Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 22

வாசிப்பு நேரம்: 8 mins
No Comments
A colourful mandapam at the background with a stone pillar in the front.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-22ல்.,

67. தீர்த்தச் சருக்கம்.
68. நீலவண்ணன் அன்னதான மகிமை சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

67. தீர்த்தச் சருக்கம்:

திருநெல்வேலியில் உள்ள தீர்த்தங்களில், கயிலையில் உள்ள தீர்த்தங்களும், காஞ்சியில் உள்ள தீர்த்தங்களும் மற்றத் தலங்களில் உள்ள அனைத்துத் தீர்த்தங்களும் உறைவதால், திருநெல்வேலிக்குச் "சர்வதீர்த்தபுரம்" என்ற ஒரு பெயரும் உண்டு. இத்தலத்தில் முப்பத்தியிரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் தத்துவமையமானதாகும். ஒவ்வொன்றிலும் அத்தனை தீர்த்தங்களும் உறைகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு தீர்த்தத்தில் நீராடினாலும் நாடாளும் நற்பேறு கிடைக்கும். கலி நீங்கும். மன்மதன் போன்ற அழகு உண்டாகும். அத்தகைய தீர்த்தங்களைச் சொல்கிறேன்.

  1. சிந்துபூந்துறைத் தீர்த்தம்: இது நெல்லையப்பர் கோவிலுக்கு கிழக்கே உள்ளது.
  2. பொற்றாமரைத் தீர்த்தம்: காந்திமதியம்மை கோவில் வளாகத்துக்குள் வடகிழக்கே உள்ளது.
  3. கருமாரித் தீர்த்தம்: காந்திமதியம்மை கோவிலின் மேல பிரகாரத்தில் உள்ளது.
  4. பாதலங்கம்பைத் தீர்த்தம்: கோவிலின் தென்மேற்கே உள்ளது.
  5. வருண நற்கம்பைத் தீர்த்தம்: மடப்பள்ளிக்கு அருகே உள்ளது.
  6. கூவத் தீர்த்தம்: அம்மை கோவிலின் உள் பிரகாரத்தில் உள்ளது.
  7. ருத்திர தீர்த்தம்: கருமாரிக் குமாரர் கோவிலின் வடக்கே உள்ளது.
  8. சக்கர தீர்த்தம்: பொற்றாமரை தீர்த்தத்தின் வாயு மூலையில் உள்ளது.
  9. அக்கினி தீர்த்தம்: சக்கர தீர்த்தத்திற்கு தெற்கே உள்ளது.
  10. இலட்சுமி தீர்த்தம்: சக்கர தீர்த்தத்திற்கு வடக்கே உள்ளது.
  11. தரும தேவதைத் தீர்த்தம்: ருத்திர தீர்த்தத்திற்கு மேற்கே உள்ளது.
  12. பிசாசு மோசன தீர்த்தம்: கோவிலின் வடகிழக்கே பைரவர் சந்நிதியின் முன் உள்ளது.
  13. தேவ தீர்த்தம்: பைரவர் சந்நிதிக்கு மேற்கே உள்ளது.
  14. குபேர தீர்த்தம்: தேவ தீர்த்தத்தின் மேற்கே உள்ளது.
  15. வைணவ தேவ தீர்த்தம்: மேல மாட வீதியில் உள்ளது.
  16. பிரத்தியும்னன் தீர்த்தம்: வைணவ தேவ தீர்த்தத்தின் வடக்கே உள்ளது.
  17. சர்வ தீர்த்தம்: கோவிலின் முன் அம்பலத்தில் உள்ளது.
  18. சந்திர தீர்த்தம்: கோவிலின் கிழக்கே வெளி தெப்பக்குளம்.
  19. தரும தீர்த்தம்: கரும்பனை வீரன் கோவில் அருகில் உள்ளது.
  20. சூரிய தீர்த்தம்: காரியமாணிக்க பெருமாள் கோவிலின் தென்மேற்கே உள்ளது.
  21. பக்தப் பிரிய தீர்த்தம்: தொண்டர் நாயனார் கோவில் முன்னே உள்ளது.
  22. ருத்ர பாதத் தீர்த்தம்: சிந்துபூந்துறைக்கு வடக்கே உள்ளது.
  23. முனிவர்கள் தீர்த்தம்: ருத்ர பாதத் தீர்த்தத்திற்கு தெற்கே உள்ளது.
  24. வேள்வித் தீர்த்தம்: கயிலாசநாதர் கோவிலின் வடக்கே உள்ளது.
  25. அகத்தியர் தீர்த்தம்: சிந்துபூந்துறைக்கு தெற்கே உள்ளது.
  26. தேவபாண்டித் தீர்த்தம்: அகத்தியர் தீர்த்தத்திற்கு தெற்கே உள்ளது.
  27. சனற்குமார தீர்த்தம்: தேவ பாண்டித் தீர்த்தத்திற்கு தெற்கே உள்ளது.
  28. துர்க்கா தீர்த்தம்: சனற்குமார தீர்த்தத்தின் தெற்கே உள்ளது.
  29. கௌதம தீர்த்தம்: துர்க்கா தீர்த்தத்தின் தெற்கே உள்ளது.
  30. குறுக்குத்துறை தீர்த்தம்: கௌதம தீர்த்தத்தின் தெற்கே உள்ளது.
  31. அக்கினி தீர்த்தம்: மேல நத்தம் அக்கினீஸ்வரர் கோவிலின் முன்னே உள்ளது.
  32. காருண்ய தீர்த்தம்: அக்கினி தீர்த்தத்தின் மேற்கே உள்ளது.

ஆகிய முப்பத்தியிரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

நன்மைதரும் நவ தீர்த்தங்கள்: சிந்துபூந்துறை, பொற்றாமரை, பாதலங்கம்பை, கருமாரி, கூவம், தெப்பக்குளம், குறுக்குத்துறை, துர்க்கா தீர்த்தம், சர்வ தீர்த்தம் ஆகிய ஒன்பதும் நவ தீர்த்தங்கள் என்று வழங்கப்படுகின்றன. முன் ஒரு பிரளய காலத்தில், இறைவனும் இறைவியும் கயிலையில் வீற்றிருந்தனர். அப்போது ஈசானன் அங்கே சென்று, இருவரையும் வணங்கி, இறைவா.! பூவுலகில் தங்களை வழிபடப் புண்ணியமான ஸ்தலம் எது? என்று கேட்டான். ஈசான தேவா.! பூவுலகில் தாமிரபரணிக் கரையில் உள்ள நெல்லையம்பதியே எமக்குப் பிடித்த நல்ல ஸ்தலம். நீ அங்கு செல் என்று கூறி அனுப்பி வைக்கிறார் இறைவன். இறைவன் ஆணைப்படி ஈசானன் நெல்லை வந்து, பூந்துறையிலும், பொற்றாமரையிலும் நீராடி, திருமூலலிங்க நாதரையும் வடிவுடை அம்மையையும் வணங்கி, ஈசான மூலையில் லிங்கத்தை அமைத்து, இலட்சுமி தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்து வந்தான். அந்த லிங்கம் ஈசான லிங்கம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு ஈசான தேவன் வழிபாடு செய்து வரும் காலத்தில் ஒரு நாள், வேதங்களும், தருமமும் வந்து, ஈசான தேவரைக் கண்டு, நாங்களும் லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேக, ஆராதனை எல்லாம் செய்து வழிபட நினைக்கிறோம். அதனால் எங்களுக்கு, உப்பு நீராக இல்லாமல் நல்ல நீராக உள்ள ஒரு நீர்நிலை வேண்டும் என்று வேதங்களும் தருமமும் கேட்டன. ஈசான தேவனும் சரி என்று சொல்லி, அவை லிங்கப் பிரதிஷ்டை செய்யவிருக்கும் இடத்தின் அருகில், ஈசான மூலையில் தனது சூலாயுதத்தால் ஓங்கித் தரையில் குத்தினான். அது பாதாளம் வரை பாய்ந்தது. சூலத்தை எடுத்தான், எடுத்த இடத்தில் இருந்து பன்னீர் போன்ற தண்ணீர் பொங்கி பாய்ந்தது. அந்த நீர் மிகவும் சுவையாக இருந்தது. அத்தீர்த்தம் சுவையான நீர் தீர்த்தமாக அமைந்ததால், ஈசான தேவன் இறைவனை நன்றியோடு நினைத்து வணங்கினான். அப்போது இறைவன் அவன் முன்னே தோன்றிப் பல வரங்களை அருளிச் சென்றார். ஈசனிடம் பல வரங்களை பெற்ற ஈசான தேவன் ஈசான மூலையில் இருந்து வருகிறான். ஈசான தேவன் உருவாக்கிய தீர்த்தத்தில் நீராடி, ஈசான தேவனை வணங்கினால், வணங்குவோர் இம்மையிலும் மறுமையிலும் இனிய வாழ்வு பெறுவர் என்று சொல்லிச் சூதமா முனிவர், நீல வண்ணன் அன்னதான மகிமை பற்றிச் சொன்னார்.

