ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது பழமொழி. ஆனால் திருநெல்வேலியை சேர்ந்த சுலோச்சன முதலியார் என்னும் தனி மனிதன் தனது சொத்துக்களை எல்லாம் விற்று அதன் மூலம் வந்த வருமானத்தில் தாமிரபரணி ஆற்றின் மீது ஒரு மேம்பாலத்தைக் கட்டி கொடுத்து மக்களுக்கு அர்பணித்துள்ளார். அவரின் செயலைப் பாராட்டி அவரைக் கௌரவிக்கும் பொருட்டு அந்தப் பாலத்திற்கு அவருடைய பெயரைச் சூட்டி ஆங்கிலேய அரசுச் சிறப்பு செய்தது. அதுதான் திருநெல்வேலி மாநகரத்தில் 175 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் பயன்பாட்டில் உள்ள கொக்கிரக்குளம் "சுலோச்சன முதலியார் ஆற்றுப்பாலம்".
சுலோச்சன முதலியார் ஆற்றுப்பாலத்தின் வரலாறு:
சுமார் இருநூறு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களுக்கு இடையே ஓடும் தாமிரபரணி ஆற்றைக் கடக்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. அந்தக் காலத்தில் தாமிரபரணியில் வருடத்தின் அனைத்து நாட்களும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்ததாம். இதனால் ஆற்றைக் கடந்து அக்கரைக்கு செல்லப் பரிசல் போக்குவரத்து பயன்படுத்தப் பட்டதாம். இதனால் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் ஓடும் தாமிரபரணி ஆற்றைக் கடக்க பரிசலில் ஏறிப் பயணிக்கக் கடும் போட்டி நிலவுமாம். மக்கள் கூட்டம் இங்குப் பரிசலில் பயணிக்க நீண்ட நேரம் காத்திருப்பார்களாம். இதனால் அங்கு அடிக்கடி சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்படுமாம். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி திருடர்கள் அங்குக் கிடைக்கும் பொருட்களைத் திருடிச் செல்வார்களாம். இதனால் தாமிரபரணி பரிசல் துறை எப்போதும் கூட்டத்தால் நிரம்பி வழியுமாம். பரிசலுக்கு பணம் கட்ட முடியாத ஏழைகளும், கூட்டத்தில் காத்திருக்க விருப்பம் இல்லாத வாலிபர்களும் கடும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஆற்றில் நீந்திச் சென்று மறுகரை சேர்ந்தார்களாம். இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், இதனைக் கருத்தில் கொண்டு அந்த இடத்தில் ஒரு பாலம் கட்ட ஆங்கிலேய அரசாங்கத்திடம் பலமுறை இங்கு வாழும் மக்கள் விண்ணப்பம் செய்தும், ஆங்கிலேய அரசாங்கம் செவி சாய்க்காமல் கிடப்பில் போட்டுவிட்டதாம்.
இந்த நிலையில் 1840 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதி நெல்லை ஜில்லா கலெக்டராக ஈ.பி.தாம்சன் பொறுப்பேற்கிறார். அவர் பொறுப்பேற்ற சில நாட்களுக்குள் கொக்கிரக்குளம் பரிசல் துறையில் மிகப்பெரிய கலவரம் வெடித்து உயிர்சேதமும் நிகழ்கிறது. அங்கு நடந்த வன்முறையில் சிலர் கொலை செய்யப்பட்டனர். இது புதிதாகப் பொறுப்பேற்ற கலெக்டர் தாம்சனுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் ஒரு பாலம் இருந்திருந்தால் இந்தக் கலவரம் ஏற்படாமல் தடுத்திருக்கலாமென நினைத்த தாம்சன், உடனடியாக அந்த இடத்தில் பாலம் கட்ட வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி ஆங்கிலேய அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதுகிறார். இதுகுறித்து உடனடியாகத் தனது அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் தாசில்தார் அந்தஸ்துக்கு நிகரான சிரஸ்தார் பதவி வகித்த சுலோச்சன முதலியார் என்ற மனிதரும் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பரிசல் துறையில் நடக்கும் கலவரம் மற்றும் குழப்பங்களைக் கட்டுப்படுத்த உடனடியாகத் தாமிரபரணி ஆற்றின் மீது பாலம் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு கேப்டன் ஃபேபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
லண்டனில் உள்ள தேம்ஸ் நதியின் மீது அமையப்பெற்றுள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தைப் போன்ற தோற்றத்தில் 760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 ஆர்ச்சுகள், அவற்றைத் தாங்க இரட்டை தூண்களுடன் கூடிய அமைப்பில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான மாதிரி வரைபடமும் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பாலம் கட்டுவதற்காகத் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டபோது அது ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவுகளை உள்ளடக்கி இருந்தது. கிட்டத்தட்ட அரைலட்ச ருபாய் பணத்தை இந்தப் பாலத்திற்கு செலவு செய்ய ஆங்கிலேய அரசாங்கம் தயாராக இல்லை. இதனால் கலெக்டர் தாம்சன் மக்களின் நலனுக்காகக் கட்டப்படும் அந்தப் பாலத்திற்கு தேவையான பணத்தை மக்களிடம் இருந்தே வரியாக வசூலிக்க முடிவு செய்கிறார். தந்து முடிவைச் செயல்படுத்த எண்ணிய அவர் தனது அலுவலகத்தில் வேலை பார்த்த சுலோச்சன முதலியாரை அழைத்துப் பாலம் காட்டும் பொறுப்பை ஒப்படைத்தார். அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சுலோச்சன முதலியார் மக்களுக்குச் செய்யும் நலத்திட்டங்களுக்காக, அவர்களிடம் சென்றே பணத்தை வசூலிப்பதா, பாவம் ஏழை மக்கள் எங்கிருந்து அதற்குரிய பணத்தை புரட்டுவார்கள் என நினைத்த மாத்திரத்தில் அந்தப் பாலம் காட்டும் செலவை ஏன் நாமே ஏற்றுக்கொள்ள கூடாது எனச் சிந்திக்கிறார்.
