சுவாமி: ஸ்ரீ கைலாசநாதர்.
அம்மை: ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: புளிய மரம்.
தீர்த்தம்: கங்கை
தீர்த்தம் (தெப்பம்), சித்ரா நதி.
திருக்கோவில் வரலாறு :
முற்காலத்தில் புளியமரங்கள் சூழ்ந்த காடாக இருந்த இந்த பகுதியில் மேய்ச்சலுக்காக தினமும் நிறைய பசுக்கள் வரும். அப்போது ஒருநாள் மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று புளிய மரத்தின் அடியில் உள்ள பொந்துக்குள் தானாக பாலை சொரிந்தது. இந்த சம்பவம் அடுத்து வந்த நாட்களிலும் வாடிக்கையாக நடைபெற, அதனை பசுக்களை மேய்த்து கொண்டிருந்த ஆயன் பார்த்து விடுகிறான். இந்த செய்தி ஊருக்குள் பரவி இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரின் காதுகள் வரை சென்று விட, மன்னன் தனது படை மற்றும் பரிவாரங்களுடன் ஆண்டு வந்து புளிய மரத்தின் அடியில் உள்ள பொந்தை தோன்றிப் பார்க்க அங்கு ஒரு புற்றும், சிவலிங்கமும் காணப்படுகிறது. மன்னன் அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து திருக்கோவில் கட்ட தீர்மானித்து பணிகளை தொடங்கிட, சுவாமி குடியிருந்த புளியமரத்தை வெட்டாமல் கோவில் கட்டும்படி உத்தரவு வருகிறது. அதன் படியே புளிய மரத்தில் இருந்து சிறிது இடை வெளி விட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருக்கோவில் எழுப்பப்பட்டதாக இந்த கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.
சுவாமி ஸ்ரீ கைலாசநாதர்:
கிழக்கு நோக்கிய கருவறையில் ஸ்ரீ கைலாசநாதர் சுயம்பு திருமேனி உடையவராய் லிங்க ரூபத்தில் காட்சித் தருகிறார். இவருக்கு விசேஷ காலங்களில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். பிரதோஷ காலங்களில் நாகாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்படும்.
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மை:
கிழக்கு நோக்கிய கருவறையில் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சித் தருகிறாள். பாண்டிய நாட்டில் உள்ள சைவ திருக்கோவில்களில் சற்றே அபூர்வமாக இங்கு உற்சவர் அம்மை நான்கு கரங்களுடன் காட்சித் தருகிறாள்.
திருக்கோவில் சிறப்புகள்:
முக்கிய திருவிழாக்கள்:
சித்திரை விசு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி - மதுரை நெடுஞ்சாலையில் திருநெல்வேலி மாநகரில் இருந்து வடக்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது கங்கைகொண்டான். இங்கு செல்ல திருநெல்வேலி சந்திப்பில் இருந்து கங்கைகொண்டான் மார்கமாக அணைத்தலையூர், ராஜபுதுக்குடி, கயத்தாறு செல்லும் நகரப்பேருந்துகள் உள்ளன.