவுத் திருநாள் விழாவாகவும் சித்திரை வருடப்பிறப்பு தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சித்திரை பிறந்த வரலாறு(History of Chithirai Month)

படிப்படியாக தமிழன் செய்த சாதனைதான் எத்தனை ! சங்க கால இலக்கியத்தை வழிவகுத்தான். வானுயர்ந்த கலை கட்டிட கோவில்களை உருவாக்கினான். அடுத்ததாக நம் முன்னோர்கள் தமிழ் ஆண்டுகளை 60 ஆக கணக்கிட்டனர். இயற்கையை முதலாக வைத்து சூரியன் நுழையும் நாள் எது! என்று ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மேஷராசி என ஆரம்பித்து தமிழ் பஞ்சாங்கத்தை கண்டுபிடித்தனர். 27 நட்சத்திரங்களை வகுத்தனர். பவுர்ணமி எந்தெந்த நட்சத்திரங்களின் சேருகிறதோ அந்தந்த ஆண்டுக்கு என்று ஒரு பெயர் வைத்தனர். அதன்படி இந்த வருடம் பிறந்த தமிழ் ஆண்டு ஷோபகிருது வருடம் ஆகும். இவ்வாறு ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் பெயர் நிலைபெற்றதை அடுத்து மாதங்கள் பிரித்து முழு சந்திரனுடன் கூடிய சித்திரை நட்சத்திரம் சேர்ந்து இருக்கும் மாதத்தை சித்திரை மாதம் என்று ஜாதக வல்லுனர்கள் பெயர் சூட்டினர். இவ்வாறுதான் சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பு சித்திரை மாதமாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

பர்வத ராஜனின் தெய்வ திருமண கோலாகல ஏற்பாடு (Parvatha Rajan's deity wedding gala arrangement)

சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு இமாலய மலையில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்பு தினமாகும். பர்வத கிரி என்பது கைலாய மலையை அழைக்கக்கூடிய மற்றொரு பெயராகும். அந்த மலையை ஆட்சி செய்த பர்வதராஜன் மகளாக பார்வதி தேவி பிறக்க, அவள் வளர்ந்து பெரியவள் ஆனதும் சிவனுக்கு மனம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். ஹிமாலய மலைக்கு விஜயம் செய்தார். சிவபெருமானை வணங்கி அவரை தம்முடைய அரண்மனைக்கு அழைத்து ரத்தின சிம்மாசனத்தில் அமர வைத்தார். மிகவும் கோலாகலமாக புரோகிதரை ஏற்பாடு செய்து சாஸ்திர முறைப்படி பூஜை செய்து வெகுமதி அளித்தார். திரி புராந்தகனாகிய மாப்பிள்ளை, பிரம்மன் விஷ்ணு, தேவலோக தேவதைகள் அனைவரோடும், சம்பந்தி பரிவாரங்களுடன் கோடகோபுர மணிமண்டபத்துக்கு செல்கின்றார்.

தேவதுந்துபி, பேரி முதலான மங்களகரமான வாத்தியங்கள் முழங்க, அக்னியை வளர்த்து, மந்திரங்கள் ஆயிரம் ஓதி, முறைப்படி தேவதைகளுக்கு அவிசை ஆகுதி அளித்து திருமண சம்பிரதாயங்கள் முறைப்படி அனைத்தும் நிகழ, பர்வதராஜன் சிவபெருமானுக்கு பார்வதிதேவியை உதக தாரையுடன் தானம் செய்கின்றான்.

பார்வதி தேவி தம்முடைய கழுத்தினில் முன்பே தரித்திருந்த வாசம் மிகு தாமரை பூ மாலையை எடுத்து சிவப்பெருமானின் கழுத்தில் அணிவிக்க, அந்த தருணத்தில் ஆகாயத்தில் இருந்து நாலாபுரமும் தேவர்கள் மலர் மாறி பொழிகின்றனர்.

திருக்கல்யாணம் நடப்பதற்கான அத்தனை வேலைகளும் நடக்கையில் அனைவரும் ஆனந்தத்தோடு அந்த காட்சியை கண்டு களிக்கின்ற வேளையில் ஆகாயவாணி பூலோகத்தில் பிராணிகள் அனைத்தும் ஒரு பக்கமாக கூடி விட்டதால் தென் திசையானது உயரமாக கிளம்பி உள்ளது. வெகு சீத்திரத்தில் அந்த பாரத்தை சரிப்படுத்தா விட்டால் அதனால் தீங்கு விளையக் கூடும் என்று கூறுகிறாள்.

இதைக் கேட்டதும் சிவபெருமான் ஒரு நிமிடம் ஆலோசித்து தன்னுடைய பக்தனாகிய அகஸ்திய முனிவரை அழைக்கிறார் .

