நெல்லை மாவட்டம்., அம்பாசமுத்திரம் வட்டம், பொதிகை மலைச்சாரலில் தாமிரபரணி நதி சமநிலை அடைந்து பாய்ந்து வரும் இடத்தில் அமையப்பெற்ற முதல் கோவிலும், பொதிகைமலை, சையமலை, தருத்திரமலை ஆகிய மூன்று மலைகள் பூசனை புரிந்து, வரம் பெற்ற தலமாகியதும், வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வைரவ தீர்த்தம், நாரத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களை உள்ளடக்கிய தாமிரபரணியின் மேற்குக்கரையில் அமைந்துள்ளதும், நவ கைலாயங்களில் முதன்மையாகியதும், சூரிய தலமாகியதும், இந்திரனுடைய சாபம் நீங்கப் பெற்ற தலமாகியதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றதும், தமிழும், தவமும் தழைத்தோங்க தமிழ்நாட்டிற்கு வந்துற்ற ஸ்ரீ அகஸ்திய மாமுனிவருக்கு இறைவன் நான்கு யுகங்களுக்கு முன்னர் கயிலாயமலையில் நடந்த தனது திருமணக்கோலத்தை காட்டியருளிய தலமாகியதும், பிரபந்தங்கள் பாடிய நமச்சிவாய கவிராயருக்கு அம்பிகை பூச்செண்டு அருளியதும், தன்னை வந்து அடைந்தவர்களின் பாவங்களை நாசமாக்குவதால், பாபநாசம் என்ற பெயர் பெற்றதுமான இப்புனித திருத்தலத்தில் அதர்வண வேதம் ஆகாயமாகவும், மற்ற மூன்று வேதங்களும் முக்களா விருட்சங்களாகி பூசனை புரிந்த ஸ்ரீ உலகாம்பிகை உடனுறை ஸ்ரீ பாபநாச சுவாமி திருக்கோவிலில் சித்திரை விசு திருவிழா வருகின்ற பங்குனி மாதம் 23 (05/04/2021) ஆம் தேதி அன்று தொடங்கி சித்திரை மாதம் 2 (15/04/2021) ஆம் தேதிவரை வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.
இங்கும் திருவிழாவுக்காகப் பாபநாசம் திருக்கோவிலில் கொடியேற்றம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து வரும் மற்ற திருவிழா நாட்கள் சுவாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் அனைத்தும் இந்தக் கோவிலிலிருந்து சுமார் 5 கி.மீத்தொலைவில் உள்ள விக்கிரமசிங்கபுரம் ஊருக்குள் உள்ள சிவந்தியப்பர் திருக்கோவிலின் ரத வீதிகளில் தான் நடைபெறும். பாபநாசம் திருக்கோவிலில் சித்திரை முதல் நாள் அன்று நடைபெறும் சித்திரை விசு தீர்த்தவாரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். அன்று சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் விசு தீர்த்தவாரி காண இங்கு வந்து குமிந்துவிடுவார்கள்.
பாபநாசம் திருக்கோவிலில் நடைபெறவுள்ள சித்திரை விசு திருவிழா நிகழ்ச்சிகளைப் பற்றி இங்குக் காண்போம்.
முதலாம் திருநாள்: பங்குனி - 23 (05/04/2021)
- காலை: பாபநாசம் திருக்கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றம்.
- மாலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர், ஸ்ரீ உலகாம்பிகை முதலாம் திருநாள் மண்டகப்படிக்கு எழுந்தருளல்.
- இரவு: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - பூங்கோவில் வாகனத்திலும், ஸ்ரீ உலகாம்பிகை - பூங்கோவில் வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.
இரண்டாம் திருநாள்: பங்குனி - 24 (06/04/2021)
- காலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர், ஸ்ரீ உலகாம்பிகை ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து இரண்டாம் திருநாள் மண்டகப்படி சேர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை கண்டருளல்.
- இரவு: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - கைலாச பர்வத வாகனத்திலும், ஸ்ரீ உலகாம்பிகை - அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.
மூன்றாம் திருநாள்: பங்குனி - 25 (07/04/2021)
- காலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர், ஸ்ரீ உலகாம்பிகை ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மூன்றாம் திருநாள் மண்டகப்படி சேர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை கண்டருளல்.
- இரவு: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - பூத வாகனத்திலும், ஸ்ரீ உலகாம்பிகை - சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.
நான்காம் திருநாள்: பங்குனி - 26 (08/04/2021)
- காலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர், ஸ்ரீ உலகாம்பிகை ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து நான்காம் திருநாள் மண்டகப்படி சேர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை கண்டருளல்.
- இரவு: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - இடப வாகனத்திலும், ஸ்ரீ உலகாம்பிகை - இடப வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.
ஐந்தாம் திருநாள்: பங்குனி - 27 (09/04/2021)
- காலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர், ஸ்ரீ உலகாம்பிகை ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து ஐந்தாம் திருநாள் மண்டகப்படி சேர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை கண்டருளல்.