68. நீலவண்ணன் அன்னதான மகிமை சருக்கம்:

தீந்தமிழ் சான்றோர் நிறைந்த திருநெல்வேலிப் பதியில் ஒரு பிடி சோறு தானம் தந்தால், அது நூறு அசுவ மேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும். இப்பதியில் சிவனடியார்களுக்கு இல்லை போட்டு அன்னமிட்டால், அவர்களுடைய சந்ததியர் ஓராயிரம் ஆண்டுகள் அன்னக் கவலையின்றி வாழ்வர். அன்னச்சத்திரம் கட்டி அனைவருக்கும் தானம் செய்தால் ஆதிசிவன் அருகில் இருக்கும் பேற்றினை பெறுவர். இவ்வாறு நற்செயல் புரிந்து நற்கதி பெற்றவர்கள் எண்ணிக்கை ஏராளம். அவற்றில் ஒன்றைச் சொல்கிறேன் கேளும் என்று சொல்லிச் சொன்னார். சோழ நாட்டிலுள்ள சூரிய புரத்தில் சசி வண்ணன் என்று ஒரு வேதியன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு, நீல வண்ணன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அவன் வேதியர்களுக்கு உரிய, வேதம் ஓதுவது, ஓதுவிப்பது.! வேள்வி செய்வது செய்விப்பது தவம் செய்வது ஆகிய செயல்களை விட்டு விட்டு மது, மாது, மாமிசம், என்று தீய செயல்களில் ஈடுபட்டு வந்தான். களவு, வழிப்பறி, கொள்ளை ஆகியவற்றைத் தொழிலாக வைத்துக் கொண்டான். பெற்றோர் சொல்லைக் கேட்காமல் வேற்றுச் சாதி பெண்ணைச் சேர்த்துக் கொண்டான். அவளுடனேயே இருந்து வந்தான். ஒருநாள் ஓர் அந்தணனைக் கொன்று அவனிடம் இருந்த பொருட்களை எல்லாம் பிடுங்கி கொண்டான். அவன் அந்தணனைக் கொன்ற செய்தி ஊருக்குள் பரவியது. செய்தியறிந்த ஊர்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்தனர். அந்தப் பாவியைக் கண்டு அடித்தனர். அடிதாங்க முடியாத பாவி, ஊரை விட்டே ஓடிவிட்டான்.

ஊரைவிட்டு ஓடியவன், பல ஊர்களுக்கும் சென்று அலைந்து திரிந்தான். காலப் போக்கில் முதுமையடைந்து, உடல் வலுவும் இழந்து, உன்ன உணவும் இல்லாமல், ஆதரிக்க ஆளும் இன்றி, பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு வந்து விட்டான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்., வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போன்று அவன் விதைத்த பாவம் வெள்ளாமையாக வந்தது. எங்கெங்கோ சுற்றியவன், இறுதியாகத் திருநெல்வேலி வந்து சேர்ந்தான். இங்கு வந்தவன் வேதியர் வீடுகளில் பிச்சை எடுத்து உண்டு, புறத்திண்ணையில் உறங்கி வந்தான். ஒருநாள் பிச்சை ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் பசியால் துடித்தான். அப்போது அவன் தங்கி இருந்த திண்ணைக்கு உரிய வீட்டு வேதியன் தனது மனைவியுடன் கோவிலுக்குச் சென்று விட்டான். இதுதான் தக்க தருணம் என்று எண்ணி, நீலவண்ணன் அந்த வேதியனின் வீட்டுக்குள் புகுந்து விட்டான். வீட்டுக்குள் புகுந்த நீலவண்ணன், சோற்றுப் பானையை வெளியே தூக்கி வந்து, திண்ணையில் வைத்துச் சாப்பிட்டான் சோறு முழுவதையும் சாப்பிட முடியவில்லை மிச்சம் இருந்த சோற்றைப் பிச்சை எடுத்து உண்ணும் ஒரு பிராமணனுக்குக் கொடுத்தான். அவன் வேண்டாம் என்று சொன்னான். அவன் சொன்னதை இவன் பொருட்படுத்தாமல் மிச்சம் இருந்த சோற்றை அவன் பாத்திரத்தில் போட்டு விட்டான். உண்டு கொண்டிருக்கும் போது அந்த உணவில் எச்சில் கலந்துவிட்டால், அதை ஒதுக்கி விடாமல் உண்டு விட வேண்டும். இந்தத் தோஷம் தீர்வதற்கு, உண்டவுடன் குளிர்ந்த நீரில் குளித்து விட வேண்டும். இவ்வாறு குளித்து விட்டால் எச்சிலை உண்ட தோஷம் எங்கோ போய்விடும் என்பது சாஸ்திரம்.

இந்தச் சாத்திரத்தை அந்தப் பிராமணன் அறிந்திருந்ததால், எதுவும் சொல்லாமல் எச்சில் உணவை உண்டு விட்டான். உண்டபின் குளித்துத் தோஷத்தைப் போக்கிக் கொண்டான். நீலவண்ணன் வழக்கம் போல் அன்றிரவு அந்தத் திண்ணையில் படுத்திருந்தான். லேசான சத்தத்தில் பாடிக்கொண்டே படுத்திருந்தான். அப்போது ஆடிக்கொண்டே வந்த ஓர் அரவம் அவனைத் தீண்டியது, அவன் மாண்டு போனான். எமதூதர்கள் வந்து அவனை எமலோகத்துக்கு இழுத்துச் சென்றார்கள். அப்போது சிவகணங்கள் வந்து, எமதூதர்களை விரட்டி விட்டு அவனைக் கயிலைக்கு அழைத்து சென்றனர். இவன் ஒரு பாவி இவன் செய்யாத பாவம் இல்லை. அதனால் தான் நாங்கள் எமலோகத்துக்கு இழுத்துச் சென்றோம். நீங்கள் எங்களை விரட்டி விட்டு, இவன் என்ன புண்ணியம் செய்தான் என்று கயிலைக்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று எமதூதர்கள் கேட்டனர். இவன் இந்த புண்ணிய பூமியான நெல்லையில் ஒரு பிராமணனுக்கு ஒரு பிடி சோறு கொடுத்திருக்கிறான். அந்தப் புண்ணியத்தின் பயனாகத்தான் இவனைக் கயிலாயம் கொண்டு செல்கிறோம் என்று சொல்லி அவனைக் கொண்டு சென்றனர். இறைவனின் திருவடியில் இணைந்தான். நைமிசாரணிய முனிவர்களே திருடிய அன்னத்தில் ஒரு பிடி அன்னம் அளித்தவனுக்கே இந்தப் பலன் கிடைத்தது என்றால், பாடுபட்டுச் சேர்த்த பணத்தில் அன்னதானம் செய்வோர் அடையும் பலனைச் சொல்லவும் வேண்டுமோ? என்று கேட்டுச் சூதமா முனிவர் அடுத்து, ஆனித் திருவிழாவின் அன்னதான பெருமைப் பற்றிச் சொல்கிறார்.

தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 23

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram