English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 21

வாசிப்பு நேரம்: 5 Minutes
No Comments

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-21ல்.,

63. சிந்துபூந்துறை லிங்க மகிமைச் சருக்கம்.
64. பாதலங்கம்பைச் சருக்கம்.
65. கருமாரிச் சருக்கம்.
66. பொற்றாமரைச் சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

63. சிந்துபூந்துறை லிங்க மகிமைச் சருக்கம்:

சிந்துபூந்துறைத் தீர்த்தத்தில் நீராடித் திருமூலலிங்க நாதரையும், வேணுவன நாயகியையும் வணங்கி வந்தால், எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்து இறைவனடி சேர்வர். அறிவிலிகளானாலும், சிந்துபூந்துறையில் நீராடிச் சிவ வழிபாடு செய்தால் அமர வாழ்வு பெறுவர். இத்தீர்த்தத்தில் ஒருமுறை நீராடினால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலன் கிடைக்கும். இரண்டு நாள்கள் நீராடினால் ஆயிரம் சந்திராயண விரத பலன் கிடைக்கும். மூன்று நாள்கள் நீராடினால் பதினெட்டு முறை கிரிவலம் வந்த பலன் கிடைக்கும். சிந்துபூந்துறையில் மூழ்கார் சிவானந்த கடலிலும் மூழ்கார். வேணுவனத்தைக் காணாதவர் வெள்ளியங்கிரியையும் காணார். நெல்லை என்று சொன்னால் அவர் புல்லராய் இருப்பினும் நல்லருள் பெறுவர்.

முன்னொரு காலத்தில் சிந்துபூந்துறையில் மூழ்கி எழுந்தவன் தனது பூனைக்கு குட்டியை மூழ்க வைத்து எடுத்தான். இவ்வாறு மூன்று நாட்கள் செய்தான். மூன்றாம் நாள், அந்த பூனைக்குட்டி தேவ வடிவம் பெற்றுத் தேவலோகம் சென்றது. அக்காட்சியைக் கண்ட தேவர்கள் பூ மழை பொழிந்து, சிந்துபூந்துறை தான் தீர்த்தம், திருநெல்வேலி தான் கயிலாயம் என்று புகழ்ந்தனர். தென்புலத்தார்க்குச் சிந்துபூந்துறையில் நீர்க்கடன் செய்வது மிகவும் சிறப்பானது. மூன்றரைக் கோடித் தீர்த்தங்களும் சிந்துபூந்துறையில் மூழ்கித் தம் பாவங்களை போக்கிக் கொண்டன. ஒருமுறையாவது பூந்துறையில் நீராடாவிட்டால், நாம் செய்த புண்ணியம் புண்ணியமே ஆகாது. இதுவரை சிந்துபூந்துறையின் சிறப்பைச் சொன்னேன். இனி லிங்க பூஜையை பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லிச் சொன்னார். வேணுவன லிங்கத்தின் விருப்பப்படி, தேவர்களும், முனிவர்களும், ஆளுக்கொரு லிங்கம் அமைத்து, வில்வம் கொண்டு அர்ச்சித்து, வேதம் கொண்டு துதித்தனர். இவ்வாறு அவர்கள் ஒன்று போல் ஒரே நேரத்தில் செய்ததால் இட நெருக்கடி ஏற்பட்டது. கோவிலுக்கு உள்ளும், பிரகாரங்களிலும், ரத வீதிகளிலும், மாட வீதிகளிலும், கடை வீதிகளிலும், தெருக்களிலும், குளக்கரையிலும் ஆட்கள் நடக்க முடியாத அளவுக்கு லிங்கங்களாகக் காட்சியளித்தன. எடுத்து அடி வைக்க இயலாமல் இருந்ததால் எல்லோரும் இறைவனை வேண்டினர். இறைவன் அந்த லிங்கங்களை எல்லாம் தரையில் இருந்து சற்று உயர்த்தி, அந்தரத்தில் நிறுத்தி ஆட்கள் நடக்க வழி ஏற்படுத்தினார்.அங்கே இருந்த சுந்தர லிங்கங்கள் எல்லாம் அந்தர லிங்கங்கள் ஆயின. அந்த நிலையிலேயே பூஜைகள் நிறைவேறின.

லிங்கங்களை எல்லாம் அந்தரத்தில் நிறுத்தி பூஜை செய்ததால் இத்தலத்திற்கு அந்தரலிங்கபுரம் என்று ஒரு பெயரும் ஏற்பட்டது என்று சொன்னார் சூதமா முனிவர். இதைக் கேட்டு மகிழ்ந்த நைமிசாரணிய முனிவர்கள், அடுத்துப் பாதலங்கம்பையின் பெருமையைச் சொல்லுமாறு கேட்கச் சூதமா முனிவர் சொன்னார்.

64. பாதலங்கம்பைச் சருக்கம்:

சிவபெருமானும் அம்மை உமாதேவியும் கயிலையில் வீற்றிருந்தார்கள். அப்போது அங்கு வந்த அகத்திய முனிவர் இறைவனை வணங்கி கேட்டார். இறைவா.! வேணுவனத்தில் பூமிக்கு அடியில் ஓடிக் கொண்டிருக்கும் செந்நிறமான பாதலங்கம்பை நதியைப் பற்றி முன்பு சொல்லியிருக்கிறீர்கள். அந்த நதியை பார்ப்போருக்கு, அதன் நீரைப் பருகுவோரும் பாவம் நீங்கப் பெறுவார் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். அந்நதியைப் பார்க்க வேண்டும், அதன் நீரை பருக வேண்டும் என்று அடியேன் ஆவலோடு இருக்கிறேன். அதற்கு இறைவன் அருள்புரிய வேண்டும் என்று அகத்திய முனிவர் வேண்டினார். அகத்தியா.! நீ தபோவனம் சென்று தவம் செய்து கொண்டிரு, அப்போது நாம் அங்கு வந்து உன் ஆவலை நிறைவேற்றுவோம் என்று சொன்னார். தபோவனம் எங்கே இருக்கிறது என்று அகத்தியருக்குத் தெரியவில்லை. இறைவா.! தபோவனம் எங்கே இருக்கிறது? என்று சொல்லியருள வேண்டும் என்று தவமுனி பெருமானிடம் கேட்டார்.

அகத்தியா.! மூலலிங்கம் வீற்றிருக்கும் இடத்திற்குத் தென் மேற்கே இருக்கிறது அந்தத் தபோவனம். அதைக் கிழக்கே இருந்து தடிவீரன் என்னும் ஒரு காவல் தெய்வம் காத்து வருகிறான். அங்கே விஸ்வேஸ்வர லிங்கம் என்னும் ஒரு லிங்கம் மேற்கு நோக்கி இருக்கிறது. அதனைச் சுற்றிலும் வருணன், காசிபர், கௌசிகன், ஆகியோர் அவரவர் பெயர்களில் உருவாக்கிய தீர்த்தங்களும், அவர்கள் வழிபட்ட லிங்கங்களும் இருக்கின்றன. அங்கே சென்று நீ தவம் செய்து கொண்டிரு. யாம் வருவோம் என்றார் இறைவன். இறைவன் சொன்னபடியே அகத்திய முனிவர் தபோவனம் சென்று தவம் செய்து கொண்டிருந்தார். இறைவன் தான் அளித்த வாக்கின்படி ஒருநாள் தபோவனத்திற்கு வந்தார். அகத்திய முனிவருக்கு காட்சியும் அளித்தார். அகத்தியா.! இதோ வருகிறது பார்.! பாதலங்கம்பை என்றார் இறைவன். அக்கணமே பாதலங்கம்பை அத்திமலையில் இருந்து செந்நிற நுரைகள் பொங்கப் பாய்ந்து வந்தது. அக்காட்சியை அகத்திய முனிவர் கண்டு, களிபேருவகை கொண்டு, கம்பையின் நீரைக் கையால் எடுத்துக் கண்களில் ஒட்டிக் கொண்டு அருந்தவும் செய்தார். பின் இறைவனைக் கண்டு தொழுது பணிந்தார்.

அப்போது இறைவன் சொன்னார். அகத்தியா.! இந்தப் பாதாலங்கம்பை ஆதிலிங்கத்திற்கு மாலை சூடுவது போல், வலமாகச் சுற்றிக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து, பொற்றாமரைத் தீர்த்தத்திலும், கருமாரித் தீர்த்தத்திலும் கலந்து, தரும தீர்த்தத்தில் கூடி, ஐக்கிய தீர்த்தத்தத்தில் சேர்ந்து சிந்துபூந்துறையில் சென்று கலக்கிறது. இதனை சொல்லிச் சூதமா முனிவர் கருமாரித் தீர்த்தம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

65. கருமாரிச் சருக்கம்:

நைமிசாரணிய முனிவர்களே.! பாண்டிய மன்னன் ஒருவன், தமிழ் பற்றுக் கொண்டவன். தமிழையும், தமிழ் புலவர்களையும் வாழ வைத்துக் கொண்டிருந்தான். சைவத்தை உயிராகக் கருதியவன். சைவ குரவர்களை உயிரினும் மேலாகக் கருதியவன். சிவ வழிபாடு செய்து விட்டுத்தான் அரச காரியங்களைக் கவனிப்பான். அத்தகைய மன்னன் ஒரு நாள் தியானத்தில் இருந்தான். அப்போது அவனைக் காண ஒரு முனிவர் வந்தார். அவன் கண்களை மூடித் தியானத்தில் இருந்ததால், முனிவர் வந்தது அவனுக்குத் தெரியாது. நாம் வந்திருப்பதை அறிந்தும் பேசாமல் இருக்கிறாளே என்று முனிவர் கோபம் கொண்டு கமண்டலத்தில் இருந்து நீரைக் கையில் எடுத்தார். அப்போது தான் தியானம் முடிந்து மன்னன் கண் விழித்தான். உடனே, யானையாக போ என்று கூறி கையில் இருந்த நீரை மன்னன் மீது தெளித்து விட்டார் முனிவர். மன்னன் பதறிப்போனான், முனிவர் பெருமானே.! நான் மனம் அறிந்து எந்தத் தவறும் செய்யவில்லையே கண்களை மூடித் தியானத்தில் இருந்ததால் அல்லவா தங்களைக் கண்டு வணங்கி வரவேற்க இயலாமல் போய்விட்டது. அதற்காக இவ்வளவு பெரிய சாபத்தைக் கொடுத்து விட்டீர்களே என்று மன்னன் பணிவுடன் கேட்டான்.

முனிவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் விமோசனம் சொன்னார். மன்னா.! ஏதோ விதிப்பு பயனால் நடந்து விட்டது. சாபத்தை நீக்கும் ஷக்தி எனக்கு இல்லை. ஆகையால் இதற்கு விமோசனம் சொல்கிறேன். நெல்லையப்பர் கோவிலுக்குள் உள்ள கருமாரித் தீர்த்தத்தில் நீ மூழ்கி எழும் காலம் வரும். அப்போது உன் சாபம் நீங்கும் என்று சொல்லி முனிவர் சென்று விட்டார். காவலனாக இருந்தவன் "கரி"யாக மாறிவிட்டான். அரண்மனையை விட்டு வெளியேறிப் பல வனங்களிலும், மலைகளிலும் அலைந்து திரிந்து, ஒருநாள் பொதியை மலையை அடைந்தான். அந்த மலையில் இருந்த ஒரு அரி (சிங்கம்) இந்த கரியை (யானையை) விரட்டியது. அரிக்குப் பயந்த கரி, பரி (குதிரை) போல் பாய்ந்து ஓடியது. பயந்தும் ஓடியது. அரியும் விடவில்லை, கரியைத் தொடர்ந்து விரட்டியது. ஓடிவந்த கரி நெல்லையம்பதி வந்து நெல்லையப்பர் கோவிலுக்குள் நுழைந்து கருமாரித் தீர்த்தத்தில் இறங்கியது. விடாது துரத்தி வந்த அரி, கருமாரித் தீர்த்தக் கரையில் வந்து நின்று கர்ஜித்து நிற்க, கலக்கமடைந்த கரியோ கருமாரி தீர்த்தத்தில் மூழ்கியது. அப்போதே அங்கிருந்து அரி சென்றுவிட்டது. சிறிது நேரத்தில் நீரில் இருந்து வெளியே வந்த கரி, சாபம் நீங்க பெற்று மன்னனாக மாறியது. கரியாக மூழ்கி மன்னனாக மாறி எழுந்ததால் அது "கருமாரித் தீர்த்தம்" என்றும் பெயர் பெற்றது.

அத்தீர்த்தம் தான் இன்று கருமாரித் தீர்த்தம் என்று வழங்குகிறது. அதன் பெயர் மாறினாலும் பெருமை சிறிதும் மாறவில்லை. இதுதான் கருமாரித் தீர்த்தத்தின் மகிமை என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்து பொற்றாமரை தீர்த்தம் பற்றி சொன்னார்.