பூலோகத்தில் தெற்கு பகுதியானது உயரே எழும்பி இருப்பதால் அந்த ஆபத்திலிருந்து பிராணிகளை காப்பாற்ற வேண்டும் ஆதலால் உம்முடைய மனைவியாகிய லோபாமுத்திரையுடன் தென் திசை நோக்கி புறப்பட்டு போகுமாறு கூற… திருமணக் காட்சியை பார்க்க முடியவில்லை என்று அகஸ்தியர் வருந்துகிறார்.

‘தென்திசையில் பொதிகை மலையில் எங்கள் திருமண கோலக்காட்சியை நீங்கள் அங்கிருந்தவாறு கண்டு மகிழலாம். ஆதலால் கவலை வேண்டாம்’ என்று சிவபெருமான் சொல்ல அதை ஏற்று அகஸ்திய முனிவர் பூமிக்கு புறப்படுகின்றார்.

அகஸ்திய முனிவருக்கு கிடைத்த அற்புத தாமரை மலர்(Sage Agastya received a wonderful lotus flower)

அகஸ்திய முனிவர் பூமிக்கு புறப்படும் சமயத்தில் ‘பரிசுத்தமான பராசக்தியால் அளிக்கப்பட்ட தாமரை மாலையானது தங்களுக்கு ஸ்நானபானம் போன்ற கிருத்தியங்களுக்கு கருவியாக பலன் அளிக்கக்கூடும்.மேலும், தீர்த்த (ஜல) ரூபம் பெறும்போது, தடை இல்லாமல் மேன்மை உண்டாகப் போகிறது’ எனக் கூறி சிவபெருமான்அகஸ்திய முனிவருக்கு பார்வதி தேவியின் திருக்கைகளால் அணிந்த தாமரை மலரை கொடுத்து வாழ்த்தி அனுப்புகிறார்.

உலகின் நன்மைக்காக அகஸ்திய முனிவரும் சிவபெருமான் சொல்வதை ஏற்றுக்கொண்டு அவர் கொடுத்த மலர்ந்த தாமரை மலரை தம் இரு கைகளாலும் பெற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் ஆகாயத்திலிருந்து மலர் மழை பொழிய முனிவர்களும், தேவர்களும், சித்தர்களும், மகரிஷிகளும் மகிழ்ச்சி பிரவாகத்தோடு ‘இது நன்கு இது நன்கு’ என்று புகழ்ந்து கோஷமிட்டனர்

நெய்தல் மலைமகள் மாலை தந்தாள். சீமந்த ரேகையில் அணியக்கூடிய செந்தூரத்தை சராவதி தந்தாள் காவிரியும் துங்கபத்திரையும் கண்களுக்கு மைகொடுத்தனர்.. புண்ணியம் மிகுந்த கோதாவரி கஸ்தூரியை கொடுத்தாள். முக்தா, மணி மதி, பூர்ணாபூர்ணை, கோரை, குமுதவதி, சியா மாவதி, சந்திரி சேனை, கடனை, கடகை, அருணை இவர்கள் அனைவரும் மகாமேருவின் 10 புத்திரிகள் ஆவர். இவர்கள் பார்வதி தேவிக்கு தோழியராக வந்தனர். இந்த சகல தேவதைகளின் சரீரத்தில் இருந்து வெளிப்பட்ட சக்தி அபரித ஒளியாக எங்கும் பிரவேசித்தது.

அகஸ்தியர் இடமிருந்த தாமரை மலர் பெண்ணாக மாறிய அதிசயம்

அனைவரும் இந்த அற்புத காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அகஸ்திய முனிவரின் கையில் இருந்த அந்த தாமரை மலரானது ஒரு அழகிய பெண்ணாக மாறியது. அவளுடைய தேகத்தின் சிவப்பு நிறத்தை கண்டு இவளை தாமிரபரணி என்று கூறினர்.சிலர் தாமிரை என்றும், சிலர் மணி கர்ப்பிணி என்றும், வேறு சிலர் பரை(உத்தமி) என்றும் கூறினர். அந்த கன்னிகையானவள் புடம் வைத்த தங்கத்தின் நிறத்தை விஞ்சும் திருமேனியுடன் தக, தக வென்று ஜொலிப்பவளாகவும், மாணிக்கம், வைடூரியம், கோமேதகம், வச்சிரம், பவழம், பத்மராகம், மரகதம், நீலம் நல்முத்து முதலானரத்தினங்களை அணிந்தவளாகவும், கிரீடம், தோள்வளை, கைவளை முதலான ஆபர ணங்களை பூண்டவளாகவும், ஆச்சரியங்களுக்கு நிதியாகவும், சவுந்தர்யத்துக்கு ஆதாரமாகவும் இருந்தாள்.

சௌந்தர்யவதனத்துடன் காட்சி அளித்த கன்னியை கண்ட அனைவரும் சந்தோஷக் கடலில் ஆழ்ந்தனர். விதர்ப்பராஜ குமாரியும் அகஸ்தியரின் மனைவியுமான லோபாமுத்திரை அந்த கன்னியை உச்சி முகர்ந்து தழுவி புதையலைப் பெற்ற தரிந்திரன் போல ஆனந்தபரவசம் ஆனாள். அப்பொழுது பார்வதி தேவியானவள் அந்த கன்னிக்கு திவ்யமான பூ மாலை ஒன்றை அளித்தாள். பீதாம்பரத்தை திருமால் மேல் வஸ்திரமாக தந்தார். நான்முகன் இமாலய பர்வதத்தில் உள்ள தடாகத்தில் உண்டான ஒரு தாமரை மாலையை தந்தார்..

