இராஜபதி கைலாசநாதர் திருக்கோவில்

இராஜபதி கைலாசநாதர் திருக்கோவில்.

 

நவகைலாய ஸ்தலங்களில் எட்டாவது தலமான இராஜபதி கைலாசநாதர் திருக்கோவில்.

சுவாமி: கைலாசநாதர்.

அம்மை: சௌந்தர்ய நாயகி.

திருக்கோவில் விருட்சம்: வில்வம் 

தீர்த்தம்: பாலாவி தீர்த்தம், தாமிரபரணி.

தல வரலாறு :

உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் எட்டாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் இராஜபதி  ஆகும். இங்கு அவர் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கமே கைலாசநாதர் ஆகும்.

சுவாமி கைலாசநாதர்:

கிழக்கு நோக்கிய தனி கருவறையில் சுவாமி கைலாசநாதர் காட்சித் தருகிறார். இந்த லிங்கத்தின் நான்கு பக்கமும் சக்கர முத்திரை அமையப்பெற்றுள்ளது. இங்குச் சிவபெருமானின் ஐந்து முகங்களை குறிக்கும் விதமாக லிங்கத் திருமேனியை சுற்றி பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

சௌந்தரிய நாயகி:

தெற்கு நோக்கிய தனி கருவறையில் சௌந்தரிய நாயகி அம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில், புன்னகை பூத்த முகத்தவளாகக் காட்சித்தருகிறாள். 

திருக்கோவில் அமைப்பு:

முற்காலத்தில் கட்டப்பட்ட பழைய கற்கோவில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் தாமிரபரணி  ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகச் சிதிலமடைந்து விட்டது. இந்தக் கோவிலில் இருந்த விக்ரஹங்கள் மற்றும் பொருட்கள் பல இடங்களுக்கு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இங்கிருந்த நந்தி விக்கிரகம்  தற்போது ஓட்டப்பிடாரம் என்னும் ஊரில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பின்னர் இந்தக் கோவில் முறையான பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாகப் பாழடைந்த நிலையில் இருந்தது. தற்போது உள்ள கோவில் இக்கால நவீன கட்டமைப்பு மூலம் கட்டப்பட்டது ஆகும். கைலாஷ் அறக்கட்டளை மேற்கொண்ட  தீவிர முயற்சியால் 2010 ஆம் ஆண்டு இந்தக் கோவில் புதிதாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. இங்கு அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், கண்ணப்ப நாயனார், சண்டிகேஸ்வரர், நவலிங்கங்கள், சூரியன், சந்திரன், பைரவர்,  ஆகியோர் பரிவார மூர்த்திகளாக எழுந்தருளி உள்ளார்கள். 

திருக்கோவில் சிறப்புக்கள்:

  1. இங்குக் கண்ணப்ப நாயனாருக்கு தனி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.
  1. இங்கிருக்கும் சிவபெருமானை வணங்குவது காளஹஸ்தியில் உள்ள சிவனை வணங்குவதற்கு சமம் ஆகும். எனவே இந்தத் தலம் தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படுகிறது.
  1. இங்கு நவகிரகங்களுக்கு பதிலாக நவ லிங்கங்கள் சந்நிதி அமையப்பெற்றுள்ளது.

முக்கிய விழாக்கள்:

இங்கு சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய வருடாந்திர உற்சவங்களும், பிரதோஷம், பௌர்ணமி ஆகிய மாதாந்திர உற்சவங்களும் விமரிசையாக நடைபெறும்.

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 42 கி. மீ தொலைவில் திருநெல்வேலி – திருச்செந்தூர்  செல்லும் சாலையில் உள்ள குரும்பூருக்கு அருகே உள்ளது இராஜபதி திருக்கோவில். இங்குச் செல்லத் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் மார்க்கமாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் அடிக்கடி உள்ளன. குரும்பூரில் இறங்கி அங்கிருந்து தனியார் வாகனங்கள் மூலம் கோவிலை எளிதாகச் சென்றடையலாம்.

About Lakshmi Priyanka

Avatar

Check Also

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா “திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி” என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.