இது தொடர்பாகத் தனது வீட்டிற்கு சென்றவுடன் தனது மனைவி வடிவாம்பாளை அழைத்துத் தனது எண்ணத்தைக் கூறுகிறார். வடிவாம்பாளும் புன்முறுவலுடன் தனது கணவரின் எண்ணத்திற்கு செவிசாய்க்க, மறுநாளே தன்னிடம் இருந்த பொன், பொருள், ஆபரணங்களை விற்றும், வீட்டில் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு உடனடியாகப் பாலம் காட்டும் பணியைத் துவங்கினார். மூன்று வருட காலம் இந்தப் பாலத்தின் கட்டுமான பனி நடைபெற, அதற்குரிய செலவுகளும் இழுத்துகொண்டே போக, தான் தொடங்கிய செயலிலிருந்து பின் வாங்காமல், தனது வீடு, வாகனம், மனைவியின் நகைகள் என அனைத்தையும் ஒவ்வொன்றாக விற்று பொருளைச் சேர்த்து பாலம் கட்டுவதில் ஈடுபடுகிறார். ஒரு வழியாக மூன்று வருடம் கழித்து அந்தப் பாலம் கட்டி முடிக்கப்பெற்றது. இந்தப் பாலத்தைத் தனி மனிதனாக நின்று கட்டிய சுலோச்சன முதலியாரை ஆங்கிலேய கௌரவித்து அவரின் பெயரையே அந்தப் பாலத்திற்கு சூட்டியது. அனைத்து பணிகளும் முடிந்து அந்தப் பாலத்தைத் திறக்கும் விழா நடைபெற்றபோது, வி யானை முன்னே நடந்து செல்ல அதன் பின்னால் மேளதாளம் முழங்க முதல் ஆளாகச் சுலோச்சன முதலியார் தனது மனைவி வடிவாம்பாளுடன் அந்தப் பாலத்தில் நடந்து செல்ல. அவருக்குப் பின்னால், பாலத்தைக் கட்டிய கேப்டன் ஃபேபர், பொறியாளர் டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே, கலெக்டர் தாம்சன் ஆகியோரும் நடந்து சென்றார்களாம். தனிமனிதனாக அந்தப் பாலத்தைக் கட்ட முயற்சிகள் செய்த சுலோச்சன முதலியாரை பாராட்டும் வண்ணம், அந்தப் பாலத்தின் தொடக்கத்தில் 20 அடி உயத்தில் சிறு கோபுரம் ஒன்றை அமைத்து அதில் சுலோச்சன முதலியார் செய்த உதவியைக் குறிப்பிட்டு ஆங்கிலேயர்கள் ஒரு கல்வெட்டைப் பதித்து உள்ளார்கள்.
இவ்வாறு தனது ஊர் மக்களுக்காகத் தனது சொத்தை எல்லாம் விற்று தன்னலம் பாராமல், பொதுநோக்கில் அவர் கட்டிய பாலத்தின் மூலம் தான் எளிதாக இந்து நாம் தாமிரபரணி ஆற்றைக் கடந்து அக்கரைக்கும் இக்கரைக்கும் பயணித்து வருகிறோம் என்பதை நினைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது அல்லவா?
சுமார் 175 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்தச் சுலோச்சன முதலியார் ஆற்றுப்பாலம் மட்டும் இல்லையென்றால் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களுக்கு மத்தியில் ஓடும் தாமிரபரணி ஆற்றைக் கடந்து செல்வது மிகவும் சவாலான காரியமாக இருந்திருக்கும். எனவே பல தலைமுறைகளும் பயன்பெறும் வகையில் தனது சொத்துக்களை எல்லாம் விற்று பாலம் கட்டிய சுலோச்சன முதலியாருக்கு அந்தப் பாலத்தின் வழியாகப் பயணிக்கும் போதெல்லாம் நன்றிக்கடன் செலுத்த திருநெல்வேலிக்காரர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்வோமாக.