ஜலாதிபதியான வருணன் சிலாக்கியமான ஒரு சங்கை கொடுத்தான். மேலும் 3 கோடி சிறந்த புண்ணிய தீர்த்தங்களையும் கொடுத்தான். லட்சுமி தேவியானவள் மணிமயமான வீணையை நல்கினாள்..  சரஸ்வதி தேவியோ சகல சாஸ்திர ரூபமான பெண்கிளியை வழங்கினாள். கங்கா தேவி, யமுனை முத்து மாலையை கொடுத்தனர். இவ்விதம் அநேக புண்ணிய நாமங்களால் தேவர்களாலும், மாமுனிவர்களாலும், நாமகரணம் செய்யப் பெற்ற ஸ்ரீதாமிரபரணி தேவியானவள் சிவ பெருமானை வலம் வந்து விடை பெற்று அகஸ்திய முனிவருடன் தென்திசை எழுந்தருளினாள்.

நெல்லை மாவட்டத்தில் சிவபார்வதி திருமணகாட்சி தரிசனம்(Darshan of Shiva Parvati wedding scene in Nellai District)

அகஸ்தியமுனிவரும், லோபாமுத்திரையும், சிவபெருமானை வணங்கி விடைபெற்று தாமிர பரணீ தேவியை அழைத்து கொண்டு மகிழ்ச்சியோடு தென்திசைக்கு புறப்பட்டனர். அவர்களோடு சேர்ந்து மகாமேருவின் புத்திரிகளான தாமிரபரணியின் தோழியுமான 10 கன்னியர்களுக்கும் சுற்றி இருக்கும் சகலமானவர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் எல்லாம் வல்ல சிவபெருமான் நெல்லை மாவட்டத்தில் உள்ள பழைய பாபநாசம் கல்யாணி தீர்த்தத்தின் அருகில் திருக் கல்யாண காட்சி தந்தருளினார்.

சிவபெருமானின் திருக்கல்யாண தரிசன காட்சி சித்திரைவிசு தினத்தன்று அனைவருக்கும் கிடைத்ததால் பல சிவாலயங்களில் சித்திரை விசு காட்சி விழாவாக கொண்டாடப்படுகிறது. தாமிரபரணி நதியின் தோழியர் 10 பேர்களில் 8 பேர்கள் நதிதேவதைகளாக நெல்லை மாவட்டத்தில் தீர்த்த ரூபமாக அமைந்துள்ளது திருநெல்வேலிக்கே உள்ள சிறப்பாகும். இந்நாளில் 7ம் திருமறை 6ம் திருமுறை பாராயணம் செய்வது, சிவாலய தரிசனம் காண்பது, பாபநாசத்தில் புனித நீராடுவது அனைத்தும் சிறப்பாகும்.

தமிழ் புத்தாண்டு அன்று படைக்கப்படும் உணவுப் பொருட்கள்(Food items prepared on Tamil New Year)

தமிழ் புத்தாண்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் விதமாக தெய்வத்திற்கு அறுசுவை உணவு படையல் படைக்கின்றனர். தமிழ் புத்தாண்டு அன்று, மாம்பழ பச்சடி, பொங்கல், வடை,பாயாசம், சாம்பார், சாதம், பப்பாளி, காய்கறி குழம்பு, புதிய மாங்காய் ஊறுகாய் மற்றும் தயிர் போன்ற பல்வேறு சுவையான உணவுகளுடன் மாங்காய் பச்சடி விசேஷமாக செய்து வைத்து கொண்டாடப்படுகிறது.

கோவில்களில் சித்திரை வருடப்பிறப்பு திருவிழா(Festival of Chithirai year birth in temples)

தமிழ் புத்தாண்டு அன்று புதிய பஞ்சாங்கம் வைத்து அனைத்து ஆலயங்களிலும் அங்கு இருக்கும் ஐயர் குருக்கள் வரும் பக்தர்களின் முன்னிலையில் படிப்பார்கள் என்பது ஐதீகம் ஆகும். அதுபோல் வீடுகளிலும் சித்திரை வருடபிறப்பில் பஞ்சாங்கம் வைத்து படைத்தல், பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் கலாச்சாரம் இன்றும் நடைபெற்று வருகின்றது. இந்து கோவில்கள் அனைத்திலும் தமிழ் புத்தாண்டு விசேஷ பூஜைகள் எனும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றாலும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் மிகவும் தனி சிறப்பு வாய்ந்த விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு சிறப்பு நன்னாளில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு ஏராளமான மக்கள் சென்று வழிபட்டு தெய்வீக அருள் பெற்று பலன் பெறுகின்றனர்.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram