பாளையங்கோட்டை நகரின் மத்திய பகுதியில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ அழகியமன்னார், ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, ஸ்ரீ வேதநாராயணர் திருக்கோவில். இங்கு அஷ்டாங்க விமானத்தின் கீழ் பெருமாள் இரண்டு தளங்களில் காட்சித் தருகிறார். விமானத்தின் முதல் தளத்தில் (திருக்கோவில் மாடியில்) ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ அழகியமன்னார் நின்ற கோலத்தில் வர்ணகலாபத் திருமேனியாகக் காட்சி தருகிறார். இரண்டாம் தளத்தில் (திருக்கோவில் கருவறையில்) ஸ்ரீ வேதவல்லி, ஸ்ரீ குமுதவல்லி உடனுறை ஸ்ரீ வேதநாராயணர் அமர்ந்த கோலத்தில் கருவறை மூலவராகக் காட்சி தருகிறார். இவருடன் கருவறையில் இரண்டு வெண்சாமரம் வீசும் கன்னியர்களும், இரண்டு மகரிஷிகளும் இருக்கின்றனர். நான்கு வேதங்களும் இங்குப் பெருமாளை வழிபட்டதால் இங்குப் பெருமாள் வேதநாராயணர் என்ற திருநாமம் தாங்கிப் பெருமாள் காட்சி தருகிறார். இந்தக் கோவிலின் உற்சவ மூர்த்தி ஸ்ரீ சத்யபாமா, ஸ்ரீ ருக்மணி உடனுறை ஸ்ரீ ராஜகோபாலசுவாமி இந்திரலோகத்திலிருந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் தனது முகத்தில் வடுக்களோடு காட்சிதருகிறார். இவர் மிகவும் தொன்மை வாய்ந்த மூர்த்தி ஆகும். இதனை நாம் அவரைத் தரிசிக்கும்போதே கண்டு உணரலாம். இந்தத் திருக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது.
பாளையங்கோட்டை வாழும் மக்களால் "கோவாலங் கோவில்" என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீ அழகியமன்னார், ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, ஸ்ரீ வேதநாராயணர் திருக்கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவமான பங்குனி திருவிழா வரும் பங்குனி மாதம் 7 (20/03/2021) ஆம் தேதி தொடங்கி, பங்குனி மாதம் 16 (29/03/2021) ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த விழாவில் நடைபெறும் நிகழ்வுகள்பற்றி இங்கு நாம் காணலாம்.
பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள்:
முதலாம் திருநாள்: பங்குனி - 7 (20/03/2021)
இரண்டாம் திருநாள்: பங்குனி - 8 (21/03/2021)
மூன்றாம் திருநாள்: பங்குனி - 9 (22/03/2021)
நான்காம் திருநாள்: பங்குனி - 10 (23/03/2021)
ஐந்தாம் திருநாள்: பங்குனி - 10 (23/03/2021)
ஆறாம் திருநாள்: பங்குனி - 11 (24/03/2021)
ஏழாம் திருநாள்: பங்குனி - 12 (25/03/2021)
எட்டாம் திருநாள்: பங்குனி - 13 (26/03/2021)
ஒன்பதாம் திருநாள்: பங்குனி - 14 (27/03/2021)
பத்தாம் திருநாள்: பங்குனி - 15 (28/03/2021)
பதினோராம் திருநாள்: பங்குனி - 16 (29/03/2021)
பாளையங்கோட்டை ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரம் அன்று நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்குபெற்றுத் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். தற்போது பழைய தேர் சிதிலம் அடைந்துள்ளதால், புதிய தேர் திருப்பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வரும் ஆண்டுகளில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி புதிய தேரில் எழுந்தருளிப் பாளையங்கோட்டை நகர வீதிகளில் உலா வருவார்....!!