தமிழ் இலக்கணத்தில் ஐந்திணை நிலங்கள் என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது. இதில் குறிஞ்சி என்பது மலையையும் மலை சார்ந்த இடத்தையும், முல்லை என்பது காடுகள் மற்றும் காடுகள் சார்ந்த இடத்தையும், மருதம் என்பது வயல் மற்றும் வயல் சார்ந்த இடத்தையும், நெய்தல் என்பது கடல் மற்றும் கடல் சார்ந்த இடத்தையும், பாலை என்பது வெற்று மணல் பரப்புகளையும் குறிக்கும். தமிழ் இலக்கியம் இந்த ஐந்திணைகளுக்கும் உரிய பல்வேறு சிறப்புகளை எடுத்து இயம்புகிறது. ஒவ்வொரு திணைக்கும் உரிய தெய்வம், மக்கள், உணவு, விலங்கு, பூ, மரம், பறவை, ஊர், நீர், பறை, யாழ், பண், தொழில் ஆகியவை பற்றியும் தமிழ் இலக்கணம் சிறப்பித்து கூறுகிறது.
தமிழ் மரபை பெருமை சாற்றும் ஐந்திணையின் சிறப்புகள் , மற்றும் தமிழர்களின் ஐந்து திணைகளுக்குமான கடவுள்கள், வழிபடும் முறைகள்! அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பார்ப்போம்..
அகப்பொருள் அறியக்கூடிய இலக்கணத்தில் முதன்மையாக இருப்பதும், சிறப்பான நம் கலாச்சார மரபை எடுத்துரைப்பதும் ஐந்திணையே ஆகும். அதனால்தான் அது அன்பின் ஐந்திணை என்றே அழைக்கப்படுகிறது.
குறிஞ்சி முதலான ஐந்து பெயர்களில் வழங்கப்படும் இந்த ஐந்து திணைகளும் தலைவன் - தலைவி இருவரது மனம் ஒத்த அன்பை மையமாக வைத்து வகுக்கப்பட்ட இலக்கணங்கள் ஆகும்.
நம்முடைய அகவாழ்க்கையில் நிகழக்கூடிய செயல்பாடுகளை (ஒழுக்கங்களை) ஐந்து பெரும் பிரிவுகளில் எளிய வகையில் அடக்கி, அவற்றுக்கு நில அடிப்படையில் குறிஞ்சி முதலான பெயர்களை புரிந்து கொள்ளும் வடிவில் அமைத்தனர். அவ்வாறு வகுக்கப்பட்ட ஐந்திணைகளுக்கும் அடிப்படையாக அமையும் பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனமூவகை படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.
ஐந்திணைகளில் ஒன்றுபடும் முப்பொருள்களும் நம்முடைய கலாச்சாரத்தை பண்பினை ஒத்து தொடர்புடைய
ஐந்திணை உலகப்பொருள்களை கொண்டுள்ளது. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று
பாகுபாடுகளில் உள்ளடக்கி உள்ளனர்.
முதன்மையும் அடிப்படையுமான பொருள் என கருதப்படுவது முதற்பொருள் எனப்பட்டது. ‘மலை’ முதலான நிலங்களும் ‘மாலை’ முதலான பொருள்களும் முதற்பொருளாகும். ஆதலால் முதற்பொருள் நிலம், பொழுது என இருவகைப்பட்டது.
ஒவ்வொரு நிலத்தையும் சார்ந்து - அங்கு காணப்படும் மக்கள் வாழ்க்கைக்கு உகந்த கருப்பொருட்கள், இலக்கண நூல்களில் 14 என வரையறுக்கப்பட்டுள்ளன.
தெய்வம், உணவு, பறவை, விலங்கு, தொழில், பண் முதலியன முதலியவற்றைக் கொண்டு ஐந்திணைகள் கருப்பொருட்கள் வடிவமைக்கப்பட்டது .
ஒவ்வொரு நிலத்து மக்களும் நிகழ்த்தும் ‘ஒழுக்கம்’ என்பது உரிப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு நிலம் சார்ந்து அங்குள்ள கருப்பொருள்களை அடிப்படையாக வைத்துப் பாடப்படும் பாடல்களில் அந்த நிலத்துக்குரிய ஒழுக்கமும் இடம் பெறுகிறது. இடம்பெறும். அந்த ஒழுக்கம் தலைவனும் தலைவியும் சேர்ந்திருக்கும் ‘புணர்ச்சி’யும் அதன் நிமித்தமும் (காரணம்) - ஐந்து வகையாக உருவாக்கப்பட்டது.
இங்கு நாம் ஒவ்வொரு திணை பற்றியும், அதற்குரிய சிறப்புகள் பற்றியும் முதலில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் ஐந்திணை வகைகளில் முதல் பெருமைக்குரிய குறிஞ்சி திணை என்று அழைக்கப்படும் குறிஞ்சி நிலப்பகுதி.
குறிஞ்சித் திணை என்பது மலைகளையும் மலை சார்ந்த இடங்களையும் குறிக்கும். மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், பழனி, நீலகிரி, ஆனைமலை போன்ற பகுதிகள் அனைத்தும் தமிழ் நாட்டின் குறிஞ்சி நிலப் பகுதியாகத் திகழ்கின்றது.
மலையே வடிவேலன் முருகன் வீற்றிருக்கும் இடமாகும். செந்தினையை நீரோடு கலந்து தூவி மகிழ்ச்சியோடு வழிபடும் முறைகுறிஞ்சி நிலத்தில் இருந்தது. இது வேலன் வெறியாடிய சடங்கு என்று அழைக்கப்பட்டது. இது இளம்பெண்களை பற்றிய முருகனை விலக்கிட வேண்டி நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இது புராதன சமயம் சார்ந்தது . முருகையே பிற்காலத்தில் 'முருகன்' என்று அழைத்தனர். மலையில் உறைந்து நிற்கும் முருகனை இன்றளவிற்கும் எண்ணற்ற நன்மைகள் புரியும் தெய்வமாக மக்கள் போற்றுகின்றனர்.
முல்லை திணை என்பது காடுகளையும் காடு சார்ந்த இடங்களையும் குறிக்கும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலம் வாசனை மிகுந்த முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை சிறப்பு பற்றிக் கூறுகிறது.
மக்கள் வழங்கும் திருமால் நீலமணி போன்றவர், கரிய மலர் போன்றவர், கார்மேகம், காரிருள், கடல் போன்றவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. சங்க இலக்கியங்கள், `ஒளிரும் திருமேனியையுடையவர்’ என்று புகழ் பாடுகின்றன. திருமாலை, 'கண்ணன்' என்றும் அன்போடு அழைக்கின்றனர். முல்லை நில மக்களின் தொழில்ஆடுமாடு மேய்த்தல் . கண்ணனும் முல்லை நில மக்களில் ஒருவராகப் பிறந்தவரே முல்லை நில மக்களுக்கு வரும் துன்பங்களைப் போக்கி அவர்களைக் காப்பாற்றியவரே கண்ணன் என்பதால் முல்லை நில மக்கள் கண்ணனை தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர்.
மருதம் திணை என்பது வயலும் வயல் சார்ந்த பகுதிகளையும் குறிக்கும். "வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" -என்கிறது தொல்காப்பியம். மருத நிலத்தலைவர்கள் மகிழ்னன், வேந்தன் , ஊரன் கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வாறு மருதநில கடவுளாக வேந்தனைதொல்காப்பியம் கூறுகிறது.
ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் வாகனமாகக்கொண்டவன். இந்திரவிழா பற்றித் தெளிவாக சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. உழவர், கடைசியர், ஊரன், உழத்தியர், மகிழன், களமர் கடையர், போன்றவர்கள் மருத நில மக்கள் ஆவர். வேளாண்மையே மருத நில மக்களின் தொழிலாக அமைந்தது.
நெய்தல் திணை என்பது கடலையும் கடல் சார்ந்த இடத்தையும் குறிக்கும். பெரும்பொழுது ஆறும் நெய்தல் அனைத்தும் திணைக்கு உரியன. மருதத்தைப் போலவே நெய்தலுக்கும் ஆண்டு முழுவதும் உரிய காலமாகும். தொல்காப்பியம் "வருணன் மேய பெருமணல் உலகமும்" என அழகாக நெய்தலுக்கு உரிய காலத்தை விளக்குகிறது.
நெய்தல் நில மக்கள் தங்கள் கடல் தெய்வத்தை முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் காணிக்கையாகச் செலுத்தி, வழிபட்டனர். மாதவி, கோவலன் அல்லாத வேறொருவனை தான் காதல்கொண்டது போல் பாடியதை மன்னிக்க வேண்டி கடல் தெய்வமான வருணனை வழிபடுகிறாள் என்கிறது சிலப்பதிகாரம்.
பாலை திணை என்பது குறிஞ்சித் திணை மற்றும் முல்லைத் திணை ஆகிய இரண்டு நிலத்திணைகளுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலப்பகுதியைக் குறிக்கும். குறிஞ்சி, முல்லை எனும் இரண்டு நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை எனப்படுகிறது. அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து காணப்படும் வெப்பம் மிகுந்த பகுதிகள் அதனை சார்ந்த இடங்களும் பாலை நிலமாகும்.
கொற்றவைக்கு அவரை, எள்ளுருண்டை, இறைச்சி துவரை, முதலியன படைக்கப்படும். கொற்றவை பவனி வரும்போது புல்லாங்குழல் இசைக்கப்படுகிறது. பாலை நில மக்கள் தங்கள் தெய்வத்தின் வைத்து மிகுந்த நம்பிக்கை கொண்டு போருக்குச் செல்லும் முன்னர் போரில் வெற்றியடைய கொற்றவை தெய்வத்தை வழிபடுவார்கள்.
இந்த ஐந்திணைகளுக்கு உரிய ஐவகை நிலங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன என்பது பெருமைப்படக்கூடிய விஷயம் ஆகும். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக முன்னர் திருநெல்வேலி இருந்த போது இந்த சிறப்பைப் பெற்றிருந்தது இன்று தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்பும் கூட நீடித்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியின் எல்லையைத் தனக்குள் கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற மலைப்பகுதிகள் குறிஞ்சித் திணைக்குள் வருகிறது. அதனை ஒட்டியுள்ள காடுகள் அனைத்தும் முல்லை திணைக்குள் வருகிறது. தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசனம் பெரும் வயல் பகுதிகளான சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், சுத்தமல்லி, கல்லிடைக்குறிச்சி ஆகிய இடங்கள் அனைத்தும் மருதம் திணைக்குள் வருகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளான உவரி, குட்டம், கூடங்குளம் ஆகிய பகுதிகள் நெய்தல் திணைக்குள் வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள வறண்ட நிலங்களை கொண்ட பரப்பாடி, ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகள் பாலை திணைக்குள் வருகிறது. எனவே தமிழ் இலக்கணம் சிறப்பித்து கூறும் ஐந்திணைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள பெருமையைத் திருநெல்வேலி பெறுகிறது....!!!