திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 20

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-20ல்.,

61. நெல்லுக்கு வேலியிட்ட சருக்கம்.

62. சுவேத முனி காலனை வென்ற சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

61. நெல்லுக்கு வேலியிட்ட சருக்கம்:

கல்யாணிபுரம் என்னும் மணவை நகரில் இருந்து முழுதும் கண்ட ராம மன்னனின் மகன் ஆண்டு வந்தான். அவன் நீதியோடு ஆண்டு வந்தும், விதி வழியால் பன்னிரண்டு ஆண்டுகள் மழையே பெய்யவில்லை. நீர் நிலைகள் வறண்டு போயின. நிலத்தடி நீரும் குறைந்து போனது. பயிர்த் தொழில் நடக்கவில்லை. எண்டு பார்த்தாலும் பஞ்சம், பசி, பட்டினி என்று மக்கள் பரிதவித்தனர். தானம், தவம், தருமம் அனைத்தும் தடைப்பட்டன. அந்த மணவை நகரில் வேதசர்மா என்ற ஒரு வேதியன் மனைவி மக்களோடு வாழ்ந்து வந்தான். அவனுக்கு வருவாயும் இல்லை. வயிறார உணவும் இல்லை. பசியும், பட்டினியுமாகவே நாள்களை நகர்த்தி வந்தான். பஞ்சம், பசி, பட்டினியென்று நாடெல்லாம் மக்கள் படும் பாட்டைப் பார்த்த அம்மை வடிவுடையாள், வேய்நாதரைக் கண்டு கேட்கிறாள். இறைவா.! வெகுகாலமாக மழையில்லாமல் மக்களும், மாக்களும் படாதபாடு படுகின்றனர். என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது ஏன்? சொல்லுங்கள் என்று கேட்டாள். அதற்கு பெருமான் எதற்கும் ஒரு காலம் உண்டு.! காலம் வந்தால் காரியம் கை கூடும். அதுவரை சற்று பொறுத்திரு என்று கூறுகிறார். அதனைக்கேட்ட அம்மையும் அமைதியாக பொறுத்திருந்தாள்.

ஒருநாள் வேணுவன நாதர், வேதசர்மாவின் கனவில் தோன்றி, வேதசர்மா.! நீ எமது வேணுவனத்திற்கு வந்து விடு.! வளமாக வாழலாம் என்று கூறினார். நம் கனவில் தோன்றி நல்வாக்குத் தந்தவர் வேணுவன நாதர் தான் என்பதைத் தெரிந்து கொண்ட வேதசர்மா தனது மனைவி மக்களுடன் வேணுவனத்திற்கு குடி பெயர்ந்தான். சிந்துபூந்துறைத் தீர்த்தத்திலும், பொற்றாமரைத் தீர்த்தத்திலும் மிரட்டி கோவிலுக்கு உள்ளே சென்று, வேய்நாதருக்கும், வடிவுடை அம்மைக்கும் அபிஷேக ஆராதனை எல்லாம் செய்தான். வேணுவனத்திலேயே தங்கி இருந்து, அனுதினமும் அம்மைக்கும் அப்பனுக்கும் அபிஷேக ஆராதனை ஆகிய பணிவிடைகள் எல்லாம் செய்து வந்தான். சில காலத்தில் செல்வம் சேர்ந்தது. செழிப்பு வந்தது. வளமான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். வேதசர்மாவின் பக்தியை சோதிப்பதற்காக இறைவன் அவனுக்கு ஒரு சோதனை வைத்தார். சிறுகச் சிறுக அவனுடைய செல்வத்தைத் தேய வைத்து, வறுமையை வளர வைத்தார். வேதசர்மா முன்பிருந்த நிலக்கிய மீண்டும் வந்துவிட்டான். முன்பு அவனுக்குச் செல்வம் கிடைப்பதற்கு இறைவன் செய்த சோதனை., அவனிடம் சொல்லிச் செய்த சோதனை. இன்று அவனுக்கு வறுமை வருவதற்குச் செய்து வந்த சோதனை அவனிடம் சொல்லாமல் செய்த சோதனை. இந்தச் சோதனை காலத்திலும் அவன் இறைவனுக்குச் செய்து வந்த பணிவிடைகளை நிறுத்தவில்லை. முன்பு அவன் தன்னுடைய வீட்டில் இருந்து புது நெல் எடுத்துக் காய வைத்துக் குத்தி அரிசியாக்கி பெருமானுக்கு அமுது படைத்து வந்தான். இன்று வீடு வீடாகச் சென்று நெல் வாங்கி வந்து காயவைத்துக் குத்தி அரிசியாக்கி, அந்த அரிசியை அமுதாக்கி பெருமானுக்கு படைத்து வந்தான். ஒருநாள் அவன் வழக்கம் போல நெல் வாங்கி வந்து கோவிலின் உள்ளே மூலலிங்கத்தின் முன்பாக உலர போட்டு விட்டு திருமஞ்சன நீர் எடுத்து வர தாமிரபரணி நதிக்கு சென்றான். வேணுவன நாதர் அம்மை வடிவுடைநாயகியை அழைத்தார். அன்று மழை பொழியாகி செய்யுங்கள் என்று நீ கூறிய போது நான் அதற்குரிய காலம் வரட்டும் என்று கூறினேன் அல்லவா? அந்தக் காலம் இன்று வந்துவிட்டது, இப்போது பார் மழை பொழியும் என்று புன்முறுவலுடன் கூறினார். அக்கணமே மழை பொழியத் தொடங்கி விட்டது.

மழை என்றால் சாதாரண மழை இல்லை, பேய் மழையாகப் பெய்தது. வீதி எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த மழையிலும் ஒருவனுக்கு வேர்த்து விட்டது. திருமஞ்சன நீர் எடுத்து வருவதற்காகப் தாமிரபரணிக்கு போயிருந்த வேதசர்மா நீராடிக் கொண்டிருந்தான். பெய்யும் மழையைக் கண்டு பதறிப் போனான். அந்தப் பயத்தில் அவனுக்கு வேர்த்து விட்டது. அமுதுக்காக உலர போட்டிருந்த நெல் வெள்ளத்தில் போயிருக்குமே யாரிடத்தில் போய் நெல் வாங்குவேன். அப்படியே வாங்கினாலும் எப்படி உலர வைப்பேன்? இன்று இறைவனுக்கு அமுது படைக்க முடியாமல் போய்விடுமோ? ஐயோ நான் என்ன செய்வேன்? என்று புலம்பி மனம் பதறி, வேகவேகமாகத் திருமஞ்சன நீர் எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். கோவிலுக்குள்ளே சென்று திருமஞ்சன குடத்தை இறக்கி வைத்து விட்டு நெல் உலர போட்டிருந்த இடத்துக்குச் சென்று பார்த்தான். என்னே ஆச்சரியம்.! உலரப்போட்ட நெல் போட்டபடியே கிடந்தது. நெல்லின் மீது ஒரு மழைத்துளி கூட விழவில்லை. மாறாக நெல் கிடந்த இடத்தில் மட்டும் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட வேதசர்மா, இறைவா.! என்னே உன் திருவிளையாடல் என்று வியந்து ஓடோடிச் சென்று மன்னனிடம் சொன்னான். நடந்ததைக் கேள்விப்பட்ட மன்னன் அந்த அதிசயத்தை வந்து பார்த்தான்.இறைவா.! என்னே உன் கருணை. உன் அமுதுக்குரிய நெல்லையும் நனையாது காத்து, நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தையும் போக்கி விட்டாயே.! உன் கருணையே கருணை. நெல்லுக்கு வேலியிட்டுக் காத்த உன்னை இனி நாங்கள் “நெல்வேலி நாதர்” என்று அழைப்போம். “மழைக்கு வேலி அமைத்த மகாதேவர்” என்றும் வணங்குவோம் என்று மன்னன் துதித்தான்.

அம்மை காந்திமதியின் தூண்டுதலால் மழை பெய்து நாட்டில் ஏற்பட்ட நல்குரவு மாறி நாடெல்லாம் செழித்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். முழுதுங்கண்ட ராமனின் மகன் ஆட்சியும் நன்றாக நடந்தது. வேத சர்மாவும் முன்போல் செல்வம் பெற்று இறைவனுக்குரிய பணிவிடைகள் எல்லாம் செய்து வந்தான். கையில் மானையும், மழுவையும் ஏந்திய வேயீன்ற முத்தரான நெல்லையப்பர் பெருத்த மழையைப் பெய்வித்தார். பூமியெல்லாம் வளம் பொங்கியது. அறவோரும் அந்தணரும் வேள்விகளை செய்தார்கள். அமரர்களும் அவிஉணவு பெற்றார்கள். தவசீலர்களும் தத்தம் தவத்தை மேற்கொண்டனர். எங்கும் செழிப்பு மயமாயிற்று. விஷத்தை உணவு போன்று உண்ட வேயீன்ற முத்தர், தமது சந்நிதியின் முற்றத்தில் உலர போட்டிருந்த நெல்லை மழையினின்றும் வேலிக்கட்டி காத்ததால் “நெல்வேலி நாதன்” என்று ஆகிவிட்டார். மாயைகளை எல்லாம் அகற்றும் பெருமை கொண்ட வேணுவனமும் திருநெல்வேலி ஆகிவிட்டது.மாபெரும் தவசீலர்களே.! மறையவர்களுக்கு அமுதத்தை வாரி வழங்கிய வள்ளலான சிவபெருமான், உலகத்தின் துயரைப் போக்கி மழையைப் பெய்யச் செய்த, வேத சர்மாவின் அன்பைக் சுமந்து நெல்லைக்கு காத்து வேணுவனத்தைத் திருநெல்வேலி எனவும், தம்மை நெல்லையப்பராகவும் ஆக்கிய அருளிய காதை இதுதான் என்று சூதமா முனிவர் சொன்னார். நெல்லுக்கு வேலியிட்டுக் காத்த செய்தி நாடெல்லாம் பரவி நட்டு மக்கள் எல்லோரும் வந்து நெல்வேலி நாதரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி வரமும், வளமும் பெற்றுச் சென்றனர் என்று சூதமா முனிவர் சொன்னார். அடுத்துச் சுவேத முனியின் வரலாற்றை சொல்லத் தொடங்கினார்.

62. சுவேத முனி காலனை வென்ற சருக்கம்:

துவாபர யுகத்தில் சூரிய குலத்தில் தோன்றிய சுவேத கேது என்னும் ஒரு மன்னன் உலகின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். காலப் போக்கில் அவனுக்கு மூப்பு வந்தது. ஆட்சிப் பொறுப்பைத் தனது மகனிடம் தந்து விட்டு, வாழ்க்கையின் மூன்றாம் நிலையான “வானப் பிரஸ்தம்” என்னும் வன வாழ்க்கையை மேற்கொண்டான். சுவேத கேது மன்னனுடன் அவனுடைய மனைவியும் சென்றாள். இருவரும் வனத்தில் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் அவன் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டுப் படுத்து விட்டாள். அவளுக்கு இறுதிக்காலம் வந்தது. இவ்வுலகை விட்டுப் பிரிந்தாள். அவள் ஆவி பிரியும் போது அவள் பட்ட துன்பத்தைக் கண்ட சுவேத கேது துடிதுடித்து போனான். சொல்ல முடியாத மரண வேதனை அது. அப்போது அவன் நினைத்தான், நமக்கும் ஒருநாள் மரணம் வரும். அப்போதும் இப்படிப்பட்ட வேதனையை நாம் அனுபவிக்க கூடாது. இதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். மனைவியின் மறைவுக்கு பிறகு, வனமெல்லாம் சுற்றி அலைந்தவன், அப்படியே வான் வரண்டாலும் தான் வரண்டு போகாத தாமிரபரணி பாய்கின்ற வேணுவனத்திற்கு வந்தான். அங்குள்ள பசுமையும், வளத்தையும் கண்டு மனம் மகிழ்ந்தான். எங்கும் இல்லாத ஒரு தெய்வாம்சம் அங்கு இருப்பதை உணர்ந்தான். பல முனிவர்களும், ஞானிகளும் குழுமி இருப்பதைக் கண்டு அவர்களை வணங்கினான். நகரத்திற்கு வந்தான், நகரைச் சுற்றிப் பார்த்தான். நெல்லையப்பரின் கோவிலுக்குள் சென்றான். பொற்றாமரைக் குளத்தில் நீராடி, அம்மை காந்திமதியை வணங்கிய பின், நெல்லையப்பரையும், திருமூல லிங்க நாதரையும் வணங்கி வாயிலுக்கு வந்தான். அங்கே முனிவர்கள் புடை சூழ வந்த அகத்திய முனிவரைக் கண்டு வணங்கினான். அவனிடம் நலம் கேட்ட அகத்திய முனிவர் அவனைத் தமது ஆசிரமத்துக்கு அழைத்து சென்றார். இங்கு வந்த நோக்கம் என்ன? என்று கேட்டார். முனிவர் பெருமானே.! நான் வடக்கே இருந்து புறப்பட்டு பல தலங்களுக்கும் சென்று வருகிறேன். ஆயினும், மரண வேதனை இல்லாத மரணம் வேண்டும் என்ற எண்ணம் ஈடேறவில்லை. என் நல்வினைப் பயனால் இன்று தங்களை கண்டேன். என் எண்ணம் ஈடேறத் தாங்கள் தாம் தகுந்த வழி காட்ட வேண்டும் என்று சுவேதன் சொன்னான்.

சுவேதா.! நீ சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறாய். சிவபெருமான் கோவில் கொண்டிருக்கிற ஸ்தலங்களில் எல்லாம் சிறந்த ஸ்தலம் இந்தத் திருநெல்வேலித் ஸ்தலம் தான். வடிவுடைநாயகி காந்திமதியாக அம்மை உமையவளும், ஞான நாயகன் நெல்லையப்பராகச் சிவபெருமானும் கோவில் கொண்டுள்ள ஸ்தலம் இந்தத் திருநெல்வேலி ஸ்தலம். இங்கு தரும தேவதை நான்கு கால்களாலும் நடக்கிறாள். இந்தத் தளத்தில் வாழ்பவர்களுக்கு எம பயமும் இல்லை, இறுதிக் காலத்தில் மரண வேதனையும் இல்லை. அத்துணை சிறப்பான ஸ்தலம் இந்த ஸ்தலம். இங்கே இறைவன் செய்த திருவிளையாடல்கள் எண்ணற்றவை. அவற்றில் ஒன்றை மட்டும் சொல்கிறேன் கேள் என்று சொல்லிக் கும்ப முனிவர் பிங்களன் கதையைக் கூறத் தொடங்கினார்.

பிங்களன் என்று ஒரு தேவ இருடி இருந்தான். அவன் சிறந்த ஞானம் உடையவன். உலகமெல்லாம் சுற்றிப் பார்த்து இறுதியில் இங்கு வந்தான். இங்கு வந்தவன் இங்கேயே தங்கியும் விட்டான். தினம் தோறும் பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடுவதும், அம்மை காந்திமதியையும், நெல்லையப்பரையும் வணங்குவதுமாக இருந்தான். எப்போதும் சிவா சிந்தனையோடு வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் சிவலிங்கத்தின் முன் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருக்கும் போது, எமன் வந்து அவனுடைய உயிரைக் கவர்வதற்காக, அவன் மீது பாசக் கயிற்றை வீசினான். பதறிப் போன பிங்களன் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லிக் கொண்டே சிவலிங்கத்தைக் கட்டி பிடித்தான். எமன் விடவில்லை பாசக் கயிற்றைப் பிடித்து இழுத்தான், பிங்களன் பெருத்த கூப்பாடு போட்டுச் சிவபெருமானை கூப்பிட்டான். அக்கணமே அய்யன் தோன்றி, எமனை எட்டி உதைத்தார். எமன் மாண்டு போனான். பிங்களன் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அப்போது இறைவன் அவனுக்கு எமபயம் இல்லாத நித்தியத்துவத்தைக் கொடுத்தார். இத்தகைய பெருமைக்கு உரிய பதி நெல்லையம்பதி. ஆகையால் நீயும் இங்கே இருந்து அம்மை காந்திமதியையும், நெல்லையப்பரையும் வாங்கி வா.! உன் எண்ணம் ஈடேறும் என்று குறுமுனி கூறினார்.

சுவேதனும் சரி என்று சொல்லி, அவனே ஒரு லிங்கத்தை அமைத்து வழிபாட்டு வந்தான். லிங்கத்தின் முன் அமர்ந்து தவம் இருந்து முனிவன் ஆகி விட்டான். வழக்கம் போல் அவன் லிங்கத்தின் முன் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள் எமன் அவன் உயிரைக் கவர்ந்து செல்வதற்காக அங்கே வந்து, பாசக் கயிற்றை அவன் மீது வீசினான். அப்போது சுவேதா முனி சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். உடனே சிவபெருமான் அங்கு தோன்றி காலனைக் காலால் எட்டி உதைத்தார். உதைபட்ட காலன் உயிர்விட்டான். சுவேத முனி உயிர் பெற்றான். அப்போது திருமாலும், நான்முகனும் வந்து இறைவனை வணங்கி, இறைவா.! இந்த உலகம் ஒழுங்காக நடைபெறுவதற்காக, இறந்து போன எமதருமனை எழுப்ப வேண்டும் என்று வேண்டினர். இறைவனும் எமனுக்கு உயிர் கொடுத்து அருளினார். உயிர் பெற்ற எமன் இறைவனை பணிந்து வணங்கினான். இந்தத் திருவிளையாடல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பூரம், உத்திரம், அஸ்தம் ஆகிய நட்சத்திரங்களில் சிவபூஜை செய்து பஞ்சமூர்த்திகளை ஒரே ரதத்தில் வைத்து திருவீதியுலா வரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் இறைவன் நிகழ்த்தியது முழுமையடைந்து உரிய காலத்தில் மரணம் சம்பவிக்க இருந்த பக்தனை மரண பயத்தில் இருந்து விடுவித்து முக்தி அளித்த திருவிளையாடல். எனவே திருக்கடையூரைக் காட்டிலும் பெருமை வாய்ந்ததாகும். அம்மை அறம்வளர்த்த நாயகி அரணை மணந்து அகத்திய முனிவருக்கு திருக்கல்யாண கோலம் கட்டிய இத்தலத்தில் திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, கனகாபிஷேகம், சதாபிஷேகம் மற்றும் மிருத்யுஞ்சய வேள்வி ஆகியவை இத்தலத்தில் செய்ய சாலச் சிறந்தது ஆகும். என்னை வணங்கும் ” எமதருமா.! எமது பக்தர்களை அணுகாதே என்று எச்சரித்து அனுப்பினார். மரண பயம் நீங்கும் எல்லை இல்லா திருநெல்வேலி பூமி என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்து, சிந்துபூந்துறை லிங்கம் பற்றிச் சொன்னார்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 33.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-33ல்., 113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் காட்டிய சருக்கம். 114. தேவர்களுக்கு அகோர தாண்டவம் ஆடிக் காட்டிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!