திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகி, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆறு ஆண்டு முழுவதும் வற்றாமல் பாய்ந்து கொண்டிருப்பதால் "ஜீவ நதி" என்ற சிறப்பைப் பெறுகிறது. முன்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்த போது, திருநெல்வேலி மாவட்டத்திலேயே உற்பத்தியாகி, திருநெல்வேலி மாவட்டத்திலேயே கடலில் கலந்துவிடுவதால் "அந்நியன் கைப்படா அந்நீருக்கு இணையும் உண்டோ" என்று ஒரு கவிஞர் தனது பாடலில் தாமிரபரணி நதியைச் சிறப்பித்து பாடியுள்ளார். தாமிர சத்துக்கள் நிறைந்த தண்ணீரை தந்து நமக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதி வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் உற்பத்தி ஆனதாகக் கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புகளையும், மகத்துவங்களையும் பெற்ற தாமிரபரணி ஆறு தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதிகை மலையில் பிறந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னக்காயல் என்னும் இடத்தின் அருகே உள்ள சங்குமுகத்தில் கடலோடு கலந்து விடுகிறது. ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் இந்த ஆற்றின் நீர் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்தத் தாமிரபரணி ஆற்றில் உள்ள முக்கிய அணைக்கட்டுகள் பற்றி இங்கு நாம் காண்போம்.
தாமிரபரணி ஆற்றில் உள்ள முக்கியமான அணைக்கட்டுகள்:
இந்த அணைக்கட்டுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீரானது பாசனத்திற்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த பாசனத்திற்காகத் தாமிரபரணி ஆற்றில் மொத்தம் பதினோறு முக்கிய கால்வாய்கள் உள்ளன:அந்த கால்வாய்கள் பற்றிய பட்டியலைக் கீழே காணலாம்.
மேற்கண்ட அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்கள் மூலம் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் சேமிக்கப்பட்டு, பிரித்து அனுப்பப்படுகிறது. இந்தத் தண்ணீர் தான் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைத் தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியமாக மாற்றுகிறது.
தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி பாய்ந்து வரும் பொதிகை மலைப் பகுதியில் பாண தீர்த்தம் அருவி தாண்டி அமையப்பெற்றுள்ளது காரையார் அணை. இது அப்பர் டேம் (மேலணை) என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்ட இந்த அணை 5.4 மீ அகலம், 265 மீ நீளம் மற்றும் 240 மீ உயரம் கொண்டது ஆகும். மொத்தம் 147 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த அணையில் சுமார் 143 அடிக்குத் தண்ணீரை தேக்கலாம். இந்த அணை தான் தாமிரபரணியில் அமையப்பெற்றுள்ள முதல் அணைக்கட்டு என்னும் சிறப்பைப் பெறுகிறது. இந்த அணையின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது, இந்தச் சுரங்கப்பாதை மூலம் மழைக்காலங்களில் பெருகும் தண்ணீரை மற்றொரு அணையான சேர்வலாறு அணைக்குக் கொண்டு செல்ல முடியும். இதற்காக மூன்று மைல் தூரத்திற்கு மலையைக் குடைந்து சுரங்க பாதை அமைத்துள்ளார்கள்.
இந்த அணையை விட்டுத் தண்ணீர் வெளிவரும் இடத்தில் ஒரு வால்வு வைத்து இருக்கிறார்கள். இந்த வால்வில் இருந்து தண்ணீர் வெளியேறும் போது தண்ணீர் பூப்போலப் பீய்ச்சி அடிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்க மிகவும் ரம்மியாக இருக்கும். இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளதால் எப்போதும் இங்குத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் காவலுக்கு நிற்பார்கள். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் பாசன தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த அணையில் இருந்து சிறிதளவு கூடத் தண்ணீர் கசிந்து வருவதில்லை. அந்த அளவிற்கு இந்த அணை பாதுகாப்பாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் 143 அடிக்கு மேலாகத் தண்ணீர் நிரம்பி விட்டால், தண்ணீரை திறந்து விடுவதற்கு வசதியாக ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணை நிரம்பிய உடன் இந்த அணையில் இருந்து சேர்வலாறு அணைக்குக் குகை மூலம் தண்ணீர் கொண்டு செல்வது விசேஷமான அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பின் மூலம் காரையார் அணையில் குறைவாகத் தண்ணீர் இருந்தால், சேர்வலாற்றில் இருந்து காரையார் அணைக்கும், சேர்வலாற்றில் குறைவான தண்ணீர் இருந்தால், காரையாற்றில் இருந்து சேர்வலாறு அணைக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். இத்தனை சிறப்புகள் பெற்ற இந்தக் காரையாறு அணையின் முழு கொள்ளளவு 5,500 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் சுமார் 143 அடிக்குத் தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
பல இயற்கை அற்புதங்களையும், விநோதங்களையும் உள்ளடக்கி உள்ள இந்த மலையில் 1985 ஆம் ஆண்டு சேர்வலாறு அணை கட்டப்பட்டது. இந்தச் சேர்வலாறு அணை 156 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமையப்பெற்றுள்ளது. இதில் 1225 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரானது மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப் படுகிறது. இந்தத் தண்ணீர் மூலம், இங்கு அமையப்பெற்றுள்ள 20 மெகா வாட் மின் திட்டம் மூலம் 48 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. இங்கு 1992 ஆம் ஆண்டு பெய்த புயல் மழையின் காரணமாக இந்த அணைக்கட்டு மற்றும் இங்குள்ள பாலம், மின் திட்ட நிலையம் ஆகிய அனைத்தும் இடி தாக்கிப் பலத்த சேதம் அடைந்தது. மேலும் இந்தப் பகுதியில் வளர்ந்திருந்த சுமார் 20 கோடி மதிப்பிலான தேக்கு மரங்களும் இடி தாக்கிச் சாம்பலாகி போனது. இந்தச் சேர்வலாறு அணையில் இருந்து வரும் தண்ணீர், தாமிரபரணியில் கலக்கும் இடத்தில் அமைந்திருந்த பிரம்மாண்டமான பாலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டது. இதற்கு மாற்றாக அப்போது ஒரு இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. இந்த இரும்பு பாலம் தான் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த இடத்தில் பிரம்மாண்டமான பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இன்றும் இவ்வழியாகப் பயணிக்கும் போது முன்னர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தின் உடைந்த பகுதிகள் ஆற்றுக்குள் மூழ்கிக் கிடப்பதை இன்றும் நாம் காணலாம்.
மணிமுத்தாறு அணை இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1958 ஆம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீனுக்கு அருகில் கட்டப்பட்டது. சுமார் 118 அடி உயரம் உள்ள இந்த அணையில் 5511 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம். இந்த அணையின் மூலம் நாங்குநேரி, சாத்தான்குளம் போன்ற வறண்ட பகுதிகளில் 22852 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த மணிமுத்தாறு அணையில் ஒரு வித்தியாசமான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அது என்னவென்றால் 80 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருந்தால் தான் மணிமுத்தாறு கால்வாய் வழியாக நாங்குநேரி மற்றும் சாத்தான்குளம் பகுதி பாசன வசதி பெறும். இங்கு 1 வது ரீச், 2 வது ரீச், 3 வது ரீச், 4 வது ரீச் என நான்கு ரீச்களாகத் தண்ணீர் வழங்கும் முறை பிரித்துச் செயல்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு வருடம் முதல் இரண்டு ரீச்களுக்கும், தண்ணீர் வழங்கினால் மறுவருடம் கடைசி இரண்டு ரீச்களுக்கும் தண்ணீர் வழங்கப்படும். இதில் 80 அடிக்குக் கீழ் இருக்கும் தண்ணீர் எல்லாம் பாபநாசம் அணைக்குத் திறக்கப்பட்டு விடும். இந்தத் தண்ணீர் மின்சார உற்பத்திக்கும், குடிநீர் தேவைக்கும் போகக் குளங்களை நிரப்பவும் பெரிதளவில் பயன்படுகிறது. பொதுவாக மழைக்காலங்களில் பாபநாசம் அணை, சேர்வலாறு அணை ஆகிய இரண்டும் முன்னதாக நிரம்பிவிடும், அனால் இந்த மணிமுத்தாறு அணை நிரம்ப சிறிது காலம் எடுக்கும்.
இதில் தாமிரபரணியில் உள்ள காரையாறு அணை (மேலணை) ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும், மணிமுத்தாறு அணை தமிழக முதல்வராக இருந்த காமராஜர் ஆட்சிக் காலத்திலும், சேர்வலாறு அணை தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலும் கட்டப்பட்டு கம்பீரமாக இன்று வரை காட்சியளிக்கிறது.
தாமிரபரணி சமநிலை பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகள்:
தாமிரபரணி சமநிலையை அடைந்த பின்னர் உள்ள இடத்தில் இருக்கும் அணைக்கட்டுகளை பல குறுநில மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதில் கடைசி அணையான திருவைகுண்டம் அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பக்கிள்துரை என்பவரால் கட்டப்பட்டுள்ளது.
தலையணை:
தாமிரபரணி ஆறு மலைகளின் வழியாக ஓடி வந்து சமநிலை அடையும் இடத்தில் கட்டப்பட்டுள்ள முதல் அணை என்பதால் இது தலையணை என்று அழைக்கப்படுகிறது. இந்த அணைக்குக் கோடைமேலழகியான் அணை என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் கூடத் தண்ணீர் நிரம்பி அழகாகக் காட்சித்தரும் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அணைக்கட்டு மூலம் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் வழியாக 325 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட மொத்தம் 2260 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. இதே அணைக்கட்டிலிருந்து தொடங்கும் தெற்கு கூடை மேலழகியான் கால்வாய் வழியாக நேரடி பாசனம் மூலம் 870 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நதியுண்ணி அணைக்கட்டு:
தாமிரபரணி நதியில் இரண்டாவதாகக் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு நதியுண்ணி அணைக்கட்டு. இதிலிருந்து பிரிந்து செல்லும் நதியுண்ணி கால்வாயில் குளத்து பாசனம் ஏதுமில்லை. அனைத்துமே நேரடி பாசனத்திற்கு தான் பயன்படுத்தப் படுகிறது. இந்தக் கால்வாய்மூலம் 2460 ஏக்கர் விலை நிலங்கள் நேரடி பாசனம் பெற்று வருகிறது. இந்த நதியுண்ணி அணைக்கட்டு தண்ணீரை இந்த நதியே மீண்டும் உண்பதால் (எடுத்துக் கொள்வதால்) இதற்கு நதியுண்ணி அணைக்கட்டு என்ற பெயர் வந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. அதாவது நதியுண்ணி கால்வாய்மூலம் பாசனத்திற்கு செல்லும் தண்ணீர், பின்னர் அம்பாசமுத்திரம் சுற்று பகுதிக்குச் சென்று தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்து விட்டு, தாமிரபரணியின் கிளை நதியான கடனா நதியில் விழுந்து, மீண்டும் தாய் நதியான தாமிரபரணியில் கலந்து விடுகிறது. இந்த அணையை அம்பாசமுத்திரத்திலிருந்து ஆலடியூர் செல்லும் சாலையிலிருந்து பார்த்தால் மிகவும் அழகாகத் தெரியும். இயற்கை காட்சிகள் நிறைந்த சூழ்நிலையில் அமையப்பெற்றுள்ள இந்த அணையில் பல திரைப்படங்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளன.
கன்னடியன் அணைக்கட்டு:
கன்னடியன் கால்வாயில் தான் தாமிரபரணியின் துணை நதியாக விளங்கும் மணிமுத்தாறு வந்து கலக்கிறது. இந்த அணைக்கட்டிலிருந்து தான் பாசனத்திற்கு முதல் முதலாகத் தண்ணீர் திறப்பார்கள். இந்தப் பாசனத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும்போது, இந்த நீர் ஆவியாக மாறி, அந்த ஆவியே பொதிகை மலை பகுதிக்குள் மேகங்களை உருவாக்கி, மழை பொழிய காரணமாக இருக்கும். இந்த அணையிலிருந்து பிரிந்து செல்லும் கன்னடியன் கால்வாய் கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி போன்ற நகரங்களின் வழியாகச் சென்று இறுதியாகப் பிரான்சேரி குளத்தில் சென்று முடிகிறது. இந்த அணைக்கட்டு மூலம் கன்னடியன் கால்வாய் வழியாக 2166 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட ஏக்கர் பாசன வசதி பெற்று பயன்பெறுகிறது. இந்தக் கால்வாய் அம்பை - ஆலடியூர் செல்லும் சாலையில் உள்ள சின்ன சங்கரன்கோவில் என்ற இடத்திலிருந்து துவங்குகிறது. இந்தக் கன்னடியன் கால்வாயில் வெள்ளங்குளி என்னும் ஊருக்கு அருகே கோதையாறு வந்து சேருகிறது. இந்தக் கோதையாரின் அமைப்பு இதன் தண்ணீரை முன்னுரிமையாகக் கன்னடியன் கால்வாய்க்குத் தந்துவிட்டு அதன் பிறகு தாமிரபரணியில் சென்று கலந்துவிடும் வகையில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து தான் வறட்சி பகுதியான ராதாபுரம் பகுதிக்குத் தாமிரபரணி தண்ணீரை கொண்டு செல்லும் திட்டம் தொடங்கி, பாதி வேலைகள் முடிவுற்ற நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அரியநாயகிபுரம் அணைக்கட்டு:
அரியநாயகிபுரம் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளதால் இந்த அணைக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டு என்ற பெயர் வந்தது. இந்த அணைக்கட்டு மூலம், கோடகன் கால்வாய் வழியாக 3000 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 6000 ஏக்கர் நேரடி பாசனமும் நடைபெற்று வருகிறது. இந்த அணைக்கட்டை கன்னடியன் கால்வாயைக் கட்டிய அதே அந்தணன் தான் கட்டினான் எனவும், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அவருடைய தளபதியாக விளங்கிய அரியநாயக முதலியார் காட்டினார் எனவும் இரண்டு கருத்துகள் நிலவுகின்றது. இந்த அரியநாயகிபுரம் அணைக்கட்டிலிருந்து பிரிந்து செல்லும் கோடகன் கால்வாய் சங்கன்திரடு, கல்லூர், கோடகநல்லூர் வழியாக ஓடிச்சென்று திருநெல்வேலி புறநகர் பகுதியைச் செழிப்பாக்குகிறது.
பழவூர் அணைக்கட்டு:
இந்த அணைக்கட்டு பழவூர் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. இதிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய் பாளயங்கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கால்வாய்மூலம் 3300 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 9500 ஏக்கர் மொத்த நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. பழவூர் அணைக்கட்டு ஒருபுறம் பழவூர் என்ற கிராமத்தையும், ஒருபுறம் செவல் என்ற கிராமத்தையும் கொண்டுள்ளது. இந்த அணையில் மேலச்செவல் என்னும் கிராமத்திலிருந்து தான் பாளயங்கால்வாய் தொடங்கி தருவை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, கோட்டூர் போன்ற ஊர்களின் வழியாகப் பயணித்து வசவப்பபுரம் வரை நீண்டு செல்கிறது. ஒரு காலத்தில் பாளையங்கோட்டை வழியாகத் தூய தண்ணீராக ஓடிய இந்தக் கால்வாய் தற்போது சாக்கடை வடிகாலாக மாறிக் கொண்டிருக்கிறது. பாளையக்காரர்க வெட்டப்பட்டதால் பாளையங்கால்வாய் என்றும், பாளையங்கோட்டை நகரம் வழியாகச் செல்வதால் பாளயங்கால்வாய் என்று பெயர் பெற்றதாகவும் இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
சுத்தமல்லி அணைக்கட்டு:
இந்த அணைக்கட்டு சுத்தமல்லி என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளதால் அதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய் திருநெல்வேலி கால்வாய் என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் கால்வாய் சுத்தமல்லியிலிருந்து பிரிந்து நரசிங்கநல்லூர், குன்னத்தூர், பாடப்பத்து, திருநெல்வேலி நகரம் ஆகிய ஊர்கள் வழியாகச் சென்று திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள நயினார் குளம் பகுதியைத் தண்ணீரால் நிரப்பித் தச்சநல்லூர், அருகன்குளம் வழியாக ஓடிச் சென்று தாமிரபரணியில் கலக்கிறது. இந்த அணைக்கட்டிலிருந்து பிரிந்து செல்லும் திருநெல்வேலி கால்வாய்மூலம் குளத்து பாசனம் 3885 ஏக்கர் மற்றும் நேரடி பாசனம் 2525 ஏக்கர் உட்பட மொத்தம் 6410 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகிறது.
மருதூர் அணைக்கட்டு:
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அணைக்கட்டுகளில் மருதூர் அணை மிக முக்கிய அணையாகும். இந்த அணையின் மூலம் மருதூர் கீழக்கால் வழியாக 4815 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 7785 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் மருதூர் மேலக்கால் வழியாக 8208 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12762 ஏக்கர் பாசன பரப்பும் பயன்பெறுகிறது. இந்த கால்வாயிலிருந்து சாத்தான்குளம் போன்ற வறட்சி பகுதிகளுக்குச் சடையநேரி கால்வாய் திட்டம் மூலம் தண்ணீர் திருப்பப்டுகிறது.
திருவைகுண்டம் அணைக்கட்டு:
தாமிரபரணி நதியில் உள்ள கடைசி அணைக்கட்டான திருவைகுண்டம், ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இந்த அணையில் இரண்டு கால்வாய்கள் உள்ளன. அதில் ஒன்றான திருவைகுண்டம் வட கால்வாய்மூலம் 9511 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12800 ஏக்கர் பயன்பெறுகிறது. அதில் இரண்டாவதான திருவைகுண்டம் தென் கால்வாய்மூலம் 10067 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12760 ஏக்கர் வரையிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. புதுக்குடி என்னும் ஊருக்கும் திருவைகுண்டம் என்னும் ஊருக்கும் இடையில் சுமார் 800 கெசம் நீளத்தில் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. திருவைகுண்டம் வடகால் அருகே இருக்கும் ஒரு கல்வெட்டை ஆராய்ந்தபோது இந்த அணையின் டிசைன் 1853 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அணையின் கட்டுமான பணி 1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1873 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்து கடலில் கலக்கும் தாமிரபரணி நதிக்குக் குறுக்கே இத்தனை அணைக்கட்டுகள் அமையப்பெற்றுள்ளன. இந்த அணைக்கட்டுகளிலிருந்து தண்ணீரை பிரித்து அனுப்ப தகுந்த கால்வாய்களும் வெட்டப்பட்டுள்ளன. இதனால் தான் திருநெல்வேலி பகுதி பசுமை போர்த்திய நெல்வயல்களால் சூழப்பட்டு ரம்மியமாகக் காட்சி தருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.