- இரவு: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - சிம்மாசன சப்பரத்திலும், ஸ்ரீ உலகாம்பிகை - சிம்மாசன சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.
ஆறாம் திருநாள்: பங்குனி - 28 (10/04/2021)
- காலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர், ஸ்ரீ உலகாம்பிகை ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து ஆறாம் திருநாள் மண்டகப்படி சேர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை கண்டருளல்.
- இரவு: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - சிம்மாசன சப்பரத்திலும், ஸ்ரீ உலகாம்பிகை - சிம்மாசன சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.
ஏழாம் திருநாள்: பங்குனி - 29 (11/04/2021)
- காலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர், ஸ்ரீ உலகாம்பிகை ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து ஏழாம் திருநாள் மண்டகப்படி சேர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை கண்டருளல்.
- இரவு 8.௦௦ மணிக்கு மேல்: ஸ்ரீ நடராஜர் - ஸ்ரீ சிவகாமி அம்மை பெரிய சப்பரத்தில் சிவப்பு சாத்தி திருக்கோலத்தில் புறப்பாடு.
- இரவு 9.00 மணிக்கு மேல்: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - சிம்மாசன சப்பரத்திலும், ஸ்ரீ உலகாம்பிகை - சிம்மாசன சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.
எட்டாம் திருநாள்: பங்குனி - 30 (12/04/2021)
- காலை 7.00 மணி : ஸ்ரீ நடராஜர் - ஸ்ரீ சிவகாமி அம்மை கேடயத்தில் வெள்ளை சாத்தி திருக்கோலத்தில் புறப்பாடு.
- காலை 9.00 மணி: ஸ்ரீ கங்காளநாதர் சப்பரத்தில் புறப்பட்டு வீதியுலா வருதல்.
- காலை 10.00 மணி: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர், ஸ்ரீ உலகாம்பிகை ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து எட்டாம் திருநாள் மண்டகப்படி சேர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை கண்டருளல்.
- மாலை 5.00 மணி: ஸ்ரீ நடராஜர் - ஸ்ரீ சிவகாமி அம்மை பெரிய சப்பரத்தில் பச்சை சாத்தி திருக்கோலத்தில் புறப்பாடு.
- இரவு 9.00 மணிக்கு மேல்: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - வெட்டுங்குதிரை வாகனத்திலும், ஸ்ரீ உலகாம்பிகை - காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.
ஒன்பதாம் திருநாள்: பங்குனி - 31 (13/04/2021):
- காலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - ஸ்ரீ உலகாம்பிகை தேரோட்டம்.
- பகல்: தேர் நிலையை அடைந்ததும் சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - ஸ்ரீ உலகாம்பிகை விடாய் சாத்தி ஏக சிம்மாசனத்தில் புறப்பட்டு வீதியுலா வருதல்.
- மாலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - ஸ்ரீ உலகாம்பிகை ஒன்பதாம் திருநாள் மண்டகப்படி சேர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை கண்டருளல்.
- இரவு: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - ஸ்ரீ உலகாம்பிகை தட்டி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு வீதியுலா வருதல்.
பத்தாம் திருநாள்: சித்திரை - 1 (14/04/2021):
- காலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - ஸ்ரீ உலகாம்பிகை பூம்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வருதல்.
- பகல்: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - ஸ்ரீ உலகாம்பிகை கேடயத்தில் புறப்பட்டுத் தீர்த்தவாரி மண்டபம் எழுந்தருளல்.
- நண்பகல்: சித்திரை விசு தீர்த்தவாரி திருவிழா.
- மாலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - ஸ்ரீ உலகாம்பிகை தெப்பக்குளம் மண்டகப்படிக்கு எழுந்தருளல்.
- இரவு: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - ஸ்ரீ உலகாம்பிகை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளித் தெப்பக்குளத்தில் வலம் வருதல்.
- நள்ளிரவு: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - இடப வாகனத்திலும், ஸ்ரீ உலகாம்பிகை - இடப வாகனத்திலும் எழுந்தருளி அகத்திய முனிவருக்குத் திருமணக்கோலத்தில் காட்சியளித்தல்.
பதினோராம் திருநாள்: சித்திரை - 2 (15/04/2021):
- காலை: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - ஸ்ரீ உலகாம்பிகை மரபு மண்டபத்திற்கு எழுந்தருளல்.
- நண்பகல்: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - ஸ்ரீ உலகாம்பிகை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை.
- இரவு: சுவாமி ஸ்ரீ பாபநாசநாதர் - இடப வாகனத்திலும், ஸ்ரீ உலகாம்பிகை - இடப வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.
பாபநாசம் சித்திரை விசு விழாவில் பங்கு பெற்று பாவங்கள் நீங்கப் பெறுவோமாக...!!