வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில்

சுவாமி: ஸ்ரீ சிந்தாமணிநாதர். (அர்த்தநாரிசுவரர் திருக்கோலம்)
அம்மை: ஸ்ரீ இடபாகவல்லி அம்மை. (அர்த்தநாரிசுவரர் திருக்கோலம்)
திருக்கோவில் விருட்சம்: சிந்தை மரம் (புளிய மரம்).
தீர்த்தம்: கும்ப தீர்த்தம், கருப்பை நதி.

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் வாழ்ந்த பிருங்கி முனிவர் சிவபெருமான் மீது தீவிர பக்தி செலுத்தி வந்தார். அதிலும் வணங்கினால் சிவபெருமானை மட்டுமே வணங்குவேன் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.ஒருநாள் கயிலையில் சிவபெருமானும், பார்வதி அம்மையும் வீற்றிருக்கும் போது, அங்கு வந்த பிருங்கி முனிவர், சிவபெருமானுக்கு மட்டும் வணக்கம் செலுத்தி, வண்டு உருவம் கொண்டு அவரை மற்றும் வலம் வந்து பணிந்து நின்றார். இதனால் கோபம் அடைந்த பார்வதி அம்மை, தன்னை அவமதித்த பிருங்கி முனிவர் மீது கடும் கோபம் கொள்கிறார். கோபாவேசத்தில் கயிலை மலையில் இருந்து நீங்கிய அம்மை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்பதை உலகறிய செய்ய திருவுள்ளம் கொண்டு, பூலோகத்தில் உள்ள பொதிகை மலைச்சாரலில் இருந்த சிந்தை என்னும் மரங்கள் நிறைந்த வனத்தில் அமர்ந்து சிவபெருமானை குறித்து தவம் இயற்றுகிறாள். பார்வதி அம்மையின் அந்த கடும் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான், பார்வதி அம்மையின் முன் காட்சியளித்து, அவளை தனது இடப்பாகத்தில் சரிபாதியாக ஏற்று, சிவனும் சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகறிய செய்தார். சிவனும், பார்வதியும் சரி பாதியாக இணைந்து அர்த்தநாரிஸ்வரராக காட்சியளிக்க, அங்கு வந்த பிருங்கி முனிவர் தனது தவறை உணர்ந்து அம்மையையும், அப்பனையும் வணங்கி நின்றார். இப்படி அம்மையும், அப்பனும் சரிபாதியாக இனைந்து அர்த்தநாரிஸ்வரராக காட்சியளித்த திருக்கோலமே இந்த கோவிலில் உறையும் ஸ்ரீ சிந்தாமணிநாதர் – ஸ்ரீ இடபாகவல்லி ஆகும் என இந்த கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.

மூலவர் ஸ்ரீ சிந்தாமணிநாதர்:

கிழக்கு நோக்கிய கருவறையில் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் அர்த்தநாரீஸ்வரராக காட்சித் தருகிறார் ஸ்ரீ சிந்தாமணிநாதர். இவரது இடப்பாகத்தில் சரிபாதியாக பார்வதி அம்மை, இடபாகவல்லி என்ற திருநாமம் தாங்கி காட்சித் தருகிறாள். சிவபெருமானுக்குரிய வலது பக்கத்தில் தலையில் – கங்கா தேவி, பிறைச் சந்திரன், காதுகளில் – தோடு, கரங்களில் – சூலம், கபாலம், கால்களில் – தண்டை, சதங்கையும் காணப்படுகிறது. பார்வதி அம்மைக்குரிய இடது பக்கத்தில் தலையில் – அம்பாளுக்கு பின் புறம் பின்னல் ஜடையும், காதுகளில் – தாடங்கம், கரங்களில் – பாசம், அங்குசம், பூச்செண்டு, கால்களில் – கொலுசும் காணப்படுகிறது. சுவாமியின் வலது பகுதிக்கு வேஷ்டி அணிவித்தும், அம்மையின் இடது பகுதிக்கு புடவை அணிவித்தும் அழகாக அலங்காரம் செய்யப்படுகிறது.

திருக்கோவில் அமைப்பு:

வாசுதேவநல்லூர் நகரின் மத்திய பகுதியில் அமையப்பெற்றுள்ளது சிந்தாமணிநாதர் கோவில். கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் அழகாக அமையப்பெற்றுள்ளன. கிழக்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ள இந்த கோவிலின் முன்னாள் கும்ப புஷ்கரணி தீர்த்தக்குளம் அமையப்பெற்றுள்ளது. நுழைவாயிலின் வழியாக உள்ளே நுழைந்தால் குடைவரை வாசலின் ஒரு புறம் விநாயகர் சன்னதியும், மறுபுறம் சுப்பிரமணியர் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. அவர்களை வணங்கி உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை தரிசிக்கலாம். அதனை தாண்டி உள்ளே சென்றால் நேராக கருவறையில் சிந்தாமணிநாதர் காட்சித் தருகிறார். இந்த கோவிலின் உள்பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக அதிகார நந்தி, சூரியன், சப்தகன்னியர், வீரபத்திரர், யோக தக்ஷிணாமூர்த்தி, கன்னி விநாயகர், சுப்பிரமணியர், மஹாலட்சுமி, சாஸ்தா, பஞ்சலிங்கம், ஜூரதேவர், கைகூப்பிய நிலையில் சண்டிகேஸ்வரர், சந்தன சபாபதி, நாய் வாகனம் இல்லாத பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.

திருக்கோவில் சிறப்புகள்:

  • இந்தக் கோவிலின் தல விருட்சமான புளிய மரத்திலிருந்து கிடைக்கும் புளியம் பழங்கள் புளிப்பு மற்றும் இனிப்பு ஆகிய இரண்டு விதமான சுவைகளில் இருப்பது சிறப்பம்சம்.
  • இங்குள்ள சிந்தாமணிநாதரை இந்திரன் வணங்கிச் சாப விமோசனம் பெற்றுள்ளான்.
  • சேரநாட்டு அரசனான குலசேகரன் என்பவன் இங்குள்ள கும்ப புஷ்கரணியில் நீராடி, சுவாமியை வணங்கித் தனக்கு ஏற்பட்ட தொழு நோய் நீங்கப்பெற்றான் என்று கூறப்படுகிறது.
  • இந்தத் திருக்கோவிலை 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சடையவர்மன் குலசேகர பராக்கிரம பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் திருப்பணிகள் செய்து கட்டி முடித்ததாகக் கூறப்படுகிறது.
  • இங்கு நடைபெறும் ஆனித் திருவிழாவில் சிவபெருமானும், அம்மையும் அருகருகே எழுந்தருளியிருக்க பிருங்கி முனிவரின் உற்சவ மூர்த்தியை கொண்டு சுவாமியை மட்டும் வலம் வந்து வணங்கும் வகையில் பாவனை செய்வார்கள். இதனை ஒட்டி பார்வதி அம்மை கோபம் கொள்வது போன்றும், பின்னர் சுவாமி, அம்மையை தனது இடப்பாகத்தில் தாங்கி, அர்த்தநாரிஸ்வரராக காட்சியளிக்க, பிருங்கி முனிவர் இருவரையும் வணங்கும் புராண நிகழ்வு உற்சவமாக நடைபெறும்.
  • பொதுவாகச் சிவாலயங்களில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் நடைபெறும். அனால் இங்குச் சித்திரை மாதம் அன்னாபிஷேகம் நடைபெறுவது சிறப்பம்சம்.
  • குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இங்குள்ள கருப்பை நதியில் நீராடி, சிந்தாமணிநாதரை வணங்கிட விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
  • இதுபோல அம்மையும் அப்பனும் இணைந்த அர்த்தநாரிஸ்வர திருக்கோலத்தை மூலவராக இந்த வாசுதேவநல்லூர் கோவிலிலும், நாமக்கல் அருகே உள்ள திருச்செங்கோடு கோவிலிலும் மட்டுமே தரிசிக்க முடியும்.

முக்கிய திருவிழாக்கள்:

ஆனி மாதம் பிரம்மோற்சவம், திருக்கார்த்திகை தீபம், ஐப்பசி கந்த சஷ்டி, ஐப்பசி திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை. மாசி சிவராத்திரி ஆகிய விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

அமைவிடம் / செல்லும்வழி:

திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வாசுதேவநல்லூர். திருநெல்வேலியில் இருந்து தென்காசி சென்று அங்கிருந்து மதுரை செல்லும் பேருந்துகள் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் சென்று அங்கிருந்து வாசுதேவநல்லூர் செல்லும் நகரப்பேருந்துகள் மூலமும் வாசுதேவநல்லூர் சென்றடையலாம்.

About Lakshmi Priyanka

Check Also

கங்கைகொண்டான் கைலாசநாதர் கோவில்

சுவாமி: ஸ்ரீ கைலாசநாதர். அம்மை: ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மை. திருக்கோவில் விருட்சம்: புளிய மரம். தீர்த்தம்: கங்கை தீர்த்தம் (தெப்பம்), …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!