66. பொற்றாமரைச் சருக்கம்:

நைமிசாரணிய முனிவர்களே.! பொற்றாமரைத் தீர்த்தம் பற்றித் திருமால் நாரத முனிவருக்கு கூறினார். அதனை நானும் கேட்டிருக்கிறேன். ஆகவே கேட்டதைக் கேட்டது போலவே உங்களுக்குச் சொல்கிறேன் என்று சொல்லிச் சூதமா முனிவர் சொன்னார். திருவைகுண்டத்தில் திருமாலும் திருமகளும் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு சென்ற நாரதர் இருவரையும் வணங்கிக் கேட்டார். நாராயணா.! திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள பொற்றாமரைத் தீர்த்தத்தின் பெருமையைத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்ல வேண்டும் என்று கேட்டார். நாரதா.! ஏதோ கலகம் மூட்டத்தான் வந்திருக்கிறாய் என்று எண்ணினேன். ஆனால் நீ கதை கேட்க வந்திருக்கிறாய். மகிழ்ச்சி.! என்று சொல்லித் திருமால் பொற்றாமரைத் தீர்த்தம் பற்றிச் சொன்னார்.

நாரதா.! நெல்லையப்பர் கோவிலின் உள்ளே, வடகிழக்குத் திசையில் இருப்பது தான் பொன் தாமரை பூக்கும் திருக்குளம் ஆகும். ஆதிகாலத்தில் சிவபெருமான், என்னையும் பிரம்மனையும் உருவாக்கிப் படைக்கும் தொழிலை பிரம்மனுக்கும், காக்கும் தொழிலை எனக்கும் தந்தார். அதன்படி நாங்கள் படைத்தும், காத்தும் வரும் காலத்தில், பிரம்மன் படைப்புத் தொழிலை மறந்து விட்டான். அதனால் அவன் பொற்றாமரைக் குளத்திற்கு வந்து நீராடி, அதன் கரையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். அப்போது இறைவன், பொற்றாமரைக் குளத்தில் இருந்து பொன்னிற அன்னமாக வந்து, பிரம்மனுக்கு படைப்பு தொழிலை உபதேசம் செய்து, வேண்டிய வரங்களையும் கொடுத்து பொற்றாமரைக் குளத்திலேயே மறைந்தருளினார். சிவபெருமானே அக்குளத்தில் பொன்னிற அன்னமாகத் தோன்றியதாலும், அவரே பொன்னிறத் தீர்த்தமாக விளங்குவதால் அது பொற்றாமரைக்குளம் என்னும் பெயரை பெற்றது. அத்தீர்த்தக் கரையில் எப்பொழுதும் தேவர்கள் சூழ்ந்திருப்பர்கள். நாமும் திருமகளோடு அத்தீர்த்தத்தின் வடபக்கம் இருக்கிறோம். வசிஷ்டர், வாமதேவர், காசிபர், பராசரர், வியாசர், கௌசிகர், ஆங்கிரசு, ஜமதக்கினி ஆகிய எட்டு முனிவர்களும், அப்பொற்றாமரைக் குளத்தில் நீராடி, அதன் எட்டு திசைகளில் இருந்தும் தவம் செய்கின்றனர். அந்த எண்மரும் அத்தீர்த்தத்தின் பெருமை பற்றிச் சொன்னார்கள்.

வசிஷ்டர்: பிறருக்குத் துன்பம் செய்தவர் பிறர் மீது பழி சுமத்தியவர், புறங்கொடுத்தோரைக் கொன்றவர், ஓதுவோரைப் பழித்தவர், பசுவைக் கொன்றவர் ஆகிய பாவிகளும் பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடினால் புனிதர் ஆவார் என்று வசிஷ்டர் சொன்னார்.

வாமதேவர்: பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி, நெல்லைநாதரை வணங்கினால் கல்வியும் பேரறிவும் பெற்றுக் கயிலை வாசி ஆவர் என்று வாமதேவர் சொன்னார்.

காசிபர்: வேறு தீர்த்தங்களில் திதி, தானம் செய்வதால் ஏற்படும் பலனை விட பொற்றாமரைத் தீர்த்தத்தில் தானம் செய்வதால் ஏற்படும் பலன் ஆயிரம் மடங்கு அதிகம் ஆகும் என்று காசிபர் சொன்னார்.

பராசரர்: மனைவியைப் பிறருக்கு வீட்டுக் கொடுத்து வாழ்பவன். நெல்லை அதிக விலைக்கு விற்றவன். அநியாய வட்டி வாங்கியவன், ஆகியோர் கூட இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் பாவம் நீங்கிய நீங்கப் பெறுவர் என்று பராசரர் சொன்னார்.

வியாசர்: நெல்லையப்பர் மீது பக்தி கொண்டு, நீராடினால் பறவைகள் விலங்குகள் கூட முக்தி அடையும் என்று வியாசர் சொன்னார்.

கௌசிகர்: மாதப் பிறப்பு, வருடப்பிறப்பு கிரகண காலம் ஆகிய காலங்களில் நீராடினால், பிறவிப் பெருங்கடல் கடந்து பிறவா நிலை பெறுவர் கௌசிகர் சொன்னார்.

ஜமதக்கினி: சிம்மம், ரிஷபம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் பிறந்தோர், மாதப்பிறப்பு அன்றும், வருடப்பிறப்பு அன்றும் நீராடினால் வெகு காலம் வாழ்ந்து வீடுபேறு அடைவர் என்று ஜமதக்கினி சொன்னார்.

ஆங்கிரசு: இத்தீர்த்தத்தில் நீராடி, நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் வணங்கி, உண்ணா நோன்பு மேற்கொண்டால், நலமும் வளமும் பெற்று, நற்கதி அடைவர் என்று ஆங்கிரசு சொன்னார்.

இத்தகைய பெருமை கொண்டது, பொற்றாமரைத் தீர்த்தம். இதில் நீராடி நெல்லையப்பரை வணங்கி வந்தால், எம பயம் இருக்காது. இதன் சிறப்பை அறியாதவர் கூட இதில் நீராடினால் எல்லா நலமும் பெறுவர். ஆதிரை, தைப்பூசம், அட்டமி, அமாவாசை, பிரதோஷம், பௌர்ணமி, துலாம் ராசியில் பிறந்த மாதப்பிறப்பு ஆகிய நாள்களில் நீராடினால், நீராடுவோரின் குலத்தைச் சேர்ந்த அனைவருடைய பாவங்களும் நீங்கும். பிரம்மன் இத்தீர்த்தத்தில் நீராடித் தவம் செய்ததால் தான் மீண்டும் படைப்புத் தொழிலை செய்தான். தசப் பிரம்மாக்களை மகன்களாகவும் படைத்தான். இத்தீர்த்தத்தை இருகைகளாலும் வாரி உண்டோர் சைவ சாத்திரங்களை உணர்ந்தோர் ஆவர். இத்தீர்த்தத்தில் உள்ள மீன் முதலிய உயிரிகள் தேவர்களும், முனிவர்களும் ஆவர். சிவபெருமான் பொன்னிறமாக தோன்றிய இந்த புண்ணிய தீர்த்தத்தை அசுத்தப்படுத்தவோ, தவறான செயல்களுக்கு பயன்படுத்தவோ அல்லது இந்த புண்ணிய தீர்த்தத்தில் மாசுபட செய்தவரோ, செய்விப்பவரோ பாவச் செயலுக்கு ஆளாகி வேதனை அடைவர். போற்றுதலுக்கு அரிதான பொற்றாமரை தீர்த்தத்தில் ஒரு முறை நீராடினால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும். துன்பமும், வினையும் தீரப்பெறுவர். எக்காலத்துக்கும் குறையாத திருவருள் வந்து சேரப் பெறுவர்.

இத்தீர்த்தத்தில் நீராடுவோருக்கும் நீரை அருந்துவோருக்கும் நோய் இல்லை. மூப்பு இல்லை. மரணம் இல்லை. வறுமை இல்லை. எல்லா நலன்களும் பெற்று இனிது வாழ்ந்து இறைவன் திருவடியை அடைவர். போற்றுதலுக்கு அரிதான பொற்றாமரை தீர்த்தத்தில் ஒரு முறை நீராடினால் ஆயிரம் பசுக்களுக்கு தானம் செய்த பலன் கிடைக்கும். துன்பமும் விலகி நலம் பெறுவர். எக்காலத்துக்கும் குறையாத திருவருளால் வந்து சேரப் பெறுவர், என்று திருமால் நாரத முனிவருக்குச் சொன்னார் என்று சூதமா முனிவர் நைமிசாரணிய முனிவர்களுக்குச் சொன்னார். இதனை கேட்ட நைமிசாரணிய முனிவர்கள் மகிழ்ந்து, முனிவர் பெருமானே.! இன்னும் பல தீர்த்தங்கள் பற்றிச் சொல்ல வேண்டும் என்று கேட்கச் சூதமா முனிவர் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published.

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram