சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில்

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில்.

 

நவகைலாய ஸ்தலங்களில் ஒன்பதாவது தலமான சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில்.

சுவாமி: கைலாசநாதர்.

அம்மை: சௌந்தர்ய நாயகி.

திருக்கோவில் விருட்சம்: வில்வம் 

தீர்த்தம்:  தாமிரபரணி.

தல வரலாறு :

உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் கடைசியாக ஒன்பதாவது  மலர் கரை ஒதுங்கிய இடம் தான் சேர்ந்தபூமங்கலம் ஆகும். இங்கு அவர் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கமே கைலாசநாதர் ஆகும். அகத்திய முனிவரின் அறிவுரைப்படி ஒன்பது இடங்களிலும் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட உரோமச முனிவர், இறுதியாக இந்த ஸ்தலத்தில் வழிபாடு செய்த பின்னர், தான் விரும்பிய முக்தி நிலையை பெற்றதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த இடம் உரோமச முனிவருக்கு முக்தியளித்த ஸ்தலமாகக் கருதப்படுகிறது. 

சேர்ந்தபூமங்கலம் பெயர்க்காரணம்:

அகத்தியர் ஆணைப்படி ஒன்பது மலர்களை உரோமச மகரிஷி தாமிரபரணியில் மிதக்க விட, அந்த மலர்கள் கரை சேர்ந்த இடத்தில் எல்லாம் சிவ லிங்க பிரதிஷ்டை

செய்து உரோமச மகரிஷி வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் கடைசி மலர் கரை சேர்ந்த இடம் இது என்பதால் இந்த ஊர் சேர்ந்த பூ மங்கலம் என அழைக்கப்  படுகிறது.

சுவாமி கைலாசநாதர்:

கிழக்கு நோக்கிய தனி கருவறையில் சுவாமி கைலாசநாதர் லிங்கத்திருமேனியராகக் கம்பீரமாக காட்சித் தருகிறார். இவருக்கு விஷேச காலங்களில் நாகாபரணம், நெற்றிப்பட்டை ஆகியவை சாற்றி அலங்காரம் செய்யப்படும்.

சௌந்தரிய நாயகி:

தெற்கு நோக்கிய தனி கருவறையில் சௌந்தரிய நாயகி அம்மை புன்னகை காட்டும் முகத்துடன், நின்ற கோலத்தில் தனது ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் காட்சித்தருகிறாள். விஷேச காலங்களில் அம்மையின் திருமேனிக்கு முழு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும்.

திருக்கோவில் அமைப்பு:

கிழக்கு திசை நோக்கி அமையப்பெற்ற இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்து உடன் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவை காட்சித் தருகின்றன. அவற்றை தரிசித்து உள்ளே நுழைந்தால் இடப்புறம் வடக்கு நோக்கிக் காட்சித் தரும் அதிகார நந்தியை தரிசிக்கலாம். அவரை வணங்கி உள்ளே சென்றால் கிழக்கு திசை நோக்கிய கருவறையில் சுவாமி ஸ்ரீ கைலாசநாதர் காட்சித் தருகிறார். அவருக்கு இடப்புறம் தெற்கு திசை நோக்கிய கருவறையில் ஸ்ரீ செளந்தர்ய நாயகி அம்மை காட்சித் தருகிறாள். பிரகாரத்தில் பரிவார முர்த்திகளாகச் சூரியன், சந்திரன், நால்வர், சுரதேவர், சப்த கன்னியர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, விநாயகர், மீனாட்சி – சொக்கநாதர், வள்ளி – தெய்வானை – சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி, நடராஜர் – சிவகாமி, பைரவர், நவலிங்கங்கள் ஆகியோர் காட்சித் தருகின்றனர். 

திருக்கோவில் சிறப்புக்கள்:

  1. இந்தத் திருக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 
  2. குலசேகரப் பாண்டியன் மற்றும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்கள் இந்தத் திருக்கோவிலை கட்டியிருக்கலாமென கூறப்படுகிறது. 
  3. இங்குக் கருவறை விமானத்தின் மீது குபேரன் தன் இரு மனைவியர்களோடு யானை மீது அமர்ந்து கோலத்தில் காட்சித் தருகிறார். 
  4. பொதிகை மலையில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி நவகைலாயங்களுள் முதல் தலமாக விளங்கும் பாபநாசத்தில் சமநிலை அடைந்து, தான் கடந்து வரும் நிலபரப்பு பகுதிகளை செழிப்படையச் செய்துவிட்டு இறுதியாக இந்தச் சேர்ந்தபூமங்லத்தை தாண்டிச் சென்று தான் கடலில் கலக்கிறது. 
  5. தாமிரபரணி கடலோடு சங்கமிக்கும் சங்குமுக தீர்த்தக் கட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். எனவே கோவில் கும்பாபிஷேகங்களுக்கு இங்கிருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. 

முக்கிய விழாக்கள்:

மாசி மாத சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தை அமாவாசை ஆகிய வருடாந்திர விழாக்களும், பௌர்ணமி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி போன்ற மாதாந்திர பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இருப்பிடம் / செல்லும் வழி:

திருச்செந்தூர் – தூத்துக்குடி வழிப்பாதையில் உள்ள ஆத்தூர் என்னும் ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சேர்ந்தபூமங்கலம் கோவில் அமையப்பெற்றுள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏரல் மார்க்கமாக முக்காணி செல்லும் பேருந்துகள், ஆத்தூர் செல்லும் பேருந்துகளில் ஏறிச் சுமார் 53 கி.மீ தொலைவில் உள்ள  இந்த கோவிலைச் சென்று அடையலாம்.

About Lakshmi Priyanka

Avatar

Check Also

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா “திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி” என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.