கீழக்கல்லூர் புறவேலிநாதர் திருக்கோவில்

keezhakallur puravelinathar temple

சுவாமி: ஸ்ரீ புறவேலி நாதர்

அம்மை: ஸ்ரீ அழகம்மை

திருக்கோவில் விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: தாமிரபரணி.

தல வரலாறு :

முற்காலத்தில் தற்போது திருக்கோவில் அமையப்பெற்றுள்ள இந்தப் பகுதியில் பசு ஒன்று மேய்ச்சலுக்கு வந்து கொண்டிருந்தது. அப்படி மேய்ச்சலுக்கு வந்த அந்தப் பசு தினமும் அங்கிருந்த கல்லின் மீது பாலை தானாகச் சொரிந்து வந்தது. ஒருநாள் வழக்கம்போலப் பசு அந்த இடத்திற்கு வந்து பாலை சொரிந்து கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த துன்மார்க்கன் ஒருவன் அந்தப் பசுவின் மீது கல்லை எரிந்து விடுகிறான். அதனால் மிரண்ட பசு அங்கிருந்து தப்பித்து செல்வதற்காக அங்கும் இங்குமாக ஓடியது. அப்போது அங்கு மண்ணுக்குள் பொதிந்திருந்த அந்தக் கல்லின் மீது பசுவின் காலடி பட்டவுடன், அந்தக் கல்லிலிருந்து ரத்தம் வழிய தொடங்குகிறது. இதனைக் கண்ட துன்மார்க்கன் பயத்தில் அங்கிருந்து ஓடிவிடுகிறான். பின்னர் அந்த வழியாக வயல் வேலைக்குச் சென்று வந்த சில விவசாயிகள், அந்தக் காட்சியைப் பார்த்துப் பிரம்மித்து போய் நிற்கிறார்கள். இந்தச் சம்பவம்குறித்து அப்பகுதியை ஆட்சி செய்த மன்னனுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. உடனே அங்கு வந்த மன்னன் அந்த அதிசயக் காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்து நின்றான். பின்னர் அந்த இடத்தைத் தனது வேலையாட்களைக் கொண்டு தோண்ட, அங்கிருந்து ஒரு அழகான சுயம்பு லிங்கத் திருமேனி கிடைக்கிறது. தனக்கு கிடைத்த அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து, ஒரு கோவிலையும் கட்டியெழுப்பி கும்பாபிஷேகம் செய்து வைத்தான் மன்னன். இந்த மன்னன் கட்டிய கோவிலில் காட்சியளித்த சிவனுக்கு சிதம்பரேஸ்வரர் என்ற திருநாமமும், பசுவின் காலடி பட்டு வெளிவந்த காரணத்தால் தேனுபுரீஸ்வரர் என்ற திருநாமமும் வழங்கப்பெற்றது. இங்குள்ள கருவறை லிங்க மூர்த்தம் மீது இன்றும் பசுவின் காலடி குளம்பு பட்ட வடு உள்ளதாகக் கூறப்படுகிறது’

வரலாற்று சிறப்பு:

முன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் உள்ள பட்டன்கல்லூர், நடுக்கல்லூர், கோடகநல்லூர், மேலக்கல்லூர், கீழக்கல்லூர் போன்ற பகுதிகள் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதாயத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இந்தப் பகுதியில் விளைந்த கோடகன் சம்பா என்ற உயர் ரக நெல்லானது சமைப்பதற்கு சுவையாகவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருந்ததாலும், அந்த மன்னன் அந்த நெல்லுக்கு “ராஜ அன்னம்” என்ற பெயர் சூட்டினான். மேலும் அப்பகுதி நிலங்களில் விளையும் கோடகன் சம்பா நெல்லினை கீழக்கல்லூரில் உள்ள இந்தத் திருக்கோவில் இறைவன் சிவபெருமான் முன்னிலையில் அனைவரும் ” புரவு வரி ” (விலக்கு அளிக்கப்பட்ட ஒரு வகை வரி) என்ற வரியாகச் செலுத்த உத்தரவிட்டான். மேலும் இவ்வாறாக வரியாகச் செலுத்தப்படும் இந்த உயர் வகை நெல்லானது திருநெல்வேலி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், சங்கரன்கோவில், பாபநாசம், பிரம்மதேசம் போன்ற இடங்களில் உள்ள திருக்கோவில்களில் இறைவனுக்கு படைக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்தான். இதனை ஏற்றுக்கொண்ட அந்த ஊர் விவசாயிகளும் தங்கள் மனசாட்சிப்படி சிவபெருமான் முன்னிலையில் புரவு வரியைச் செலுத்தினர். சங்கரன்கோவில் மற்றும் பிரம்மதேசம் ஆகிய கோவில்களில் இந்த விபரம்குறித்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இந்தப் புரவு வரி செலுத்தப்படுவதால், இங்குள்ள இறைவன் புரவரி நாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பெயரே பிற்காலத்தில் மருவிப் புறவேலி நாதர் என்று அழைக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

திருக்கோவில் அமைப்பு:

கிழக்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ள இந்தத் திருக்கோவிலின் உள்ளே கருவறைக்குள் சுயம்புவாகத் தோன்றிய லிங்கமான தேனுபுரீஸ்வரரை தரிசிக்கலாம். இவரே புறவேலி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். அருகில் தனி சன்னிதியில் அழகே உருவான அழகம்மை நின்ற கோலத்தில் காட்சித்தருகிறாள். இவர்களுடன் இங்குக் கன்னிமூலை விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, தக்ஷிணாமுர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், சாஸ்தா, பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளும் காட்சித்தருகிறார்கள்.

திருக்கோவில் சிறப்புகள்:

  • இங்குக் கருவறையில் உள்ள சுவாமி சுயம்பு லிங்க திருமேனி ஆகும்.
  • இங்குள்ள மூலவர் திருமேனியில் பசுவின் காலடி தடம் பட்ட வடு இன்றும் உள்ளது.
  • இந்தத் தலம் அவிமுத்தி ஷேத்திரம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
  • இங்கு வழிபாடு செய்தால் திருமணத் தடை நீங்கும் மற்றும் குடும்ப ஒற்றுமை, நீங்காத செல்வம், கல்வி, அறிவு, மேம்பாடு போன்றவை பெருகும் என்பது நம்பிக்கை.
  • இங்குத் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

முக்கிய திருவிழாக்கள்:

மாதாந்திர பிரதோஷம், மாசி மாத சிவராத்திரி, மார்கழி மாத திருவாதிரை.

அமைவிடம் / செல்லும்வழி:

திருநெல்வேலியிலிருந்து முக்கூடல் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழக்கல்லூர் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து தெற்கே சுமார் கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது இந்தச் சிவாலயம். இங்குச் செல்லத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து முக்கூடல் மற்றும் சேரன்மகாதேவி வழியாகச் செல்லும் நகர பேருந்துகள் அதிகளவில் உள்ளன.

About Lakshmi Priyanka

Avatar

Check Also

வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில்

சுவாமி: ஸ்ரீ சிந்தாமணிநாதர். (அர்த்தநாரிசுவரர் திருக்கோலம்) அம்மை: ஸ்ரீ இடபாகவல்லி அம்மை. (அர்த்தநாரிசுவரர் திருக்கோலம்) திருக்கோவில் விருட்சம்: சிந்தை மரம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.