வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...
உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?
எங்களுடன் வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இரைத்தாயா?
நாத்து நட்டாயா? களை பறித்தாயா?
கொஞ்சி விளையாடும் என் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?
மாமனா? மச்சானா? எதற்கு கேட்கிறாய் வரி?
மானம் கெட்டவனே...
அட! இது நம்ம கட்டபொம்மன் பேசிய வசனம் ஆச்சே என சொல்லும் அளவிற்கு பட்டி தொட்டி அனைத்தும் பிரபலமான கட்டபொம்மன் வரலாறு பற்றி விளக்கமாக காண்போம்.
பிரிட்டிஷ் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீரனின் கதைதான் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு. 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர் தான் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் .
'நான் வாழும் சொந்த பூமிக்கு யாரோ வேறு நாட்டு அயலானுக்கு கப்பம் கட்டுவதா.. எங்கிருந்தோ வந்து இந்திய மண்ணை சூறையாடிய ஆங்கிலேயனுக்கு ஒரு பொழுதும் அடிபணிய முடியாது' என வீர முழக்கத்தோடு ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்த மாபெரும் வீரமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
வாழும் தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து இந்திய சுதந்திர வரலாற்றில் இடம் பிடித்த ஒரு வீரத்தமிழர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். அப்படிப்பட்ட பொங்குதமிழ் வீரம் பேசும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவசியம் தெரிந்து கொள்வது இந்த மாவீரனுக்கு நாம் செலுத்தும் உயர்ந்த மரியாதை ஆகும்.
மதுரை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒவ்வொரு பாளையக்காரரால் ஆளப்பட்டுவந்தது.
மதுரை நாயக்கர் ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் பாளையகாரர்கள் சுதந்திரமாய் குறுநில மன்னர்களாக நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.
பாளையங்கோட்டையில் பாஞ்சாலங்குறிச்சியை கட்டபொம்மு என்ற பெயர் கொண்ட குறுநில மன்னன் ஆட்சி செய்து வருகின்றான். இந்த கட்டபொம்முவின் வம்சா வழியில் வந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி இரண்டாம் ஜெகவீரபாண்டியனுக்கும் ஆறுமுகத்தம்மாளுக்கும் பிறந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
இளம் வயது வரை எந்தவித கவலையும் இல்லாது கட்டழகு காளையாக மகிழ்ச்சியோடு இருந்து வந்தார் கட்டபொம்மன். ஜக்கம்மா எனும் மங்கையை கண்டு, காதல் வயப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றார். திருமணம் கோலாகலமாய் நடைபெற, குழந்தை பேறு இல்லை எனினும் இருவரும் இணைந்த இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியோடு தொடர்கிறது.
இந்த சமயத்தில் தான் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் ஆட்சிக்கு வந்தனர். அந்த சமயத்தில் தான் ஆங்கிலேயர்களும் வணிகத்தை மேம்படுத்த இந்தியாவிற்குள் நுழைந்தனர். 1890 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மேலும் வலிமை பெற்றவர்களாக இந்தியாவை முழுமையாக ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் . பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்தியர்கள் அடிபணிய வேண்டும் என்று சட்டம் விதித்தனர்.
பிரிட்டிஷ் அரசாங்கம் தமிழகத்தில் வரி வசூலிக்கும் திட்டத்தை அமலாகியது. இந்தியர்கள் கப்பம் செலுத்த வேண்டும் அதை பெறுவதற்கான முழு உரிமையும் தங்களுக்கு உள்ளது என்று பிரகடனம் செய்தனர் .மேலும் அனைத்து பாளையக்காரர்களும் ஆங்கிலேயருடன் மரியாதையுடன் விசுவாசத்துடனும் இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் தனது 30வது வயதில் கட்டபொம்மன் அரியணை ஏறுகிறார்.
அரியணை ஏறிய முதல் வேலையாக வரி வசூலிக்கும் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தார் கட்டபொம்மன். 'தங்களுடைய சொந்த மண்ணில் சுதந்திரமாய் வாழ்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. அப்படி இருக்க ஆங்கிலேயருக்கு ஒருபோதும் வரி, கப்பம் எதுவும் செலுத்த மாட்டேன்’ என்று வீர கர்ச்சனை செய்கிறார். இதனால் ஆங்கிலேயரின் கடும் கோபத்திற்கு ஆளானார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
அப்போதுதான் நம்முடைய இந்தியர்களுக்குள் சுதந்திர பற்று எழ ஆரம்பித்தது . மக்கள் சுதந்திர தாகத்துடன், எங்கிருந்தோ வந்து நம் நாட்டை ஆட்சி செய்யும் ஆங்கிலேயரை எதிர்க்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் ஆங்கிலேய ஆட்சியாளர் ஜாக்ஸன், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அழைப்பு ஒன்று விடுகிறார். கட்டபொம்மனிடம் எட்டயபுரத்தில் நில சூறையாடல், தங்களுக்கு கப்பம் கட்டாமை என பல குற்றச்சாட்டுகளை சுமத்தி தன்னை வந்து சந்திக்குமாறு அழைக்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மனும் ஜாக்சனை சந்திப்பதற்காக அவர் சொல்லும் இடத்திற்கு வருகின்றார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வர சொல்லி 400 மைல்களுக்கு அப்பால் வரை கட்டபொம்மனை அலைகழித்தார் ஜாக்ஸன் . இறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்கிறார்.
அங்கும் பல விதங்களில் கட்டபொம்மனை அவமானப்படுத்துகின்றான் ஜாக்சன். இதனால் மிகுந்த கோபம் கொண்டு அங்கிருந்து வீரத்தோடு, தடுக்க வந்த வீரர்களை எதிர்த்து போரிட்டு தப்பித்து வெளி வருகிறார் கட்டபொம்மன்.
கட்டபொம்மனை சூழ்ச்சியால் மட்டுமே வெல்ல முடியும் என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்கின்றனர். அதன்படி செய்த சூழ்ச்சி வலையிலும் தப்பித்து பாஞ்சாலங்குறிச்சி திரும்புகின்றார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
உங்களுக்கு வரி செலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை . நாங்கள் சுதந்திர மன்னர்கள். என்று துணிச்சலோடு போர் வாளை தூக்கி முழக்கமிட்ட இவரது வீரத்தை பார்த்து சுற்றியுள்ள அனைத்து பாளையங்களும் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தன. அதனால் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மேலும் உற்சாகம் எழுந்தது. தம்முடைய பேச்சாற்றலால் அனைவரையும் போரில் கலந்து கொள்ளவருமாறு சுதந்திர தாகத்தை ஏற்படுத்துகின்றார்.
கூடவே தன் கோட்டையை மேலும் வலுப்படுத்தினார். பெரும் படைகளை திரட்டி வந்தார். ஆங்கிலேயரை எதிரப்பதற்கு, தமிழகத்திலிருந்து பல பாளையங்காரர்களை ஒருங்கிணைக்கிறார். ஆங்கிலேயர்களை போர்முனையில் எதிர்கொள்ள தயாராகிறார் .
இதே சமயத்தில் திப்புசுல்தானை ஆங்கிலேயர்கள் கொன்று விடுகின்றனர். திப்பு சுல்தான் வசம் இருந்த ஆங்கிலேயரின் பெரிய படைகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றுகின்றனர். அந்தப் படைகளைக் கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மனை தோற்கடித்து விடலாம் என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்கின்றனர். அதன்படியே தெற்கே வீரபாண்டிய கட்டபொம்மனின் இடமான பாளையங்கோட்டை நோக்கி ஆங்கிலேயரின் படைகள் புறப்படுகின்றது.
அஞ்சா நெஞ்சம் கொண்டவன் வீரபாண்டிய கட்டபொம்மன். இருப்பினும் தம்முடைய மண்ணிற்கு சுதந்திரம் கிடைக்கும் என்று கனவு கண்டு அதை நிஜமாக்க துடித்த வீர மகனுக்கு இந்தப் போர் ஒரு பெரிய சவாலாகவே அமைந்தது.
பாளையங்கோட்டையை நோக்கி எதிர் வந்த ஆங்கிலேய படையினரின் திடீர் தாக்குதலை கண்டு கட்டபொம்மன் அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் சற்றும் துவளாது சளைக்காமல் தம் படையினரோடு ஆங்கிலேயரிடம் வீரத்தோடு போரிடுகிறார் கட்டபொம்மன்.
அப்பொழுது அங்கு நடந்த கடும் போரில் கட்டபொம்மனின் படைத்தளபதி வெள்ளையத்தேவன் கொல்லப்படுகிறார். சகோதரன் ஊமைத்துறை பிடிபடுகிறார். கடைசியாக கட்டபொம்மனும் மந்திரி சேனாதிபதி பிள்ளையும் தப்பித்துச் சென்று விடுகின்றனர்.
சேனாதிபதி பிள்ளையும் மற்ற தலைவர்களும் பிடிக்கப்பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுகின்றனர். இதோடு கட்டபொம்மனோடு ஆங்கிலேயரை எதிர்த்த மற்ற பாளையக்காரர்களும் பிடிபடுகின்றனர்.
இந்த நிகழ்வு சற்றே கலக்கம் கொண்ட நிகழ்வாகத்தான் கட்டபொம்மனுக்கு அமைந்தது. அங்கிருந்து தப்பித்து புதுக்கோட்டை வருகிறார். மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்து , நல்லவர் போல் நடித்து கடைசியாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்து விடுகிறார்.
அக்டோபர் 16 - 1799 ஆம் ஆண்டு கட்டபொம்மன் கயத்தாருக்கு கொண்டுவரப்பட்டு, அனைத்து மக்களின் முன்னிலையிலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படுகிறார் . வீரபாண்டியனுடைய வீர வரலாற்றை ஒருநாள் உலகமே பேசப் போகின்றது என்பதை எடுத்துக்காட்டும் தினமாக அமைந்த நாள் அது..
என்ன வீரம்! சற்றும் மனம் தளராது நேர்க்கொண்ட பார்வை, வீர நடை, அழகு முகத்தில் கலையாத கம்பீரம் என தூக்கு மேடையில் வீரபாண்டிய கட்டபொம்மன் . அந்த வீர மகனைப் பார்த்து மக்கள் அனைவரும் கதறுகின்றனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றை கண்டு நம் கண்களிலும் கண்ணீர் வர காரணமாய் அமைந்த, சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த வீரனாய் தூக்கு மேடையில் நிமிர்ந்த நெஞ்சோடு நிற்கின்றான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
சாவுக்கு சற்றும் அஞ்சாத கர்ஜிக்கும் சிங்கம் போன்று நிமிர்ந்து நிற்கின்றார். நான் மறைந்தாலும் இனிவரும் காலத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்க நீங்கள் அனைவரும் நிச்சயம் இருப்பீர்கள் என்று மக்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு சொல்லி, ஆங்கிலேயரை பார்த்து சீற்றத்தோடு தூக்கு கயிற்றை தழுவுகின்றான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
1799 இல் கயத்தாறில் 39 ஆவது வயதில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறில் இவருக்கான நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
கட்டபொம்மன், ஊமைத்துரை, இவர்களின் காலங்களுக்கு பிறகு அவர்கள் வாழ்ந்து வந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர் பழங்கால கோட்டையை ஒத்து அமைக்கப்பெற்ற புதிய கோட்டை இந்நாளளவும் கட்டபொம்மன் புகழ் பாடி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. 1977 ஆம் ஆண்டு முதல் இக்கோட்டை இந்திய சுற்றுலா துரையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது. மேலும் பழைய கோட்டையின் எஞ்சி இருக்கும் அடிப்பகுதி அமைப்புகள் அகழ்வாராய்ச்சி துரையின் பராமரிப்பில் இருக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதி மூச்சு வரை அசாதாரண துணிச்சலுடன் போராடியவர் நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாக வாழ்ந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
வீரபாண்டிய கட்டபொம்மன் இந்திய வரலாற்றிலேயே ஒரு தனி அகராதியில் இடம் பிடித்தார் என்கின்றது வரலாறு. வீரத்திற்கே எடுத்துக்காட்டாய் இந்திய சுதந்திர வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாறு.