English

மாறாந்தை கைலாசநாதர் திருக்கோவில்

வாசிப்பு நேரம்: 5 Minutes
No Comments

சுவாமி: ஸ்ரீ கைலாசநாதர்.

அம்மை: ஸ்ரீ ஆவுடையம்மை.

திருக்கோவில் விருட்சம்: வன்னி மரம்.

தீர்த்தம்: வருண தீர்த்தம்.

தல வரலாறு :

முற்காலத்தில் தற்போது கோவில் அமையப்பெற்றுள்ள இந்தப் பகுதியின் வழியாக ஸ்ரீ வல்லப பாண்டியன் என்னும் மன்னன் தனது படைகளை வழிநடத்தி சென்றான். அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது பொழுது சாயும் நேரம் நெருங்கியதால் மன்னன் அங்கேயே ஷிவா பூஜை செய்ய முற்பட்டு, சிவாலயத்தை தேடி அலைந்தான். அனால் அங்கு எந்த ஒரு சிவாலயமும் இல்லாத காரணத்தினால் மன்னன் கலக்கமுற்று நிற்க, அனுஷ்டானம் செய்யும் பொருட்டு அங்குள்ள குளத்தில் நீராட இறங்குகிறான். அந்தக் குளத்தில் மூழ்கி நீராடிய மன்னனின் கைகளில் சிவலிங்கத்தின் பாணம் பகுதி மட்டும் கிடைக்கவே, மகிழ்ந்த மன்னன் அந்தப் பாணத்தை கொண்டு சிவ பூஜை செய்தருளினான். தான் சிவ பூசை செய்த இடத்தில் தகுந்த ஆவுடையில் அந்தப் பாணத்தை பிரதிஷ்டை செய்து, திருக்கோவில் ஒன்றையும் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தான். இந்த மன்னனின் வழித்தோன்றலான மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் மன்னன் இவ்வூர் மக்கள் தன முன்னோருக்குச் செய்த உதவியின் பொருட்டு அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டிய வரியிலிருந்து விலக்களிக்கும் தனி உரிமையை (தாயம்) வழங்கியதாகவும், மாறனால் தாயம் வழங்கப்பட்ட நல்லூர் என்று இவ்வூர் பெயர் பெற்றதாகவும் வரலாறு உள்ளது. இதுவே பிற்காலத்தில் மாறாந்தை என்று மறுவிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் வந்த நூற்றாண்டில் இந்தக் கோவில் மண்ணுக்குள் புதைந்து விட்டதாகவும், அதனை அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள் பால் சொரிந்து அடையாளம் காட்டியதாகவும், இதனால் லிங்கத்தின் பாணத்தின் மீது பசுவின் காலடி குளம்பு பட்ட தடங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்குப் பின் வந்த காலத்தில் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்த பாண்டிய மன்னர்களால் இந்தக் கோவில் மீண்டும் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பால் சொரிந்து பசுக்கள் அடையாளம் காட்டிய கோவில் என்பதால் இங்குக் காட்சிதரும் அம்பாள் ஆவுடையம்மை என்னும் பெயர் தாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கோவிலில் வருண பகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் விலகத் தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபட்டதாகவும், அவன் உண்டாக்கிய தீர்த்தம் தான் இந்தக் கோவிலின் தீர்த்தமாக விளங்கும் வருண தீர்த்தம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

திருக்கோவில் அமைப்பு:

கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ள இந்தத் திருக்கோவிலின் கருவறையில் மூலவர் ஸ்ரீ கைலாசநாதர் சதுர ஆவுடையுடன் கூடிய பீடத்தில் காட்சித் தருகிறார். இவருக்கு அருகே தனி சன்னிதியில் ஸ்ரீ ஆவுடையம்மை நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். திருக்கோவில் பிரகாரத்தில் சூரியன், சந்திரன், நந்தி, தட்சிணா மூர்த்தி, சப்தகன்னியர், கன்னி விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், துர்கை, இரட்டை பைரவர்கள் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக எழுந்தருளிக் காட்சித் தருகிறார்கள்.

திருக்கோவில் சிறப்புகள்:

 • இந்தத் திருக்கோவிலில் மொத்தம் பதினைந்து கல்வெட்டுக்கள் உள்ளன.
 • இந்த ஊர் முற்காலத்தில் விக்கிரமபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.
 • இங்குள்ள இறைவன் பெயர் கைலாசமுடைய நாயனார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இந்தக் கோவிலில் ஸ்ரீ வல்லப பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ளதாகக் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது.
 • பாரத நாட்டில் உள்ள சிவாலயங்களில் அமையப்பெற்றுள்ள பல சிவலிங்கங்களில், சில சிவ லிங்கங்கள் மட்டுமே சதுர வடிவிலான ஆவுடையை கொண்டிருக்கும். அந்த வகையில் இங்குள்ள சிவ லிங்கம் சதுர வடிவிலான ஆவுடையை கொண்டுள்ளது.
 • சைவ திருக்கோவிலான இங்கு மூலவர் கைலாசநாதர் பின்புறம் கோமளவல்லி, குமுதவல்லி சமேதராக ஸ்ரீ திநாத பெருமாள் கட்சித்தருகிறார்.
 • இந்தக் கோவிலில் ஒரே சன்னிதியில் இரட்டை பைரவர்களை தரிசிக்கலாம்.

முக்கிய திருவிழாக்கள்:

மாதாந்திர பிரதோஷம், பௌர்ணமி வழிபாடு, மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆகியவை வெகுவிமரிசையாக நடைபெறும்.

அமைவிடம் / செல்லும்வழி:

திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாறாந்தை. இங்குச் செல்லத் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி மற்றும் சுரண்டை வழியாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் அதிகளவில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
 • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
 • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
 • போக்குவரத்து காவல்துறை : 103
 • மருத்துவ உதவி எண் : 104
 • தீயணைப்பு துறை : 101
 • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
 • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
 • குழந்தைகள் நலம் : 1098
 • பாலியல் துன்புறுத்தல் : 1091
 • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram