மேலவீரராகவபுரம் சொக்கலிங்கசுவாமி திருக்கோவில்

சுவாமி: ஸ்ரீ சொக்கநாதர்.
அம்மை: ஸ்ரீ மீனாட்சி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம்.
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், தாமிரபரணி.

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் அழகிய பாண்டியன் என்னும் மன்னன், மதுரையை தலைநகராகக் கொண்டு திருநெல்வேலி வரை ஆட்சி செய்து வந்தான். மன்னன் அழகிய பாண்டியனுக்கு மதுரையில் உறையும் மீனாட்சி – சொக்கநாதர் மீது அளவு கடந்த பக்தி இருந்தது. இதனால் தினமும் திருக்கோவில் சென்று மீனாட்சி – சொக்கநாதரை தரிசித்த பின்பே உணவு உட்கொள்வதையும், அவனது மற்ற பணிகளை கவனிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான். இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், சேர நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன், பாண்டிய நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை கைப்பற்றித் திருநெல்வேலி வரை சேர தேசத்தின் எல்லையை விரிவுபடுத்த நினைத்து , தனது படைகளை திரட்டிக்கொண்டு பாண்டிய நாட்டினரோடு போர் செய்யத் தயாராகிக் கொண்டிருந்தான். இந்த விஷயத்தைத் தனது ஒற்றன் மூலம் தெரிந்து கொண்ட அழகிய பாண்டிய மன்னன், தானும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது படை வீரர்களை திரட்டிக்கொண்டு திருநெல்வேலி பகுதிக்கு வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்தான். இங்கிருந்து சிறிது தொலைவில் தான் சுந்தர முனிவர் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். இந்தச் சுந்தர முனிவர் தான் பாண்டிய மன்னனின் ஆஸ்தான குருவாகவும் விளங்கி வந்தார். இங்குத் தங்கியிருந்த காலத்தில் ஒருநாள் அதிகாலை மன்னன் அழகிய பாண்டியன் தாமிரபரணி ஆற்றில் நீராடித் தனது நித்ய அனுஷ்டான கடமைகளை முடித்து விட்டு அமர்ந்து கொண்டிருக்கையில், தான் நித்தம் திருக்கோவில் சென்று வணங்கும் மீனாட்சி – சொக்கநாதரை தரிசிக்க முடியவில்லையே என்று எண்ணி வருத்தம் கொண்டான். பின்னர் அங்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து தனது மனதை ஒருமுகப்படுத்திச் சொக்கநாதரை நினைத்துத் தவம் இயற்றினான். அப்போது வானிலிருந்து, மன்னா இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சுந்தர முனிவர் ஆசிரமம் அமைத்துத் தங்கியுள்ள பகுதியில், ஒரு வில்வ மரத்தடியில் சொக்கநாத பெருமான் இருக்கிறார், அவர் இருக்கும் இடத்தை எறும்புகள் சாரை சாரையாகச் சென்று அடையாளம் காட்டும் என அசரீரி குரல் ஒலிக்கிறது. அதனை கேட்டுக் கண்விழித்த மன்னன், அந்த அசரீரி கூறியபடியே சுந்தர முனிவர் ஆசிரமம் அமையப்பெற்றுள்ள பகுதிக்குச் சென்று, வில்வ மரத்தடியில் எறும்புகள் சாரை சாரையாய் ஊர்ந்து செல்லும் இடத்தைக் கண்டுபிடித்து அந்த பகுதியைத் தோண்டிட, அங்கிருந்து சுயம்புவாகத் தோன்றிய லிங்கம் ஒன்று கிடைக்கிறது. அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த மன்னன், அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து சொக்கநாதர் என்னும் பெயர் சூட்டி வணங்குகிறான். இந்த நிலையில் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த சேர நாட்டு மன்னன், தனது படைகளை திரட்டிக்கொண்டு, மெதுவாக முன்னேறி வருகிறான். அப்போது பாண்டிய மன்னனோ சொக்கநாதரை நினைத்துத் தவம் செய்து கொண்டிருக்க, சொக்கநாத பெருமான் திருவருளால் பாண்டிய மன்னனின் படைத்தளம் முழுவதும் பலமடங்காகப் பெருகி காட்சியளிக்கிறது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த சேர நாட்டு மன்னன், இவ்வளவு பெரிய படையை எதிர்த்துப் போரிடுவதா? என நினைத்துக் கொண்டே நடந்து செல்லும் போது, அழகிய பாண்டிய மன்னனின் மகளைக் கண்டு காதலில் விழுந்து விடுகிறான். இதனால் போரிடுவதை கைவிட்ட சேர மன்னன், அழகிய பாண்டிய மன்னனை சந்தித்து தன்னை சேர நாட்டின் மன்னன் என அறிமுகம் செய்து, பாண்டிய மன்னனின் மகளைப் பெண் கேட்கிறான். பாண்டிய மன்னனின் மகளுக்கும் சேர மன்னனை பிடித்துப் போய்விட, இரண்டு பேருக்கும் திருமணம் விமரிசையாக நடக்கிறது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் தான் கண்டெடுத்து வணங்கிய சொக்கநாத பெருமானுக்கு அங்கு ஒரு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து வைத்தான் அழகிய பாண்டிய மன்னன். இதுவே தற்போது மேலவீரராகவபுரம் பகுதியில் அமையப்பெற்றுள்ள மீனாட்சி – சொக்கநாதர் திருக்கோவில் என்று இந்தக் கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.

திருக்கோவில் அமைப்பு:

கிழக்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ள இந்தத் திருக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் நந்தி, பலி பீடம் ஆகியவற்றை தரிசிக்கலாம். அதனை தாண்டி உள்ளே சென்றால் கருவறைக்கு முன்னர் தென் பக்கம் விநாயகரும், வட பக்கம் முருகப்பெருமானும் காட்சித்தருகிறார்கள். கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி ஸ்ரீ சொக்கநாதர் லிங்கத்திருமேனியாக காட்சித்தருகிறார். அவருக்கு விசேஷ காலங்களில் நாகாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்படுகிறது. அவரது நெற்றியில் பட்டை மின்னுகிறது. இந்தக் கருவறைக்கு வடபக்கம் தென் திசை நோக்கிய தனி கருவறையில் அழகே உருவாக ஸ்ரீ மீனாட்சி அம்மை இடை நெளித்து நின்ற கோலத்தில் காட்சித்தருகிறாள். இந்தக் கோவில் முன் மண்டபத்தில் ஒரே இடத்தில் நின்று கொண்டு சுவாமி ஸ்ரீ சொக்கநாதரையும், ஸ்ரீ மீனாட்சி அம்மையும் ஒரே நேரத்தில் தரிகிக்க முடியும். முன்மண்டபத்தில் திருக்கோவில் உற்சவ திருமேனிகளும், தெற்கு திசை நோக்கிய தனி சன்னதியில் ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்மை காட்சித்தருகிறார்கள். வெளியே பிரகாரத்தில் சூரியன், சந்திரன், அதிகார நந்தி, தட்சிணா மூர்த்தி, கன்னி விநாயகர், சுவாமி ஐயப்பன், மஹாவிஷ்ணு, வள்ளி – தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், துர்கை அம்மன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நவகிரகங்கள், பைரவர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாகக் காட்சித்தருகிறார்கள்.

திருக்கோவில் சிறப்புகள்:

  • இந்த ஸ்தலம் பதினான்காம் நூற்றாண்டைச் சார்ந்த பழமையான திருக்கோவில் ஆகும். இங்கு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சொக்கநாதர் – ஸ்ரீ மீனாட்சி அம்மையை வணங்கினால், மதுரை ஸ்ரீ சொக்கநாதர் ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கிய பலன் கிட்டும்.
  • இங்குப் பிரதோஷ காலத்தில் இறைவனை தரிசனம் செய்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியங்கள் கைக் கூடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
  • மதுரை சித்திரை திருவிழாவில் சொக்கநாதருக்கும் – மீனாக்ஷியம்மைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவதை போலவே இங்கும் அதே நாளில் சுவாமி ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ மீனாட்சி அம்மைக்கு திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறும்.
  • இங்குள்ள நவகிரக சன்னிதியில் புதன் பகவான் திசை மாறி வடக்கு நோக்கிக் காட்சித் தருகிறார்.
  • இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி, ஆமை மேல் உள்ள மேருமலையில் அமர்ந்த நிலையில், சனகாதி முனிவர்களுடன் காட்சித் தருகிறார். இது போன்ற நிலையுடன் கூடிய தட்சிணா மூர்த்தியைத் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் தரிசிக்கலாம்.
  • இந்தக் கோவிலில் திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய ஐந்து கால பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது.

முக்கிய திருவிழாக்கள்:

சித்திரை மாத திருக்கல்யாணம், புரட்டாசி மாத நவராத்திரி, கார்த்திகை மாத சோமவாரம், மார்கழி மாத திருவாதிரை, மாசி மாத சிவராத்திரி ஆகிய விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

அமைவிடம் / செல்லும்வழி:

திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ளது மேலவீரராகவபுரம் சொக்கநாதசுவாமி கோவில். திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்தில் இருந்தும், சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்தும் பத்து நிமிட நடை பயணத்தில் இந்தக் கோவிலைச் சென்றடைந்து விடலாம்.

About Lakshmi Priyanka

Check Also

வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில்

சுவாமி: ஸ்ரீ சிந்தாமணிநாதர். (அர்த்தநாரிசுவரர் திருக்கோலம்) அம்மை: ஸ்ரீ இடபாகவல்லி அம்மை. (அர்த்தநாரிசுவரர் திருக்கோலம்) திருக்கோவில் விருட்சம்: சிந்தை மரம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!