English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 23

வாசிப்பு நேரம்: 5 Minutes
No Comments

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-23ல்.,

69. ஆனி விழாவில் அன்னதானப் பெருமைச் சருக்கம்.
70. வெண்ணீற்றுப் பெருமைச் சருக்கம்.
71. உருத்திராட்சப் பெருமைச் சருக்கம்.
72. ஐந்தெழுத்து பெருமைச் சருக்கம்.
73. சிவபூஜை மகிமைச் சருக்கம்.
74. பிரதோஷப் பெருமைச் சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

69. ஆனி விழாவில் அன்னதானப் பெருமைச் சருக்கம்:

சத்திருதி என்ற சிவனடியார் நெல்லையப்பர் காந்திமதி அம்மையின் ஆனித் தேர்த் திருவிழாவைக் காண வேண்டும் என்று, நெல்லையம்பதிக்கு வந்தார். பொற்றாமரைக் குளத்தில் நீராடி காந்திமதி அம்மையையும், நெல்லையப்பரையும், திருமூலலிங்க நாதரையும் மற்ற மூர்த்திகளையும் வணங்கிவிட்டு, வெளியே வந்து திருத்தேரையும் தரிசனம் செய்தார். அப்போது அவருக்குப் பசி வந்துவிட்டது. அவரால் தாங்க முடியவில்லை. திருவோட்டை ஏந்திய வண்ணம், சொந்தமாகப் பாடல்கள் இயற்றிச் சந்தத்தோடு பாடினார். பக்தர்கள் அவருடைய திருவோட்டில் பழங்களையும், பண்டங்களையும் போட்டனர். அவற்றை உண்டு சிவனடியார் பசியைப் போக்கினார். தேரோட்டத் திருவிழாவில் தானம் செய்தோர், தருமம் செய்தோர், பானகம் வழங்கியோர், நீர்மோர் வழங்கியோர், தண்ணீர் கொடுத்தோர், விசிறி தந்தோர், தேரைத் தரிசித்தோர், வடம் தொட்டு இழுத்தோர் அனைவரும் நெடுநாள் வாழ்ந்து கயிலை சென்றனர். எவரும் எமனுலகம் செல்லவில்லை எமலோகம் காலியாக இருந்தது. எமனுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.! எமன் சிந்தித்தான்.

எமலோகத்தில் எமனும், அவனுடைய சீடர்களும் தவிர வேறு யாரும் இல்லை. எங்கு பார்த்தாலும் வெறுமையாகத் தோன்றியது. எமனுக்கு எந்த வேலையும் இல்லை. நிலைமையை நினைத்து பார்த்தான். எந்த வேலையும் இல்லாத இந்த வேலை நமக்கெதற்கு? என்று எண்ணி நேரே திருமாலிடம் சென்றான். இறைவா.! எமலோகத்தில் எவரும் இல்லை. நானும் என் சீடர்களும் தான் இருக்கிறோம். இப்போது எமலோகத்திற்கு எவருமே வருவதில்லை. எமலோகம் காலியாகக் கிடக்கிறது. எனக்கு எந்த ஒரு வேலையும் இல்லை. எந்த வேலையும் இல்லாத இந்த சேலை எனக்கு எதற்கு? இந்த வேலை வேண்டாம் என்று சொல்லி பாசக்கயிற்றையும், சூலாயுதத்தையும் திருமாலின் திருவடியில் வைத்தான். உன் பெயரென்ன? மறலியா? மறதியா? இறைவன் முன்பு சொன்னதையும், செய்ததையும் மறந்து விட்டாயா? மார்கண்டேயனுக்காக முன் ஒரு எமனை கொன்று விட்டார். பின்னர் பிங்களனுக்காக ஒரு எமனை உதைத்தார். சுவேதா முனிக்காக நீயும் உதை வாங்கியவன் தானே? அதை மறந்து விட்டாயா? இறைவன் மீது கொண்டுள்ள பக்தியாலும், சிவனடியார்களுக்குச் செய்கின்ற தானத்தாலும், ஆனித் தேர்த் திருவிழாவைக் காண்பதாலும், வடம் பிடித்து இழுப்பதாலும் இறைவனின் அருளைப் பெற்ற எல்லோரும், தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்றுக் கயிலை சென்றனர். அதனால் தான் எமலோகம் வரவில்லை. ஆகையால் எந்த வேலையும் இல்லை என்று இறைவன் அந்த வேலையை விட்டு விடாதே.! இது தான் உன் சொந்த வேலை. போ.! என்று சொல்லித் திருமால் எமனை அனுப்பி வைத்தார் என்று சூதமா முனிவர் சொல்லித் திருநீற்றின் பெருமை பற்றிச் சொன்னார்.

70. வெண்ணீற்றுப் பெருமைச் சருக்கம்:

வெள்ளி மலையில் விமலன் வீற்றிருக்கிறார். அப்போது சனத் குமார முனிவர் சென்று, சதாசிவனை வணங்கி, இறைவா.! இந்த உலகிலேயே மிகவும் உயர்ந்த பொருள், சிறந்த பொருள், புனிதமான பொருள் எது என்று கேட்டார். சனத்குமாரா இந்த உலகிலேயே மிகவும் புனிதமான பொருளும், எமக்கு விருப்பமான பொருளும் வெண்ணீறு தான். இவ் வெண்ணீறு இரு வினைகளையும் நீக்கி வீடுபேறு தர வல்லது என்று சொன்னார் இறைவன். இறைவா.! இத்திரு வெண்ணீற்றை எங்கே அணிவது? எவ்வாறு அணிவது? என்பதைச் சொல்ல வேண்டும் என்று சனத்குமாரர் கேட்க இறைவன் சொல்கிறார்.

கற்பம்: இந்த திருநீறு கற்பம், அனுகற்பம், உபகற்பம் என்று மூன்று வகைப்படும். இவற்றுள் முழுக்கப் பசு தொடர்பானது. காது, கொம்பு, வால் ஆகிய உறுப்புகளில் எவ்விதக் குறைகளும் இல்லாத, மலட்டுத் தன்மை இல்லாத, நோய் இல்லாத, கிழம் ஆகாத பசுக்கள், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, ஆகிய நாள்களில் இடும் சாணத்தைத் தரையில் விழாமல், சாத மந்திரத்தைக் கூறி தாமரை இலையில் ஏந்தி, எடுத்துச் சுத்தப்படுத்திக் கையால் உருட்டி, நெல் உமியில் புரட்டி, நெருப்பில் போட்டு எரித்துச் சரியான பருவத்தில் எடுத்து, தூய மெல்லிய துணியால் சலித்துப் புதிய குடத்தில் இட்டு மூடிச் சுத்தமான இனத்தில் வைத்துக் காயத்திரி மந்திரம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். இது கற்பம் எனப்படும்.

அனு கற்பம்: அன்று எடுத்த சாணத்தை அன்றே உருட்டி, அன்றே உலர வைத்து, அன்றே சுட்டுப் பொடியாக்கி வைத்துக் கொள்வதும், சித்திரை மாதத்தில் காட்டில் காய்ந்து கிடைக்கும் சாணத்தை எடுத்துப் பசுவின் கோசலம் விட்டுப் பிசைந்து, உருட்டி, முன்சொன்ன முறைப்படி செய்வதும் அனு கற்பம் எனப்படும்.

உப கற்பம்: கானகத்தில் வெயிலின் வெப்பத்தால் இயற்கையாகப் பொடிந்து கிடைக்கும் சாணத்தைப் பொறுக்கி வந்து, பசுவின் பஞ்சகவ்யம் கலந்து பிசைந்து, உருட்டி, முன் சொன்னபடி செய்து வைத்துக் கொள்வது உபகற்பம் எனப்படும். இது வெண்மையாக இருந்தால் புண்ணியம். மஞ்சளாக இருந்தால் வறுமை. நீலமாக இருந்தால் தீமை, பிணி. கருப்பாக இருந்தால் ஆயுள் குறை. இவை இந்த உபகற்பத்தின் தன்மையாகும்.

வெண்ணீறு அணியும் விவரம்: பன்னிரண்டு அங்குல நீளம், எட்டு அங்குல அகலம் கொண்டதாக துணி, மான் தோல், புலித் தோல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில், வாய் அகலமாக இருக்கும்படி பை தைத்து அதில் வெண்ணீற்றை இட்டு வைக்க வேண்டும். வலக்கையில் உள்ள இடை மூன்று விரல்களால் பதினாறு இடங்களில் அணிய வேண்டும். நெற்றி, புயம், மார்பு ஆகிய இடங்களில் மூன்று விரல்களால் அணிய வேண்டும். செவிகளிலும், சிரசிலும் தொட்டால் போதும். நடுவிரல் பதியாது இருத்தால், அதிக இடைவெளி விட்டுப் பூசுதல், ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இருத்தல், வளைவாகப் பூசுதல் ஆகியவை கூடாது. தீட்சை பெற்றோர் மூன்று வேளையும் நீறணிய வேண்டும். மறையோர் பாதம் முதல் உச்சி வரை தூளாக அணிவர். பூஜை, செபம், தவம் முதலியவற்றை நீறணியாமல் செய்யக் கூடாது. செய்தால் அதற்குப் பலன் இல்லை. திருநீற்றைப் பூமியில் சிந்துவோர் நரகில் துன்புறுவர். ஒரு கையால் வாங்கினதும், விலைக்கு வாங்கினதும், ஆகாது. தலை அசைத்துக் கொண்டும், தலை கவிழ்ந்து கொண்டும், நடந்து கொண்டும் அணிந்தால் நன்மை தராது என்று சதாசிவன் சனத்குமார முனிவருக்குச் சொன்னார். அதை நான் உங்களுக்குச் சொன்னேன் என்று சூதமா முனிவர் சொல்லி , அடுத்து ருத்திராட்சத்தின் பெருமை பற்றிச் சொல்கிறார்.

71. உருத்திராட்சப் பெருமைச் சருக்கம்:

திரிபுரத்து அவுணர்கள் விரைவில் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் திருமாலும், திசைமுகனும் தேவேந்திரனும் தவம் செய்தனர். சிவபெருமான் சென்று அவர்கள் செய்யும் தவத்தை ஆயிரம் ஆண்டுகள் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது சிவபெருமானின் மூன்று கண்களில் இருந்தும், நீர்த்துளிகள் நிலத்தில் வீழ்ந்தன. அந்த இடத்தில் நெடிய மரங்கள் தோன்றின. அவை உருத்திராட்சங்களை தந்தன. அந்த உருத்திராட்சங்கள் பல வண்ணங்களிலும், பல முகப்புகளைக் கொண்டதாகவும் இருந்தன. வெண்மை, பொன்மை, செம்மை, கருமை ஆகிய வண்ணங்களில் இருந்தன. வெண்ணிறம் அந்தணர்களுக்கும், பொன்னிறம் அரசர்களுக்கும், செந்நிறம் வணிகர்களுக்கும், கருநிறம் மற்றப் பிரிவினர்களுக்கும் என்று ஆயிற்று. ஒரு முகம் கொண்டவை சிவன் வடிவம். இதை அணிந்தால் வேதியரைக் கொன்ற பாவம் தீரும். இரண்டு முகம் கொண்டவை அம்மை அப்பன் அம்சம்., இவை பசுக்கொலை முதலிய பாவங்களைப் போக்கும். மூன்று முகம் கொண்டவை அக்கினி அம்சம், இவை பெண் கொலைப் பாவத்தை போக்கும். நான்கு முகம் கொண்டவை நான்முகன் அம்சம், இவை பல வகையான தோஷங்களைப் போக்கும். ஐந்து முகம் கொண்டவை உருத்திரன் அம்சம். ஆறுமுகம் கொண்டவை ஆறுமுகன் அம்சம். இவ்வாறு எல்லாமே தேவ அம்சம் பொருந்தியவை. உருத்திராட்சம் அணிந்தவரின் பெருமையை ஒருவராலும் சொல்ல முடியாது. அந்தணர்க்கு எவ்வாறு பூணூல் அவசியமோ அது போன்று, சைவர்களுக்குத் திருநீறும், உருத்திராட்சமும் அவசியம். உருத்திராட்ச மாலையைச் சிரசிலும், கண்டத்திலும், தோள்களிலும் அணிய வேண்டும் என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையைச் சொன்னார்.

72. ஐந்தெழுத்து பெருமைச் சருக்கம்:

"நமசிவாய" என்னும் ஐந்து எழுத்தும் இறைவனின் வடிவமாகும். அனைத்து மந்திரங்களிலும் சிறந்த மந்திரம் ஐந்தெழுத்து மந்திரம். ஐந்தெழுத்து மந்திரத்தைச் சிந்தித்தாலே புண்ணியம் உண்டாகும். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தைக் குரு மூலமாக ஓதி உணர்ந்தால், துன்பக் கடலில் வீழாது இன்பாக் கடலில் திளைப்பர். வேதம், ஆகமம், புராணம், கலைகள் யாவும் கூறுவது ஐந்தெழுத்தின் பெருமையையே. அந்தணர்கள் "ஓம் நமசிவாய" என்று பிரணவத்தைச் சேர்த்தும். அரசர்கள் "நமசிவாய" என்று பிரணவத்தை நீக்கியும், வைசியரும் சூத்திரரும் "சிவாய நம" என்றும் சொல்ல வேண்டும். திருநீறு அணிந்து, உருத்திராட்ச மாலை போட்டு, ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லிச் சிவாலயத்தை வலம் வருவோர் எல்லோரும் சிவ வடிவம் பெறுவர் என்று சொல்லிச் சூதமா முனிவர், சிவபூஜையில் பெருமையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

73. சிவபூஜை மகிமைச் சருக்கம்:

தேவனுக்கெல்லாம் தேவனாக விளங்குபவர் சிவபெருமான். அப்பெருமானுக்குச் செய்யும் பணிவிடைகளில் எல்லாம் சிறந்தது அர்ச்சனையாகும். அவருக்கு அனுதினமும் அர்ச்சனை செய்வோர் அரச வாழ்வு பெறுவர். திருமால் சிவபூஜை செய்து தான் காக்கும் தொழிலைச் செய்து வருகிறார். திருமகளையும் மனைவியாகப் பெற்றார். பிரம்மன் சிவபூஜை செய்து தான் படைப்புத் தொழிலைச் செய்து வருகிறான். கலைமகளை மனைவியாகப் பெற்றான். இந்திரன், குபேரன், எமன், வாயு, வருணன், அக்கினி முதலிய தேவர்களும் சிவ வழிபாடு செய்து தான், தத்தமது தொழில்களை செய்து வருகின்றனர். சூரியனும், சந்திரனும் சிவ வழிபாடு செய்து தான், பகலும் இரவும் ஒளி வழங்கி கொண்டிருக்கின்றனர். அலைமகளும், கலைமகளும் சிவபூஜை செய்து தான், செல்வத்திற்கு அதிபதியாகவும், கல்விக்கு அதிபதியாகவும் விளங்குகின்றனர். அகத்தியர், வசிஷ்டர், வியாசர் முதலிய முனிவர்கள் பெற்ற சிறப்புகள் எல்லாம் சிவபூஜையால் பெற்றவையே. மனு, அரிச்சந்திரன், நளன், இராமன் முதலிய சூரிய குளத்து மன்னர்களும், யயாதி, தருமன் முதலிய சந்திர குலத்து மன்னர்களும், சிவ பக்தர்களாக இருந்து சிவா வழிபாடு செய்ததாலேயே சிறப்பைப் பெற்றார்கள்.

தயவு, நற்குணம், சத்தியம், வனப்பு, தியாகம், வீரம், புகழ், வெற்றி, பெருமை, இன்பம் இவையாவும் சிவன் அருளால் கிடைக்கக் கூடியவை. சிவன் அருள் இல்லையெனில், இவற்றில் ஒன்று கூட கிடைக்காது. முப்பொழுதும் முக்கண்ணரை வணங்க வேண்டும். இது இயலாவிட்டால் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வணங்க வேண்டும். இல்லையேல் அந்நாள் நம் வாணாளில் வீணாள் ஆகிவிடும். சிவபூஜை செய்யாமல் உண்ட உணவு புழுவாகி விடும். சிவ பூஜை செய்தவரைக் கண்டால், கண்டவர்க்குப் பாவம் வந்து சேரும். சிவ வழிபாட்டிலும் சிறந்த வழிபாடு எதுவும் இல்லை. எல்லாம் அவனே.! அவனன்றி ஓரணுவும் அசையாது. சிவனன்றிச் செயல் எதுவும் நடக்காது என்று சொல்லிச் சூதமா முனிவர் தொடர்ந்து பிரதோஷத்தின் பெருமை பற்றிச் சொன்னார்.

74. பிரதோஷப் பெருமைச் சருக்கம்:

யுகங்கள் நான்கு. இவை ஆயிரம் கூடினால், பிரம்மனுக்கு ஒரு நாள். இந்த நாள் முப்பது கூடினால் ஒரு மாதம். இம்மாதம் பன்னிரண்டு கூடினால் ஒரு வருடம், இவ்வருடம் நூறு ஆகும் போது, பிரமனுடைய ஆயுள் முடியும். பிரம்மனுடைய ஆயுட்காலம், திருமாலுக்கு ஒரு நாள் ஆகும். இவ்வாறு திருமாலுக்கு நூறு வயது ஆகும் போது அவருடைய ஆயுள் முடியும். அப்போது சிவபெருமான், தமது நெற்றிக் கண்ணால் சகலத்தையும் எரித்துச் சாம்பலாக்கி விடுவார். அது சுடலை போன்று காட்சி தரும். அச்சுடலையில் எம்பெருமான் திருநடனம் புரிவார். அந்த நடனத்தைத் தேவி கண்டு களிப்பாள். அந்த நாள் தான் திரயோதசி ஆகும். அன்று இரவில் உயிர்கள் எல்லாம் தோஷம் நீங்கப் பெற்றதால் அது புண்ணிய காலம் என்று இறைவன் அருளினார். ஆகையால் மாதந்தோறும், பட்சம் தோறும், பதின்மூன்றாம் நாள் வரும் போது, போகும் போது, முன் பின் உள்ள காலம் புண்ணிய பிரதோஷ காலம் ஆகும் என்று இறைவன் அருளினார்.

பிரதோஷ காலத்திற்கு முன் ருத்ர தாண்டவம் ஆடிய ஈசன், பிரதோஷ காலத்திற்குப் பின் ருத்திர தாண்டவம் ஆடிய ஈசன், பிரதோஷ காலத்திற்கு பின், அனைத்து உயிர்களையும் படைத்து ஆனந்தத் தாண்டவம் ஆடினார். சனிப் பிரதோஷத்து அன்று இல்லத்தில் லிங்கம் அமைத்துத் தரையை மெழுகிக் கோலமிட்டு அலங்காரம் செய்து, வடக்கு முகமாக அமர்ந்து, பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய இயலாதவர்கள் கோவிலுக்குச் சென்று வழிபடலாம். நந்தியின் பின்புறம் இருந்து, சோம சூத்திரம் வரை, உடலை அலட்டிக் கொள்ளாமல், கைகளைக் கட்டிக் கொண்டு, ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிற்குள் ஓதிக் கொண்டே நெல்லையப்பரை வலமாக ஒரு பிரதட்சணம் வந்தால், நூறு பிரதட்சணம் வந்த பலன் கிடைக்கும். பிரதோஷ காலத்தில் திருநீறு அணிந்து, உருத்திராட்ச மாலை போட்டு ஐந்த்துத்து மந்திரத்தை ஓதி, கோவிலை வலம் வந்தால், பில்லி, சூனியம், பிசாசு, வறுமை, பிணி ஆகிய தொல்லைகள் இல்லை என்று ஆகும். மாங்கல்யம், மகப்பேறு விரும்புவோர் பெற்று மகிழ்வர். இந்தப் பிரதோஷப் பெருமையைத் தரும தேவதையைத் தவிர மற்றவர் முழுமையாக அறிவது அரிது என்று சூதமா முனிவர் சொல்லி மேலும் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published.

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram