நெல்லை மாவட்டத்தில் உள்ளது நாங்குநேரி ஸ்ரீ வானமாமலையப்ப பெருமாள் திருக்கோவில். வைணவ திவ்ய தேச ஸ்தலங்கள் நூற்றியெட்டினுள் ஒன்றாக விளங்கும் சிறப்புமிக்க "எண்ணெய் கிணறு" அமையப்பெற்றுள்ளது. இங்குக் கருவறையில் உள்ள பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய் காப்பு உற்சவம் வருடந்தோறும் தை அமாவாசை அன்று சிறப்பாக நடைபெறும். இதற்காகப் பிரத்யேகமாக செக்கில் ஆட்டப்பட்ட சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
பெருமாளுக்கு இங்குச் சாற்றப்படும் அந்த எண்ணெய் முழுவதும், இந்தத் திருக்கோவில் வளாகத்துக்குள் இருக்கும் கிணற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்ட இந்த எண்ணெய், மழைக்கும், வெயிலுக்கும் திறந்த வெளியாக கிணற்றில் இருந்தாலும் கெட்டுப்போகாமல் இருப்பது விசேஷம் ஆகும். இந்த எண்ணெய் நோய்த் தீர்க்கும் மருந்தாக விளங்குவதால், இதனைப் பக்தர்கள் பிரசாதமாக பெற்று தங்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்று பயன்படுத்துவார்கள் என்பது சிறப்பம்சம் ஆகும்.