ஐந்திணை நிலங்களை கொண்ட திருநெல்வேலி.

தமிழ் இலக்கணத்தில் ஐந்திணை நிலங்கள் என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது. இதில் குறிஞ்சி என்பது மலையையும் மலை சார்ந்த இடத்தையும், முல்லை என்பது காடுகள் மற்றும் காடுகள் சார்ந்த இடத்தையும், மருதம் என்பது வயல் மற்றும் வயல் சார்ந்த இடத்தையும், நெய்தல் என்பது கடல் மற்றும் கடல் சார்ந்த இடத்தையும், பாலை என்பது வெற்று மணல் பரப்புகளையும் குறிக்கும். தமிழ் இலக்கியம் இந்த ஐந்திணைகளுக்கும் உரிய பல்வேறு சிறப்புகளை எடுத்து இயம்புகிறது. ஒவ்வொரு திணைக்கும் உரிய தெய்வம், மக்கள், உணவு, விலங்கு, பூ, மரம், பறவை, ஊர், நீர், பறை, யாழ், பண், தொழில் ஆகியவை பற்றியும் தமிழ் இலக்கணம் சிறப்பித்து கூறுகிறது. இங்கு நாம் ஒவ்வொரு திணை பற்றியும், அதற்குரிய சிறப்புகள் பற்றியும் முதலில் தெரிந்து கொள்ளலாம்.

குறிஞ்சித் திணை:

குறிஞ்சித் திணை என்பது மலைகளையும் மலை சார்ந்த இடங்களையும் குறிக்கும்.

தெய்வம்:முருகன்
மக்கள்:குறவன், குறத்தியர்
உணவு:தினை, மலையில் விளையும் நெல்
விலங்கு:புலி, கரடி, சிங்கம்
பூ:குறிஞ்சி, காந்தள்
மரம்:அகில், வேங்கை
பறவை:கிளி, மயில்
ஊர்:சிறுகுடி
நீர்:அருவி நீர், சுனை நீர்
பறை:தொண்டகப் பறை
யாழ்:குறிஞ்சி யாழ்
பண்:குறிஞ்சிப்பண்
தொழில்:தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்.

முல்லை திணை:

முல்லை திணை என்பது காடுகளையும் காடு சார்ந்த இடங்களையும் குறிக்கும்.

தெய்வம்:திருமால்
மக்கள்:ஆயர், ஆய்ச்சியர்
உணவு:வரகு, சாமை
விலங்கு:முயல், மான்
பூ:முல்லை, தோன்றி
மரம்:கொன்றை, காயா
பறவை:காட்டுக்கோழி, மயில்
ஊர்:பாடி, சேரி
நீர்:காட்டாறு
பறை:ஏறுகோட்
யாழ்:முல்லை யாழ்
பண்:முல்லைப்பண்
தொழில்:ஏறு தழுவுதல், ஆநிரை மேய்த்தல்

மருதம் திணை:

மருதம் திணை என்பது வயலும் வயல் சார்ந்த பகுதிகளையும் குறிக்கும்.

தெய்வம்:இந்திரன்
மக்கள்:உழவர், உழத்தியர்
உணவு:செந்நெல், வெண்ணெய்
விலங்கு:எருமை, நீர்நாய்
பூ:செங்கழுநீர், தாமரை
மரம்:காஞ்சி, மருதம்
பறவை:அன்னம், நாரை, நீர்கோழி
ஊர்:பேரூர், மூதூர்
நீர்:மனைக்கிணறு, பொய்கை
பறை:மணமுழா, நெல்லரிகிணை
யாழ்:மருத யாழ்
பண்:மருதப்பண்
தொழில்:நெல் விதைத்தல், நெல் அறுத்தல், களை பறித்தல்

நெய்தல் திணை:

நெய்தல் திணை என்பது கடலையும் கடல் சார்ந்த இடத்தையும் குறிக்கும்.

தெய்வம்:வருணன்
மக்கள்:பரதர், பரத்தியர்
உணவு:மீன்
விலங்கு:முதலை, சுறா
பூ:தாழை, நெய்தல்
மரம்:புன்னை, ஞாழல்
பறவை:கடற்காகம்
ஊர்:பட்டினம், பாக்கம்
நீர்:மணற்கிணறு, உவர்க்கழி
பறை:மீன்கோட்பறை
யாழ்:விளரியாழ்
பண்:செவ்வழிப்பண்
தொழில்:மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

பாலை திணை:

பாலை திணை என்பது குறிஞ்சித் திணை மற்றும் முல்லைத் திணை ஆகிய இரண்டு நிலத்திணைகளுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலப்பகுதியைக் குறிக்கும்

தெய்வம்:கொற்றவை
மக்கள்:எய்னர், எயிற்றியர்
உணவு:களவு செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள்
விலங்கு:வலிமை இழந்த யானை
பூ:குரவம், பாதிரி
மரம்:இலுப்பை, பாலை
பறவை:புறா, பருந்து
ஊர்:குறும்பு
நீர்:வற்றிய சுனை, கிணறு
பறை:துடி
யாழ்:பாலையாழ்
பண்:பஞ்சுரப்பண்
தொழில்:வழிப்பறி செய்தல்

இந்த ஐந்திணைகளுக்கு உரிய இடங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன என்பது பெருமைப்படக்கூடிய விஷயம் ஆகும். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக முன்னர் திருநெல்வேலி இருந்த போது இந்த சிறப்பைப் பெற்றிருந்தது இன்று தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்பும் கூட நீடித்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியின் எல்லையைத் தனக்குள் கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற மலைப்பகுதிகள் குறிஞ்சித் திணைக்குள் வருகிறது. அதனை ஒட்டியுள்ள காடுகள் அனைத்தும் முல்லை திணைக்குள் வருகிறது. தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசனம் பெரும் வயல் பகுதிகளான சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், சுத்தமல்லி, கல்லிடைக்குறிச்சி ஆகிய இடங்கள் அனைத்தும் மருதம் திணைக்குள் வருகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளான உவரி, குட்டம், கூடங்குளம் ஆகிய பகுதிகள் நெய்தல் திணைக்குள் வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள வறண்ட நிலங்களை கொண்ட பரப்பாடி, ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகள் பாலை திணைக்குள் வருகிறது. எனவே தமிழ் இலக்கணம் சிறப்பித்து கூறும் ஐந்திணைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள பெருமையைத் திருநெல்வேலி பெறுகிறது….!!!

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 33.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-33ல்., 113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் காட்டிய சருக்கம். 114. தேவர்களுக்கு அகோர தாண்டவம் ஆடிக் காட்டிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.